Wednesday, December 26, 2012

இப்படியும் நடக்கிறது!

வேட்டி, செருப்பு அணிந்திருந்தால் சில இடங்களுக்குள் நுழைய முடியாது!


மணி ஸ்ரீகாந்தன்


‘வேட்டி தமிழர்களின் அடையாளம்’ என்று தமிழக தொலைக்காட்சி விளம்பரங் களில் ஒளிபரப்பாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி உண்மையாகவே தமிழர்களின் பாரம்பரிய உடை.

அதனால்தான் கலா சார நிகழ்வுகளில் தமிழர்கள் வேட்டியுடன் காட்சியளிக் கின்றனர். சாரம் என்பது வேட்டியின் இன்னொரு வடிவம். இந்த வேட்டியிலும் பல ரகம் உண்டு. அதாவது அணிவதில், தனிச் சுற்று, இரட்டைச் சுற்று, பஞ்சகச்சம் வட நாட்டுப் பாணி எனப் பல வகைகள். தமிழகத்தில் தனிச் சுற்று பிரபல்யம்.


ஒரு நாட்டு அல்லது ஒரு இனக் குழுவின் உடையை நாட்டின் அல்லது அவர்கள் வாழும் சூழலைப் பொருத்ததாக அமைகிறது. தமிழகத்தின் கொளுத்தும் வெயிலுக்கு சவுகரியமான உடை பருத்தி வேட்டிதான். இந்த வேட்டியை துவாயாக, விரிப்பாக, அரைக்கால் சட்டையாக, கோவணமாக, தலைப்பாகையாக என எப்படி வேண்டுமானாலும் நொடியில் மாற்றிக்கொள்லாம் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
வீ.கே.டி. பாலன்

எனவே பணக்காரனுக்கும் ஆண்டிக்கும் ஏற்ற உடையாக தமிழனின் சொத்தாக விளங்குகிறது இந்த வேட்டி. துவைத்துப் போட்டால் பத்து நிமிடங் களில் காய்ந்தும் விடும்! ஆங்கிலேயர் காலத்தில் வேட்டிக்கு கெளரவக் குறைச்சல் இருந்தாலும் தமிழகத்தில் வேட்டிக்கு இன்று நல்ல மரியாதை.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் விசேஷங்களுக்கு உரிய கெளரவ உடை. ஆனால் இந்த வேட்டிக்கு தமிழத்தில் மரியாதை கிடைக்காத ஒரு இடமும் உண்டு என்கிறார் சென்னை மதுரா டிரவல்ஸ் அதிபரும் கலைஞருமான வி. கே. டி. பாலன். இது அவர் சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய தகவல்.

இவர் எப்போதும் வெள்ளை வேட்டி, கதர் சட்டை, நெற்றி நிறைய விபூதி சந்தனத்துடன் பச்சைத் தமிழராகக் காட்சியளிப்பார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சங்கத்தில் முக்கிய பதவி விகிப்பவர் வீ.கே.டி. பாலன். அண்மை யில் அச் சங்கத்தின் கமிட்டிக் கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது. புதிய தமிழக சட்டசபைக்கு எதிரிலேயே இந்த ஜிம்கானா கிளப் இருக்கிறது.

கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வீ.கே.டி. பாலன் ஜிம்கானா கிளப்புக்குள் நுழைய முட்பட்ட போது அங்கே நின்றிருந்த காவல்காரன், நீங்கள் உள்ளே வரக் கூடாது! என்று தடுத்திருக் கிறான். நான் ஏன் உள்ளே வரக் கூடாது என்று வீ. கே. டி. அந்தக் காவல்காரனிடம் வினவ, அதற்கு அவன் நீங்கள் வேட்டி கட்டியிருக்கிறீர்கள்.


அதனால் உங்களுக்கு இங்கே அனுமதியில்லை என்று கூற இவர் அதிர்ந்து போயிருக்கி றார். அவன் வீ.கே. டியுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டி ருந்த போது சுற்றலாத்துறை சங்கத்தின் தலைவர் ஓடி வந்திருக்கிறார். “சார் தப்பு நடந்துவிட்டது.

நான் உங்களைப் பற்றி யோசிக்காமல் இங்கே நம்ம கமிட்டி கூட்டத்தை வைத்திருக்கக் கூடாது! இங்கே வேட்டிக் கட்டியவருக்கு அனுமதியில்லையாம் என்னை மன்னிச்சிடுங்க” என்று அவர் வீ. கே. டியிடம் கூறிவிட்டு ஜிம்கானா கிளப் உயர் அதிகாரிகளிடமும் வேறு பல வி. ஐ. பிக்களுடனும் பாலனுக்காக எவ்வளவோ பேசியும் பாலனுக்கு மறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்படவேயில்லை.

