Saturday, December 29, 2012

உபாலி செல்வசேகரனின் ஞாபக வீதியிலே…

"படுக்க இடம் கிடைக்காமல் ஜிந்துப்பிட்டி மைதான புல்தரையில் சுருண்டு கிடந்த அந்த நாட்கள்..."


 kzp =fhe;jd;


உபாலி செல்வசேகரன் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக கலைத்தறையில் ஜொலித்து கொண்டிருக்கும் நட்சத்திரம். மேடை நாடகம்,தொலைக்காட்சி, சினிமா என்று இரண்டு மொழிகளிலும் சுற்றிச் சுழன்று வருகிறவர். ‘புஞ்சி சுரங்கனாவி’ என்ற சிங்களப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரின் புகழுக்கு கூடுதல் பலம் சேர்த்தது ‘கோமாளிகள்’ என்ற மேடை மற்றும் வானொலி தொடர்தான். எஸ். செல்வசேகரான இவரை உபாலி என்கிற நாடறிந்த கலைஞனாக வலம் வரச் செய்தது. நகைச்சுவை நடிகரான இவரின் அந்தக் கால இனிக்கும் அனுபவங்கள் இங்கிருந்து தொடர்கிறது.

“அப்போ எனக்கு ஒரு ஆறு வயதிருக்கும். கொச்சிக்கடை சென் பெனடிக் ஸ்கூலுக்கு அப்பாதான் என்னை அழைச்சிட்டுப் போவார். அப்பாவை நான் ஐயான்னுதான் கூப்பிடுவேன். பாடசாலைக்கு போகும் முன் சென்லூசியஸ் ஆலயத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் ஐயா, அங்கே குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் தேவமாதாவை வணங்கிய பின் பாடசாலைக்கு செல்லும்படி கூறுவார். தினமும் நான் அப்படியே செய்வேன்.

என்னை சென் பெனடிக் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் தொப்பி அணிந்து ஒருவர் வருவார். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பார்க்கும் அவர் ‘தினமும் அய்யா உன்னை கூட்டிட்டு பாடசாலைக்கு வருகிறாரே நீ வளர்ந்த பிறகு ஐயாவுக்கு என்னடா செய்வே?” என்று கேட்பார். அதற்கு நான் ஐயாவை பார்த்துக்குவேன்’ என்று பதிலளிப்பேன்” என்று தனது சிறிது வயது அனுபவங்களை சொல்லத் தொடங்கிய உபாலி செல்வசேகரன் தனது பூர்வீகம் பற்றி இப்படி சொல்கிறார்.

‘எனது அப்பா பெயர் முத்தையா, அம்மா அந்தோனியம்மா. தூத்துக்குடி பெரிய கோயிலில்தான் அவர்களின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இலங்கையில் பாணந்துறையில்தான் நான் பிறந்திருக்கிறேன். எனது அப்பா பாணந்துறையில் இலக்கம் ஐந்து ஸ்டேசன் ரோட்டில் முத்தையா பிரதர்ஸ் என்ற பெயரில் ஒரு டெய்லர் கடையை நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்திருக்கிறார். அந்தக் கடையின் பின்புறத்தில்தான் எங்களின் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாண் பேக்கரியும் இருந்தது.

எங்கள் வீட்டை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சிங்களவர்கள்தான். அதனால் எனக்கு சிங்கள மொழியில் நல்ல பரிச்சியம் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு வந்துவிட்டோம். அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். சென் பெனடிக்கிடில் தான் என் முதல் அரிவரி ஆரம்பமானது. மிஸிஸ் ஜோசப் தான் எனக்கு அகரம் கற்றுக் கொடுத்த ஆசான். அதன் பிறகு என் கல்விப் பயணம் தொடங்கியது. எல்லாப் போட்டிகளிலும் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஐந்தாம் வகுப்பிற்கு வந்த போது தான் ராசையா மாஸ்டர் எனக்கு பாடம் எடுக்க வந்தார். அவரை என்னால் மறக்கவே முடியாது. எனது வானொலி பிரவேசத்திற்கு காரணமாக இருந்தவர் அவர்தான்.

நான் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது சரவணமுத்து மாமாதான் இருந்தார். அப்போது எங்கள் பள்ளியில் படித்த பீ. சந்திரசேகரனும் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார். அன்று அவர் சுகயீனம் காரணமாக வரவில்லை. எனவே அவர் நடிப்பதாக இருந்த குட்டி நாடகத்தில் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது.
அடுத்தவாரம் சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு ஒரு பாராட்டு கடிதம் வந்தது. அதில் ‘சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என்று என்னை பாராட்டி எழுதியிருந்தார்கள். அப்போதுதான் நான் ரொம்பவும் திறமையாக நடித்திருக்கிறேன் என்பதை நானே உணர்ந்து கொண்டேன். நண்பனான பீ. சந்திரசேகரன் தற்போது தமிழ்நாட்டில் பிரபலமான டொக்டராக பணியாற்றி வருகிறார்.
இளம் வயதில்

சரவணமுத்து மாமாவிற்கு பிறகு சிறுவர் மலர் நிகழ்ச்சியை பேரம்பல மாமா நடத்தினார். அவர் எனது தீவிர ரசிகனாகவும் இருந்தார். நான் நடிக்கும் நாடகங்களை பார்த்து பாராட்டுவார்.

