Wednesday, February 20, 2013

கலைஞர் கந்தையா கடந்து வந்த பாதை..

"நோட்டன் பிரிட்ஜ் நீர் தேக்கத்தில் கட்டுமரம் விட்டு மகிழ்ந்த அந்த நாட்கள்...''


சந்திப்பு – மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை தமிழ் நாடக உலகில் கந்தையாவுக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது. கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக நாடக உலகில் வலம்வரும் இந்தக் கலைஞர் ஒரு தொழில் அதிபரும் கூட. பழைய சோனகத் தெரு ‘பீ. வீ. சி. சென்டர்’ நிறுவனத்தின் உரிமையாளரான இவர், ஒரு கடும் உழைப்பாளி. மலையகத்திலிருந்து கொழும்பிற்கு வேலைதேடி வந்து இன்று தொழில் அதிபராக உயர்ந்து விளங்குபவர்தான் இந்த கந்தையா. வளரத் துடிக்கும் மலையக இளைஞர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம். தமது அனுபவ பாட புத்தகத்தை நமக்காக இங்கே புரட்டுகிறார் கந்தையா.


“1947ல் தஞ்சாவூரிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளியாக எனது அப்பா வந்திருக்கிறார். அவரின் பெயர் சின்னத்தம்பி அம்மா தமிழ்நாட்டில் மாங்குடியைச் சேர்ந்தவர். அவரின் பெயர் ஆதி. இலங்கைக்கு வந்த அப்பா அட்டனுக்கு பக்கத்திலிருந்த ஒரு தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்த்திருக்கிறார். அட்டன் டிக்கோயாவில் தான் நான் பிறந்தேன். எங்களுக்கு குவாட்டர்ஸ் வீடுதான் தந்திருந்தாங்க

அப்பா இ. தொ. காவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். ஊரில் தலைவராகவும் இருந்தார். அதனால் எங்கள் வீட்டை எல்லோரும் தலைவர் வீடு என்றுதான் அழைப்பார்கள். எனக்கு ஐந்து வயதாகும் போது எனது குடும்பம் செல்வம் செழித்த குடும்பமாகத்தான் இருந்தது. எனது குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் இரண்டு பேர் பிறந்து சில வாரங்களுக்கு பிறகு அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள். அவர்களை எங்கள் வீட்டுப் பக்கத்திலிருந்த கொய்யாமரத்தடியில் புதைத்துவிட்டார்கள். இப்போது மிச்சம் இருப்பது ஏழு பேர். அதில் மூத்தவர் சரவணமுத்து, இரண்டாவது நான். எனது முதல் பள்ளிப் பிரவேசம் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எனக்கு ‘அகரம்’ கற்பித்தவர் கந்தையா மாஸ்டர் என்பது ஞாபகத்தில் உள்ளது.

ஆரம்ப கல்வியை நான் முடித்த பிறகு டவுன் பள்ளிக்கூடத்தில்தான் பெரிய பள்ளிக்கூடம் இருந்தது. அதற்குப் போக வேண்டும் என்பதில் நான் தீராத ஆசையுடன் இருந்தேன். எனது அண்ணன் அட்டன் புனித யோவான் பொஸ்கோ கல்லூரியில்தான் படித்தார். காலையில் பள்ளிக்கூடத்திற்கு போனால் மாலையில் தான் வீடு திரும்புவார்.

ஒருநாள் திடீரென்று பாடசாலைக்குப் போனாவர் மறுபடி யும் வீட்டுக்கு வந்தார். வந்தவர் உடனே என்னை ஹட்டன் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும் என்று கூறி ஆயத்தமாகச் சொன்னார். நானும் அவசர அவசரமாக அப்பா தைத்து வைத்திருந்த ஒரு கால்சட்டையை எடுத்து மாட்டினேன்.

