Saturday, February 23, 2013

அந்தக் கால நினைவுகளோடு கலைஞர் கே.சந்திரசேகரன்

பலகை வீட்டுச் சுகம் மாடி வீட்டில் இல்லையே!


நேரில்- மணி ஸ்ரீகாந்தன்

கே. சந்திரசேகரன், இலங்கை வானொலி நேயர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். நேயர்களுக்கு ஆளை தெரிகிறதோ இல்லையோ ஆனால் இவரின் குரலை கேட்டாலே பெயரை சொல்லிவிடுமளவுக்கு இலங்கை வானொலியில் வெற்றிக்கொடி நாட்டியவர். சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வானொலி நாடகங்களில் நடித்திருக்கும் இவரின் கலைப் பயணம் தொலைக்காட்சி, சினிமா என்று இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அவரின் அந்தக்கால அனுபவங்களை திரும்பவும் மீட்டிப் பார்க்கும் எண்ணத்தில்

கே. சந்திரசேகரனை ஞாபக வீதியிலே பயணம் செய்யவதற்காக அழைத்து வந்தோம். அவரின் இனிமையான அந்தப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது.
‘தெமட்டகொடை சமந்தா தியேட்டரில் நான் உதவி மனேஜராக பணியாற்றிவந்த காலம். ஒரு நாள் தியேட்டரில் டிக்கட் பரிசோதனை செய்தபோது ஒரு வாலிபன் கெலரிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மூன்றாம் வகுப்பில் அமர்ந்து படம் பார்ப்பது தெரியவர அவனை வெளியில் அழைத்து வந்தார்கள்.

நான் அவனை விசாரித்த போது அவன் என்னுடன் வாய்த் தர்க்கம் செய்ய எனக்கு ஆத்திரம் வந்து அவனை பளார் என்று கன்னத்தில் அறைந்துவிட்டேன். நிலை தடுமாறிய அவன் முட்கம்பி வேலியில் விழுந்தான். அதனால் அவனுக்கு உடம்பில் பல இடங்களில் முட்கம்பி கிழித்து இரத்தம் வடிந்தது. அவன் மீது பரிதாபப்பட்ட நான், அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்து போட்டு அவனை ஒரு டேக்ஸியில் ஏற்றி அவனின் வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

‘சாலமுல்ல’ என்ற ஒரு சிங்கள கிராமத்திற்குள் எங்கள் டேக்ஸி நுழைந்த சில நிமிடங்களில் ஒரு வீட்டிற்கு முன்னால் ஆட்டோ நிற்க காயப்பட்ட வாலிபன் கீழே இறங்க அந்த வீட்டிலிருந்த ஆண்களும் பெண்களும் ‘அய்யோ மகனே என்ன நடந்தது’ என்று கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். அப்போதுதான் நான் செய்த தவறு எனக்கு விளங்கியது.

ஒருவனை அடித்துவிட்டு அவன் ஊருக்கே சென்றிருக்கிறேன் என்பது. அதை நினைக்கும் போதே என் இரத்தம் தண்ணீராகிப் போவது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இதயம் பட படக்க டேக்ஸியிலிருந்து கீழே இறங்காமல் உள்ளேயே அமர்ந்திருந்தேன்.

ஓடிவந்தவர்கள் அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்த போது அவன் சொன்னான் ‘வீதியில் தடுக்கி விழுந்து விட்டேன் இந்த அங்கிள் தான் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து போட்டு என்னை இங்கு அழைத்து வந்தார் என்றான். எனக்கு அப்போதுதான் போன உயிர் திரும்ப வந்தது. அவன் இப்படி சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த குழப்படிக்கார இளைஞனிடமும் எவ்வளவு ஒரு நல்ல எண்ணம் மறைந்திருக்கிறது.

ராஜத்துரோகி நாடகத்தில்
  இன்றும் சமந்தா தியேட்டரை நான் கடந்து போகும் போதெல்லாம் அந்த இளைஞன் என் ஞாபகத்திற்கு வருகிறான்.... இன்று அவனை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவன் எங்கிருக்கிறானோ... என்று அந்த சம்பவத்தை சுவைபட கூறிய சந்திரசேகரன் தன் பூர்வீகம் பற்றி இப்படி சொல்கிறார்.

