Sunday, December 23, 2012

அனுபவம் பேசுகிறது-01


அம்மா வாங்கிய கம்பளம்


ராதாவுக்கு இருபத்தெட்டு வயதிருக்கும் திருமணம் முடித்து ஒரு மகளும் இருக்கிறாள். தமது வீட்டுக்கு பக்கத்திலுள்ள தனியார் தோட்டங்களில் தினசரி சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருபவர். இவரின் குடும்பம் கூட்டுக்குடும்பம். அவரோடு சகோதர, சகோதரிகள், அப்பா, அம்மா, அம்மாவின் தங்கை ஆகியோர் பெரிய குடும்பமாக இருந்து வருகின்றனர். தன் தொழிலுக்கு அப்பால் அந்தப் பகுதியால் மாதாந்த சீட்டு பிடிக்கும் தொழிலையும் அவர் செய்து வருகிறார். சீட்டுத் தொழிலை முறையாக செய்து வருவதால் ராதாவுக்கு அந்தப் பகுதியில் நல்லபெயர். வாக்கு சுத்தமானவர் என்பார்கள்.

அன்றும் காலையில் எழுந்த ராதா தனது மகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அந்த மாதம் கொடுக்க வேண்டிய சீட்டுக்காசு இருபத்தைந்தாயிரம் ரூபா பத்திரமாக இருக்கிறதா என்று டிரங்கு பெட்டியை திறந்து பார்த்து விட்டு, பெட்டியை மூடி வழமை போல சாவியை தனது அம்மாவிடம் கொடுத்தார். பின்னர் புறப்பட்டு வேலைக்குச் சென்றார்.

மாலை நான்கு மணியிருக்கும் ராதாவின் வீட்டு வாசலில் ஒரு இளைஞன் பல் வர்ண தரை விரிப்புகளுடன் நின்று கொண்டிருந்தான். பொருட்களை விற்கும் பலர் இப்படி தோட்டங்களுக்கு வந்து போவது வழக்கம். ஒரு விரிப்பு ஆயித்து ஐநூறு ரூபாய் என்று கூவிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ராதாவின் அக்காவின் மகளுக்கு ஆசை வந்து விட வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது பாட்டியை (ராதாவின் தாயாரை) அழைத்து வந்து 'இந்த தரை விரிப்பை வாங்குங்க அம்மம்மா நல்லாயிருக்கு"என்று நச்சரிக்க தொடங்கினாள்.


 ஆரம்பத்தில் ராதாவின் தாயார் வேண்டாம் என்றுதான் மறுத்திருக்கிறார். ஆனாலும் பேத்தியின் பிடிவாதத்தால் அந்த வியாபரியிடம் பேரம் பேசுவதில் ஈடுபடத் தொடங்கினார் அவர். ஆயிரத்து நூறாகக் குறைந்தது அந்த பேரம் அங்கே படியவே, தரை விரிப்பு வீட்டிற்குள் சென்றது. கொள்ளை லாபத்துக்கு பேரத்தை முடித்துக் கொண்டோமே என்ற பெருமிதத்துடன் அந்த அம்மாள் வீட்டிற்குள் சென்று தனது மணிப்பர்சை திறந்தார். அதில் ஐநூறு ரூபாய் மட்டுமே இருந்தது. "என்ன செய்வது இன்னும் அறுநூறு வேண்டுமே"என்று யோசித்தவர் 'ராதா வைத்திருக்கும் சீட்டு காசில் ஒரு அறுநூறு ரூபாய் எடுத்துக் கொடுப்போம்' என்று தீர்மானித்தார் பிறகு மகளிடம் சொல்லிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் டிரங்கு பெட்டியைத் திறந்து அறுநூறு ரூபாவை எடுத்திருக்கிறார்.

ராதாவின் அம்மாவிற்கு பண விசயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. யாருக்காவது பணம் கொடுக்கும் போது அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நோட்டை நான்காக மடித்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் மூடிக் கொள்வார். கொடுக்கும் போது மற்றவர் உள்ளங் கையில் பணத்தை அழுத்தி வைப்பார். பண விஷயம் கையும் கையுமாக இருக்க வேண்டும் என்பது இதற்கான காரணமாக இருக்கலாம் அதன்படியே பணத்தை எடுத்து தன் பேத்தி கையில் மடித்துக் கொடுத்து வியாபாரியிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். பணம் கொடுக்கும் போது பக்கத்தில் அவரின் தங்கையும் இருந்திருக்கிறார்.

பேத்தி பணத்தை வாங்கி அப்படியே வியாபாரி கையில் கொடுத்தாள். நோட்டுகளை வாங்கிய வியாபாரி பணத்தை பிரித்து பார்த்து விட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் நூறு ரூபா நோட்டைத் திருப்பித் தந்தான். "பரவாயில்லை: நூறு ரூபாவை குறைத்துக் கொள்கிறேன். ஆயிரம் ரூபா போதும்" என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றான். பேத்திக்கும் பாட்டிக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

1500 ரூபா விரிப்பு ஆயிரம் ரூபாவுக்கு கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா என்ன! (சுமார் ஐந்தரை மணியளவில் ராதா வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். களைப்புடன் வீடு வந்த ராதா குளித்து, சாமி கும்பிட்டு விட்டு தேனீர் கோப்பையுடன் வந்து அமர்ந்தார். தான் படு இலாபமாக வாங்கிய தரை விரிப்பு பற்றி சொல்ல வேண்டும் என்பதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த தாயார், தரை விரிப்பு வாங்கிய கதையை மகளிடம் கூறத் தொடங்கினார். விரிப்பையும் காட்டினார். ஆயிரம் ரூபாவுக்கு லாபம்தான் என்று ராதாவுக்கும் தோன்றியது. திடீரென மனதில் பொறிபறக்க, ஏதம்மா உங்களுக்குப் பணம்? என்று கேட்டார். பணத்தில் ஐநூறு குறையும் விடயத்தை மகள் கேட்டாள் சொல்லிவிடலாம் என்று ராதாவின் அம்மா நமட்டு சிரிப்புடன் சும்மா இருந்திருக்கிறார்.