அது தொள தொளவென்றிருந்தது. அதுக்குப் பிறகு வேறொரு காற்சட்டையை எடுத்துப் போட்டேன். என் அண்ணன் என் கால் சட்டையை கையை வைத்து அளந்து பார்த்துவிட்டு ‘என்னடா கந்தையா உன் கால்சட்டை ஒரு சாண் அளவுகூட இல்லையே’ என்றார்.
மனைவியுடன்அந்தளவுக்கு நான் குள்ளமாக இருந்தேன். பிறகு அண்ணனிடம் ஒரு பேனாவை வாங்கி சட்டை பொக்கட்டில் வைத்துக்கொண்டு அம்மாவிடம் ஒரு ஐம்பது சதத்தை வாங்கிக்கொண்டு அட்டன் போகும் பஸ்ஸில் ஏறி நானும் அண்ணனும் பாடசாலைக்குப் போனோம். அந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரியர் பாதர் தோமஸ்.

ரொம்பவும் கண்டிப்பானவர். அதனால் என்னை ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பு ஆசிரியர் எச்சரித்தார். நான் வகுப்பில் நுழைந்ததும் ‘ஆ... ஹா! ஒரு கட்டையன் நம்ம வகுப்புக்கு புதுசா வந்திருக்கான் என்னத்த படிக்கப் போறானோ...’ என்று சக மாணவர்கள் எல்லோரும் கிண்டலடித்தார்கள்’ என்று தனது ஆரம்ப நாள்களை சொல்லத் தொடங்கிய கந்தையா குடும்பச் சுமை தன் மீது விழுந்த கதையை இப்படித் தொடங்குகிறார்.

“எங்க வீட்டில் நாலு மாடுகள் இருந்தன. எங்க வீட்டு மகாலட்சுமின்னு அவற்றைச் சொல்லலாம். ஆனா யார் கண் பட்டதோ தெரியவில்லை. மாடுகள் ஒவவொன்றாக அடுத்தடுத்து இறந்து விழுந்தன.அப்போதுதான் என் அம்மாவிற்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளில் இரண்டும் இரண்டு வாரங்களில் இறந்துவிட்டன. ஒரு வாரம் கழித்து என் அம்மாவும் மரணமடைந்தார். இறப்பதற்கு முன்பாக அம்மா என்கிட்டே ஒரு சத்தியம் வாங்கினாங்க.

உன் அண்ணே விளையாட்டு பிள்ளை. வீட்டைக் கவனிக்க மாட்டான். ஆனா நீதி ஒரு புத்திசாலி. நீதான் உன் சகோதரர்களையும் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். அம்மாவின் இறப்பை இன்றும் கந்தையாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மாவைப் பற்றி குறிப்பிடும் போது அவர் கண்ணீர் வடித்தார். அம்மாவின் மரணத்தோடு அப்பாவிற்கும் தொழில் போய்விட்டது.

ஆனாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்ததால், எஸ்டேட்டில் உள்ள ஒரு முப்பது பிள்ளைகளுக்கு பின்னேர வகுப்பு நடத்தினேன். ஒரு பிள்ளையிடம் ஒரு ரூபா வீதம் முப்பது பிள்ளைகளிடம் இருந்து மாதம் முப்பது ரூபாய் கிடைத்தது.

அதில் தான் நான் சாதாரணதரம் வரை படித்தேன். அதற்குப் பிறகு அட்டனில் இரண்டு இடங்களில் வேலைப் பார்த்தேன்’ என்று தன் கஷ்ட காலத்தை விவரித்தார் கந்தையா. நீங்கள் சிறு வயதில் குறும்புக்காரரோ என்று கேட்டோம்.

“எனக்கு சின்ன வயதில் கார் ஓடுவதற்கு ரொம்பப் பிடிக்கும். பக்கத்து கடைக்கு போகவும் கூட கைகளால் கார் ஓட்டிக் கொண்டுதான் ஓடுவேன்.

நடிகராக...

நான் எப்போதாவது சொந்தமாக ஒரு வாகனம் வாங்குவேன் என்று நினைத்தும் பார்த்தது கிடையாது. எல்லாம் கனவு மாதிரி இருக்கு! அப்படித்தான் ஒரு நாள் என் அம்மா, வீட்டுக் கதவில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்ல நானும் ஓடிப்போய் சாவியை எடுத்தபின் கார் ஓட்டிக் கொண்டு ஓடி வந்தேன்.

அப்போது என் பெரியம்மா கொதிக்க கொதிக்க வடிச்ச கஞ்சியை எடுத்துக்கொண்டு முன்னால் வர நான் அவர் மீது முட்டினேன். அடுத்த நிமிடம் கஞ்சிப் பானை என் மீது கொட்டி விட்டது. கால்சட்டை மட்டும் அணிந்துகொண்டு வெறும் மேலோடு நான் இருந்ததால் என் நெஞ்சுப் பகுதி வெந்து போய்விட்டது. அதற்குப் பிறகு ஒரு மாதம் வைத்தியசாலையில் இருந்தேன்.

