Saturday, December 29, 2012

என்னை புரட்டிப்போட்ட புத்தகம்

உங்களுக்காக பக்கங்களைப் புரட்டுகிறார் தொழிலதிபர் ஈஸ்வரன்


மணி ஸ்ரீகாந்தன்


நான் ஒரு புத்தகப் ப்ரியன். நிறைய புத்தகங்களை தேடித் தேடி படிக்கும் ஆர்வம் என் சிறுவயது முதலே இருந்து வருகிறது. நான் வாழ்க்கையில் பல கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறேன். இன்று சமூகத்தில் குறிப்பாக கொழும்பில் நான் தனித்துவமாக தெரிவதற்கும் என்னைப் புரட்டி புடம் போடுவதற்கும் தூண்டுதலாக அமைந்தது ஒரு புத்தகம் தான். சுமார் ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் எனக்கு அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டொக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய 'வாழ்க்கை அமைக்கும் எண்ணங்கள்'
என்பதுதான் அந்த  நூலின் பெயர்.

இந் நூல் ஜேம்ஸ் ஆலன் ஆங்கிலத்தில் எழுதியது. கங்கை புத்தக நிலையம் (13 தீனதாயரு தெரு, தி.நகர்) இதனை வெளியிட்டிருந்தது. 1944ல் இதன் ஏழாம் பதிப்பு வெளியாகி இருந்தது. அந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு நாற்பது வயதிருக்கும்.

தமிழகத்திலிருந்து வெளிவந்த அந்த நூலை இன்றுவரை நான் பொக்கிஷமாக பாதுகாத்தும் வருகிறேன். அந்த நூலில் சொல்லப்பட்டுள்ள செய்தி இது தான்: ஒரு மனிதன் ஒரே தடவையில் பலதரப்பட்ட விசயங்களை சிந்திக்கிறான். அவனது சிந்தனையில் ஆராய்ச்சி, தேடுதல், எதிர்கால திட்டம் அல்லது தான் கடந்து வந்த அந்த காலப்பகுதி ஆகிய முன்னோக்கியதும், பின்னோக்கியதுமாகிய சிந்தனைகள் எல்லைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும். இதில் பாலியல் தொடர்பிலான கெட்ட விசயங்களும் வந்துப் போகும்.

 எதற்கும் தடைகள் இல்லை இப்போது உங்கள் வீட்டில் உள்ள டீவியில் நல்ல சேனல்களும் இருக்கும், கெட்டதும் இருக்கும். ஆனால் நீங்கள் விரும்பினால் மட்டும் அவைகளை பார்ப்பீர்கள். ஆனால், நமது மூளையில் ஏற்படும் சிந்தனைகளுக்கு தனிக்கை போடவோ ரீமோட் கொன்ரோலில் கட்டுப்படுத்தவோ முடியாது. மனிதன் அவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முயற்சி செய்வதும் இல்லை. ஆனால் நமது சிந்தனைகளை முறைப்படி ஒழுங்குப்படுத்தினால் வாழ்க்கையில் பல வெற்றிகளை சந்திக்கலாம். என்பதுதான் அந்த  நூலின் உள்ளடக்கம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து, எண்ணியார் திண்ணியர், ஆகப் பெறின். என்ற வள்ளுவரின் வாக்குப் படி எண்ணியார் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதுடையவராக இருக்கப் பெற்றார், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர் என்பதைப் போல ஒரு விடயத்தை திரும்ப, திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது நிறைவேறும். என்பதையும் அந்த நூல் குறிப்பிடுகிறது. ஆனாலும், எமது எண்ணங்களின் ஊடே காமம், குரோதம், பொறாமை உள்ளிட்ட சிந்தனைகளுக்கு நாம் இடம் கொடுத்தால் அது நமது வெற்றியின் சிந்தனைகளை சிதைத்து விடும் என்கிற உண்மையையும் அது தெளிவுபடுத்ததுகிறது.

 சில நேரங்களில் ஒருவரைப் பற்றி நாம் சிந்தித்து கொண்டிந்தால். அடுத்த செக்கனில் அவர் உங்கள் முன்னால் நிற்பார். "இப்போதான் உங்களை நினைத்தேன் வந்திட்டீங்க உங்களுக்கு ஆயுசு நூறு," என்று சொல்வோம். இதை நம் எண்ணத்தில் அதிர்வலைகளின் சக்தியாக கருதலாம். நாம் சிந்திக்கும் போது எழும் எண்ண அதிர்வுகள் ஈதரில் கலந்து எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சென்று ஒரு சமிக்ஞை கொடுத்து வருகிறது. இதுவும் ஒரு ரேடியோ அதிர்வலைகள் போலத்தான் செயல்படுகிறது.

‘வாழ்க்கை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற இந்த அற்புதமான நூலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தமிழகத்தை சேர்ந்த பேச்சாளர் டீ.கே.சந்திரசேகரன். அவர் எனது நெருங்கிய நண்பர். தமிழகத்தில் நான் இருந்த போது ஒரு நாள் என்னிடம் அந்தப் புத்தகத்தை அவர் தந்தார். அதை வாசித்த பிறகு நானும், எனக்கு தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன். தமிழகத்திலிருந்து ஆயிரம் புத்தகங்களை வாங்கி வைத்து என்னை சந்திக்கும் எல்லோருக்கும் கொடுத்தேன். அப்படி செய்யும் போது எனக்குள் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.

இந்த விடயத்தை நான் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். என் வாழ்க்கையில் என்னைப் புரட்டி போட்ட அந்தப் புத்தகம் இன்றும் என் நினைவாக புத்தக அலுமாரியில்....


No comments:

Post a Comment