அதன் பிறகு எனது நாடகப் பிரவேசம், கே.எம்.வாசகர், லடிஸ் வீரமணி ஆகியோருடன் தொடர்ந்து. அதில் ஹிலேரியன் பெர்னாண்டோ,வி.கே.டி. பாலன் உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தேன். இதுவரை ஆறு தமிழ்படத்திலும் ஆறு சிங்களப் படத்திலும் நடித்திருக்கிறேன். வெறும் செல்வசேகரனாக இருந்த நான் உபாலி செல்வசேகரனாக மாறிய கதையையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

ஒரு முறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் வளர்ச்சிப் பணிக்காக ஒரு நகைச்சுவை நாடகம் செய்து தரும் படி கேட்டிருந்தார்கள். ராமதாஸ் எழுதி தயாரித்து இயக்கிய ஒரு நாடகத்தில் நான் உபாலி என்ற பாத்திரத்தில் நடித்தேன். அதில் நான் திறமையாக நடித்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்.

அதன் பிறகு என்னை உபாலி என்றே எல்லோரும் அழைத்தார்கள். எனது இந்த வெற்றிக்கு முதல்படியாக இருந்தவர் ராமதாஸ்தான். அவரை என்னால் மறக்க முடியாது. அவரின் கோமாளிகளில் நடித்த பிறகுதான் என் புகழ் நாடு முழுவதும் பரவியது. மரிக்கார், உபாலி, அப்புக்குட்டி என்ற பாத்திரங்களை உருவாக்கிய பெருமை ராமதாசையே சாரும். நல்ல ஒரு படைப்பாளர் அவர் எழுதும் நகைச்சுவை நாடகங்களின் ஒவ்வொரு எழுத்தும் சிரிப்பாகத்தான் இருக்கும் என்று ராமதாசை புகழ்கிறார் உபாலி.

சின்ன வயதிலே நீங்க எப்படி குறும்பா? என்று கேட்டேன்

“அய்யோ அதை எப்படிச் சொல்ல! ரொம்பவும் குறும்புக்கார பையன்தான் நான். என் அம்மாகிட்டே நிறைய அடிவாங்கியிருக்கிறேன். ஒரு தடவை என் அம்மா சங்கிலியால் என் கைகளை கட்டிப் போட்டு வெய்யிலில் உட்கார வச்சிட்டாங்க! எங்கவீட்டுக்கு பக்கத்தில ராணியக்கா வீடு இருந்தது. ஒருநாள் ராணியக்கா களிமண்ணில் அடுப்பு செய்து அதை வெயில்ல காயவைத்திருந்தாங்க. அந்த வழியால போன நான் ஒரு தடியை எடுத்து வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்த அடுப்பை உடைத்துவிட்டேன்.
நிற்பவர்களில்: உபாலி, கே. சந்திரசேகரன்,
ராமதாஸ், அப்புக்குட்டி

உடனே ராணியக்கா என் அம்மாவிடம் விசயத்தை சொல்ல, அம்மா என்னை அடிக்கத் துரத்த நான் ஜெம்பட்டா வீதி வழியாக ஓடித் தப்பினேன். அன்று முழுவதும் வீட்டிற்கு வராமல் அந்த தெருவழியே சுற்றிக் கொண்டிருந்தேன். மாலையான பின்னரும் வீட்டிற்கு போக வழி தெரியாமல் தெருவில் உட்கார்ந்திருந்தேன். நேரம் கடந்த பிறகு இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்குள் பூனைப் போல நுழைய அம்மா என்னை பிடித்து ஆத்திரம் தீரும் மட்டும் அடித்தார்.

