Friday, December 7, 2012

உலக அழிவு-01

2012 இல் உலகம் அழியுமாமே?


மணி ஸ்ரீகாந்தன்

2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழிந்துவிடுமாம்! இப்படி ஒரு செய்தியையும் இது பெரும் நாகரிகமான மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மாயர்கள் பயன்படுத்திய கலண்டரை அடிப்படையாகக் கொண்டது என்ற ஆதாரத்துடனும் உலக ஊடகங்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. உலகம் 2000ஆம் ஆண்டு பிறக்கும் போதும் கூட உலகம் அழியப் போகிறது என்ற பீதி கிளம்பியது. சரி, இது பற்றி நம்மவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று நம் நாட்டிலும், தமிழகத்திலும் சில பிரபலங்களிடமும் சாமானியர்களிடமும் கேட்டோம்.


கார்டூனிஸ்டும், எழுத்தாளரும் அறிஞருமான மதனிடம் பேசினோம்.

சூரியன் அழியும் போதுதான்...

"மாயன் கலண்டர் என்பது ஒரு நாகரிகத்தை பிரதிபலிக்கிறது. அது ஒரு காலக்கட்டத்தின் அடையாளம். அந்தக் காலக்கட்டத்தில் வரையப்பட்டதுதான் மாயன் கலண்டர். அந்த காலக்கட்டத்தில் வானிலை அறிவு இல்லாவிட்டாலும் சில விசயங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட 2012 என்பது வேறு. அதையும் இதையும் இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மாயர்கள் ஒன்றை மட்டும் சரியாக கணித்திருக்கிறார்கள். அது உலகம் அழியும் என்ற அந்த ஒரு விசயம் மட்டும்தான். 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவான இந்த பூமியின் அழிவு இன்னும் பல கோடி வருடங்களுக்குப் பிறகுதான் நிகழும்.
மதன்

இப்போதைக்கு அழிவு கிடையாது அதனால் எதையும் நினைத்து பயப்படத் தேவையில்லை. சூரியனால் உயிர்வாழும் இந்த பூமிக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது. சூரியன் தனது ஹைட்ரஜன் எரிவாயுவை இது வரை பாதியைத்தான் செலவழித்து இருக்கிறது. இன்னும் பாதி அப்படியே இருக்கிறது. அது முடிவடைய இன்னும் பல கோடி வருடங்கள் ஆகும். பூமியின் ஹைட்ரஜன் வாயு எரிந்து குறையக் குறைய சூரியனின் அளவு இன்னும் பல மடங்காக பெரிதாகும். அப்போது உருவாகும் வெப்பம் பூமியை அழிக்கும். ஆனால் வெப்பம்    அதிகரிக்கும் போது மனிதன் நிலத்திற்கடியில் பாதாளத்தில் நகரங்களை அமைத்து வாழ வழி செய்துக் கொள்வான். ஆனால் இவற்றையெல்லாம் நீங்களும் நானும் பார்க்கப் போவதில்லை.... சீனா, பாபிலோன், ரோம, இந்து நாகரிங்கள் உச்சத்தில் இருந்தபோது பிரளயம் ஏற்பட்டதாக நிறைய கதைகள் உள்ளன. இந்து நாகரிகத்தில் கூட கலிகாலம் முடிவதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது", என்றார் மதன்.

உலகம் முற்றாக அழியாது


வேலூரில் அமைந்திருக்கும் உலகின் மிகப் பெரிய தங்கக் கோவிலை நிறுவியரான சக்தி அம்மாவுடன் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டோம்.
சக்திஅம்மா.

"மாயன் கலண்டரில் கூறப்பட்டது போல பேரழிவு ஏற்பட்டு பூமி அழியும் என்பதெல்லாம் வெறும் மாயை. ஆனால் நமது இந்து சாஸ்த்திரப்படி இந்தக் கலிகாலத்தில் ஆங்காங்கே சில அழிவுகள் ஏற்படும். ஆனால் அது பேரழிவாக இருக்காது, பூமிக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது. கிரக சஞ்சாரத்தின்படி பார்த்தாலும் அழிவு என்பது இப்போதைக்கு இல்லை, ஆனால் ஆண்டவன் என்ன நினைக்கிறானோ தெரியவில்லை" என்கிறார் சக்திஅம்மா.