இந்திய வம்சாவளி தமிழரான என் பூர்வீகம் தெமட்டகொடைதான். அப்பா காளிமுத்து, அம்மா பார்வதி. அவர்களுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் நான் ஆறாவது.

அப்பா தெமட்டகொடை ரயில் நிலைய ஊழியராக பணிபுரிந்ததால் ரயில் நிலைய விடுதியில்தான் நான் பிறந்தேன்.

எங்கள் குடும்பத்தில் நான்தான் ரொம்பவும் சுட்டி பையனாம். அப்பாவுக்கு ரயில் நிலயைத்தில் தரும் காக்கி சீருடையை தான் நானும் போட்டுக்கொண்டு திரிவேன். ஆடை அணிவதில் கூட ஒரு ஒழுக்கமில்லாமல் நான் இருந்திருக்கிறேன்.

என் சின்ன வயசிலேயே வயதுக்கு மீறிய முதிர்ச்சி என் குரலில் தெரிந்தது.

சிறுவர் மலர் நிகழ்ச்சியில் நான் பங்குபற்றிய போது வானொலி மாமாவுக்கு ஒரு கடிதம் வந்ததும் அதில் ‘மாமா சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பதினொரு வயதிற்குட்பட்டவர்களே பங்குபற்ற வேண்டும் என்று சொல்லியிருகிறீர்கள் ஆனால் கே. சந்திரசேகரனின் குரலைக் கேட்டால் இருபது வயதை கடந்தவர் போல் தெரிகிறதே... என்று குறிப்பிட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை நிகழ்ச்சியில் நானே வாசித்தேன். அப்போது எனக்கு பனிரெண்டு வயதுதான். பிறகு படிப்படியாக சிறுவர் மலர் நிகழ்ச்சியில் எனக்கான சந்தர்ப்பம் குறைந்தது. அதன் பிறகு இளைஞர் மன்றம், நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நான் பஸ் தரிப்பு நியைத்தில் நின்று கொண்டிருந்த போது எனக்கு பின்னால் நின்றிருந்த இரண்டு சகோதரிகள் ‘ஏண்டி நேற்று இளைஞர் மன்றம் நிக ழ்ச்சி கேட்டியா அதில் கே. சந்திரசேகரன் என்றவரோட குரலை கேட்டியா ரொம்பவும் சுவீட்டா இருக்கு’ என்றார்கள். அவர்கள் அப்படி சொன்னதும் எனக்கு ஆகாயத்தில் பறப்பது போல ஒரு இன்பம் ஏற்பட்டது.
தனது அக்கா புவனேஸ்வரி,
தம்பி விஸ்வநாதன் ஆகியோருடன்
அதன் பிறகுதான் என் அப்பாவிடம் சென்று அடம்பிடித்து எனக்கு அழகான சேர்ட் வேண்டும் என்று கேட்டேன்.

காக்கி உடையை அதன் பிறகு நான் உடுத்துவதே இல்லை.

உண்மையை சொல்லப் போனால் இந்த கலைதான் என்னை ஒரு அழகான மனிதனாக மாற்றியது என்று சொல்லலாம். ஊர் சுற்றி திரிந்த என்னை ஒழுக்க முள்ளவனாக மாற்றியது கலைதான். தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில்தான் என் அரிவரி தொடங்கியது. ஆ. பொன்னுத்துரை மாஸ்டர் தான் எனக்கு அகரம் கற்பித்த ஆசான். அதே பள்ளியில்தான் நண்பர் ஹமீதும் படித்தார். எங்கள் இருவரின் கலைப் பயணத்திற்கும் அத்திவாரமிட்டது அந்த பள்ளிதான்.


