Tuesday, December 18, 2012

குப்பையில் இருந்து கோபுரத்துக்கு..


"டேவிட் கிராம்" வெற்றி பெற்றது எப்படி..?

 

பிரசித்தி பெற்ற டேவிட் கிராம் நிறுவனத்தின் உரிமையாளர் டேவிட் ரொபர்ட் தமது நிறுவனம் வெற்றி பெற்ற கதையை  பகிர்ந்து கொள்கிறார். 

  உரையாடியவர் ;மணி ஸ்ரீகாந்தன்.

 

"கடலை வாங்கலியோ… கடலை… வேர்க்கடலை… கொண்டைக் கடலை… சூடா… சூடா…"
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், திருநெல்வேலியிலிருந்து பிழைப்புக்காக கொழும்பு வந்திருந்த அந்த பதினான்கு வயது பையன், கையில் கடலைக் கூடையுடன், அரைக்கால்சட்டை, பனியனுடன் கோல்பேஸ் புல்தரையில் வியர்க்க, விறு விறுக்க.. வியாபாரம் செய்துகொண்டிருந்தான்.

 ஆனால் அவனுக்குத் தெரியாது, தான் நடந்து கொண்டிருப்பது கோல்பேஸ் புல்தரையில் அல்ல,  வெற்றிப் பாதையில் என்று..
ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை வட்டம் எழுபது ஆண்டுகள்.. என்று வைத்துக்கொண்டால், அவனது முக்கியமான பருவம், ஒரு முப்பது ஆண்டுகளுக்குக் குறைவாகவே நீடிக்கும். இதுவே சாதிக்கும் சக்தி கொண்ட காலம். சில மனிதர்கள் இக் குறைவான காலப் பகுதியில் என்னென்னமோவெல்லாம் சாதித்து, ஒரு சாம்ராஜ்யத்தையும், மங்காப் புகழையும்  கட்டி எழுப்பி விடுகிறார்கள்.
ரொபர்ட்.

இவர்களால் எப்படி சாதிக்க முடிகிறது..? ஏன் மற்றவர்களால் சாதிக்க முடியவில்லை..? என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, வியப்பும், குழப்பமும்தான் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் சிறு வயது பருவம் பற்றித்தான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.
மிகச் சாதாரணமான இந்தக் கடலை பையன்தான் எதிர்காலத்தில் "மிக்ஷர்" என  பொதுவாக அழைக்கப்படும் கடலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கப் போகிறான் என்பது, அப்போது அவனுக்கே தெரியாது.
உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற இந்த மூன்று தாரக மந்திரத்தையும் சரியாகச் செயல்படுத்தி, அதில் வெற்றியும் கண்ட அந்தப் பையன்தான் டேவிட். புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தியடியில் கேஸ் வேர்க் வீதியில் அமைந்திருக்கும் டேவிட் கிராம் ஸ்டோர்ஸின் நிறுவனர்.

"அப்பா திருநெல்வேலியில் இருந்து கொழும்புக்கு வேலைத் தேடி வந்திருக்கிறார். இங்க வந்த அவர், ஒரு கடலைக் கடையில் வேலை செய்திருக்கிறார். அதன் பிறகு ஒரு கூடையில் கடலையைப் போட்டுக்கொண்டு, கொழும்பு வீதிகளில் கூவிக்.. கூவி கடலை விற்பனை செய்திருக்கிறார். பிறகு அதில் கிடைத்த சிறிய இலாபத்தை சேமித்து வைத்து, வாழைத் தோட்டத்தில் வசித்த அவரின் நண்பரிடம் இருந்து ஒரு பெட்டிக் கடையை வாடகைக்கு எடுத்திருக்கிறார்; அக் கடையில் வறுத்த கடலை வியாபாரத்தை ஆரம்பித்தார் அவர். கடலையை பதமாக வறுத்தெடுப்பதில் மட்டுமன்றி, சரியான மசாலாவையும் தயாரித்து சேர்ப்பதிலும் அவர் இயல்பிலேயே  கைதேர்ந்தவராக இருந்ததினால், கடைக்கு கடலை வாங்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியிருந்தது. வியாபாரத்தில் எடுத்து வைத்த முதல் அடி வெற்றியளிக்கவே, அடுத்த கட்டமாக ஐந்து பையன்களிடம்  ஐந்து கூடைகளில் கடலையைக் கொடுத்து விற்பனைக்காக அனுப்பி வைத்தார். பிறகு படிப் படியாக நிறையப் பேர் அவருடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். படிப் படியாக அந்த இளைஞனின் கை பக்குவமும், வர்த்தக அணுகுமுறைகளும் பல சிறு கடலை விற்பனையாளர்களை அவர்பால் ஈர்த்தது.
டேவிட்
டேவிட்


