Tuesday, December 25, 2012

அனுபவம் பேசுகிறது- 03

ஒரு தொழிற்சங்கவாதியுடனான எனது  Encounterகழுத்துப்பக்கம் ஒரு பிடிப்பு.. வருசக்கணக்கில் தொடர்கிறது. எங்கெல்லாமோ மருந்து எடுத்து பார்த்தாச்சு. முழுசா குணமாகிய மாதிரி தெரியவில்லை.

கஷ்டத்தோட தான் காலையில் எழும்பணும். எழும்பி ஐந்து நிமிஷம் தைலமெல்லாம் தடவின பிறகு தான் கொஞ்சம் சுகம் வரும். ஆனா இப்ப கொஞ்ச நாளா எங்க ஊரு ஆயுர்வேத மருத்துவர் சொன்ன குளிசை நல்லா வேலை செய்யுது. ஆனா இந்த குளிசை வெளி நாட்டுல இருந்து வருது. ஒரு தடவைக்கு 1500 ரூபாவுக்கு குளிசை வாங்குவேன். எங்க ஊரு காவத்தை. அங்கே ஒரு கடையில்தான் இந்த குளிசை இருக்கு.

ஒரு நாள் குளிசை வாங்கப்போனப்ப முடிஞ்சு போச்சுன்னு கடைக்காரரு சொல்லிட்டாரு. இரத்தினபுரியில இருக்கும். அங்க போனா வாங்கலான்னு ஒரு தகவலையும் அவர் சொன்னார். சரிதான். இரத்தினபுரிக்கே போவம்னு கிளம்பிட்டேன்.
இரத்தினபுரியில தேடிப்பாத்தா ஒரு இடத்திலதான் அந்த குளிசை இருந்திச்சி. சரின்னு விலையை கேட்டேன். 1800 ன்னு சொன்னாங்க. காவத்தையில 1500 தான். கையில 1500 தான் இருக்குது.

மெல்ல மெல்ல கடைக்காரரு கிட்ட விசயத்தை சொன்னேன். மேலயும் கீழயும் என்னை நல்லா பார்த்தாரு.

ஆனா என்னைப்பார்த்த கடைக்காரர் மனசுல இரக்கம் வந்திருக்கணும்.

சரி 1500 தந்துட்டு மருந்தை வாங்கிட்டு போங்க. எப்பவாவது இரத்தினபுரிக்கு வந்தா மிகுதி 300 ரூபாவை கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னதை கேட்டதும் என் உச்சி குளிர்ந்து போச்சு.
மகராசன் என்னைக்கும் நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிக்கிட்டே பஸ் ஸ்டான்டுக்கு நடந்தேன்.

இரத்தினபுரியில இருந்து காவத்தைக்கு பஸ்ஸில போக 35 ரூபா.

என்னோட கெட்ட நேரம், பாருங்க பையில 30 ரூபா தான் இருந்தது.

இன்னும் அஞ்சு ரூபா வேணும்.

திரும்பவும் ஒரே யோசனை.

என்னாங்க பண்ணுறது..

எங்க அப்பா காலத்துல இருந்தே நான் ஒரு மானஸ்தன். ஒரு ரூபா கடன் வாங்கினாலும் அச்சொட்டா சொன்ன திகதியில திருப்பிக்கொடுக்கிறவன்.

இப்ப கட்டாயமா 5 ரூபா யார் கிட்டயாவது கடன் வாங்கினா தான் வீட்டுக்கு போக முடியுங்கிற சூழ்நிலை.

யாரு கிட்ட கடன் கேட்கலாம்? அதுவும் ஒரு அஞ்சு ரூபா..

தூரத்தில் ரெண்டு பேர். ஒருவர் டிப் டாப்பாக உடையணிந்து இருந்தார். மிகவும் தீவிரமாக தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த ஐயாமாரிடம் கேட்டால் உதவுவார்கள் என்ற எண்ணத்துடன் அவர்களை நெருங்கினேன்.

ஏழைங்க கஷ்டம் தெரிஞ்ச ரெண்டு ஐயாமாரு நிச்சயமா அஞ்சு ரூபா கொடுத்துதவுவாங்க. கடனாகத்தான் கேட்கிறம் என்று நினைத்துக்கொண்டே அவர்கள் அருகில் சென்று நின்றேன்.

