Sunday, November 11, 2012

ரோஸ்சுடன் சில நிமிடங்கள்....


 

எங்களைக் கடவுளாக எவரும் கருதத் தேவையில்லை

மனிதனாக நடத்தினாலேயே போதும்|


இப்படிக்கு ரோஸ் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியூடாக புகழ்பெற்ற ரோஸ் திருநங்கையுடன் உரையாடியவர் மணி ஸ்ரீகாந்தன்


விஜய் டிவியின் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வாசம் செய்தவர்தான் இந்த 'ரோஸ்' பின்னர் கலைஞர் டி.வியிலும் இவர் நிகழ்ச்சி நடத்தினார். அரவாணியான (திருநங்கை) இவர் என்ஜினியரிங் கல்விக்காக அமெரிக்கா வரை சென்று கல்வி கற்று திரும்பியவர். இலட்சக்கணக்கான திருநங்கையரில் இவர் ஜொலிக்கும் நட்சத்திரம். கலைஞர் டி.வி. உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை செய்துவரும் இந்த அழகு மங்கையை சென்னை கோடம்பாக்கம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசினோம்.

சென்னை டி நகரில்தான் நான் பிறந்தேன். பிறக்கும் போது ஒரு ஆணாகத்தான் பிறந்தேன். அப்போது என் அம்மா அப்பா எனக்கு வைத்த பெயர் ரமேஷ். எனக்கு இரண்டு அண்ணனும் ஒரு தங்கையும். பாடசாலை நாட்களில் நான் படிப்பில் ரொம்பவும் கெட்டிக்கார பையனாக இருந்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு அமெரிக்கா வரை சென்று படிக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. பாடசாலை நாட்களில் எனக்குள் ஒரு பெண்ணின் உணர்வு வளர்வதை நான் தெரிந்துகொண்டேன். அதை வெளியே சொல்ல முடியவில்லை.

 எனக்குள் பெரும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அமெரிக்காவில் படிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியதும். நான் இந்த ஆண் வாழ்க்கையை அடியோடு தொலைத்துவிட்டு பெண் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடிவுசெய்திருந்தேன். அதன்படி சென்னை திரும்பியதும் நான் ரோஸ் ஆக மாறினேன். அன்றிலிருந்து நான் சந்தித்த பிரச்சினைகள், அவமானங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. வீட்டார் என்னைப் பெண்ணாக ஏற்றுக்கொள்ளவில்லை.

என் வீட்டார்களால் அடித்து துரத்தப்பட்டு அநாதரவாக தெருவில் நின்றேன். இன்றுதான் எங்களை திருநங்கை, அரவாணி என்றெல்லாம் அழைக்கிறார்கள். அன்று எங்களுக்கு வைக்கும் பெயர் வேறு. அந்த அவமானங்களை கடந்து முன்னேறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்கிறார் ரோஸ்.
சென்னையில் வசிக்கும் பிரபலமான மனிதர்களில் ரோசும் ஒருவர். பொது இடங்களில் ரோஸைக் கண்டால் கூட்டம் கூடிவிடுகிறது. பலர் ஆட்டோகிராப் வாங்கிச் செல்கிறார்கள். ரோசுடன் போட்டோவும் எடுத்துக்கொள்கிறார்கள்.

"நான் சிறுவனாக இருந்த நாட்களில என் சகோதரர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். ஆனால் நான் திருநங்கையாக மாறிய பிறகு இவன் இப்படியாகிவிட்டானே என்ற வேதனையுடன் என்னை ஒதுக்கிவைத்தார்கள். பிறகு படிப்படியாக அவர்களின் கோபம் குறைந்தது. இன்றும் அவர்கள் என்னை வாடா போடா என்றுதான் அழைக்கிறார்கள். உலகமே என்னை முழுப் பெண்ணாக ஏற்றுக்கொண்டாலும் என் குடும்பத்தார் என்னை ஒரு பையனாகத்தான் பார்க்கிறார்கள். எப்படியோ இன்று எல்லோரும் மாறிவிட்டார்கள். என்னையும் ஒரு பெண்ணாக, மனுஷியாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் என் அம்மா தான் இன்றுவரை என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் என்னோடு பேசி பல வருடங்கள் கடந்துவிட்டன.