அவர்கள் மொத்தமாக கடலையை கொள்வனவு செய்யத் தொடங்கினார்கள். தனது பதினெட்டாவது வயதில் அந்த இளைஞன்,  வியாபாரத்தில் ஒரளவுக்கு வளர்ந்து விட்டிருந்தான். பிறகு அதே வாழைத் தோட்ட நண்பரின் உதவியுடன் 1940 களில் ஐந்து லாம்பு சந்தியில் 212/1 , என்ற இலக்கத்தையுடைய இந்தக் கடையை விலைக்கு வாங்கி 'டேவிட் கிராம் ஸ்டோர்ஸ்'  என்ற பெயரில் தொழிலை ஸ்திரமாக ஸ்தாபித்துக்கொண்டார்.”
இதுதான் டேவிட் என்ற அந்த இளைஞன் வெற்றி பெற்ற கதை.
"அப்போது இந்தக் கடை ரொம்பவும் சிறிதாக இருந்திருக்கிறது. இப்போது 214 , என்ற  புதிய இலக்கத்துடன் வளர்ந்து விட்டது." என்கிறார் டேவிட்டின் மகன் ரொபர்ட்.

டேவிட்டின் மறைவின் பின்னர், அவரின் மூத்த மகன் ரொபர்ட்தான் கடையை நிர்வகிக்கின்றார்.
"அப்பா இறந்து இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. அப்பாவிடம்தான் நான் தொழில் கற்றேன். 1986 ல் இருந்து கடையின் விற்பனை பொறுப்பை நானே ஏற்று நடத்தி வருகிறேன். அப்பா பிற்காலத்தில் கடலை தயாரிப்பு நிர்வாகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டார்." என்கிறார் ரொபர்ட்.

தினந்தோறும் அதிகாலையிலேயே 'டேவிட்' கடலை கடைக்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடிவிடுகின்றனர். தமக்கான கடலை மற்றும் மிக்சர் வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்கிறார்கள். அங்கு வேலை செய்யும் பையன்களும் பம்பரமாகச் சுழன்று காலை விற்பனையை முடிக்கிறார்கள். இந்த டேவிட் நிறுவனத்துக்கு போட்டியாக எவரும் இல்லை என்பதால், இந்நிறுவனம் இன்று தனிக்காட்டு ராஜாவாகவே விளங்குகிறது.
"அவ்வப்போது போட்டியாளர்கள் வந்து வந்து போவார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. எங்களுக்கு யாரும் சவாலாக இருப்பதும் இல்லை.. நாடு முழுவதும் எங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது." என்று நெஞ்சை நிமிர்த்துகிறார் டேவிட் ரொபர்ட்.

ஆரம்பத்தில் டேவிட் தனது கடலை கடைக்கான சமையல் கூடத்தை தெமட்டக்கொடையில்  தொடங்கி இருக்கிறார். விற்பனைக்கு ஒரு இடம்தான் இருந்தது. இன்று கொழும்பு முழுவதும் பத்து டேவிட் கிராம் கடைகள் இயங்கி வருகின்றன.
"அண்மைக் காலமாக வீதியோர நடை பாதை கடைகள் அகற்றப்பட்டு வருவதால், கடலை வியாபாரம் சிறிய சரிவை கொழும்பில் சந்தித்தது. சிறு வியாபாரிகள் பாதிப்பு அடைந்தனர். வாடிக்கையாளர்களுக்கு  அவர்களின் உற்பத்தி சென்றடைய வில்லை. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கொழும்பு முழுவதும் நாங்களே வாடகைக்கு கடைகள் எடுத்து கடலை வியாபாரத்தை நடத்தி வருகிறோம்." என்று கூறுகிறார் ரொபர்ட்.
"நீங்கள் கடலை, முறுக்கு, மிக்சர்களை எத்தனை இடங்களில் வாங்கி சுவைத்திருந்தாலும் , டேவிட் தயார் செய்யும் அயிட்டங்களில் கிடைக்கும் சுவையும், கரகர, முறுமுறு பக்குவமும்  அவற்றில் கிடைப்பதில்லை. இதன் ரகசியம் என்ன ரொபர்ட்?" என்று கேட்டோம்

