Saturday, December 29, 2012

வண்ணத் திரையின் வறண்ட பக்கங்கள்

நீ வீணாப்போன கெட்டிக்காரன் என்றார் எஸ்.டி. சிவநாயகம்!

 

கதவு  திறக்கும் பேராதனை ஜூனைதீன்

 

சாவி: மணி ஸ்ரீகாந்தன்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிங்களத் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து தந்தவர் சர்மிளாவின் இதயராகம் புகழ் ஏ.ஜே. ஜூனைதீன். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த கதைகளை தெரிவு செய்து அதை வெற்றிப்படமாக்கும் வித்தை தெரிந்த அவர் நம் நாட்டு தமிழ் சினிமாவிலும் சில படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். தமது சினிமா வாழ்க்கையில் தாம் கற்றுக் கொண்ட அனுபவங்களை வண்ண வானவிலுக்காக பகிர்ந்து கொண்டபோது...

“நமக்கு முதல்படம் டெக்சி டிரைவர் அதில் கதை வசனம் எழுதினேன். சினிமா என்பது கத்திமேல் நடப்பது போல அவதானமாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் நாம் காலி. ஏமாற்று, பித்தலாட்டம் என்று நிறைய இருக்கு. இந்த விசயத்தில் மட்டும் எல்லா சினிமா உலகமும் ஒன்றுதான். அசந்தால் தலைபோய்விடும்.


ஒரு தடவை இலங்கையில் பிரபள சிங்கள படத்தயாரிப்பாளரான ஒரு தமிழர் என்னை அவருடைய புதிய பாடத்திற்கு திரைக்கதை வசனம் எழுத அழைத்துச் சென்றார். கலைஞர் டீன்குமார்தான் என்னை அந்தத் தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்து வைத்தவர். இலங்கையில் பல சிங்கள வெற்றிப் படங்களை தந்த அவருடன் ஒன்றாக காரில் அமர்ந்து சென்றது எனக்கு பெருமிதமாக இருந்தது. அவரிடம் கதைக் கேட்டேன்.
 அவர் நீயே ஒரு கதையை ரெடி பண்ணு என்றார். அதற்கு நான் ரெடி பண்றேன். ஆனால் நிராகரித்துவிடக் கூடாது என்று ஒரு கண்டிஷன் போட்டேன். அதற்கு அவர் உடன்பட்டார். பிறகு நான் சொன்ன கதையைக் கேட்டு சந்தோசப்பட்ட அவர் ஜூனைதீன் இதில் கதைக்கு என் பெயரையே கட்டவுட்டில் போடுவோம் என்றார்.

நானும் சரி என்றேன். பின்னர் ஒவ்வொரு நாளும் நான் கண்டியிலிருந்து மருதானையில் உள்ள தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்து திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தேன் எனக்கு அந்த வீட்டில் பச்சைத் தண்ணிர் கூட கொடுக்கமாட்டார்கள்.
ஒரு நாள் திரைக்கதையை வாசித்த அவர் 'ஜுனைதீன், இந்தத் திரைக்கதையில் என் பெயர் போடலாமே' என்றார். அதற்கு நான் ஓ.கே போடலாம் என்றேன். படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத நான் எந்த ஊதியமும் கேட்கவில்லை என் பெயர் பட டைட்டிலில் வந்தால் போதும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. அதையே அவரிடமும் கூறியிருந்தேன்.

அந்தப் பெரிய தயாரிப்பாளரிடம் பணியாற்ற பலர் காத்துக்கிடந்த போது எனக்கு அவருடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எண்ணி பூரிப்படைந்து கொண்டிருந்தேன்.
 அடுத்த நாள் ஸ்கிரிப்ட் முழுவதும் எழுதி முடிந்தாகிவிட்டது. அந்தத் தயாரிப்பாளர் ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்துவிட்டு எல்லாம் நன்றாகவே வந்திருக்கிறது. இதில் வசனத்தையும் என் பெயரிலேயே போட்டால் கதை, திரைக்கதை, வசனம் என்று முழுமைபெருமே என்றார். அதற்கு நான் உங்களுக்கு சிங்களம் எழுத வராதே பிறகு எப்படி வசனம் என்று போடுவது என்றேன்.

அதற்கு அவர் நான் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதியாதக சொல்லிவிடுவேன் என்றார். நான் அடுத்த நிமிடமே மறுப்பேதும் சொல்லாது ஒரு வெற்றுப் பேப்பரை எடுத்து அதில் எனக்கும் இந்த திரைக்கதை வசனத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே வந்து விட்டேன். நான் அப்படி  வெளியே வந்தபோது என்னை அழைத்த தயாரிப்பாளர் ரெக்கார்டிங்குக்கு கூப்பிடுகிறேன் வா! என்றார்.
எனக்கு சினிமாவில் ரொம்பவும் பிடித்த விசயம் ரெக்கார்டிங் தான். சில நாட்களுக்கு பிறகு என்னை வழியில் சந்தித்த டீன்குமார் ஏன் ரெக்கார்டிங்குக்கு வரவில்லை என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது அடடே என்னை மறந்து விட்டார்களே என்று! பிறகு அந்தப் படம் வெளியாகி 150 நாட்கள் ஓடியது.

‘கௌத ரஜா’ என்பதுதான் அந்தப் படத்தின் பெயர்.
சில நாட்கள் சினிமா வாய்ப்பின்றி நான் இருந்த போது என்னை ஒரு நாள் தற்செயலாக சந்தித்த தினபதி ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகம் என்னைப் பற்றி விசாரித்தார். என் கதையைக் கேட்டு விட்டு எனக்குத் தெரிந்த எழுத்தாளர்களில் வீணாய்போன கெட்டிக்காரர்கள் இருவர். அதில் ஒருவர் ஈழத்துரத்தினம், மற்றவர் நீதான் என்று கூறி புன்னகைத்தார். பிறகு தினபதியில் வேலையும் கொடுத்தார்.

