Friday, December 7, 2012

உலக அழிவு-02

பேரழிவுகளுடன் கண்ணாமூச்சி ஆடும் உலகம்


மணி ஸ்ரீகாந்தன்


உலகம் என்ற இந்தக் கிரகம் சூரிய குடும்பத்தில் உருவாகி ஐநூறு கோடி வருடங்கள் கடந்துவிட்டன. தன் இயக்கத்தை நிறுத்தாமல் சுற்றிச் சுழலும் உலகம் இன்னும் 500 வருடங்கள் இப்படியே சுழன்று கொண்டிருக்கும். அதன் பின்னர் தன் சக்தியை இழக்க ஆரம்பிக்கும் சூரியன், அணையப் போகும் சுடரைப்போல தன் பிரகாசத்தையும் வெப்பத்தையும் பல நூறு மடங்காக அதிகரிக்கும். அவ்வாறு சூரியன் பிரமாண்ட உருவெடுக்கும் போது அதைச் சுற்றிச் சுழலும் பெரும்பாலான கோள்கள் கருகிச் சாம்பலாகிவிடும். நமது உலகமும் பஸ்பமாகி விடும். இது விஞ்ஞானிகளின் கணிப்பு. ஆனால் மாயன் சமூகத்தினரால் வடிவமைக்கப்பட்ட கலண்டரின் படி. இவ் வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி காலை 11 மணி 11 நிமிடத்தோடு உலகம் முடிவுக்கு வந்து விடுமாம். மாயன் நாட்காட்டியில் இந்தத் திகதிக்குப் பின்னர் எந்தத் தகவலும் இல்லை@ நாட்காட்டி முடிவுக்கு வந்து விடுகிறது என்பதால்தான், உலகம் அன்றைய திகதியின் பின்னர் அழிந்து விடும் என்று பரவலான நம்பிக்கை நிலவுகிறது. தூபம் போடுவது போல ஊடகங்கள் கிளப்பி வரும் பரபரப்பான செய்திகளும் இந்த பரபரப்புக்கு ஒரு காரணம் தான்.

உலகம் தோன்றிய ஐநூறு கோடி ஆண்டு காலத்தில் இந்த உலகம் அழிந்து விடும் என்ற ஊகங்கள் பல தடவைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகத்தான் இந்த மாயன் கலண்டர் விவகாரத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. விண்ணில் இருந்து வந்த பேராபத்துகளில் இருந்து உலகம் பல தடவைகள் தப்பிப் பிழைத்துள்ளது. அப்படியான ஒரு பேராபத்து ஒன்றின் போது உலகை ஆட்சி செய்து வந்த டைனோசர்கள் முற்றாக அழிந்து ஒழிந்தன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விஞ்ஞான உலகமும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னொரு புறம், கடற்கோள்கள், பூகம்பங்கள், எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களும் உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த அழிவுகள் இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. லெமூரியா கண்டம் கடற்கோளினால் அழிந்ததாக சொல்லப்படுகிறது. பூம்புகாரை கடல் கொண்டிருக்கிறது. கண்டங்கள் நகர்ந்திருக்கின்றன. உலக மேற்பரப்பு அமைப்பில் இவ்வாறு உள்ளக மற்றும் வெளிப்புற காரணங்களினால் பெரும் மாறுதல்கள், அழிவுகள், மூலம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் அந்தக் காலத்தில் தொலைத் தொடர்பு சாதனங்களும், ஊடகங்களும் இல்லாததால் உலகின் ஒரு பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது மறுபுறத்தில் இருப்போருக்கு தெரியாதிருந்தது. எனவே பரபரப்பும் மிகைப்படுத்தலும் அக்கால மக்கள் மத்தியில் காணப்படவில்லை. 1912ம் ஆண்டு டைட்டானிக் மூழ்கியபோது அதை உலக மக்கள் அறிந்து கொள்ள பல நாட்கள் பிடித்தன. பல வருடங்களுக்கு முன்னால் இமய மலை சிகரமொன்றில் இருந்து ஒரு சுறா மீனின் பாறைப்பதிவை கண்டுபிடித்தார்கள். பனிமலைச் சிகரத்தில் கடல்வாழ் உயிரினம் வந்தது எப்படி என ஆராய்ந்த போதுதான் இமயமலை பிரதேசம் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கடலுக்கடியில் இருந்ததாகவும் தொடர்ச்சியான பாரிய பூகம்பங்களின் காரணமாக உலகின் ஒரு பகுதி பிதுங்க, தாழ்வான பகுதி உயர்ந்து இமய மலையானது என்ற உண்மை வெளியானது.