ஒரு முறை, அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அதில் ஜான்சிராணியாக பி. எச். அப்துல் ஹமீத் நடித்தார். அவருடன் மேலும் பல நடிகர்கள் நடித்தார்கள். என்னை அந்த நாடகத்திற்கு தெரிவு செய்யவில்லை. என்னை தெரிவு செய்யாதது எனக்கு கவலையாக இருந்தது. அவர்கள் நடித்த நாடகத்தை பார்த்து விட்டு நானும் என்னுடன் படித்த சில மாணவர்களும் வகுப்பில் எங்களுக்குள் நாடகத்தில் பேசுவது போல் வசனம் பேசுவோம். இதை கவனித்த எங்கள் பள்ளி ஆசிரியர் நாடகத்தில் நடிக்க ஒரு ஆள் தேவை எங்கே உங்களுக்குள் திறமை இருக்கிறதா என்று பார்ப்போம். என்று நாடகத்திற்கான வசனம் எழுதப்பட்ட ‘ஸ்கிரிப்டை’ தந்தார்.

அதில் ‘அணையப் போகும் விளக்கு ஓங்கி எரிகிறது ஆட்சியை இழக்கப் போகும் நீ ஆணவத்தோடு பேசுகிறாயா! விளக்கை நோக்கி வரும் விட்டில் பூச்சியே வா!’ என்ற வசனம் எழுத்தப்பட்டிருந்தது. அந்த வசனம் முடியும் இடத்தில் ‘சிரிப்பு’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதை படித்த சக மாணவர்கள் சிரிப்பு என்ற இடத்தில் புன்னகைத்தார்கள். ஹீ... ஹீ... என்றார்கள். ஆனால் நான் மட்டும் பி. எஸ். வீரப்பா மாதிரி ஹ ஹ்ஹ ஹா... என்று சிரித்தேன்’ அப்படி சிரித்ததும் நீ தான் கதையின் நாயகன். என்று என்னை தெரிவு செய்தார்கள். பிறகுதான் எனக்கு தெரியவந்தது அவர்கள் தந்தது வெள்ளைக்கார கதாபாத்திரமென்று. பிறகு என் கை, காலுக்கெல்லாம் வெள்ளை உறை போட்டு, முகத்திற்கு ஏதோ வெள்ளைப் பொடியை பூசி நான் வெள்ளைக்காரனாக நடித்தேன்.

இதைப் பார்த்த சச்சி மாஸ்டர் நாடக மாஸ்டரிடம் ‘உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா வெள்ளைக்காரனாக நடிக்க இந்த கறுப்பு பையனா கிடைத்தான்’ என்றார். என்று தமது கலையுலகத்தின் ஆரம்ப காலத்தை ஞாபகப்படுத்திய கே. சந்திரசேகரன் அந்தப் பாடசாலையில் படிப்பித்த சுப்ரமணியம் மாஸ்டரை மறக்க முடியாது. எங்கள் வகுப்பில் கணக்கில் புலி நான்தான். எல்லோரும் என் கணித கொப்பியைத்தான் பார்த்து கொப்பி அடிப்பார்கள். வகுப்பின் கணித ஆசிரியர்தான் சுப்ரமணியம். நான் என்னதான் அதிகமாக புள்ளிகள் வாங்கினாலும் என்னை தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அடிப்பதே அவரின் வேலை.... ஏன் அப்படி அவர் என்னை அடித்தார் என்பதற்கான காரணம் அப்போது எனக்கு தெரியவில்லை.

ஒரு நாள் சுப்ரமணியம் மாஸ்டர் எங்கள் பாடசாலையிலிருந்து மாற்றலாகி வேறு பாடசாலை செல்வதற்காக பிரியாவிடை வைபவம் நடைபெற்றது. அந்த வைபவம் நிறைவடைந்ததும் சுப்ரமணியம் மாஸ்டர் என்னை தனியாக அழைத்தார். ‘தம்பி உன்னை நிறைய தடவை அடிச்சிருக்கேன் ஏன் தெரியுமா, எங்கே நீ கெட்டுப் போய்விடக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காகத்தான் என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து அழுதார். அப்போதுதான் ஒன்றை புரிந்து கொண்டேன். நம்மீது பாசத்தையும், நேசத்தையும், கொண்டவர்கள் எம்மை தண்டிப்பது எங்கள் நன்மைக்காகத்தான் என்று. தமது பள்ளிப் பருவத்தை விபரித்து கூறத் தொடங்கிய சந்திரசேகரன், அவரின் நண்பர் செப ஜோசப் எட்வர்ட் பற்றியும் சில விடியங்களை மீட்டிப் பார்க்கிறார்.