என்ன என்று என்னை ஏறிட்டுப்பார்த்தார் பேசிக்கொண்டிருந்த டிப்டொப்.

“ஐயா, பஸ்சுக்கு அஞ்சு ரூபா கொறையுதுங்க”

“பைத்தியக்காரனா இருக்குற. எவ்வளவு முக்கியமான விசயம் பேசிக்கிட்டுருக்கம். இந்த நேரத்துல காசு கேட்டுக்கிட்டு.. எனக்கு கோவம் வாரதுக்கு முன்னால இடத்தை காலி பண்ணு.” என்று கோபத்துடன் சொன்னார் டிப்டொப் ஆசாமி.

எனக்கு ஒரே அதிர்ச்சி.

கே.ராஜேந்திரன்
தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என்று நினைத்த படியே பேசாமல் பின்வாங்கினேன். எனக்கு அவமானமாக போய்விட்டது. அப்போது அங்கே நின்ற மற்றவர் வாங்க என்ன விஷயம் என்று என்னிடம் கேட்டார். நான் எனக்கு நேர்ந்த சம்பவத்தை அவரிடம் விளக்கினேன். என் நிலைமையை புரிஞ்சு கொண்ட அவர். பொக்கட்டிலிருந்து ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து நீட்டினார். எனக்கு பத்து தேவையில்லீங்க ஐந்து ரூபா போதும்னு சொல்லி என்னிடமிருந்து ஐந்து ரூபா சில்லறையை அவரிடம் கொடுத்துவிட்டு பத்து ரூபாவை வாங்கிக்கொண்டேன். என்னை பிச்சைக்காரனா கருதிய அந்த டிப்டொப் ஆசாமி வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டிருந்தார்.

ஒரு பிச்சைக்காரனோடு தனது நண்பர் உரையாடிக்கொண்டிருப்பதை பார்க்க அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ.. வெள்ளை களிசன் சிவப்பு சட்டை உடுத்தி பார்ப்பதற்கு ஒரு அரசியல்வாதி போலவே தோற்றமளித்தார். ஐந்து ரூபாவை பெற்றுக்கொண்ட நான், எனது தொலைபேசி இலக்கத்தை உதவியரிடம் கொடுத்து விட்டு விடைபெற்றேன். எனது வீட்டுக்கு வந்தப்பிறகும் அந்த சம்பவம் தந்த அதிர்ச்சி என்னை விட்டு நீங்கவில்லை.

நான் அந்த பெரிய மனிதரிடம் பணம் கேட்டபோது பணம் இல்லை என்று அமைதியாக சொல்லி இருக்கலாம். ஏதோ ஒரு பிச்சைக்காரனை திட்டி விரட்டுவதைப்போல அவர் நடந்து கொண்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சே! என்ன மனிதர்கள்! பிறகு அந்த மனிதரைப்பற்றி விசாரித்துப்பார்த்தேன். அவரைத்தெரிந்த என் நண்பர் சொன்ன விஷயம் என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“அடடா அவரை உங்களுக்கு தெரியாதா? அவர்தான் புதிய தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போகிறவர். தொழிலாளர் கஷ்டம் தெரிந்தவர் என்று அடுக்கிக்கொண்டே போனார். நீங்க அவரை கட்டாயம் தெரிந்திருக்கணும். ஒரு நாளைக்கு இறக்குவானைக்கு வாங்க. அறிமுகம் செய்கிறேன” என்றார்.

வேண்டாம் என்று ஒரு வார்த்தையில் மறுத்துவிட்டேன். ஒரு ஐந்து ரூபா கேட்டதற்கு ஏன், எதற்கு என்று விவரம் கேளாமல் விரட்டி அடித்தவர்தான் தொழிற்சங்க வாதியா? இப்படி இருந்தால்தான் தொழிற்சங்கவாதியாக வரமுடியுமோ? பிணம் தின்னும் மனிதர்கள்!

அனுபவம்: கே.ராஜேந்திரன், கஹவத்தை
படைப்பு: மணி ஸ்ரீகாந்தன்.
No comments:

Post a Comment