Saturday, January 19, 2013

வண்ணத்திரையின் வறண்ட பக்கங்கள்- 2

இசையமைப்பாளர் மீது சீறிப் பாய்ந்த உதவி இயக்குநர்
 


-மணி ஸ்ரீகாந்தன்-

சிங்களத் திரைப்படத்துறையில் பல வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர் பேராதனை ஜுனைதீன். தமிழகத்தில் சினிமா ஆர்வத்தில் ஏமாந்து போகும் திறமையான இளைஞர்களின் சில சோகக் கதைகளையும் எம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.
"நான் படவிசயமாக அடிக்கடி சென்னைக்கு செல்வதுண்டு. அப்போது நிறைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பட்ட கலைஞர்களை சந்திப்பது வழக்கம். அந்த சந்தர்ப்பங்களில் சினிமாவில் பணியாற்றும் துணை இயக்குநர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் ஆர்வமான இளைஞர்கள் சினிமாவிற்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இதோ அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் கதை:

அந்த துணை இயக்குநராக பணியாற்றிய இளைஞனுக்கு ஒரு இருபத்தைந்து வயதிருக்குமாம். நல்லக்கதையோடு ஒரு தயாரிப்பாளரை சந்தித்து அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். தமிழக சினிமாவில் உள்ள ஒரு கெட்டப்பழக்கம்தான் கதை சொல்வது. கதை உரிமையாளர் ஒரு கதையை தயார் பண்ணிக் கொண்டு அதை நாயகனிடம் சொல்வதற்காக நேரம் கேட்டு அவர் வீட்டுக்கு நாயாக, பேயாக அலைய வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்குக் கதை சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் கதைக்கேட்கும் ஹீரோ தமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே நம் கதையை கேட்டுக்கொண்டிருப்பார். பிறகு நாம் கதையை முடித்தவுடன் அந்த ஹீரோ "நீங்க சொன்னக் கதை எனக்கு புரியவில்லை. மீண்டும் ஒரு தடவை சொல்லுங்க" என்பார்.

Tuesday, January 1, 2013

பறை இசைக் கலைஞர் விக்னேஷ் உங்களுடன் பேசுகிறார்

பறை இசை முழங்கவும் ஒரு தைரியம் வேண்டும்


உரையாடிவர்: மணி ஸ்ரீகாந்தன்


'தமிழ்ச் சமூகத்தில் சாதியம் ஒரு கோடறிக் காம்பாக செயல்பட்டு வருவது தெரிந்த சங்கதி. அதன் வீச்சு தமிழ் இசைக் கருவிகளையும் சாதி ரீதியாகப் பாகுபடுத்தி வைத்திருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! நம் மனம் மாற்றமடைவது எப்போது? என்ற கேள்வி படித்து முடித்ததும் உங்களில் எழும்!'

தமிழினத்தின் தொன்மையான அடையாளமாகவும், தமிழர் வாழ்வியலின் முகமாகவும் 'பறை' என்ற தோல் வாத்தியக்கருவி காணப்படுகிறது.
இது ஒரு இசைக்கருவி மட்டுமல்ல, தொல்குடித் தமிழ் சமூகத்தின் சொத்தாகவும் இருந்து வருகிறது. தோலிசைக் கருவிகளின் தாய் இந்த பறைதான். பறை என்ற வார்த்தைக்கு 'பேசு' எனப் பொருள் உள்ளது. மலையாளத்தில் பறையும் என்ற வார்த்தை தமிழில் 'சொல்' என்பதையே குறிக்கிறது "பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க இசைக்கு நடை கற்பிக்கும் கருவி" என தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் வளர்மதி தன்னுடைய 'பறை' ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இந்த தமிழர் இசைக்கருவி இன்று தலித் மக்களால் மட்டுமே வாசிக்கப்படவேண்டிய இசைக்கருவி என எழுதாத விதி இருந்து வருகிறது. அதனால் அந்த இசைக்கருவியை இன்று யாரும் தொட்டுப் பார்க்கவே பயப்படுகிறார்கள். எங்கே நமது சாதியை கண்டு பிடித்து விடுவார்களோ என்று அதை வாசிக்கும் சமூகத்தின் இளைய தலைமுறை அச்சப்படும் அதேசமயம், அதை ஒரு இசைக்கருவியாக மட்டுமே பார்க்கக்கூடிய ஏனைய சமூக இளைஞர்கள், அதை இசைக்க முற்பட்டால் சமூகம் தம்மை இழிவாகக் கருதி விடுமோ என்ற அச்சத்தால் அதைத் தவிர்த்து விடுகிறார்கள். வேறெந்த இசைக் கருவிக்கும் இப்படி ஒரு பரிதாப நிலை கிடையாது. எனவே தமிழரின் கௌரவ அடையாளமாக இருக்கவேண்டிய பறை, இன்று சாதீய தீயால் பொசுக்கப்பட்டு விட்டது. அதையும் தாண்டி சில இளைஞர்கள் இடதுக்  கையில் சிம்புக்குச்சியையும், வலதுக் கையில் உருட்டுக் குச்சியையும் பிடித்துக்கொண்டு பறையை வாசிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