அப்புறம் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கத்தில் மூங்கில் மரத்தில் கட்டுமரம் கட்டி அதில் தோணி ஓட்டிய அந்த பசுமையான நாட்களை இன்று நினைத்தாலும் இனிக்கத்தான் செய்கிறது. நானும், அண்ணனும் ரொம்பவும் விரும்பி விளையாடும் விளையாட்டு இந்த தோணி ஓட்டம் தான்.

ஒரு முறை மணல் திட்டில் எங்களின் கட்டுமரம் சிக்கிக்கொண்டது. நான் நீரில் குதித்து மூங்கில் தோணியை தள்ளினேன். அண்ணன் துடுப்புபோட அலை வந்து தோணியை வேறு பக்கமாக தள்ளியது.


அன்று உயிர் தப்பி கரை வந்ததே கடவுள் புண்ணியம்தான்...” என்று சொன்ன கந்தையா ஆரம்ப காலத்தில் படிக்கும்போது தமக்கு நண்பர்களாக இருந்தவர்களைப் பற்றி இப்படி விவரிக்கிறார்.

“துலுக்கானம், ஐயாத்துரை, நாகமுத்து இவர்கள்தான் என்னோடு எப்போதும் இருப்பார்கள். எனக்கு நல்ல நண்பர்கள். இன்று இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்தியாவிற்கு போகும்போது அவர்களை சந்தித்து பழைய ஞாபகத்தில் மூழ்கிப் போவோம்.”

ம்... அது ஒரு காலம் என்று ஏங்குவது?

குழந்தைகளுடன்
“எங்க ஊரில் உள்ள அந்த ஊத்துப்பீலிதான். கொழும்பில் உள்ளவர்கள் அந்த சுகத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள். நாலைந்து பேர் ஒன்றாகச் சென்று அந்தப் பீலியிலிருந்து கொட்டும் தண்ணீரில் தலையைப் பிடிப்போம். சிலீர் என்றிருக்கும். இப்படி ஒரு மணி நேரமாக குளிப்போம். அங்கே கிடக்கும் பெரிய கருங்கற்களில் துணிகளை துவைத்து குளிப்போம்.

அந்த இடம் அங்கே இன்றும் அப்படியே இருக்கிறதாம் ஆனால் எனக்கு குளிக்கத்தான் போக முடியவில்லை. அந்த இடத்தைப் பார்க்கும் போதெல்லாம் நான் சின்ன வயசுக்கே போய்விடக் கூடாதா என்ற எண்ணம் எனக்குள் ஏற்படும். அது ஒரு காலம்....” என்று பெருமூச்சு விடுகிறார் கலைஞர் கந்தையா.

கலைத்துறை பிரவேசம் பற்றி அவர் கூறுகிறார்.

“அட்டனில் படிக்கின்ற காலத்தில் பாடசாலை நாடகங்களில் நடித்திருக்கிறேன். என் நாடகத்துறைக்கு வித்திட்டவர் கிளாஸ் மாஸ்டர் முத்துசிவஞானம். அவரை மறக்க முடியாது.

நான் நடிக்கவிருந்த முதல் நாடகமான ‘அர்ப்பணம்’ நாடகத்தில் நான் சரியாக நடிக்கவில்லை என்ற காரணத்திற்காக என்னை அந்த நாடகத்திலிருந்து விலக்கினார்கள். அதன் பிறகு நான் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

அதன் பிறகே நாடக உலகிற்குள் நுழைந்தேன். பிறகு அவள் ஒரு ஜீவநதியில் வில்லனாக நடித்தேன். இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் ஒரு தொழில் அதிபர் என்பதைவிட ‘கலைஞன்’ என்று சொல்வதை தான் விரும்புகிறேன்” என்ற கந்தையா தான் கொழும்பிற்கு வந்த கதையை சொல்லத் தொடங்கினார்.

