Saturday, January 19, 2013

வண்ணத்திரையின் வறண்ட பக்கங்கள்- 2

இசையமைப்பாளர் மீது சீறிப் பாய்ந்த உதவி இயக்குநர்
 


-மணி ஸ்ரீகாந்தன்-

சிங்களத் திரைப்படத்துறையில் பல வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர் பேராதனை ஜுனைதீன். தமிழகத்தில் சினிமா ஆர்வத்தில் ஏமாந்து போகும் திறமையான இளைஞர்களின் சில சோகக் கதைகளையும் எம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.
"நான் படவிசயமாக அடிக்கடி சென்னைக்கு செல்வதுண்டு. அப்போது நிறைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பட்ட கலைஞர்களை சந்திப்பது வழக்கம். அந்த சந்தர்ப்பங்களில் சினிமாவில் பணியாற்றும் துணை இயக்குநர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் ஆர்வமான இளைஞர்கள் சினிமாவிற்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இதோ அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் கதை:

அந்த துணை இயக்குநராக பணியாற்றிய இளைஞனுக்கு ஒரு இருபத்தைந்து வயதிருக்குமாம். நல்லக்கதையோடு ஒரு தயாரிப்பாளரை சந்தித்து அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். தமிழக சினிமாவில் உள்ள ஒரு கெட்டப்பழக்கம்தான் கதை சொல்வது. கதை உரிமையாளர் ஒரு கதையை தயார் பண்ணிக் கொண்டு அதை நாயகனிடம் சொல்வதற்காக நேரம் கேட்டு அவர் வீட்டுக்கு நாயாக, பேயாக அலைய வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்குக் கதை சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் கதைக்கேட்கும் ஹீரோ தமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே நம் கதையை கேட்டுக்கொண்டிருப்பார். பிறகு நாம் கதையை முடித்தவுடன் அந்த ஹீரோ "நீங்க சொன்னக் கதை எனக்கு புரியவில்லை. மீண்டும் ஒரு தடவை சொல்லுங்க" என்பார்.


கதை சொல்லும் அந்த ஆர்வமுள்ள இளைஞர் மீண்டும் கதை சொல்லுவார். மீண்டும் ஹீரோவுக்கு தொலைபேசி அழைப்பு, மீண்டும் கதை கடைசியில் "கதை பிடிக்கல சார்! டைம் ஆகிடுச்சி நீங்க வேறு ஒரு நாளைக்கு வந்து சொல்லுங்க" என்பாராம்.
இதுதான் அன்றிலிருந்து இன்று வரை நம் தமிழ் சினிமா உலகில் நடந்து வரும் விசயம்.

ஆனால் இலங்கை திரைப்படத்துறையில் இந்தக் கோளாறு கிடையாது. எனக்கு கதாநாயகனுக்கு கதை சொல்வதில் உடன்பாடில்லை. படம் தோல்வியடைந்தால் நாம் தான் நஷ்டத்தை தாங்க வேண்டும். அந்தக் கதை நாயகன் நமக்கு வந்து உதவப்போவதில்லையே! அதனால் நாம் சொல்கிற கதையில் நடிக்க நாயகன் தயாராக இருக்கவேண்டும். அப்படியானவர்களைத்தான் நான் என் படங்களில் ஒப்பந்தம் செய்கிறேன் என்று கொஞ்சம் ஆவேசப்பட்டுப்போன ஜுனைதீன்,  தயாரிப்பாளரிடம் கதைச் சொன்ன அந்த உதவி இயக்குநர் இளைஞனின் கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

அந்த இளைஞன் சொன்னக் கதை தயாரிப்பாளருக்கு பிடித்துப்போக அவரும் ஓகே சொல்லிவிட்டார். பிறகு அந்தப்படத்திற்கு தமிழகத்தின் இளையவரான பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தமும் செய்துவிட்டார். அதனால் அந்த சினிமா ஆர்வமுள்ள இளைஞனுக்கு பெரு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் தனக்கு இந்த படம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய வாய்ப்பாக கருதினான். அதனால் தனது உழைப்புக்கு எந்த ஊதியமும் தேலையில்லை என்று தயாரிப்பாளரிடம் வாக்குறுதியும் கொடுத்துவிட்டான்.