தமிழ் நாட்டில் வேட்டி கட்டிய மனிதனுக்கு அம்மாநிலத்தின் ஒரு பகுதிக்குள் நுழைய முடியாது என்ற ஒரு சட்டம் இக்காலத்திலும் இந்த ஜனநாயக நாட்டில் உள்ளதா என்ற ஆச்சரியம் வேறு! வேட்டி கட்டியவனுக்கு அனுமதி கிடையாது என்று தெரிந்திருந்தால் பாலன் அங்கே சென்றிருக்கவே மாட்டாராம்.

அவ்விடத்தை விட்டு கிளம்புமுன் அந்த கிளப்பின் உயர் அதிகாரியிடம் வீ. கே. டி, ‘நான் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் என்னை அனுமதிக்கவில்லை. இந்த இடத்திற்கு கலைஞர் வந்தால் அவருக்கு அனுமதி கிடையாதா?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த அதிகாரி, ‘அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்த போது இங்கே ஒரு முறை வந்தார். அவரை உங்களைப் போலவே வெளியே நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பினோம்’” என்றாராம் அந்த அதிகாரி!

அட! வேட்டி என்ன அவ்வளவு அசிங்கமான உடையா? என்ற வேதனையோடு வீ. கே. டி. வீடு திரும்பினாராம். அந்தக் கிளப்பிற்கு முன்னால் வேட்டிகட்டிய காமராஜரின் சிலை உள்ளது.

எந்தத் தமிழனும் இங்கே வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது. அப்படி வந்தால் காமராஜரை வெளியே நிற்க வைத்திருப்பதைப் போலத்தான் உங்களையும் நிறுத்துவோம் என்று நாசூக்காக அந்த சிலை மூலம் செய்தி சொல்லியிருக்கிறார்களோ என்கிறார் வி.கே.டி. பாலன்.

இந்தக் தகவலை நான் சக பத்திரிகையாளரிடம் கூறிய போது, இலங்கையிலும் அப்படிப்பல இடங்கள், விரட்டியடித்த சம்பவங்கள் உள்ளனவே என்றார்.


ஹெவ்லொக் வீதியில் உள்ள டிக்மன்ஸ் றோட்டில் அமைந்திருந்த பயணிகள் ஹோட்டல்தான் ஹெவ்லொக் டிவரின். நீச்சல் தடாகம், நைட்கிளப் என வசதிகளுடன் அமைந்திருந்த மூன்று நட்சத்திர ஹோட்டல் அது. இன்று கட்டடம் அப்படியேதான் உள்ளது. ஆனால் சர்வதேச பாடசாலை ஒன்று அங்கே இயங்கி வருகிறது.

எழுபதுகளில் இங்கே ‘த ஃபிளேம் ரூம்’ என்ற நைட்கிளப் என்ற களியாட்ட கிளப் நடைபெற்று வந்தது. இருள், பேண்ட் இசை, மெழுகுவர்த்தி வெளிச்ச இரவு, உணவு, மது என விடிய விடிய அமர்க்களப்படும்.

அப்போது கல்கிஸை ஹோட்டலில் லிட்டில்ஹட், பம்பலப்பிட்டியில் ஃபிளேட்ரும், கோல்ஃபேசில் புளூ எலிபன்ட், செலிங்கோவில் ஆகாசகடே, தப்ரபேனில் ஹார்பர்ரூம் என மிகச்சில நைட் கிளப்புகளே இயங்கி வந்ததால் எல்லா கிளப்புகளிலும் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக வெள்ளி, சனி இரவுகளில்.

இந்தப் புகழ்பெற்ற ஃபிளேம்ரூம் கிளப்புக்கு பெரிய புள்ளிகளும் வருவார்கள். இங்கே காலணி அணிந்தே வரவேண்டும் என்பது ஹோட்டல் விதி. சாரம். வேட்டி, செருப்பு, வெறுங்கால் என்பனவற்றுக்கு அனுமதி கிடையாது. டீ ஷர்ட்டானால் கொலர் இருக்க வேண்டும். எழுபது களில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்காலம். அவர் மகன் அனுர பண்டார நாயக்க நுவரெலிய மஸ்கெலிய எம்.பி, துடிப்பான சக்திவாய்ந்த இளைஞர்.

