Friday, December 7, 2012

உலக அழிவு-05


விண்கற்களை தெய்வங்களாக எண்ணி வழிபட்ட பண்டைய மக்கள் மணி ஸ்ரீகாந்தன்

தினமும் நம் பூமியின் மீது டன் கணக்கில் விண் கற்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எனினும் பெரும்பாலானவை பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும் போது அவை எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இரவு நேரங்களில் நீங்கள் வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவைகளில் ஒன்று பிரகாசமான வெளிச்சத்துடன
விழுவதை பார்த்திருப்பீர்கள். அது தான் விண் கற்கள். அப்படி பார்ப்பதை கெட்ட சகுணமாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஆனால்> ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் எரிநட்சத்திரம் ஒன்றைக் கண்டால் அதிஷ்டம் என்றும்> மூன்று விழக் கண்டால் கெட்ட சகுணம் என்றும் கருதும் வழக்கம் உண்டு. பிலிப்பைன்ஸ் நாட்டில் விண்கல் விழுவதைக் கண்டவுடன் உடனே கைக் குட்டையை எடுத்து ஒரு காரியத்தை நினைத்து முடிச்சு போட்டுக் கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் நினைத்தது நடக்குமாம். அதுப்போலவே ஜப்பான் நாட்டிலும் ஒரு வழக்கம் உண்டு. மேல் சட்டை பொத்தானை விண்கல் எரிந்து முடிவதற்குள் திறந்தால் நல்லது நடக்குமாம்! பூமியின் வளிமண்டலத்திற்குள் வந்து எரிந்து சாம்பலாகும் எரிகற்களை விண்கல்> எரி நட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் சாம்பலாகிப் போகும் கற்களை ~மீட்டியர்| என்றும் பாதி எரிந்த நிலையில் பூமியில் விழும் கற்களை ~மீட்டியரைட்| என்றும் அழைக்கிறார்கள். இந்த விண் கற்கள் பூமியின் மீது விழுவது போல மற்ற கிரகங்கள் மீதும் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. சந்திரனின் மேற்புரத்தில் காணப்படும் பள்ளங்கள்>சிறுகோள்கள்> விண்கற்கள் தாக்கியதால் ஏற்பட்டவை. ஏனெனில் அங்கே வளி மண்டலம் கிடையாது.


விண்கற்களை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள். ஒன்று பூமியில் காணப்படும் எரிமலைப் பாறைகள் போன்றவை ஒரு வகை. மற்றது> பூமியின் நடுப் பகுதியில் உள்ள இரும்பு> நிக்கல் உலோகங்களால் ஆனவை. மூன்றாவது நம் பூமியில் காணப்படாத கனிமங்களால் ஆனவை. விண்கற்கள் பற்றிய அறிவியல் தேடல் 1492ம் ஆண்டு பிரான்ஸ்-ஜெர்மனி எல்லையில் என்ஸி ஷெயிம எனுமிடத்தில் வீழ்ந்த 127கிலோ எடைக் கொண்ட விண் கல்லினால் ஆரம்பமானது. அந்தக் காலத்தில் அப் பகுதியை ஆண்ட மேக்ஸ்மில்லியன் என்ற ஜெர்மனிய அரசன் அந்த விண்கல்லை எடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறான். இன்றும் அந்த விண்கல் அங்குள்ள மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1794ல் ஜெர்மனிய ஆராய்ச்சியாளரான எர்னய்ட் சால்டினி விண் கற்கள் வானிலிருந்து விழுபவை என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார். விண் கற்கள் பூமியின் மீது விழும்போது ஏற்படும் ஒளிச்சிதறல்கள்> அது வரும்போது ஏற்படும் பேரோசை> பூமியில் விழுந்ததும் ஏற்படும் அதிர்வுகளை நேரில் பார்த்த மக்கள் அது ஏதோ தெய்வ சக்தி என்று கருதி விண்கற்களை வழிப்படவும் செய்திருக்கிறார்கள். அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்படியான விண் கற்களை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள். உலகில் இரும்பிலான பொருட்கள் தோன்றுவதற்கு இந்த விண்கற்கள் தான் ஆதாரம் என்ற ஒரு கோட்பாடு உள்ளது.


கி.மு.1400 காலப்பகுதியில் சுமேரியாவில் இரும்பு யுகம் தோன்றியது. இது நவீனத்துவத்தின் முக்கியமான வளர்ச்சியாக கருதப்படுகிறது. விண்கற்கலால் ஆயுதங்களை செய்ய முற்பட்ட சுமேரியர்களின் தற்செயலான கண்டுப்பிடிப்புதான் இந்த இரும்பு.