இரண்டு வாரங்கள் கழித்து அந்த இளைஞரை அழைத்த தயாரிப்பாளர், உனக்கு அடுத்ததாக தான் தயாரிக்கும் படத்தில் இயக்குநர் வாய்ப்பு தருவதாகவும், இப்போதைக்கு இந்த கதைக்கு வேறு ஒரு இயக்குனரை புக் செய்யப்போவதாகவும்,  கூறியிருக்கிறார். பதைபதைத்துப்போன அந்த இளைஞன் ஏன் சார் என்னை பிடிக்கவில்லை என்று கேட்டான். தயாரிப்பாளர் மௌனம் சாதித்தார். காரணத்தை மட்டும் சொன்னால் அத்தோடு விட்டு விடுவேன் என்று இளைஞன் கெஞ்சவே. தயாரிப்பாளர் காரணத்தைக் கூறினார்.

"நான் என்னப்பா செய்ய... அந்த இசையமைப்பாளருக்கு உன்னைப் பிடிக்கவில்லையாம்" என்று தயாரிப்பாளர் சொல்ல அந்த இளைஞன் நேராக ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு நடந்தான். அங்கே அவன் செல்லவும் அந்த இளைய பெரிய இசையமைப்பாளர் காரில் வந்து இறங்கவும் நேரம் சரியாக இருந்திருக்கிறது. இளைஞனைக் கண்ட இசையமைப்பாளர் சிரித்துக்கொண்டே எப்போ தம்பீ சூட்டிங்? என்று கேட்க இளைஞனுக்கு ஆத்திரம் தலைக்கேறியிருக்கிறது. இசையமைப்பாளர் மீது பாய்ந்து அவரைக்கீழே தள்ளிய இளைஞன் செருப்பைக் கழற்றி அவரை விளாசித்தள்ளியிருக்கிறார். ஓடி வந்து விலக்குவதற்குள் முன்னர் இசையமைப்பாளர் செம்மையாக வாங்கிக் கட்டிக்கொண்டார். இளைஞனுக்கு பரம திருப்தி. இந்தச் சம்பவத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் மறைக்கத்தான் பெரும் பாடாக போய்விட்டதாம் என்று அந்தக் கண்ணீர் கதையைச் சொன்னார் ஜூனைதீன்.

மற்றொரு சம்பவத்தையும் எம்மோடு அவர் பகிர்ந்துகொண்டார்.
அப்படித்தான் அஜித்குமாரிடம் ஒரு உதவி இயக்குநர் கதை சொல்லியிருக்கிறார். அவர் கதை சொல்லச் சொல்ல அது அஜித்திற்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டதாம். பிறகு அந்த உதவி இயக்குநரும் அஜித்தும் ரொம்பவும் நெருங்கிவிட்டார்களாம். அஜித்தின் தோளில் கைபோட்டு பேசும் அளவிற்கு அஜித்திற்கு அந்தக் கதைப் பிடித்துப்போக ஓகே சொன்ன அஜீத் , இன்னொரு நாள் எப்படி இப்படியொரு கதையை உருவாக்கினீங்க என்று நட்புரீதியாக (மச்சான் லெவலில்) கேட்டிருக்கிறார்.

உதவி இயக்குநரும் இனி எதற்கு உண்மையை மறைப்பான் என்ற தைரியத்தில் தான் கதையைச் சுட்ட ஆங்கிலப்படத்தின் பெயரை சொல்லியிருக்கிறார். சிரித்தப்படியே தலையாட்டிய அஜீத், உதவி இயக்குநர் விடை பெற்றுச் சென்றதும், உடனடியாக கே.எஸ். ரவிகுமாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார். உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார் தனது வெளிநாட்டு பயணத்தையும் நிறுத்தி விட்டு அஜித் வீட்டிற்கு ஓடி வந்திருக்கிறார் கே.எஸ். அவரைப் பார்த்த அஜித் அந்த உதவி இயக்குநர் சொன்ன ஆங்கிலப் படத்தின் பெயரைச் சொல்லி படத்தை உடனடியாக பார்த்து ஸ்க்ரிப்டை ரெடிபண்ணுங்க நான் நடித்து தர்றேன் என்றாராம் அஜீத். பிறகு சில வாரங்களில் திரைக்கதையை பரப்பரப்பாகத் தயார் செய்து அஜித்தின் கரங்களில் ஒப்படைத்து இருக்கிறார் ரவிக்குமார். அஜித் ஸ்கிரிப்டை பார்த்தார். அந்த உதவி இயக்குநருக்கு அது 'வில்ல'னாக மாறியது! பாவம் அந்த உதவி இயக்குநர். இதுதாங்க தமிழ் சினிமா என்று ஜுனைதீன் பெருமூச்சு விட்டார்.

No comments:

Post a Comment