Friday, December 7, 2012

உலக அழிவு-04


உலகம் அழியும் ஆனால் அழியாது…

மணி ஸ்ரீகாந்தன்


பூமியில் அநியாயம் அதிகரித்து விட்டது> அதனால்தான் கடவுளின் அக்னிப் பார்வை பூமியின் மீது விழுந்து விட்டது. என்றும் விரைவிலேயே கடவுள் நியாந்தீர்க்க வருவார் என்றும் ஏராளமானோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் உச்சமாகத்தான் நம்மவர்கள் 2012இல் உலகம் அழியலாம் என்று கருதுகிறார்கள். சில மதங்களின் சில மத கோட்பாடுகளின் காரணமாகத்தான் இந்த உலக அழிவு அச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. உலக அழிவை காரணம் காட்டியே சிலர் மத மாற்றத்தையும் வளர்த்திருக்கிறார்கள். மத மாற்றத்திற்கான பெரிய ஆயுதமாக இந்த உலக அழிவு அல்லது மனிதகுல அழிவு இருந்து வருகிறது. உலக அழிவுகள் பற்றி பல தடவைகள் ஆருடம் கூறப்பட்ட போதும் இதுவரை இவ்வுலகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பூமி நலமாகத்தான் இருந்து வருகிறது.


விஞ்ஞானத்தின் அடிப்படையில் பார்ப்போமானால் உலகம் அழிவதாக இருந்தால் அது சூரியனால் தான் நிகழும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கும் சூரியனில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்தக் கொடிய திகதி வந்தடைவதற்கு நாம் இன்னும் 500 கோடி ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டும், நீங்கள் தயாரா?

சூரியனின் ஆயுளின்படி இப்போதுதான் 500 கோடி ஆண்டுகளை அது முடித்திருக்கிறது. இன்னும் 500 கோடி ஆண்டுகள் வரை அது உயிர் வாழும். ஆனால் இன்னும் இருபது கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் மாற்றம் ஏற்படத் தொடங்கி விடும் அதன்படி சூரியனின் சக்தி குறைய அது தடுமாற்றத்தை சந்திக்கும். இதன் காரணமாக சூரியனின் உற்பகுதி சுருங்க ஆரம்பிக்கும். அப்போது வெளிப்புறம் உப்பிப் பெரிதாக, வெப்பம் பன்மடங்காக அதிகரித்து தீக் குழம்புகள் சீறி எழும். சூரியனின் வெளிப்புறம் உப்பிப் பெரிதாகும் போது சூரியனின் அருகே அதைச் சுற்றிவரும் மேற்குறி மற்றும் வீனஸ் கிரகங்கள் பஸ்பமாகிவிடும். இக்காலப்பகுதியில் பூமியில் வெப்பம் பன்மடங்கு அதிகமாகி, அதன் தட்ப வெப்ப காலநிலை மாறிவிடும். இது நடைபெறுவதற்கு பல லட்சம் வருடங்களுக்கு முன்னரேயே ஜீவராசிகளும் தாவரங்களும் மடிந்து போயிருக்கும், மனிதர் உட்பட வெப்ப அதிகரிப்பு காரணமாக கடல் நீராவியாகிவிடும். அதன் மேற்பரப்பு சாம்பல் தரையாகிவிடும். இப்படி நடக்கப் போகும் சம்பத்தை நினைத்து நீங்கள் அச்சப்படத் தேவையில்லை ஏனென்றால் மனிதகுலம் மறைந்து பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டிருக்கும். அல்லது அண்டவெளியில் மிகவும் தொலைவிலுள்ள வேற்று கிரகத்தில் அமர்ந்து வேதனையுடன் பூமி அழிவதை மனிதர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். எப்படியோ, சூரியனில் ஏற்படக் கூடிய பெரும் மாற்றங்களே பூமிக்கு உலைவைக்கும் என்பது உறுதி.

நமது பூமியின் வயது 460 கோடி ஆண்டுகள். ஆனால் இந்த பூமியும், கிரகங்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்த உலக அழிவுப் பற்றிப் பேசப்படுகிறது. உலகமும், அதில் வாழும் உயிரினங்களும் ஒரு சில தினங்களில் படைக்கப்பட்டவை அல்ல. கோடான கோடி வருடங்களுக்கு முன்னால் இயற்கையின் சுய பரிசோதனை முறைகளின் ஊடாகவே பூமியின் உயிரினங்கள் தோன்றின. ஆனால் இந்த விடயத்தை அனேகர் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

உலகமும், உயிரும் படைக்கப்பட்டது. படைத்தவருக்கு எதிராக பாவங்களை நாம் செய்வதால் அது அவரை எரிச்சலடையச் செய்யும் என்றும் பிறகு அவரின் ஆத்திரம் நம்மை முற்றாக அழித்து விடும் என்றும் பரவலான ஒரு நம்பிக்கை காணப்படுகிறது. ஏற்கனவே பிரளயத்தின் மூலம் உலகம் அழிக்கப்பட்டதாகவும் எஞ்சிய உயிரினங்கள் மூலம் மீண்டும் உயிரினப் பெருக்கம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இக் கோட்பாட்டை முற்றிலும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் உலகம் பெரும் அழிவுகளை சந்தித்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனினும் உலக அழிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற மத அடிப்படையிலான நம்பிக்கையே, 2012இல் அழிவு வரலாம் என்ற பீதியை மாயன் கலண்டர் வாயிலாக மீண்டும் புகுத்தப்படுகிறது.