இதை இயேசுவின் வருகையோடு தொடர்புபடுத்த வேண்டாம்

அவரைத் தொடர்ந்து மன்னார் தமிழ் நேசன் அடிகளார் கருத்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"சிலர் உலக அழிவு என்பது ஏசுவின் இரண்டாம் வருகையோடு தொடங்கி விடும் என்கிறார்கள். அது முற்றிலும் தவறான செய்தி. ஏசுவின் வருகை எப்போது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது என்றோ நடக்கத்தான் போகிறது. எனினும் உலக அழிவு இப்போதைக்கு இல்லை. ஊடகங்கள் வியாபார நோக்கத்திற்காகவும் பரப்பரப்பு செய்திக்காகவும் 2012ல் உலகம் அழியும் என்று கூறி வருகின்றன. ஏற்கனவே 2000ஆம் ஆண்டில் உலகம் அழியப் போவதாக செய்தி பரவியதை அடுத்து சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே மக்கள் இந்தச் செய்தியை நம்பக் கூடாது. உங்களைப் படைத்த கடவுள் உங்களை காப்பார்" என்றார் தமிழ்நேசன் அடிகளார்.

உலகமா... இப்போதா... ஹா...ஹா...ஹா...

அவரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பட்டிமன்றங்களை நடத்திவிட்டு மதுரையில் தமது வீட்டில் கொஞ்சம் ஓய்வாக இருக்கலாமே என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பட்டிமன்றம் புகழ் சொலமன் பாப்பையாவிடம் எங்கள் கேள்வியைத் தொடுத்தோம். "ஹே... ஹே... ஹா... ஹா..." என்ற சொலமனுக்கு உரித்தான அந்தச் சிரிப்பு பதிலாக வந்து விழுந்தது.
பாப்பையா

"நம்ம ராஜா, பாரதிபாஸ்கர் இவங்களையெல்லாம் சமாளிச்சு பதில் சொல்லிட்டு கொஞ்சம் நிம்மதியாக உட்காரலாம் என்று பார்த்தா விடமாட்டீங்களேய்யா... எல்லோரும் சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கல்லியோ? இப்படி குண்டத் தூக்கி போடுறீங்களே... எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில நடக்கும்யா..." என்று கல கல கலவென்று பாப்பையா சிரிப்பதைக் கேட்டதுமே உலகத்திற்கு இன்னும் ஆயுள் கெட்டி என்பதை உணர்ந்து கொண்டோம்.

சொலமன் பாப்பையாவைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் பக்கமாக ஒரு நடை போட்டோம். அங்கே ரங்கராஜபுரத்தில் தமது அலுவலகத்தில் பிஸியாக இருந்த விஜய்டி.வி ‘நீயா நானா’ புகழ் கோபிநாத்தை சந்தித்து நாம் வந்த விடயத்தைச் சொன்னோம். அவரும் தமக்கே உரிய ஸ்டைலில் சிரித்து விட்டு பேசினார்.

உலகச் சூழலை பாதுகாக்காவிட்டால்.....

"அறுபதுகளில் கூட ஒரு வால் நட்சத்திரம் பூமியில் விழுந்து அழியப் போவதாக கூறப்பட்டது, அதேப் போல 90களில் ஒரு விண் கல் பூமியை நோக்கி வருவதாகச் சொல்லப்பட்டது. பிறகு இரண்டாயிரம், இப்போ 2012 இன்னும் பத்து வருடம் கழித்து இன்னொன்றைச் சொல்வார்கள். இதனால் மனிதனுக்கு தனது ஒட்டுமொத்த அழிவு குறித்த பயமும் சுவாரஸ்யமும் எப்;போதும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஊடகங்களின் அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம்தான். மாயன் கலண்டர் இரண்டு வகைப்படும். ஒன்று குறுகிய காலத்தையும், மற்றது நீண்ட காலத்தையும் குறிக்கிறது. அதாவது இரண்டு சுற்றுகள். இதன்படி 2012 டிசம்பர் 21 வரை மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபிநாத்