“கொழும்புக்கு எனது நண்பர் சுந்தரலிங்கத்துடன் முதன் முறையாக வந்தேன். அப்போ என் கையில் பதினைந்து ரூபாய் பணமும், இரண்டு காற்சட்டை, ஒரு சாரம். ஒரு பனியன் என்பனவே உடமையாக இருந்தன.

முதல் நாள் எனது நண்பருக்கு தெரிந்தவரின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு வேலை தேடினேன். எனக்கு வத்தளை தேவக்குமாரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே பீ. வி. சி. குழாய்களை வளைத்து ‘எல்போ’ தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கும் ஒரு யோசனை தோன்றியது.

நானும் இந்த தொழிலை விரைவாகவே கற்றுக்கொண்டு இந்த மாதிரி ஒரு தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை செய்யத் தொடங்கினேன்.
மனைவி சிறுவயதில்


இப்படி வீட்டுக்குப் போகாமல் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். விடுமுறை கிடைக்கும் போது பெரிய கம்பனிகளில் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கி வந்து. மயூரா ஒழுங்கையில் போட்டு விற்பனை செய்வேன்.

அப்படிக் கிடைத்த வருமானத்தில் ஒரு இரண்டாயிரம் ரூபா சேர்த்து வைத்திருந்தேன். நான் வேலை செய்த கடையில் மாதம் முந்றூறு ரூபா சம்பளம் கொடுத்தார்கள். பிறகு வத்தளையில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து குழாய் பெண்ட் வளைக்கும், தொழிற்சாலையை சிறிய அளவில் தொடங்கினேன். என்னுடன் மூன்று பேரையும் வேலைக்கு வைத்துக்கொண்டேன்.

ஒரு நாள் எனக்கு எட்டாயிரம் ரூபா பெறுமதியான பெரிய ஓடர் ஒன்று கிடைத்தது. அதில் எழுபது சதவீத வேலைகளை முடித்துவிட்டு அன்றிரவு உறங்கினேன். அதிகாலையில் சுப்பையா என்பர் என்னை எழுப்பினார். ‘அண்ணே எங்க மச்சான் அவரு மகனை கூட்டிட்டு வாராரு... அதனால இப்பவே போய் அவங்களை அழைச்சிட்டு வந்திடுறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து வீரய்யா எழும்பி, அண்ணே கிருளப்பனைக்கு எங்க அண்ணே வந்திருக்கிறாராம், அவரைப்போய் பார்த்திட்டு வந்திடுறேன்’ என்று அவரும் கிளம்பிவிட்டார். பிறகு சில மணி நேரங்களில் மனோகரனும் எழும்பி ‘அப்பா ஸ்டேசன்ல வந்து நிற்கிறாராம் அதனால் அவரை கூட்டிட்டு வந்து இங்கே கொஞ்ச நேரம் தங்க வச்சிட்டுப் பிறகு அனுப்பிடுறேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கும் எதுவுமே புரியவில்லை. வினாடிகள் மணித்தியாலங்கள் ஆகியதுதான் மிச்சம். சென்றவர்கள் வரவே இல்லை.

அன்று மாலைக்குள் அந்த ஓடரை கொடுத்து விட வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு. சாரத்தை மட்டும் கட்டிக்கொண்டு கடைக்கு வெளியே வந்தேன். எதிரில் எனது நண்பர் முருகேசு வந்தார். எங்க கிளம்பிட்டீங்க என்று அவர் கேட்க, நான் நடந்த விடயத்தை கூறினேன். அதற்கு முருகேசு என்னண்ணே இந்தக் காலத்திலயும் இப்படி ஏமாளியா இருக்கீங்க! அந்த பயலுங்க மூன்று பேரும் உங்களை நல்லா ஏமாத்திட்டாங்க.

அவங்க மூணுபேரும் வத்தளை சந்தியில ஒரு சைவ கடையை திறந்திட்டாங்க. ஒருத்தன் டீ அடிக்கிறான். மற்ற இரண்டு பேரும் சப்ளை பண்ணுறாங்க’ என்றார். எனக்கு அது முதல் ஏமாற்றம். ஆனால் நான் அதிர்ச்சியடையவில்லை.

முருகேசுவிடம் என் நிலைமையை எடுத்துச் சொல்லி அவரை எனக்கு உதவியாக அழைத்து மிச்சம் இருந்த வேலைகளை செய்து முடித்தேன். அன்று பின்னேரமே ஓடரையும் கொடுத்துவிட்டோம்.