"அதுதான் அப்பா கற்றுக் கொடுத்த தொழில் ரகசியம்.. முதலில் நாம் இந்தியாவிலிருந்து  கொண்டு வரும் கடலையை தரம் பார்த்து வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக திருநெல்வேலியில் இருக்கும் எமது டேவிட் கிராமின் கிளை நிறுவனத்தை நடத்தி வரும் எனது தம்பி, நல்ல தரமான கடலையை தெரிவு செய்து வாங்குகிறார். அவற்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அதுவும் ஒருவகையில் ருசிக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து கொல்கலன்களில் கொண்டுவரப்படும் கடலையை பத்து நாட்களுக்கு  மேல் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், பழுதடைவதோடு அது தரக்கூடிய ருசியும் குறைந்து விடும். சிலர் இது தெரியாமல் கடையில் சும்மா சேமித்து வைத்து, நாள் கடந்த பிறகு தயாரிக்கிறார்கள். சுவையும், பக்குவமும், கெட்டுப் போவதற்கு இது காரணமாகிறது.

ஆனால் இந்தப் பிரச்சினை எங்களிடம் கிடையாது.  நாங்கள் ஒரு மாதத்திற்கு கொண்டு வரும் இருபது, முப்பது கொல்கலன்கள், பத்து நாட்களுக்குள் தீர்ந்து விடும். அப்படி மிஞ்சினால், பத்து நாட்களுக்குள்ளாகவே அதை பொரித்து வைத்து விடுகிறோம். பொரித்து விட்டால் ஆறு மாதத்திற்கு வைத்திருக்கலாம்.
முறுக்கு, மிக்சர், பொரித்த கடலை, பக்கோடா உள்ளிட்ட கார வகைகளை நாங்களும் தயார் செய்கிறோம். இவற்றைத் தயாரிக்கக்கூடியவர்களைத் தேடிக்கொள்வது சிரமம். இப் பிரச்சினையால் இப்போது மிக்சர் வகைகளை இறக்குமதியும் செய்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் கார வகைகளை உள்ளுர் ஆட்களை வைத்தே தயாரிக்கிறோம். மேற்பார்வையை மட்டும் தமிழ் நாட்டுக்காரர்கள்பார்த்து வருகிறார்கள்."

டேவிட் கிராம் ரொபர்ட்டுக்கு இப்போது 47 வயதாகிறது. மூன்று ஆண், இரண்டு பெண் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். ரொபர்ட் மூத்தவர். அப்பாவின் தொழில் பக்தி, நேர்மை, உழைப்பு, உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் டேவிட்டிடம் அப்படியே உள்ளன.
"அந்தக் காலத்தில் இப்போது மாதிரி ஈஸியா வேலை செய்ய கல்குலேட்டரும், கம்ப்யூட்டரும் கிடையாது. அனைத்து கணக்கு வழக்குகளையும் அப்பா எப்படித்தான் மூளையில் பதிவு செய்து, இந்த அளவிற்கு வளர்ந்தாரோ தெரியவில்லை." என்று ஏ.சி. அறையில், நகரும் குஷன் இருக்கையில் அமர்ந்து, லெப்டொப்பில் ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக கணக்கு வழக்குகளை சரி பார்த்தபடி இருக்கும் ரொபர்ட், எம்மைப் பார்த்து வியப்புடன் சொல்கிறார்.

மிக்சர், கடலை, எனப்படும் கார வகைகளின் சந்தைப் புழக்கம் பல கோடி ரூபா பெறுமதியானது. வருடா வருடம் வளர்ந்து செல்லும் வர்த்தகத்துறை. ருசிக்க.. ருசிக்க.. திகட்டாமல் ருசித்துக்கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த கார வகைகளின் தேசியமட்ட விற்பனை சமீப வருடங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. எப்போதோ ஒருமுறை வறுத்த கடலையை வாங்கி வாயில் போட்டு நொறுக்கிய நாம், அதை இப்போது அடிக்கடி செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதற்கு டேவிட் உருவாக்கித் தந்திருக்கும் நாக்கைக் கட்டிப்போடும் சுவையும் ஒரு காரணம்.

No comments:

Post a Comment