 அதன் மற்றது நம் கையில் இல்லை என்பதற்காக உலகம் அழிந்து விடப்போவதாக நாம் நினைத்துக் கொள்வது தவறு. விஞ்ஞானிகள் கூட இப்போது உலகம் பிரச்சினைகளை நோக்கி போய் கொண்டிருப்பதாக சில விசயங்களை சொன்னார்கள் அதில் ஒன்று சூரியப்புயல். அந்த சூரியப் புயலின் பிரச்சினைகள் சமீபகாலமாக மேற்கு உலகில் தொடங்கிவிட்டது. மேலும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. இவ்வாறான சூழல் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் இப்போது 2012ல் உலகம் அழியுமா என்பதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. ஆனால் சூழலைப் பற்றிக் கவலை படாமல் நாம இப்படியே இயற்கையை பிடுங்கிப் பிடுங்கி தின்றுக் கொண்டிருந்தால் உலகம் ஒரு நாள் மனிதன் வாழத் தகுதியற்றதாக மாறிவிடத்தான் போகிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கு சேர்த்து வைப்பது பணம் மட்டும் கிடையாது. நாளைக்கு அவர்கள் சுவாசிக்க சுத்தமான காற்று, வாழ்வதற்கு சுத்தமான பூமி, விஷமாகாத உணவு என்பனவற்றையும் அவர்களுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். உலக நாடுகள் இதை சிந்திக்காமல் இயற்கையை பேராசையோடு தொடர்ந்தும் சுரண்டித் தின்றால் உயிரினங்கள் அழிந்து போவதைத் தடுக்க முடியாது.

இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இயற்கையானது எவற்றினால் அழிவுகள் ஏற்படும் என்று கருதுகிறதோ அவற்றைத் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறது. கடலோரத்தில் அமைந்திருக்கும் சதுப்புநிலக் காடுகளை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், அது கடலரிப்பைத் தடுக்கிறது, சுனாமி போன்ற பாதிப்புகள் வரும்போது இச்சதுப்பு நிலக்காடுகள் சேதத்தைக் குறைக்கின்றன. ஆனால் இந்த இயற்கை அரண்களை மனிதன் அழிக்கிறான். பூங்காக்களையும் நகரங்களையும் அமைத்து அழகு பார்க்கிறான். உலகம் அழிவது கூட இன்று மனிதனுக்கு சுவையான ஒரு விஷயமாகி விட்டது. சச்சின் செஞ்சரி அடிப்பாரா என்று வேடிக்கை பார்ப்பது போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் டிசம்பரில் உலகம் அழியும் என்றால் இன்னும் கொஞ்ச நாட்கள் தான் பாக்கி ஆனால் வெளியே சென்று பார்த்தால் யாருமே டென்ஷனாக இல்லை. எல்லோரும் ஜொலியாகத் தான் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை" என்று கோபிநாத் தைரியமூட்டி முடித்தார்.

அடுத்ததாக நாம் களுத்துறை மாவட்ட ஹல்வத்துரை மகாவித்தியாலய ஆசிரியரான பிரதாபனை சந்தித்தோம்.

சூழல் மாசடைவது பற்றி யோசிப்போம்

"உலகத்திற்கு ஒரு அழிவு வரும்னா அது சூரியனால்தான் வரும். நான் ரொம்ப சின்னவனாக இருந்த போது எங்க ஊர் ஆற்றில் கரணம் போட்டு குதித்து குளிப்போம். ஆனால் இன்றைக்கு அந்த ஆற்றில் முழங்கால் அளவுக்கூட தண்ணீரில்ல, படிப்படியாக தண்ணீர் குறைந்து கொண்டே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
பிரதாபன்
அது முற்றிலும் தீர்ந்து போனால், நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உலகம் 2012ல் அழியும் என்பதை மாயன் கலண்டரை வைத்துக் கொண்டு கூற முடியாது. மாயன் எழுதிய கலண்டரின் மற்ற பாகம் எங்காவது இருக்கலாம் அல்லது அழிந்து போயிருக்கலாம். முதலில் அதை கண்டுபிடிக்கணும்" என்கிறார் பிரதாபன் ஆசிரியர்.

இவரை சந்தித்து விட்டு வரும் போது வழியில் இங்கிரிய றைகம் குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலய தலைவர் கிருஸ்ணனை சந்தித்தோம்.