ஒருநாள் அவர் காலில் செருப்பு அணிந்தபடி ஃபிளேம் ரூம் நைட் கிளப்புக்கு தன் நண்பர்களுடன் வந்தார். வாசலில் நின்ற காவல்காரர், ஏனையோரை விடலாம் ஆனால் உங்களை உள்ளேவிட முடியாது என்று அனுரவிடம் கூறியிருக்கிறார். அனுரவுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரவே, ‘நீங்கள் காலணி அணிந்து வந்தால் உள்ளே விடுகிறோம்’ என்று பணிவாக காவலாளி கூறியிருக்கிறார்.

ஹோட்டல் மெனேஜரோடு தொடர்பு கொள்ள வேண்டும் என அனுர பண்டாரநாயக்க கூறியிருக்கிறார். வரவேற்பாளர் தரப்பிலிருந்து அதுதான் சட்டம் என்றும் அதை மீற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக ஹோட்டலைவிட்டு திரும்பிச் செல்லு முன்னர், ‘உங்கள் ஹோட்டல் முதலாளியை இதே டிக்மன்ஸ் வீதி வழியே காலில் செருப்பின்றி மேலும் கீழுமாக நடக்கச் செய்து காட்ட என்னால் முடியும்!’ என்று ஆத்திரத்துடன் கூறிச் சென்றாராம் அனுரபண்டாரநாயக்க! எனினும் இச்சம்பவத்தின் பின்னர் இந்த சப்பாத்து கட்டுப்பாட்டை ஹோட்டல் நிர்வாகம் படிப்படியாகக் கைவிட்டுவிட்டது.

நுவரெலியா ஹில் கிளப்பில் இப்போதும் ‘சூ’ அணியாமல் உள்ளே நுழைய முடியாது. கென்வஸ், ட்ரேக் ‘சூ’ போன்ற காலணிகள், செருப்புகள், டெனிம் கால்சட்டை என்பன வற்றுக்கும் தடை. ஹில்கிளப் என்பது பழைய, பிரிட்டிஷ் துரைமார்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு கெளரவச் சின்ன கிளப்.

இரவு டின்னருக்கு கோட் ஜெக்கட், டை, பளபளக்கும் காலணி என்பனவற்றை அணிந்தால்தான் அனுமதி. அரைக்கால் சட்டை அணிந்தவர்களுக்கும் அனுமதி கிடையாது. இது அனைவருக்கும் பொருந்தும். நகரபிதா, அமைச்சர்கள் என்போருக்கும் இது பொருந்தும் என்கிறார்கள் நுவரெலியா உயர் வட்டாரத்தினர். கோட் அணியாமல் ஜெக்கட் அணிந்தும் செல்லலாம்.

ஹில்கிளப் நுவரெலியாவில் அமைந்திருந்தாலும் இரண்டு நுவரெலியவாசிகள்தான் இதில் உறுப்பினர்கள். எனினும் 700 உறுப்பினர்கள் உள்ளதாகவும் பெண்களானால் உடலை மறைக்கும் கெளன் அணிந்திருக்க வேண்டும் என்றும் ஹில்கிளப் பேச்சாளர் ஒருவர் எம்மிடம் கூறினார்.

நுவரெலியாவின் மற்றொரு கெளரவச்சின்னமான கொல்ப் கிளப்புக்கு காலணி அணியாமல் செல்ல முடியாது. செருப்பு, அரைக்கால்சட்டை, கொலர் இல்லாத டீ-ஷர்ட் என்பனவற்றுக்கும் டெனிம் உடைகளுக்கும் அனுமதி இல்லை. கோட், டை அணிய வேண்டிய அவசியம் இல்லையானாலும் உடை நேர்த்தியாக இருக்க வேண்டும். பெண்களின் உடையும் அப்படித்தான்.

அறுபது எழுபதுகளில் கொழும்பு கறுவாக்காட்டில் சனோரமா, ட்ரொபிகானா என இரண்டு மாலுமி கிளப்புகள் இருந்தன. எம்.பிமார் தங்கும் சிராவஸ்திக்கு அண்மையில் ஒன்று அமைந்திருந்தது. கொள்ளுப்பிட்டியில் மற்று மொரு கிளப் அமைந்திருந்தது. இங்கெல்லாம் இலங்கைவாசி களுக்கு அனுமதி கிடையாது. நீங்கள் உங்கள் வெள்ளைக் கார நண்பருடன் இங்கே சென்றால், வாசலில் நிற்பவர் வெள்ளைக்காரரை உள்ளே அனுப்பிவிட்டு உங்களை வாசலில் நிறுத்திவிடுவார். ஏனெனில் நீங்கள் இலங்கைப் பிரஜை. இக்கிளப்புகளில் தாராளமாக மது, மங்கை, இசை, நடனம் எல்லாம் கிடைக்கும். ஆனால் வெளி நாட்டவர்களுக்கு மட்டுமே! நீங்கள் ஐரோப்பிய நாடொன் றின் பிரஜையாக, அந்நாட்டு கடவுச் சீட்டை கையில் வைத்திருப்பவராக இருந்தா லும், நீங்கள் கறுப்பு என்ப தால் உங்களை உள்ளேவிட மாட்டார்கள்.