‘உண்மையிலேயே ஹமீத் வானொலி நிலையத்திற்கு செல்வதற்கு காரணமே இந்த எட்வர்ட் தான். சிறுவர் மலர் நிகழ்ச்சியிலிருந்து அவருக்கு கடிதம் வந்தபோதுதான் ஹமீதையும் தன் உடன் அழைத்துச் சென்றார். நன்றாக எழுத கூடியவர் கவிஞர். கலைஞர். இன்று அவர் கலைத்துறையில் இருந்திருந்தால் நிறைய சாதித்திருக்கலாம் ஆனால் அவர் அத்துறையில் இல்லை நீர்கொழும்பு பகுதியில் வசிப்பதாக அறிகிறோம் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஒரு முறை என்னையும், ஹமீதையும் பார்த்து சொன்னார் உங்கள் இருவரையும் போல் எனது குரல் வளம் இல்லையே என்றார்.

அதற்கு ஹமீத் ‘அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி தண்ணீர் தொட்டியில் கழுத்தளவு தண்ணீரில் இருந்து ஹா... ஹ... என்று கத்தினால் குரல் வளம் நன்றாக வரும்’ என்று விளையாட்டாக சொல்ல நாங்கள் சொன்னதை உண்மைதான் என்று நம்பிய செப ஜோசப் மறுநாள் காலையில் கழுத்தளவு தண்ணீரில் அமர்ந்து கத்தியிருக்கிறார். விஷயம் தெரிந்த நாங்கள் இன்னும் கொஞ்சம் ஜோசப்புக்கு விளையாட்டு காட்டலாம் என்ற எண்ணத்தில் கையையும், காலையும் கட்டிவைத்துக் கொண்டு காலையில் எழும்பி கா... கா....என்று கத்திப் பாருங்கள் குரல் வளம் வளரும் என்று ஹமீத் கூறியதை மறுபடியும் நம்பிய ஜோசப், அடுத்த நாளும் காலையில் இந்த பயிற்சியை செய்ய நானும் ஹமீதும் அதை மறைந்திருந்து பார்த்தோம். என்று தமது இளமைக்கால அனுபவங்களை இனிக்க இனிக்க சொல்லும் சேகர், ‘எனது இளமைக்காலம் பற்றி கூறும்போது ஹமீத் பற்றி கூறாவிட்டால் அது நிறைவாக இருக்காது.

ஹமீதும் நானும் நல்ல நண்பர்கள். பாடசாலை முடிந்து நான் வீட்டிற்கு வந்தவுடன் ஹமீத் வீட்டிற்கு சென்று விடுவேன். அதன் பிறகு மாலையில் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். அவர் பள்ளிக்கு தொழச் செல்லும் போது நானும் கூடவே செல்வேன். அவர் பள்ளிக்குள் சென்று தொழுது விட்டு வரும்வரை நான் வெளியிலேயே நிற்பேன். குறிப்பாக நோன்பு நாட்களில் நான் தினமும் அவர்களின் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது ஹமீதின் அம்மாவின் கட்டளை, அப்படி என்னால் போக முடியவில்லை என்றால் அந்த அம்மா எனது வீட்டிற்கு வந்து விடுவார்’ என்ன சேகர் நீ ஏன் நேற்று வரவில்லை. உனக்காக என்னென்ன செய்து வைத்திருந்தேன் தெரியுமா? என்பார்.

அவர் இஸ்லாமிய ஆச்சார முறைப்படி வாழ்ந்ததினால் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள வில்லையாம். இதை தெரிந்து கொண்ட நான் எப்படியாவது அவரை ஒரு படமாவது எடுத்தவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பத்துநாள் முயற்சி செய்து ஒரு கெமராவை யாரிடமோ இரவல் வாங்கி ஹமீதின் அம்மாவை படம் பிடித்தேன். ஒரு முறை ஹமீத் எங்கள் வீட்டில் சாப்பிட அமர்ந்து சாப்பாட்டு தட்டில் இருந்த சாதத்தை கோழிக்கறியுடன் பிசைந்து ஒரு பிடி வாயில் வைத்துவிட்டு கேட்டார், இந்தக் கோழிக் கறியை எங்கே வாங்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் ‘எங்கள் வீட்டில்தான் அறுத்தோம். என்று பெருமையாக சொல்ல ஹமீத் வாயிலிருந்த சாப்பாட்டை துப்பிவிட்டு சொன்னார்.