பரிணாம வளர்ச்சியினால் தான் மனிதன் உலகில் தோன்றினான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. மிருகங்களின் பல குணங்கள் நம்மிடையே அப்படியே காணப்படுகின்றன. ஆத்திரம், மூர்க்கம், இரத்தவெறி என்பன, சில சமயங்களில், மிருகங்களை விட மோசமாகவே நம்மிடம் உறைந்துள்ளன. உலகில் நிகழும் அல்லது அதிகரித்துச் செல்லும் வன்முறைகள், கொடூரங்கள், யுத்தங்களை எடுத்துக் கொண்டால் நாம் மிருக சாயல் கொண்டவர்களே தவிர தேவ சாயல் கொண்டவர்களாக இல்லை என்பது புலனாகும்.


நம்முடையதும் ஏனைய மிருகங்களினதும் அடிப்படையாக இருப்பது அடித்து பிடித்து வாழ வேண்டும் என்ற உந்துதல்தான். ஓட்டத்தில் எது திறமைசாலியோ, ஈடுகொடுக்கக் கூடியதோ அதுவே முந்தும், நீடித்து நிலைக்கும் என்பது டார்வின் தத்துவம். எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றன. ஈடுகொடுக்க முடியாதவை மடிந்துவிட ஏனையவை களத்தில் நிற்கின்றன. மனிதனால் ஈடுகொடுக்க முடிவதால்தான், ஒரு காலத்தில் டைனோசர்களால் ஆளப்பட்ட இந்த உலகை இன்று மனிதனால் ஆள முடிகிறது. ஈடுகொடுக்க முடியாத எண்ணற்ற தாவரங்கள் மடிந்துவிட்டன. உயிரினங்களும் அப்படியே.

உலகில் ஒரு பேரழிவு நிகழ்ந்த போது டைனோசர்கள் மடிந்தன. அப்படி மடிந்திருக்காவிட்டால் பாலூட்டிகள் தோன்றியிருக்க முடியாது. என்பது உயிரியல் அறிஞர்களின் முடிவு. பாலூட்டிகளின் வளர்ச்சியை மனிதனை தோற்றம் பெறச் செய்தது. எனினும் இதே மனிதன் தனது நலன்களுக்காக இயற்கையின் மீது தற்போது தாக்குதல் தொடர்ந்திருக்கிறான். இது எல்லையில்லாமற் போனால் இயற்கை திருப்பித்தாக்கத் தொடங்கும். இது மனிதனை பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

460 கோடி வயதை பூர்த்தி செய்துள்ள இந்த பூமியின் கடைசிக் காலத்தில் பாரிய பூகம்பங்களும் எரிமலைக் குமுறல்களும் நடக்கும் என்று சில மதங்கள் சொல்கின்றன.


எனினும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அளவுக்கு இன்று பூகம்பங்களும், கடற்கோள்களும் எரிமலைச் சீற்றங்களும் இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அளவுக்கு இன்று பூகம்பங்களும், கடற்கோள்களும் எரிமலைச் சீற்றங்களும் இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன் நிகழந்த சுனாமி சீற்றம் தான் சமீபகாலத்தில் பரவலாக நடைபெற்ற மிகப் பெரும் அழிவு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அப்படி ஒரு சுனாமிப் பேரலை நிகழ்ந்திருக்க வேண்டும். பண்டைய கால இயற்கை அனர்த்தங்களோடு ஒப்பிடும்போது இன்றைய உலகம் அமைதிப் பூங்காதான். இதற்காக அந்தக் காலத்தில் தான் பாவிகள் அதிகம் இருந்திருப்பார்கள் என்று முடிவு கட்டிவிடத்தேவையில்லை. தனது அழிவை தானே உருவாக்கிக் கொள்ளும் சக்தி பூமிக்கு கிடையாது. பூமிக்கு கேடு ஏற்படுமானால் அது பூமிக்கு வெளியில் இருந்து தான் வர வேண்டும்.
 அப்படி வரும் கேடு என்ன என்பதை கண்டு பிடித்து சொல்வதற்கும் நமது விஞ்ஞானிகள் தயாராகத்தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு வால் வெள்ளியோ விண்பாறையோ பூமியின் மீது மோதப் போகிறது என்றால் அதை விண்ணிலேயே கண்டுப் பிடித்து அழித்து விடும் ஆற்றலும் அமெரிக்க போன்ற பெரிய நாடுகளிடம் இருக்கிறது. இத்தகைய ஒரு ஆபத்து வருமானால் அது இடி இறங்குவது போல சட்டென நடைபெறாது. வால் வெள்ளியோ அல்லது விண்பாறையோ, அது பூமியை நெருங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்னரேயே விண்வெளி ஆய்வாளர்களினால் கண்டு பிடித்து விட முடியும். பூமிக்கு எவ்வளவு அண்மையில் அது வரும் என்பதையும் துல்லியமாகக் கணித்துவிடலாம். மாற்று ஏற்பாடுகளைச் செய்து அதை அழிக்க போதிய அவகாசம் இருக்கிறது. சூரியனை பல்வேறு பாதைகளில் சுற்றிவரும் விண் பாறைகளில் பெரியவை பலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றின் பாதைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் சிறிய விண்கற்கள் தினமும் ஆயிரக் கணக்கில் பூமியில் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விண் கற்களை பல உலக அருங்காட்சியங்களில் பார்க்கலாம்.

எனினும் பெரிய பிரமாண்டமான பாறை எப்போது ஒரு தடவைதான் பூமியின் மீது மோதி பிரமாண்டமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடையாது. நிச்சயமாக 2012இல் இல்லை.

(தொடரும்…)

No comments:

Post a Comment