ரொபிகானாவுக்குள் நுழைய நண்பர் முனைந்ததாகவும் அனுமதி மறுக்கப்பட்டதால் தன் நண்பரான ஜெர்மனியருடன் அங்கு சென்ற போது ஜெர்மனியரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாக காவலாளி தெரிவித்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.

ஜெர்மனியர் விடவில்லை இவர் என் கெஸ்ட். இவரை நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. “நண்பரை வெளியே விட்டுவிட்டு நான் உள்ளே போக முடியாது” என்று கூறியபடி என்னையும் அழைத்துக்கொண்டு அவர் வெளியே வந்தார் என்று அந்த சம்பவத்தை நிறைவு கூர்ந்தார் பத்திரிகை நண்பர்.

பென்ஜமின் என்ற புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட வியட்நாம் தமிழருக்கு பிரெஞ்சு மட்டுமே வரும். தமிழ் ஓரளவு பேசுவார். பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் கரிய உருவம். இவர் தன் பாஸ்போர்ட்டைக் காண்பித்தும் சருமம் கருமை என்பதால் இந்த இடங்களில் எல்லாம் அவரை உள்ளே விடவில்லையாம். நண்பரிடம் வருந்திச் சொல்லியிருக்கிறார்.

இலங்கையர்கள் வெளி நாட்டு பாஸ்போர்ட் வைத்தி ருந்தாலும் அவர்கள் கறுப்பர் கள் என்ற காரணத்தால் ஹில்கிளப்பில் உள்ளே விடுவதில்லை என்றும் வெள்ளைத்தோல்காரர்களுக்கு மட்டும் எந்தக் கேள்வியும் இல்லாமல் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் வாசகர்கள் பத்திரிகைகளுக்கு கடிதங்கள் எழுதி ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சொந்தப் பிரஜைக்கு சொந்தநாட்டில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக இன்னொரு சம்பவமும் உண்டு.

இதுவும் 70களில் நடைபெற்ற சம்பவம்தான். இலங்கையின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் த இன்டர் கொண்டினன்டல் ஹோட்டலாகும். இப்போது கொண்டினன்டல் ஹோட்டல் என அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் பேருவளை நசீம் ஹாஜியார் ஏதோவொரு நிகழ்வுக்காக இங்கே சென்றிருந்ததாகவும் ஹோட்டல் உணவகத்தைப் பார்க்கலாமா என இவர் முகாமையாளரிடம் வினவினாராம். ஹாஜியார் எப்போதுமே சாரமும் ஷேர்டும் செருப்பும் அணிபவர். எனவே அனுமதி மறுக்கப்பட்டது.

உடனே, “நான் யார் தெரியுமா? என்று கேட்க, தெரியாது என்று பதில் வந்ததாம். “நான் நினைத்தால் இந்த ஹோட்டலையே விலை கொடுத்து வாங்கி விடுவேன்” என்று கண்டிப்புடன் கூறியபடி வெளியேறினாராம் நசீம் ஹாஜியார். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அப்போது பேசிக் கொண்டார்கள்.

ஒருவரை உள்ளேவிட வேண்டுமா, இல்லையா என்பது அந்தந்த நிறுவன உரிமையாளரின் விருப்பம்தான். அதேசமயம், ஒரு நாட்டுப் பிரஜைக்கு நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் செல்வதற்கு உரிமை இருக்க வேண்டும். இது ஒரு ஜனநாயக பிரஜையின் உரிமை. எனவே இந்த உரிமை இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கப்பட வேண்டும். சாரம், வேட்டி அணிந்தும் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படத்தான் வேண்டும். உடலை மூடி நிற்கும் வேட்டியிலும் சாரத்திலும் அப்படி என்ன குறையை காண்கிறார்கள் இந்த நவீன காலனித்துவவாதிகள்?

No comments:

Post a Comment