அந்த நாட்களில் நான் எழுதிய 'ஷர்மிளாவின் இதயராகம்' சிந்தாமணியில் 34 வாரங்கள் வெற்றித் தொடராக வெளியாகி எனக்கு பெயர் வாங்கித்தந்தது. தொடர்முடிந்த போது அதற்கு ஒரு முடிவுரை எழுதிய சிவநாயகம். இந்தக் கதை நல்லதொரு இயக்குனரின் கையில் கிடைத்தால் ஒரு அற்புதமான திரைப்படமாகி விடும் என்றார். அந்த விமர்சனம் தான் என்னை திரும்பவும் சினிமாவின் பக்கம் திரும்ப வைத்த தாரக மந்திரமாக அமைந்தது.

பிறகு எனது நண்பர் எஸ்.என். கனகரட்ணத்தின் உதவியோடு பிரபள சிங்களப் பட இயக்குனர் சுனில்சோம பீரிஸ்சிடம் பேசி அந்தப் படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்தேன். பிறகு சிலமாதங்களில் எல்லாம் சரியாகிவிட எனது தயாரிப்பில் சுனில்சோம பீரிஸ்சின்; இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி படமும் வெளியாகியது. படம் கொழும்பில் பிரபள திரையரங்குகளில் வெளியான போது எனக்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்வார்களோ   தெரியவில்லை என்ற பயம்தான்.

ஒரு நாள் கெப்பிட்டல் தியேட்டருக்கு அருகில் இருந்த கடையில் மறைந்திருந்தவாரு யாரெல்லாம் படம் பார்க்க வருகிறார்கள் எனறு நானும் ஓவியர் சாமியும் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது வீரகேசரியில் பணியாற்றிய நண்பர் ராஜலிங்கம் அந்தப் படத்திற்காக வைத்திருந்த 40 அடி உயர கட்அவுட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
 தொடர்ச்சியாக ஒரு அரை மணி நேரமாவது அந்தக் கட்அவுட்டை அவர் பார்த்திருப்பார். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் கட்அவுட்டை பார்த்ததை கவனித்த நானும், சாமியும் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தோம்.

'ஏன் பிரதர் கட் அவுட்டை அப்படி பார்க்கிறீங்க?'என்று விசாரித்தோம். அதற்கு அவர் "என்னுடன் ஒன்றாக வேலை செய்த என் நண்பர் செய்த பெரிய சாதனையாக இந்தப் படத்தை நான் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார். எனக்கு அவர் அப்படி சொன்னது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

ஆனாலும் இன்று திரைப்படங்களை எனக்கு அறிமுகமில்லாதவர்கள் தான் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஆதனால் இப்போதும் நான் செய்வது நான் வசிக்கும் இடத்திலிருந்து 40 மைல் தள்ளியிருக்கும் அறிமுகம் இல்லாதவர்களுக்காகத்தான் ஏனென்றால்; என் நண்பர்கள், சகோரர்கள், உறவினர்கள் எப்போதும் "அட இவரா... இவரைத்தான் நமக்குத் தெரியுமே... அவர் தயாரிக்கிற படத்தை பார்ப்பதா" என்ற அலட்சித்தில் படத்தை பார்க்காமல் இருந்து விடுகிறார்கள் சில நண்பர்களோ என்ன படமெல்லாம் பண்றீங்களோ எங்களுக்கு ஒரு வாய்ப்புத்; தரக் கூடாதா? என்று கேட்டு என்னை நோகடிக்கிறார்கள் இத்தகையோர் என்படத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

 சில நண்பர்கள் நல்ல மனது வைத்து நான் தயாரித்த படங்களை பார்த்துவிடுவார்கள். உங்க படத்தில் எல்லாமே நல்லாயிருக்கு ஆனால் எடிட்டிங் சரியில்லை என்பார்கள். எடிட்டிங்னா எதைச் சொல்றீங்க? என்று கேட்டால் வெட்டி ஒட்டுறது என்று எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவார்கள். சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நண்பர்களுக்கு சான்ஸ் கொடுத்தால் கையெடுத்து கும்பிடுவார்கள். வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் 'ஜுனைதீனா... என்ன படம் செய்கிறார்? அவருக்கு என்ன தெரியும்?' என்பார்கள் இதுவெல்லாம் எனக்கு இப்போது பழகிப் போன விஷயம்.
நாம் வளராம போனதற்கு காரணம் இதுதான். உள்ளுர்க்காரன் என்றால் பார்க்கவும், பாராட்டவும் முன்வர மாட்டார்கள் அதுவே தென்னிந்தியக் குப்பையானாலும் விழுந்தடித்து பார்ப்பார்கள் வாய்ப்பிழந்த தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு இங்கே ராஜமரியாதை. நம் ஆட்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

தொழிலில் பொய்பேசாதே! திருடாதே! யோக்கியனாய் இரு! என்று எனது குருநாதர் சுண்டிக்குளி டீ சோமசேகரன் சொன்னதை இன்றும் அப்படியே கடைப்பிடித்து வருகிறேன்” என்று சொல்லும் ஜூனைதீன் தற்போது
 ‘மமய் ப்ரிய ஆதரே’ என்றப் படத்தை தயாரித்து வருகிறார்.

No comments:

Post a Comment