அதற்குப் பிறகு எனது கடையை ஓல்ட்மூர் வீதியில் தொடங்கினேன்...’ என்று தான் தொழிலில் வளர்ந்த விதத்தை சுவைப்படச் சொன்னார் கந்தையா.

காதல் பற்றி கேட்டோம்?

“எனக்கு அந்த வயசிலே காதல் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை என்பது ஆச்சர்யமான விடயம்தான். என் நண்பர்கள் காதல் பற்றி பேசும் போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் சத்தியமும், என் தங்கைகளும் தான் ஞாபகத்தில் வந்தார்கள். அதனால் என் மனதை கல்லாக்கி கொண்டேன். காதல் ரசம் சொட்ட சொட்ட வந்த ஒரு காதல் கடிதத்தைக் கூட கிழித்துப் போட்டுவிட்டேன். நான் வாழ்க்கையில் ஜெயித்ததிற்கு இதுவும் ஒரு காரணம் தான். நான் படிக்கும் காலத்திலேயே சந்திராவை எனக்கு தெரியும். எனது முறைப் பெண்தான். ஆனால் காதல் ஒன்றும் வரவில்லை. சும்மா பேசுவதோடு சரி. பிறகு நான் வளர்ந்த பிறகு நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். சந்திராவை கல்யாணம் செய்யப் போவதை கேள்விப்பட்ட சந்திராவின் உறவுக்காரர் ஒருவர் கொழும்பானுக்கு பொண்ணுக் கொடுக்கக் கூடாது. அவனொரு நாடகக்காரன். அந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அவன் குடலை உருவிடுவேன்.’ என்று சவால்விட்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். எங்கள் திருமணம் டிக்கோயா பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது...” என்றவரிடம், மறக்க முடியாத நபர்கள் பற்றி கேட்டோம்.

“ஜே. பி. ரொபர்ட், மாத்தளை கார்த்திகேசு, ராஜசேகர், கே. எஸ். செல்வராஜா ஆகியோரை என்னால் மறக்க முடியாது’.

வாழ்க்கையில் தவற விட்டதாக நீங்கள் கருதுவது எதை என்று கேட்டபோது அம்மாவின் இழப்புதான் என்றார்.

அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிaர்களா?

“என் அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். என்னையும் என் அண்ணனையும் கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி வெயிலில் நிற்க வைப்பார். அதோடு வெங்காயத்தை பிழிந்து அதன் சாற்றை கண்களில் விடுவார். அப்படியொரு கொடுமைக்காரரா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
15 ரூபாவுடன் கொழும்பு
வந்த போது...


நான் கூட ஆரம்பத்தில் அப்பாவை வில்லனாகத்தான் நினைத்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அப்பா அன்று எனக்கு போட்ட அடிகள்தான் என்னை ஒரு புடம்போட்ட பக்குவப்பட்ட மனிதனாக உருவாக்கியிருக்கிறது. அதை நினைத்து நான் பூரிப்படைகிறேன். என் குடும்பத்தில் எத்தனையோ கஷ்டம் வந்தும் அப்பா எங்களை வேலைக்கு போ என்று சொன்னதில்லை. அப்படியொரு அப்பா மற்றவர்களுக்கு கிடைப்பாரா என்பது சந்தேகமே! எனக்கு இன்னொரு பிறவி இருந்தால் அவருக்கே நான் மகனாக பிறக்க வேண்டும். அப்பாவின் ஆசைப்படியே ஊரில் அவருக்கு இரண்டு கடைகள் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.

வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறேன். ஏமாற்றுபவர்களை விட ஏமாளிகளே அதிகமாக இருக்கிறார்கள். அந்த ஏமாற்றுக்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். நான் பணக்காரனாக பிறந்திருந்தால் வாழ்க்கையைப் பற்றி நான் முழுமையாக படிக்க முடியாமல் போயிருக்கும். கடவுள் புண்ணியத்தால் நான் அடிமட்டத்தில் பிறந்து வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை கற்றிருக்கிறேன்....” என்று தமது கடந்த கால நினைவுகளின் தொகுப்பை முடித்துக்கொண்டார் கந்தையா.

No comments:

Post a Comment