இது குர்பான் செய்யப்படாத கோழி, நான் சாப்பிடக் கூடாது என்று. எனக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஆனாலும் அவருக்கு அப்போது பன்னிரெண்டு வயதுதான் இருக்கும். அப்போதே இஸ்லாத்தின் தார்மீக பண்பை முறையாக கடைப்பிடித்து வாழவேண்டும் என்று நினைத்திருக்கிறார். இன்றும் ஒருநல்ல இஸ்லாமியனாகவே வாழ்கிறார். அதோடு தான் இனத்தால் ஒரு தமிழன். மதத்தால் இஸ்லாமியன் என்று அவர் பகிரங்கமாக கூறுவதையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டில் ஹமீதை தவிர வேறு யாரும் அப்படி சொல்வதில்லை என்று தனது உயிர் நண்பனின் பெருமைகளை பறைசாற்றும் சேகரிடம் காதல் பற்றி கேட்டோம்.

இந்தக் காலம் மாதிரி அல்ல அந்தக் காலம். பள்ளியில் படிக்கும் போது பெண் பிள்ளைகளை கண்டாலே சண்டைதான் பிடிப்போம். ‘காதல்’ என்ற உணர்வு எனக்கு வரவேயில்லை. எங்கள் வகுப்பில் தேவமணி என்ற மாணவி படித்தார். அவளோடு எப்போதும் நான் சண்டை பிடித்துக்கொண்டுதான் இருப்பேன். இதை கவனித்த ஆசிரியர் யோகரட்ணம் ‘உங்க ரெண்டு பேரையும் ஒரு அறைக்குள்ள போட்டு அடைச்சா வெளியே வரும்போதும் மூன்று பேராகத்தான் வருவீங்க’ என்றார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது அப்போது எனக்கு புரியவில்லை.

ஏனென்றால் காதல் பற்றி அறியாத வயது. பாடசாலை வாழ்க்கை முடிந்த பிறகுதான் யோகரட்ணம் மாஸ்டர் சொன்னதற்கான அர்த்தம் புரிந்தது. எனது திருமணம் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் விசாலயம்கோட்டை என்ற கிராமத்தில் நடந்தது. எனது முறைப் பெண்ணையே மணமுடித்தேன். என்ற சேகரிடம்; அது ஒரு காலம் என்று நீங்கள் குறிப்பிடுவது? ‘‘அப்பா ரயில்வேயிலிருந்து ஓய்வுபெற்ற பணத்தில் சொந்தமாக இடம் வாங்கி நாங்கள் கட்டிய அந்த பலகை வீடு அப்பா அம்மா சகோதரர்களுடன் ஓடி ஆடி விளையாடிய வீடு.
பி. எச். அப்துல் ஹமீதின் தாயார்.
இன்று அதை உடைத்து விட்டு சகல வசதிகளுடனும் இரண்டு மாடிவீடு கட்டியிருக்கிறேன். ஆனாலும் அந்தப் பலகை வீட்டு சுகம் இந்த மாடி வீட்டில் இல்லையே.. என்று ஏங்கும் அவர், இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறார். ஒரு மாலைப் பொழுதில் நானும் ஹமீதும் கிராண்ட்பாஸ் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது எதிரில் ஒரு கடலை வண்டிக்காரன். எங்களிடம் ஐந்து சதம் மட்டுமே இருந்தது. சரி அந்த காசுக்கு கடலை வாங்கி இருவரும் சாப்பிடுவோம் என்று அந்த கடலை வண்டிக்காரனை நெருங்கினோம். ஹமீதை பார்த்த அந்த கடலைக்காரன். தம்பி நீங்க பி.எச். அப்துல் ஹமீத் தானே? என்றான்.

