Saturday, December 29, 2012

அனுபவம் பேசுகிறது-04

கார்த்தீபன் மாஸ்டரின் விஸ்வரூபம்


மணி ஸ்ரீகாந்தன்


றைகம் மேற்பிரிவு குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத் திருவிழா வந்தாலே எங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் கோயில் தான் எங்கள் வாசஸ்தலம். அவ்வளவு பக்தியா என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. ஆலய வளவில் கும்பல் கும்பலாகக் கூடி நின்று சினிமா, அரசியல் என்று எல்லா விசயங்களையும் மணிக்கணக்கில் அலசிக் கொண்டிருப்பதுதான் எங்களுக்கு வேலை. நடுலே கொஞ்சம் கடலை, முறுக்கு, நெக்டோ... இந்த அரட்டை ஆலய பூஜை நிறைவடையும் வரை தொடரும். பிறகு அர்ச்சகர் தரும் திரு நீரை நெற்றியில் பூசிக் கொண்டு பக்தி பழமாக வீட்டிற்கு நடையைக் கட்டுவோம்.

அன்று றைகம் கோயில் தேர் வீதி உலா வர ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. மாலையில் கோயிலை விட்டு தேர் புறப்பட்டால் அடுத்த நாள் காலையில்தான் மறுபடியும் ஆலயத்தை வந்தடையும், நானும் எனது நண்பர் ஸ்ரீஸ்கந்தராஜாவும் தேருக்கு பின்னால் கதை பேசிக் கொண்டே நடந்தோம். எங்களுக்குப் பின்னால் றைகம் மேல் பிரிவு பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றிய கார்த்தீபன் மாஸ்டரும் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் கார்த்தீபன் மாஸ்டர் என்றால் எங்களுக்கு குலை நடுங்கும். அப்படி அடி பின்னி எடுப்பார். இப்போது அவருக்கு வயதாகிவிட வெளியிடங்களுக்கு சென்று டியூசன் எடுத்துக் கொண்டிருக்கிறார் எனக்கும் ஸ்ரீஸ்கந்தராஜவுக்கும் மாஸ்டர் மீது மரியாதை இருந்தது. ஆனால், இப்போது பயம் போய்விட்டது. இப்போது மாஸ்டர் எங்கள் இருவருக்கும் இரண்டடி இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது நான் அந்தக் காலத்தில் எங்களின் ஆரம்ப கல்வி பற்றி ஸ்ரீஸ்கந்தராஜாவுடன் பேச ஆரம்பித்தேன்.

"நாம் எல்லாம் எப்படித்தான் எழுத கற்றுக் கொண்டோமோ தெரியவில்லை. அந்தக் காலத்தில் நமக்கு தமிழ் சொல்லிக் கொடுத்ததே தவறு. மொழி என்பது ஒருவர் மற்றொருவருடன் பேசிக்கொள்ளும் தொடர்பாடல். அது ஒரு ஓசை. ஆனால் நமக்கு கற்பித்த ஆசிரியர்கள் 'அ'ன்னா, '  ஆ'வன்னா,  'இ'ன்னா, 'ஈ'யன்னா, 'உ'ன்னா. என்று தான் சொல்லிக் கொடுத்தார்கள். 'அம்மா' என்பதை அனா, இம்மன்னா, மானா என்று தான் சொல்லிக் கொடுத்தார்கள். இது தவறுதானே! 'அ' என்று சொல்லாமல் அதென்ன கூடவே வால் மாதிரி 'ன்னா' என்ற ஒரு தேவையில்லா ஓசை? பிறகு எப்படி 'அன்னா'ம் 'மன்னா, மாவன்னா அம்மாவாக முடியும்? இவனுக்கு படிப்பு வரலையே... அம்மான்னு எழுத தெரியலையே என்று பெற்றோர்கள் மாஸ்டரிடம் முறையிடுவதும் பதிலுக்கு மாஸ்டர் அவரால் முடிந்த மட்டும் மாணவர்களை அடித்து படிக்கச் சொல்வதும் வாடிக்கை. ஆனால் உண்மையில் தவறு ஆசிரியர்களிடம் தான் இருந்திருக்கிறது.

 தமிழ் ஒரு அழகான மொழி. அதை இலகுவாக சொல்லிக் கொடுத்திருக்கலாம். அதைக் கடினமாக்கி மாணவர்களையும் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள். பாறையைத் கடைந்து நீரெடுப்பதல்ல கல்வி. ஓடையை தோண்டி நீரெடுப்பது போன்றதுதான் கல்வி என்பதை ஆசிரியர்கள் புரியாமல் எங்களையும் குழப்பி விட்டிருக்கிறார்கள்" என்று நானும் நண்பரும் பேசிக் கொண்டு வந்ததை கார்த்தீபன் மாஸ்டர் அமைதியாக கவனித்து வந்திருக்கிறார். இது எங்களுக்குத் தெரியாது. இந்தச் சம்பவம் நடந்து இப்போது பத்து வருடங்கள் ஓடிவிட்டன.

அண்மையில் ஒரு நாள் என்னை வழியில் கண்ட கார்த்தீபன், பத்து வருடங்களுக்கு முன்னால் தேர் வீதி உலாவின் போது நானும் ஸ்ரீஸ்கந்த ராஜவும் தமிழ் மொழி படிப்பித்தல் பற்றி பேசிக் கொண்டதை என்னிடம் கூறினார். எனக்கு என்னவோ போலாகி விட்டது. ஆனால் அடுத்ததாக அவர் கூறியது என்னைத் தூக்கிவாரிப் போட்டது

"இப்போது நான் மாணவர்களுக்கு நீங்கள் கூறிய அந்த முறையில்தான் படிப்பிக்கிறேன். மற்றவர்களுக்கும் தமிழ் மொழி பற்றி விளக்கிச் சொல்கிறேன்" என்றார். கார்த்தீபன் மாஸ்டர் என்முன் விஸ்வரூபம் எடுத்தது போல உணர்ந்தேன். அவரைப் பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது.
 எனக்கு படிப்பித்த ஒரு மாஸ்டர் என்னிடமே தன் தவறை ஒப்புக் கொண்டதும் அந்தத் தவறை நீக்கியே இப்போது படிப்பிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டதும் அவரைப் பற்றிய என் அபிப்பிராயத்தை மென்மேலும் உயர்த்தியது. வாத்தியார் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று தலைகனத்துடன் பாவனை பண்ணிக் கொண்டிருப்போர் மத்தியில் இவர் எவ்வளவு பெரிய மனிதர்!

1 comment:

  1. அருமையாக இருக்கிறது..!
    படிக்கும் போது காட்சிகள் ஒவ்வொன்றும் கண்முன்னெ நடப்பதுபோல் இருப்பது, எழுத்துநடையின் அழகு..!

    ReplyDelete