பணம் குறைந்ததால் அறுநூறு ரூபாவை டிரங்கு பெட்டியைத் திறந்து எடுத்ததாக அவர் சொல்ல, சரி என்றார் ராதா.

தேனீர் கோப்பையைக் கழுவிய பின்னர் வெற்றிலை போட்டுக் கொண்ட ராதா, வழமைபோல சீட்டுக்காசு கொடுக்கல் - வாங்கல் கொப்பியை பிரித்து பார்க்கத் தொடங்கினார். பின்னர் டிரங்கு பெட்டியைத் திறந்து அதன் உள்ளே இருந்த பழைய தகரப் பெட்டியைத் திறந்தார். பணத்தை எண்ணியபோது ஐயாயிரம் ரூபா குறைவதாகத் தெரிந்தது. 25 ஆயிரம் இன்னும் கொஞ்சமும் இருக்க வேண்டும். அம்மா 500 ரூபா எடுத்திருந்தால் மிகுதி 4,500 ரூபாவுக்கு என்ன நடந்தது?

"அம்மா, பணம் குறையுதே! எவ்வளவு எடுத்தீங்க?"

"ஐநூறும், நூறும் தான்... வேற எடுக்கல்லியே"
"4500 ரூபா குறையுதேம்மா... நேற்று காசு சரியாக இருந்ததே..."கொஞ்சம் யோசித்த ராதாவுக்கு பொறிதட்டியது. நேற்று எண்ணி வைத்தபோது  நான்கு ஐயாயிரம் நோட்டுகள் இருந்தன. இப்போது மூன்று தாள்களே இருந்தன. அப்படியானால் ஐயாயிரம் தாளைத் தான் அம்மா ஐநூறு என்று நினைத்துக்கொண்டு ஐயாயிரத்தை வியாபாரியிடம் விட்டாரோ? அப்படித்தான் இருக்க வேண்டும்... நினைக்கையிலேயே பகீர் என்றது ராதாவுக்கு.

"அம்மா... நீங்க முட்டாள் வேலை செய்திட்டீங்க.... ஐயாயிரம் ரூபாவை ஐநூறுன்னு நினைச்சி கொடுத்திட்டீங்க... இப்போ நான் சீட்டு பணத்துக்கு என்ன செய்வேன்? கண்ணத் திறந்து பார்த்து கொடுத்திருக்கக் கூடாதா?" அழுகையும் வேதனையுமாக புலம்பினாள் ராதா. அந்த வீட்டில் நிலவிய மகிழ்ச்சியும் பூரிப்பும் நொடியில் தலைகீழானது.

தோட்டத்து கேட் கீப்பரிடம் ஓடினார்கள். கம்பள வியாபாரி ஒருவன் வந்தானே போய்விட்டானா என்று கேட்டார்கள். அவனா, போய் ரொம்ப நேரமாச்சே! என்றான் காவலில் இருந்தவன். தலையில் கை வைத்துக் கொண்டு குத்துக்கல் மீது அமர்ந்தாள் ராதா. ஐயாயிரத்தை கடன் வாங்கி சமாளித்து விடலாம் தான். ஆனால் கடனை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டித் தொலைக்க வேண்டாமா? ஐயாயிரம் ரூபா என்றால் சும்மாவா?

இந்த அம்மா பணத்தை எடுத்து விரித்துப் பார்த்து பக்கத்தில் இருந்த சின்னம்மாவிடம் கொடுத்து எண்ணிப் பார்த்திருக்கலாம். காசு கொடுக்கும் போது நோட்டுகளை நான்காக மடிக்காமல் விரிந்த நிலையில் கொடுத்திருக்கலாம்... பணத்தை எண்ணிப்பார்த்து கொடுத்ததும் வாங்கியவர் எண்ணிச்சரி என்கிறாரா என்பதை பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டும்... அம்மா இதை எதையும் செய்யவில்லை. இப்போ தொலைந்த பணத்துக்கு எங்கே போவேன்...

ஒரு சில வினாடிகளில் நாம் யோசிக்காமல் எடுக்கும் முடிவு, பொறுமையின்மை, அலட்சியம், புரிந்து கொள்ளத் தவறுவது அல்லது ஆத்திரம் என்பது எத்தனையோ விபரீதங்களை விளைவித்து விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அனுபவம்: ராதா,றைகம்,இங்கிரிய
படைப்பு: மணி ஸ்ரீகாந்தன்


1 comment:

  1. உங்கள் ப்லோக் நல்லாவே இருக்கு. ஞாபக வீதியிலே தொடரையும் போடுங்களே..

    ReplyDelete