எனவே உலக அழிவு என்பதன் பொருளை நாம் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். உலகம் அதிக வெப்பத்தால் எரிந்து பஸ்பமாகி சுடுகாடாகி விடுவதை இந்த அழிவு என்ற வார்த்தை குறிப்பிடுகின்றதா அல்லது உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்க, அவ்வப்போது பேரழிவுகள் அதில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை குறிப்பிடுகின்றதா என்பதில் நாம் தெளிவுபெற வேண்டும். உலகில் பேரழிவுகள் ஏற்படுவதை இன்னொரு வகையில் உலகம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது என்றும் அழைக்கலாம்.

இது தொடர்பாக சிலரிடம் நாம் பேசினோம். ஆட்டுப்பட்டித்தெருவை சேர்ந்த எஸ்.தயாபரனிடம் கேட்டோம்.

"மாயன் கலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைய விசயங்கள் நடந்துகிட்டுதான் இருக்கிறது. அதில ஒன்று தான் இப்போது நாம பரபரப்பா எதிர்பார்த்து கொண்டிருக்கிற 2012 உலக அழிவு. டிசம்பர் 21ல் வட தென் துருவம் மாறி நிற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். அது சிலவேளை நடக்கலாம். நடந்தால் பெரிய உயிர்சேதம் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றத்தால் நிலம் நீராகாவும், நீர் நிலமாகவும் மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சில கண்டங்கள் கடலுக்கடியில் தாழ்ந்து போகலாம்... ஒரு கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் பயணம் செய்யும் போது பூமி மீது விழும் சூரியனின் ஈர்ப்பு சக்திக்கு கண் இமைக்கும் நேரத்தில் சிறிய தடை விழுகிறது. அந்த தடையின் போதுதான் கடல் அலை அதிகரித்து, காற்றின் வேகமும் அதிகமாவதாக கூறுகிறார்கள். அதேப் போன்று டிசம்பர் 21ம் திகதி மூன்று கிரகங்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நுழைந்து பயணிக்க உள்ளதாம். அதன் போது சூரியனின் ஈர்ப்பு கனிசமான அளவு குறையலாம். அப்போது பூமியின் அச்சு மாறி ஒரு கணம் சுழற்சி நின்று மீண்டும் சுற்றத் தொடங்கலாம் என்றும் அவ்வாறான ஒரு நிலையில், எல்லாமே தலை கீழாக மாறி விடும் என்றும் சொல்கிறார்கள்.
தயாபரன்

இதெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கப் போகும் விசயம் என்கிறார்கள். ஆனால் இது நடக்கிறதோ இல்லையோ பூமியின் சமநிலை பேணப்படும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பூமியின் கொள்ளளவு இவ்வளவுதான் என்கிறபோது. அதைவிட மக்கள் தொகை அதிகமாகும் போது ஏதாவது ஒரு வகையில் உயிர்களின் சமநிலை பேணப்படலாம் என்பது ஒரு பரவலான நம்பிக்கை. இது நியதி இதை தான் சமநிலை பேணல் என்கிறார்கள்." என்று தயாபரன் தனது கருத்தை நிறைவு செய்தார். அண்மைக்காலமாக சூரியனில் ஏற்பட்டு வரும் சூரியப் புயலைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அன்மைக் காலமாக அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சூரிய புயல்கள் பூமி மீது அதிக தாக்கங்களை ஏற்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள். இப்பாதிப்புகளை கண்டறிவதில் அவர்கள் ஆர்வம் காட்டி வடுவார்கள்.