இங்கிரிய, றைகம் மேற்பிரிவில் வசிக்கும் முருகேசு விக்னேஸ்வரனுக்கு- தற்போது இருபத்தாறு வயதாகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பறை இசைக்கும் கலைச் சேவையை செய்து வருகிறார். கலையில் அதிக ஈடுபாடு உடைய விக்னேஸ் றைகம் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றுவதோடு பகுதிநேர வேலையாக பறை இசைப்பதையும் மேற்கொண்டு வருகிறார்.

"நமக்கும் பறைக்கும் ரொம்ப தூரம்ங்க... ஆனால் எனக்கு சின்ன வயசில் இருந்தே கலை மேல் ரொம்ப பிரியம். ஏன் பைத்தியம் என்றும் சொல்லாம். எங்க ஊரு காமன் கூத்தில் ஒரு தடவை அவிசாவளை இளுக்குத்தென்ன தோட்டத்தில் இருந்து ஒரு பறையடிக்கும் குழு இங்க வந்து பறை அடிச்சாங்க. அவங்க அடிப்பதைப் பார்த்து நான் மெய்மறந்து போனேங்க... எனக்கும் அவங்க மாதிரி நெருப்பில் பறையை காய்ச்சு அடிக்கணும் போல இருந்திச்சி! அதன் பின்னர் நானே சொந்தமாக பறையடிக்க பழகினேன். என்கிட்ட இப்போ ஐந்து பறை இருக்கு. அதோட பேண்ட் வாத்தியமும் வைத்திருக்கேன். விஷேசங்களுக்கு குழுவாக போய் வாசிக்கிறேன்," என்று சொல்லும் விக்னேசுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, சாதி!

விக்னேஸ்வரன் பறை வாசிக்கும் சமூகத்தை சேர்ந்தவரல்ல.  அதனால் அவரின் குடும்பத்தாரும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு காட்டுகிறார்களாம்.
"பறையை கோணிப்பையில் போட்டு என் தோளில் மாட்டிக் கொண்டு செல்லும் போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் என் சித்தப்பா என்னைப் பார்த்து காறித்துப்புகிறார். அப்போ எனக்கு நெஞ்சில் முள் தைத்த மாதிரி ஒரு வலி ஏற்படும். 'பறை' என்றால் அவ்வளவு கேவலமா? அப்போ இளையராஜாவும், ரஹ்மானும் வாசிப்பது இந்தப் பறையைத்தானே! அவங்களுக்கு மட்டும் எப்படிங்க இங்கிலாந்துகாரன் மேஸ்ட்ரோவையும், அமெரிக்காகாரன் ஒஸ்காரையும் கொடுத்து கௌரவிக்கிறான்?” என்று நம்மை பார்த்து நியாயமான கேள்வி தொடுக்கிறார் விக்னேஷ்.

"இது மட்டும் இல்லீங்க... அண்மையில் என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு திருமண வீட்டுக்கு போனேன். அங்கே வந்த ஒருவர் என்னைப் பார்த்து சத்தமாக "ஏய் இங்கே பாருடா நம்ம சாதிக்குள்ளே ஒரு '....' டேய் பறையடிக்கிறவன் '.....' பேண்ட் அடிக்கிறவன்  '.....'  "அப்போ நீ யாருடா?" என்று என்னைப் பார்த்து கேட்டாருங்க! எனக்கு வெட்கமா போச்சு. ஆனாலும் நான் சரஸ்வதியா மதிக்கிற அந்த பறைக்காக அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டேன்.