அவன் அப்படி கேட்டதும் நாங்கள் கடலை வாங்கும் ஐடியாவை விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தோம். ஐந்து சதத்தை கொடுத்து எப்படி ஒரு பொட்டலம் வாங்குவது. இருந்தாலும் பரவாயில்லை வாங்குவோம் என்ற எண்ணத்தில் நான் ஹமீதை பார்த்து கேட்டேன். ‘ஹமீத் உங்களுக்கு கடலை வேண்டுமா’ என்றேன். நிலமையை புரிந்துகொண்ட அவரும் வேணாம் நீங்களே சாப்பிடுங்கள்’ என்றார். உடனே ஐந்து சதத்தை கொடுத்து ஒரு கடலை பொட்டலத்தை வாங்கினேன். பிறகு நாங்கள் இருவரும் அந்த கடலை பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம். அது ஒரு காலம் என்று பெருமூச்சுவிடுகிறார்.

உங்கள் அப்பா எப்படி கண்டிப்பானவரா?

‘தப்புசெய்தால் தண்டனை தருவார். ஒரு நாள் தெமட்டகொடை வழியே நான் நடந்து போகும் போது சந்தியில் கிளங்கு பெட்டியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். என்னை கண்ட தும் தம்பி இந்த பெட்டியை அந்த கடை வரைக்கும் தூக்கி கொண்டு வா ஐந்து ரூபா தருகிறேன் என்றார். நானும் அவர் சொன்னபடியே பெட்டியை தூக்கி கொண்டுபோய் வைத்துவிட்டு அவரிடம் ஐந்து ரூபாவை பெற்றுக் கொண்டேன். முதன் முதலாக நான் ஐந்து ரூபா சம்பாதித்து விட்டேன் என்ற சந்தோசம். இதை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று வீட்டுக்கு ஓடினேன்.
1983 கலவரத்தின் பின் நாட்டை விட்டுச் செல்வது
என்ற எண்ணத்துடன் பிரியாவிடை பெற்றபோது
 ஹமீட் குடும்பத்தாருடன்.
 அதற்கு முன்பாகவே நான் பெட்டி தூக்கிய விடயம் என் அப்பாவுக்கு தெரிந்திருக்கிறது. அப்பா ஒரு தடியை கையில் வைத்துக்கொண்டு நிற்க அம்மா ‘அவனுக்கு அடிகொடுக்கணும் அப்போதான் திருந்துவான்’ என்று அப்பாவை உசுப்பேத்தி கொண்டிருந்தாள். அப்பா கையில் வைத்திருந்த அந்த தடியின் ஒரு பக்கம் குமிழ் முனையாகவும், மறு பக்கம் சாதாரணமாகவும் இருந்தது. அப்பா அந்த தடியின் குமிழ் முனையைத் தான் பிடித்துக் கொண்டிருந்தார். ஆத்திரத்தில் முனையை மாற்றிய அப்பா குமிழ் முனையின் பக்கம் படுமாறு அடித்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அதைப் பர்த்து பதறிய என் அம்மா என் பிள்ளையை கொல்லப் பார்க்கிறியா என்று கதறி அழுதார். அந்த சம்பவத்தை என்னால் என்றும் மறக்க முடியாது.

அப்பாவின் அந்த கண்டிப்பும் தண்டனையும்தான் இன்று நான் ஒரு புடம்போட்ட மனிதனாக இருப்பதற்கு காரணமாக அமைந்தது.

வாழ்க்கையைப் பற்றி தங்களின் புரிதல் என்ன? ‘வாழ்க்கை இனிமையானது. சின்ன சின்ன பிரச்சினைகளை எல்லாம் பிரச்சினையாக நினைத்தால் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கும். வரும் பிரச்சினைகளை பிரச்சினை இல்லாமல் மாற்றினாலே வாழ்க்கை சுகமானதாக மாறிவிடும் என்று தனது பழைய அனுபவ பயணங்களில் இருந்து சந்திரசேகரன் விடைபெற்றார்.

No comments:

Post a Comment