ஒரு தடவை அம்மா என்னை ஒரு பொலிஸ்காரரிடம் சொல்லி அடிக்க வைத்திருக்கிறார். அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

ஜெம்பட்டா வீதியில் ஒரு பொலிஸ்காரர் இருந்தார். அவர் மாலை நேரங்களில் அந்த வழியாக ஒரு தடியை கையால் எடுத்துக் கொண்டு ஒரு சுற்று வருவார். அவரைக் கண்டதும் பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து புத்தகத்தை எடுத்து படிப்பது போல பாசாங்கு காட்டுவேன். யாராவது வெளியில் விளையாடுவதை கண்டால் பிடித்து மிரட்டுவார். அதனால் தான் அப்படியொரு பயம். ஒரு நாள் மாலையில் ஒரு வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது என் தங்கை ஜோதி ஓடிவந்தாள். ‘அண்ணா அம்மா படம் பார்க்க போறாங்களாம் உன்னை கூப்பிடச் சொன்னாங்க” என்றாள். அவள் அப்படி சென்னதை நம்பி விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவள் பின்னே ஓடினேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அந்த பொலிஸ்காரர் தடியோடு அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் படிக்காமல் ஊர் சுற்றுகிறாயா என்று கையில் வைத்திருந்த தடியால் இரண்டு அடி போட்டார். ‘அம்மா சொல்லித்தான் அண்ணே உன்னை ஏமாற்றி கூட்டிட்டுப் போனேன்” என்று என் தங்கை ஜோதி சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது. அந்த ஜோதி சின்ன வயதிலேயே இறந்துட்டா!” என்று சொல்லும் போது உபாலியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.
எங்களில் ஒருவன் படத்தில் டொன் பொஸ்கோ, உபாலி.

என் அம்மாவை பார்க்கும் போதெல்லாம் அப்போது எனக்கு அப்படியொரு வெறுப்பாக இருக்கும்! இப்போது நினைத்துப் பார்த்தால் அம்மா போட்ட அடிகள் என்னை ஒரு நல்ல பிரஜையாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பது புரிகிறது. என் குறும்பில் இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு ஆட்கள் வருவார்கள். எங்கள் வீட்டிற்கும் தூத்துக்குடியிலிருந்து என் உறவினர்களும் வருவார்கள். எனக்கும் படகு பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த மச்சானிடம் எனக்கு படகு பார்க்க ஆசை கூட்டிட்டுப் போங்க என்று கேட்க அவரும் என்னை அழைத்துக் கொண்டு போனார்.

கொழும்பு துறைமுகமாக இருக்கலாம், என்று நினைக்கிறேன். அங்கே படகை கட்டி வைத்தி ருந்தார்கள். தண்ணீரில் படகு ஆடிக் கொண்டிருந்தது என்னை படகுக்குள் தூக்கி விடுவதாக  மச்சான் கூற அதற்கு நான் இந்த படகுல எங்களுக்கு ஏற முடியும். ஏறுவோமே... என்று சொல்லிக்கொண்டு படகில் ஒரு காலை வைக்கப் படகு தண்ணீரில் விலகிப் போக தண் ணீருக்குள் தொப்பென்று விழுந்தேன்.

அடுத்த நொடியே படகுகாரன் என்னை தூக்கி எடுத்தான். சிறிது தாமதித்திருந்தாலும் விலகிப் போன படகு திரும்பி வந்திருந்தால் என் மண்டை சிதறியிருக்கும். எந்த சாமி புண்ணியமோ  நான் காப்பாற்ற பட்டேன்” என்று தனது குறும்பான அனுபவங்களை சுவைப்பட அடுக்கிய உபாலியிடம், காதல் பற்றி கேட்டோம்.

“எனக்கு குறும்பு தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் காதல் விசயத்தில் நான் ஒரு அப்பாவிங்க. நான் நாடகங்களில நடித்துக் கொண்டிருக்கும் போது அம்மாவிற்கு ஒரு பயம் வந்து விட்டது. எங்கே நான் யாரையாவது ஒருத்தியை இழுத்துக்கொண்டு போய் விடுவேனோ என்ற பயம். உடனே அவர் என்னிடம் ‘ஒரு பொண்ணு பார்த்திருக்கேன் கட்டிக்கிறியா? என்றார். நானும் எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் சொல்லிவிட்டேன். இரண்டாவது வாரத்தில் சென்லூசியஸ் ஆலயத்தில் எனக்கு திருமணம் நடந்தது.
.ஹமீத், அப்புக்குட்டி, உபாலி, ராமதாஸ்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் மணப் பெண்ணுக்கு மாலை மாற்றும் போதுதான் அவளை நேரில் பார்த்தேன். அப்படியொரு சமத்துப் பிள்ளை என் கல்யாணத்தை சரஸ்வதி மண்டபத்தில் மெனேஜரா இருந்த பத்மநாதன் நடத்தி வைத்தார். கலையுலக நண்பர்கள் பலர் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். மருதானை ‘டொனால்ட்’ ஸ்டீயோவில் திருமணப் படம் பிடித்தோம்” என்றவரிடம் பாடசாலை நண்பர்கள் பற்றி விசாரித்தோம்.