 நான் பிரபலமானதற்கு பிறகுதான் என் வீட்டில் என்னை வரவேற்று பேசினார்கள். ஆனால் அம்மா மனசு மாறவில்லையே.... சொல்லுங்கள் நான் இப்படி ஆனதற்கு நானா காரணம்?" என்று கேட்கும் ரோஸ் தற்போது சென்னை, பாண்டிச்சேரியில் ஒலிபரப்பாகும் எப்.எம். வானொலியில் காலை நேர நிகழ்ச்சியான 'ரோசுடன் பேசுங்கள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதுதவிர ரோஸ் ஒரு பரத நாட்டியக் கலைஞர். தனது ஆடல் அபிநயங்களை வெளிப்படுத்தும் 'சொக்லட் ரோஸஸ்' என்ற இசைத் தொகுப்பு ஒன்றை விரைவில் வெளியிடப் போகிறாராம் ரோஸ். அதற்கான படப்பிடிப்பு இலங்கையிலும் நடக்கவுள்ளது.

திருநங்கை என்ற பெயரை ஏற்றுக்கொள்கிறீர்களா?, என்று அவரிடம் கேட்டோம். "முதலில் 'அரவாணி' என்ற பெயர்கூட அழகாகத்தான் இருந்தது. இப்போது 'திருநங்கை' என்று அழைக்கிறார்கள் இதுவும் பிடித்திருக்கிறது. முன்னர் எங்களை ஒரு கொச்சையான வார்த்தையால் அழைத்தார்கள். அதைவிட இது எவ்வளவோ அழகாகத்தான் இருக்கிறது. மாற்றுப் பாலினப் பெண் என்று குறிப்பிடலாம். எங்களுக்கு ஒரு மரியாதையை சமூகத்தில் உருவாக்கியதற்கு இங்குள்ள ஊடகங்கள் நிறையவே உதவி இருக்கின்றன. தொடர்ந்தும் அவற்றின் ஆதரவு கிடைத்துவருகிறது. தமிழகத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் தலைவர்களும் எங்களுக்கான பல நலத் திட்டங்களை வகுத்துக்கொடுத்து வருகிறார்கள். கடந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் எங்களுக்கு இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள சலுகை வழங்கப்பட்டது. சில இடங்களில் திருநங்கையருக்கு வீடுகளும் வழங்கப்பட்டன.
இப்படி எங்கள் மீது ஓரளவுக்கு அரசுக்கும், மக்களுக்கும் புரிதல் ஏற்பட்டு இருந்தாலும் எங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிற தன்மை இச் சமூகத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் இங்கே ஒரு திருநங்கைக்கு வாடகைக்கு வீடு பிடிப்பது ரொம்பவே சிரமமான காரியம். அப்படி வீடு கிடைத்தாலும மிகவும் பின்தங்கிய அல்லது மோசமான பேர்வழிகள் வசிக்கும் இடங்களில் தான் கிடைக்கும். இந்த விடயத்தை அனுபவ ரீதியாக நானே உணர்ந்திருக்கிறேன். மேலும் அரசு வேலை வாய்ப்பும் பெரியஅளவில் வழங்கப்படவில்லை.

 இப்படி இருக்கும் போது எங்களின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும்? இந்த சமூகம் இன்னும் எங்களை ஒரு போகப் பொருளாகவும், கேலிப் பொருளாகவும் தான் பார்க்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள். முதலில் இந்த நிலை மாறவேண்டும். இந்த சமூகத்தின் எங்கள் மீதான மோசமான அபிப்பிராயங்களையும் தவறான நம்பிக்கைகளையும் உடைத்துக்கொண்டு வெளியே வருவதற்கு இன்னும் நாங்கள் முழுமையாக போராட வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் உரிமைகளைப் பெற முடியும்" என்று சொல்லும் ரோஸிடம், 'எத்தனை நலத்திட்டங்களைக் கொண்டு வந்தாலும், திருநங்கைகளைக் திருத்த முடியாது என்றும், பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது ஆகிய பழக்கங்களை அவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?' என்று கேட்டோம்.

"அவர்களின் குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்கிறேன். பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழில் செய்வதையும் அவர்கள் சுயதொழிலாகவே பார்க்கிறார்கள். என்னுடைய வருமானம் பெறும் வழிமுறை என் சொந்த விஷயம் என்று நினைக்கிறார்கள். பொறுப்பான ஒரு வேலையில்  சேர்ந்தால் அங்கு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும், மேலதிகாரி இடும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளை அவர்கள் விரும்புவதில்லை. இதற்கு ஒருகாரணமும் இருக்கிறது.