சூரியப் புயலை முதன் முறையாக 1859 செப்டம்பர் முதலாம் திகதி. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி மற்றும் கரபியன் பகுதியில் வாழ்ந்த மக்களே நேரில் கண்டிருக்கிறார்கள். மஞ்சளும், சிவப்பும் கலந்த ஒரு நதி வானத்தில் பாய்வது போன்ற ஒரு பயங்கரமான விநோத காட்சியை அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் வானத்தில் பரந்து கிடந்த, இன்றைய மொழியில் சொல்வதனால் லேசர் ஒளிக் காட்சி அல்லது வர்ணஜால ஒளி அலைகள் பற்றி மக்கள் எதையுமே அறிந்து வைத்திருக்கவில்லை. ஏதோ பூமிக்கு ஆபத்து வரப் போகிறது, என்பதை மட்டும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆண்டில் வானத்தில் ஏற்பட்ட வர்ணஜால காட்சிகள் வட துருவப் பகுதிகளில் உள்ள பல நாடுகளில் உணரப்பட்டுள்ளது. அப்போது இங்கிலாந்தில் இருந்த வானிலை ஆராய்ச்சியாளர் 'ரிச்சர் கெரிங்டன்' வானத்தில் ஏற்பட்ட மாறு பாட்டை சூரிய புயல் என்றும் அதனை அரோரா வர்ணஜாலம் என்று கண்டு பிடித்துக் கூறினார். இதை நதர்ன் லைட்ஸ் அல்லது துருவ வெளிச்சம் என்றும் அழைக்கிறார்கள். அதற்குப் பிறகு 1972ல் ஒரு பெரிய சூரிய புயல் அமெரிக்காவின் இலினாஸ் மாகாணத்தை தாக்கியுள்ளது.
சூரிய புயல்

இந்த தாக்குதலால் 10 நாட்கள் தொடர்ச்சியாக விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டதாம். மாபெரும் நெருப்பு கோளமான சூரியனின் மேற்புரத்தை கொரோனா என்று அழைக்கிறார்கள். அதில் ஏற்படும் சூரிய புயல் என்பது ஒரு மெகா சைஸ் தீச்சுவாலை சூரியனிலிருந்து மிகுந்த விசையுடன் கிளம்பி எழுந்து பின்னர் சூரியனில் அமிழ்ந்து போவதாகும். இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் வெப்ப அளவு அதிகரித்து காந்தப் புயலை உருவாக்கும். 1989ல் மார்ச் 10ம் திகதி கனடாவைத் தாக்கிய சூரிய புயலும் ஒரு பெரிய புயலாக கருதப்படுகிறது.

கனடாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணத்தை தாக்கிய அந்த சூரிய புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 60பது லட்சம் மக்கள் மூன்று நாட்கள் இருளில் தவித்தார்களாம். அந்த தாக்குதலில் 30 ஆயிரம் கோடி ரூபா பெருமதியான மின்சாதான பொருட்கள் பாதிப்படைந்ததாக மதிப்பிடுகிறார்கள். இன்றைய திகதியோடு ஒப்பிடும் போது அன்று மின்சாதனப் பொருட்களின் பாவனை குறைவுதான் ஆனால் இன்று அந்தப் புயல் தாக்கினால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும். சூரியனில் இருந்து வெடித்து கிளம்பும் தீப்பிளம்புகளில் இருந்து வரும் புரோட்டன்-பாஸ்ட்மாக் கதிர் வீச்சின் மின்காந்த அதிர்வுகள் 9 கோடியே முப்பது லட்சம் மைல் வேகத்தில் வந்து பூமியை தாக்குகிறதாம். அப்படித்தாக்கும் போது பூமியை சுற்றியுள்ள பூமியின் பாதுகாப்பு வலயமான மின்காந்த வலயம் என்ற பாதுகாப்பு கவசம் அதைத் தடுத்து விடுகிறது. அதனையும் மீறி வரும் சில மின்காந்த அதிர்வுகளால் தான் பூமியில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது, பூமியை சுற்றியுள்ள பாதுகாப்பு கவசமான மின்காந்த கவசம் தன் வலுவை இழந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கும் சேதிதான் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இக்கவசம் முற்றிலுமாக செயலிழந்து போனால் பூமியின் மீது சூரியப் புயலின் தாக்குதலும், விண்கற்களின் தாக்குதலும் கூட அதிகரிக்கலாம்.

(தொடரும்)

No comments:

Post a Comment