“நடராஜா சிவம் என் இனிய நண்பர்களில் ஒருவர். இன்னும் எனக்கு அவர் அப்படித்தான். அப்புறம் சென் பெனடிக்ட் கல்லூரியில் எனக்கு படிப்பித்த பத்மநாதன் ஆசிரியரை என்னால் மறக்க முடியாது. எனது கஷ்டங்களில் ஒரு தோழனாக இருந்து உதவி செய்தார். இன்று அவர் ராமகிருஷ்ண மிஷனில் சாமியாராக இருக்கிறார். அவரை நான் குறிப்பிடாவிட்டால் நான் நன்றி மறந்த மனிதராகி விடுவேன். எனது சொல்லும் உபாலி

“வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டதாக நினைத்து வருந்துகிறீர்களா?”

என்று கேட்டோம்

“ஆம் நிறைய காலத்தை வீணாக்கி விட்டேன். அதனால்தான் இன்னமும் வாடகை வீட்டில் வாழ வேண்டியிருக்கிறது’

இப்போதும் பயப்படுகிற விசயம்?

“என் மனசாட்சிக்குதான்!”

மறக்க முடியாத நபர்கள்?

கொஞ்சம் யோசித்து விட்டு “என் பெற்றோர்கள் தான்” என்றார் உபாலி. ரொம்பவும் சந்தோசமாக இருந்தது.

“ஐரோப்பிய நாடுகளில் கோமாளிகள் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டதுதான் மறக்க முடியாத சந்தோசமான நிகழ்வு. ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை நண்பர் ஹமீத் ஏற்பாடு செய்து தந்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அது ஒரு காலம் என்று இன்று நினைத்து ஏங்குவது?

என் நண்பர்களான மார்ட்டின் பெர்னாண்டோ விக்டர் ஆகியோருடன் ஜிந்துப்பிட்டியில் இருக்கும் அந்த சிறிய மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து ஸ்போர்ட்ஸ்மேன் சிகரட்டை திருட்டுத்தனமாக இழுத்திருக்கிறோம். விக்டர்தான் அந்த சிகரட்டை வாங்கி வருவார். சிகரட்டின் புகையை உள்ளிருந்து வானத்தை நோக்கி வட்ட வட்டமாக புகை விட்டுக் கொண்டிருந்த ஜிந்துப்பிட்டி மைதானத்தை கடக்கும் போதெல்லாம் அந்த பழைய ஞாபகம் வந்து வந்து போகிறது.

திருமணத்தில்...


 ஒரு காலத்தில் நான் வேலையில்லாமல் வெட்டியாக திரிந்த போது என் மனைவி பிள்ளைகளும் அவர் அப்பாவுடன் தங்கிக் கொண்டார்கள். உனக்கு அந்த வீட்டில் இடம் கிடையாது என்று மாமா என்னை திட்டி வெளியே அனுப்பி விட்டார். எனக்கு இரவில் தங்க இடம் இல்லாமல் போனது. எனவே இரவில் நண்பர் ராஜா கணேசனின் வீட்டில்தான் தங்குவேன். சில நாட்களில் ராஜா கணேசனின் வீட்டிற்கு நான் செல்லும் போது நேரமாகி விட அவர்கள் கதவை சாத்தி தூங்கியிருப்பார்கள். கதவைத் தட்டுவது எப்படி? என்று யோசித்துவிட்டு வேறுவழியில்லாமல் ஜிந்துப்பிட்டி மைதானத்தின் புல்தரைகளில் படுத்து ஆகாய நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே உறங்கிப்போன அந்த நாட்களை மறக்கத்தான் முடியுமா? என்கிறார் உபாலி.

நீங்கள் சந்திக்க ஆசைப்பட்ட நபர் யார்?

என்று கேட்டோம்.

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுதான்! அவர் எனக்கு மாமா முறை. அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் முடியாமல் போய்விட்டது.

வாழ்க்கையை பற்றிய தங்களின் புரிதல்?

அளந்ததுதான் வாழ்க்கை. நமக்கு எது கிடை க்கனும் என்று இருக்கிறதோ அது கிடைக்கவே செய்யும்.

எனக்கு ஐம்பத்தாறு வயசிலேதான் விளம்பர நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்கு பிறகுதான் என் மகளுக்கு முப்பது வயதில் திருமணம் செய்து வைத்தேன். இப்போ ரொம்ப நல்லா இருக்கேன். சிங்கள சினிமா படங்களில் வாய்ப்புகளும் கிடைக்கிறது. எதையும் நான் தேடிப் போகல்ல அதுவாகவே கிடைத்து. கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பதை என் வாழ்க்கை அனுபவங்களின் மூலமாகவே இப்போது தான் நான் புரிந்து கொண்டேன்’ என்று கூறி முடித்தார் உபாலி .

No comments:

Post a Comment