1928
ல் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை போன்ற அமைப்பில் விண்கற்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. இதுபோலவே கிளாக்காமஸ் செவ்விந்தியக்குடியினர் பல்லாயிரம் ஆண்டுகட்குமுன் வீழ்ந்த 15 டன் எடை கொண்ட விண்கல்லைத் தொழுதனர். ஆஸ்திரேலியப் பழங்குடியினரில் உள்ள மாந்த்ரீகர்கள் விண்கற்களைப் பிணி அகற்றவும்> மழை உண்டாக்கவும்> இன விருத்தி செய்யவும் மேற்கொள்ளும் சடங்குகளில் உபயோகிக்கின்றனர். கி.மு.14ம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய அரசன் டுட் அங்கமானின் பாடம் செய்யப்பட்ட உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறை 1922ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அகழாய்வில் கிடைத்த கத்தி ஒன்று இரும்பு-நிக்கல் கலந்த கலவையான விண்கல்லிலிருந்து செய்யப்பட்டது. என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. பண்டைய எகிப்திய குறிப்புகள் விண்கல்லை ~வானுலக உலோகம்| எனக் குறிப்பிடுகின்றன. கிரீன்லாந்தில் வாழும் எஸ்கிமோக்கள் விண்கல்லை உடைத்து ஈட்டி> அம்பு முனைகள் பலவற்றைச் செய்தனர் என்பதை கி.பி.1818ல் கண்டுபிடித்தனர்.

விண்கற்கள் வானிலிருந்து விழுந்ததால் கடவுளர் அவற்றைப் போட்டதாகவும்>அவற்றிற்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும் நம்பிய கிரேக்கர்கள்> ரோமர்கள் அவற்றைக் கோயில்களுக்குள் வைத்து ஆராதித்தனர். அவற்றைச் சுற்றிப் புராணங்களும் உருவாகின. குத்துக்கல் போன்று அல்லது ஆண்குறிபோல் தோற்றமளித்த விண்கற்கள் இனவிருத்தியின் அடையாளமாகப் போற்றப்பட்டன. கி.பி.200ல் பெஸினஸ் எனுமிடத்தில் இத்தகைய விண்கல் ஒன்று வழிபடப்பட்டது. அக்காலத்தில் ஹன்னிபால் கார்தேஜிலிருந்து வந்து அடிக்கடி போர் தொடுத்து ரோமப் பேரரசிற்குத் தொல்லை கொடுத்தான். அப்போது பெஸினஸில் உள் விண்கல் தெய்வத்தை ரோமுக்குக் கொண்டு வந்தால் தொல்லைகள் நீங்கி பாதுகாப்பு கிட்டும் என ஒருவன் ஆருடம் சொல்ல> ரோமத்தூதுவர் துருக்கி சென்று அங்கு ஆண்ட அட்டேலஸ் அரசனிடம் ரோம அரசின் வேண்டுகோளை முன்வைத்தார். முதலில் மறுத்த அவன் அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மருண்டு விண்கல்லை ரோமுக்கு அனுப்பினான். டைபர் ஆற்றின் வழியாக கொண்டு வரப்பட்டு ரோமில் பேலடைன் என்ற குன்றின் மேலுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ~தெய்வம்| வந்த தைரியத்தில் ரோமானியர்கள் ஹன்னிபாலுடன் போரிட்டு கார்தேஜை மீட்டியது வரலாறு.எமோஸா நகரில் இருந்த அஸிரிய சூரியக் கடவுள் கோயிலின் கருவறையிலிருந்து ஒரு விண்கல். கி.பி.218-222 காலகட்டத்தில் மார்கஸ் ஆவ்ரேலியஸ் அன்டோனியஸ் ரோமாபுரியை ஆண்டான். அந்த இளம் அரசன் அஸிரிய வம்சாவழியைச் சேர்ந்தவன். அவன் தன் பதினாறு வயதில் ரோமுக்கு வந்தபோது இரண்டு டன் எடை கொண்ட லிங்கம் போன்ற அமைப்புடைய விண்கல்லைக் கொண்டுவந்து> ரோமக் கடவுளர் சிலைகளை அகற்றிவிட்டு> அக்கல்லை நட்டு சூரிய வழிபாடு துவங்கினான். தன்னையே தலைமைப் பூசாரியக நியமித்து தன் பெயரையும் சூரியக் கடவுளின் பெயரான ~எலகா பேலஸ்| என்ற பெயரைச் சூட்டி> ரோமானியர்களை அக்கல்லை வணங்கி சூரிய வழிபாடு செய்ய நிர்ப்பந்தித்தான். கொடுங்கோலாட்சி செய்த பதினெட்டே வயது அரசனான அவனை ரோமானியக் காவலர்கள் கொன்று ரோமின் வீதிகளில் அவன் உடலை இழுத்துச் சென்றபோது விண்ணிலிருந்து வந்த குத்துக்கல் அவனுக்கு உதவவில்லை. மார்கஸின் துர்மரணத்திற்குக் காரணியாகக் கருதப்பட்ட விண்கல் மறுபடியும் எமோஸாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அக்கோயிலைச் சூறையாடிய கிறித்துவப்படை அங்கு ஒரு தேவாலயத்தைக் கட்டியது. பல ஆண்டுகள் கழித்து வந்த இஸ்லாமியப்படை தேவாலயத்தைத் தகர்த்து மசூதியைக் கட்டியது. இடிபாடுகளுக்குக் கீழே கிடக்கிறது ~எலகா பேலஸ்|

இந்த வரலாற்றைப் படிக்கும் போது> இந்த இரண்டாயிரமாம் ஆண்டிலும் நித்தியானந்தா போன்ற போலிச் சாமியார்களை பக்தர்கள் நம்பி வழிபடும்போது> விண்கற்களை அவர்கள் வழிபட்டதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
(தொடரும்…)

No comments:

Post a Comment