"எங்க வீட்ல எங்கப்பா மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார். ஏனென்றால் அவரும் அந்தக் காலத்தில் ஒரு கலைஞராக இருந்தவர். அதனால் பறையை சாதியோடு முடிச்சுப்போட்டு பேச என் அப்பாவுக்கு இஷ்டமில்லை. அவரின் ஆதரவோடு தான் நான் இந்தத் துறையில் இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறேன்." என்று விக்னேஷ் பெருமூச்சு விடுகிறார்.
பறை எந்தக்காலத்தை சேர்ந்தது என்று உறுதியாக கூறமுடியாது. ஆனாலும் பன்னெடுங்காலமாக இது பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இது இருந்து வந்திருக்கிறது. பறை மூலம் செய்தியை பரிமாற்றம் செய்யும் வழக்கம் உலகெங்கும் இருந்திருக்கிறது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களில் நிலவியல் வாழ்வியலின்படி குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்நிலங்களில் இது வாசிக்கப்பட்டதாகவும், நமது தொல்காப்பியம் கூறுகிறது. இதுதவிர சேர, சோழ பாண்டியர் கல்வெட்டுகளிலும் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஆனால் இநத விடயங்கள் விக்னேசுக்கு தெரியாது. ஆனால் குச்சியைப் பிடித்து மாற்றி அடித்து மெட்டுக்கட்டுகிறதும்,  சொற்கட்டுறதும் விக்னேசுக்கு அத்துப்படி.

"ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அடி இருக்குங்க... சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜொய்ண்ட் அடி,  மருள் அடி, சாமி அடி, மாரடித்தல், வாழ்த்து அடின்னு நிறைய இருக்குங்க...
நான் இதுவரைக்கும் கோயில் திருவிழாக்களிலும், பாழடைந்த கோயில் திறப்பு வைபவத்துக்கும் சுடுகாட்டில் மாடன், கருப்புசாமியோட பேய் விரட்டவும், வீட்டில் வைத்திருக்கிற பில்லி, சூனியத்தை எடுப்பதற்காகவும் நான் பறை வாசித்திருக்கிறேன். இது தவிர பௌத்த பெரஹரா ஊர்வலம், காமன்கூத்து, தீமிதிப்பு, பறவைக்காவடி என்று நிறைய விசேஷங்களிலும் வாசித்திருக்கிறேன்.

ஆனால் இதுவரைக்கும் மரண வீட்டில் மட்டும் பறை அடித்ததில்லை. அங்கேயும் வாசித்திடனும் என்கிற வெறியோடு காத்திருக்கிறேன்," என்கிறார் இந்த இசையை நேசிக்கும் துணிச்சல்காரரான விக்னேஷ்.
பறைகளின் மெட்டுக்களை, தீட்டைப்பறை, தொண்டகச்சிறுபறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல்சிறுபறை, மென்பறை, இன்னிசை பறை, பொருநர் பறை, ஆடுகளப்பறை என்று சங்க இலக்கியங்களில் வகைப்படுத்தபட்டிருக்கிறது.

"இந்த சங்க இலக்கிய சங்கதி எல்லாம் நமக்கு தெரியாதுங்க... ஆனால் பறை கட்டுற விஷயம் எல்லாம் நமக்கு அத்துப்படிங்க..." என்ற விக்னேஷ் பறைக்கட்டும் வித்தையை அவிழ்த்து விட்டார்.
"35 செ.மீட்டர் விட்டம் கொண்ட வட்டமான சட்டத்தில்தான் ஆட்டுத்தோலை கட்ட வேண்டும்.
அந்தக்காலத்தில் வேப்பமரத்தில்தான் அந்த சட்டம் செய்யப்பட்டு இருக்கும்னு சொல்றாங்க... ஆனா நான் கட்டுறது இரும்பு வலயத்தில்தான்.
ஆட்டுத்தோல், யானை விலை விக்குது. ஒரு தோல் 800 ரூபா. அதை வாங்கி மூன்று நான்கு நாள் தண்ணீரில் ஊற வைக்கணும். அதேமாதிரி புளியங்கொட்டையை கொண்டு வந்து அம்மியில் வைத்து நசுக்கி அதையும் தண்ணீரில் ஊற வைக்கணும்.