 குறிப்பாக திருநங்கையரில் படித்தவர்கள் மிகவும் குறைவு. சிறுவயதிலேயே அவர்கள் வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள். அதனால் படிப்பைத் தொலைத்து விடுகிறார்கள். ஆயிரக்கணக்கான திருநங்கையரில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் படித்தவர்களாகவும் சமூகக் கௌரவத்துடன் வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையை அடையாதவர்களால் சமூக நெருக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாது. இனி வாழ வேண்டும் என்ற நிலையிலே அவர்கள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது போன்ற தொழில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகிறார்கள்.

எனவே, இவர்களின் மோசமான வாழ்க்கைக்கு வெறுமனே இவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. சமூகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில் சமூகம்தானே மனிதர்களை உருவாக்குகிறது?" என்று கூறினார் ரோஸ்.

வடஇந்தியாவை எடுத்துக்கொள்வோம். அங்கே திருநங்கைகளை அர்த்தநாரீஸ்வரராக கருதி மரியாதை செய்கிறார்கள் அல்லவா? என்று அவரிடம் கேட்டோம்.
"என்னைப் பொறுத்தவரையில் அப்படியொரு மரியாதை தேவையில்லை. அது மூடநம்பிக்கையால் உருவானது. வடக்கில் வீட்டு விஷேசங்கள், சுபகாரியங்களுக்கு திருநங்கையரை அழைத்து அவர்களிடம் ஆசிவாங்கி கொள்வதை நல்ல சகுனமாக கருதுகிறார்கள். ஆனால் அந்த விஷேச காரியத்துக்கு மட்டும் தான் நாங்கள் தேவை. அத்தோடு கதை முடிந்து விடுகிறது. அப்படி அவர்கள் திருநங்கையரை கடவுளாகக் கருதுவதாக இருந்தால் திருநங்கையரை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டியதுதானே.? பிறகு ஏன் அவர்களை வீட்டைவிட்டு துரத்த வேண்டும்? இந்த இரட்டை வேஷம் தேவையா சொல்லுங்க?" என்று கேட்டபோது ரோஸ் கொஞ்சம் உஷ்ணமானார்.

ஒரு ஆண் பெண்ணாக மாறுவதற்கு ஹோர்மோன் பிரச்சினைதான் காரணமா? ரமேசாக பிறந்த நீங்கள் ரோஸாக மாறியதை நினைத்து வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்டோம்.
"இதை சிலர் ஹோர்மோன் குறைபாடு என்று சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. இன்னும் மருத்துவ அறிவியலில் இதுபற்றி முழுமையான விளக்கம் கிடையாது.
உலகத்தில் இப்படியானவர்கள் பரவலாக வாழ்கிறார்கள். என்ன பிரச்சினை என்றால், நம் மத்தியில் சமூக கோட்பாடு என்று ஒன்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆண், பெண் உறவுக்குதான் அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்படுகிறது.

ஏனைய உறவுகளை சமுதாயம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான் இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இதனால் நானும் மனமுடைந்திருக்கிறேன். பலமுறை கலங்கியிருக்கிறேன். எனக்கு ஒரு ஆண் மீது காதல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவனும் என்னை உயிருக்குயிராக காதலிக்கிறான். ஆனால் அந்தக் காதலை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. யாருமே ஏற்க மாட்டார்கள். எனவே எங்களால் காதலிக்கத்தான் முடியுமே தவிர அதைத் திருமண பந்தத்துக்குள் கொண்டு செல்ல முடியாது.

 இவ்வாறான சமூகக் காரணங்களால் காதலை இருவருமே துறந்துவிடும் கட்டாயம் ஏற்படுகிறது. பின்னர் அந்த ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். திருநங்கையோ மனம் உடைந்து போகிறாள். இந்த வலியை நான் உணர்ந்திருக்கிறேன் அந்த வலி எனக்குள் இருக்கிறது. இந்த விஷயத்தைத் தவிர நான் சமூக அந்தஸ்தைப் பெற்றவளாக வாழ்ந்து கொண்டிருப்பதில் எனக்குப் பெருமைதான்"என்று ரோஸ் தனது உரையாடலை முடித்துக்கொண்டார்.
ஒரு திருநங்கையாகப் பிறக்காததால் நான் ஒரு அதிர்ஷ்டக்காரனா? என்ற குழப்பம் என்னுள் எழ, அவருக்கு நன்றி சொல்லி எழுந்து கொண்டேன்.

No comments:

Post a Comment