ருத்ர தாண்டவம் நடக்கும்.

"உலகத்தில் அதர்மம் அழிந்து விட்டது. பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் கேட்காத காலம் இது. கடவுளும் எவ்வளவு காலத்துக்கு தான் பொறுத்துக் கொள்வார்? அதனால் ஒரு ருத்ர தாண்டவம் சீக்கிரமே நடக்கத்தான் போகுது. அது எப்போன்னு சொல்ல முடியாது. அந்த அழிவின் போது லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள்.
கிருஸ்ணன்
இந்த அழிவு எங்காவது ஒரு பக்கத்தில் நடக்கும். இதெல்லாம் மனுஷன திருத்த கடவுள் ஆடும் திருவிளையாடல். என்னடா கடவுளின் ஆட்டத்திற்கு லட்சக்கணக்கிலா உயிர் பழியாகணும் என்று கேட்கிறீர்களா? பத்துப்பேர் செத்தா அது விபத்து, லட்சக்கணக்கில செத்தா அது அழிவு" என்றார் அவர்.

பாவங்கள் கற்களாக சுற்றுகிறதாம்

அப்போது அங்கோ குறுக்கிட்ட தோட்டத் தொழிலாளியான எஸ்.திரவியராஜா, இதெல்லாம் நம்ம படைச்ச சிவனோட வேலைதானுங்க என்றார். சிவபுராணத்தில சொல்லியிருப்பதைப் போல 'ஆக்குவார், காப்பார், அழிப்பார், அருள்தருவார்'. அதுதான் இப்போ நடக்கப்போகுது. ஆனால் எப்போன்னு சொல்ல முடியாது. நம்ம செய்த பாவங்கள் எல்லாம் வானத்தில் கற்களாக சுத்திக்கிட்டு இருக்காம். அது தலையில விழுந்து முன்னோர் காலத்திலும் உலகம் அழிந்ததாகவும் சொல்லப்படுது. அப்படியும் நடக்கலாம். என்றார் திரவியராஜா.

கொழும்பு செட்டியார் தெருவில் ஆருடம் பார்க்கும் மதுரையை சேர்ந்த எம். மாணிக்கத்திடமும் கேட்டுப் பார்த்தோம்.

உலகம் ஷேமமாக இருக்கும்.

"இது கர வருடம். இதுமுடிய நந்தன வருஷம் பிறக்கிறது. அது பூமியின் ஆரோக்கியமான வளர்ச்சியையே காட்டுகிறது. மற்றப்படி கிரகங்களில் எந்த ஆபத்தையும் காணமுடியவில்லை. நந்தன என்பதில் 'ந' என்பது அனுஷ நட்சத்திரத்தையே குறிக்கிறது. இரண்டாவதாக சனியின் ஆதிக்கமும் இருக்கிறது, சனி சுக்கிரன் வீட்டில் 2012லிருந்து இரண்டரை ஆண்டுகள் எந்த. ஆபத்தும் இல்லாமல் வாழ்வார். அப்போ எப்படி உலகம் அழியும்?" என்று ஒரு போடு போட்டார் அவர்!
மாணிக்கம்.

"சாமிங்கிறது நம்மை காப்பவராகத்தான் இருக்கணும். நம்மை அழிப்பவராக இருக்க முடியாது. நம்மை அழிக்கப் புறப்பட்டால் அப்புறம் அதை ஏன் கும்பிடணும்? நமக்கும் சாமிக்கும் ரொம்ப தூரம்ங்க. நாளைக்கு நடக்கப் போறதையே நம்மால் சொல்ல முடியாது. உலகம் இப்படித்தான் அழியும்னு எப்படிங்க சொல்லமுடியும்?" என்று நியாயமான கேள்வியுடன் முத்தாய்ப்பு வைத்தார் இவர்.  

(தொடரும்…)

1 comment:

  1. அன்பு தம்பிக்கு,

    அறிவியல் சார்ந்த - உலகையே அதிரவைக்கும் விடயத்தை ஆக்கபூர்வமான முறையில் பல துறைகளைச் சார்ந்தவர்களையும் உள்வாங்கி கருத்துக்களை வெளியிட்ட பாங்கு அருமையாக இருந்தது.

    உங்களது உண்னதமான இப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete