Saturday, November 10, 2012

(தீபாவளி சந்திப்பு)

இலங்கைத் தமிழனை விற்று வயிறு வளர்ப்பவன் நான் அல்ல


கொந்தளிக்கிறார் கருணாஸ்உரையாடல்: மணி ஸ்ரீகாந்தன்திண்டுக்கல்சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கருணாஸ். மனோகரனின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ள 'ரகளைபுரம்'| படத்தின் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சென்னை சாலிகிராமத்திலுள்ள கென்மீடியா அலுவலகத்தினுள் நுழைந்தோம். இயக்குனர் மனோகரனுடன் அமர்ந்து தனக்கு ஜோடியாகப் போகும் அறிமுக நாயகி அங்கனாவின் போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

"எப்படி இந்த ஜோடி நமக்கு பொருந்துமா பாருங்க" என்றார் எம்மிடம். "நல்லா இருக்கு சார். முகத்தில் குடும்ப கலை தெரியுது" என்றோம். உண்மையைத் தான் சொன்னோம். 'அங்கனா' அழகு மயிலாகத் தான் இருந்தாங்க. தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகன் கதாநாயகனாக நடித்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்குச் சென்று நகைச்சுவை அல்லது வில்லன் பாத்திரங்களில் நடிப்பது கிடையாது. தொடர்ந்தும், நாயகனாகவே நடிக்க முயற்சிப்பார்கள். இது 'பிரஸ்டிஜ்' விடயமாகிவிட்டது. ஆனால் கருணாஸ் அப்படியல்ல. கதாநாயகனாகவும், வில்லனாகவும் ஒரே சமயத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நடிகர். மரபுகளைத் தாண்டிச் செல்ல விரும்புகிறவர்.

"நான் நாயகனாக நடித்த பிறகு எனக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைந்து விட்டது. அவர் ஹீரோவாகிவிட்டார். இனி நகைச்சுவைக்கு வேற ஆளைத்தான் தேடனும் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க நான் தயார். தமிழில் இருக்கும் இந்த'ஹீரோ' பிரச்சினை மலையாளத்தில் இல்லை. இயக்குநர் சீனிவாசன் மலையாளத்தில் மிகச் சிறந்த இயக்குனர். அவர் நினைத்தால் நடிப்பார், இயக்குவார், நகைச்சுவை பாத்திரங்களிலும் தோன்றுவார். எந்த வேடத்திலும் நடிப்பார்.

அவரின் படங்களான குசேலன், வெள்ளித்திரை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ஆகிய படங்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு 'ரீமேக்' செய்யப்பட்டன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை. நான் நாயகனாக நடித்த அவரது படமான திண்டுக்கல் சாரதி மட்டுமே தமிழில் வெற்றிப் பெற்றது. அம்பா சமுத்திரம் அம்பானிக்கு பிறகு நான் நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டேன். இப்படியே நடிக்காமல் இருந்தால் உங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். என்.எஸ். கிருஸ்ணனையே இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கும் மக்கள் இந்த கருணாஸையா மறந்து விடப்போகிறார்கள்? மக்கள் அறிவாளிகள். எந்த வேடத்தை சிறப்பாகச் செய்தாலும் ரசிப்பார்கள். அதற்காக பறந்து பறந்து சண்டை போடுவதும், மெஷின் துப்பாக்கியால் சுடுறதும் நமக்கு சரிபட்டு வராது. காட்சிக்கு சண்டை வேண்டுமானால் வைக்கலாம். அதற்காக எனக்கு மூன்று பைட் சீன் வையுங்கள் என்று கேட்டு வாங்குறது கிடையாது. இப்போ உதாரணத்துக்கு ஒன்று சொல்றேன்.

பொண்டாட்டியோட ரோட்டில் போறேன் அப்போ ஒருத்தன் என் பொண்டாட்டி கையப் பிடித்து இழுத்தா அதை பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்க முடியுமா? அப்படி இருந்தா நான் ஆம்பளையே இல்லையே!" என்கிறார் கருணாஸ்.

2003, தொடக்கம் 2005 வரையான காலப்பகுதிகளில் அதிகளவில் படங்களில் நடித்திருக்கும் கருணாஸ், வடிவேல், விவேக்கிற்கு பிறகு வந்த முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். ஆனால் அன்மைக்காலங்களில் இவரின் படங்களின் வருகை மிகவும் குறைந்து விட்டது. என்ன காரணம் என்று கருணாஸைக் கேட்டோம்.

"அப்போது போட்டி இல்லீங்க.. வடிவேலு, விவேக், கருணாஸ் இந்த மூன்று பேரை விட்டா ஆளில்லை. ஆனா இப்போ அப்படி இல்லை. கஞ்சா கருப்பு, சந்தானம் என்று புதுசு புதுசா நிறைய பேர் வந்திருக்காங்க.

ஆனாலும் ஒரு விசயம் சொல்லனும். நான் ஒரு சமயத்தில் வருடத்திற்கு பதினைந்து படங்கள் செய்திருக்கிறேன். அவற்றை இப்போ கணக்கு பண்ணிப் பார்த்தா நான் ஒரு வருடத்தில் நடித்த படங்களில் ஒரு சில தான் வெற்றி பெற்றிருக்கும். மற்றவை ஏனோ தானோ என்று ஓடியிருக்கும், ஆனால் இப்போ நடிப்பது குறைவாக இருப்பதால் கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்கு அவகாசமும் இருக்கிறது. நிறைவாகவும் இருக்கிறது. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரையில் இதுதான் எனக்கு வரலாறு. நான் இறந்த பிறகு ஒரு பத்து பேராவது கருணாஸ் ஒரு நல்ல நடிகன் நல்லா செய்திருக்கான் என்று சொல்லணும்.

கருணாஸின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதற்கு அவர் கதைகளைத் தேர்வு செய்து நடித்தது தான் காரணம். இப்போ ஆர்னல்ட் ஸ்வெட்ஷனாகர் பண்ற வேடத்தை நான் பண்ண முடியுங்களா? நமக்கு முடிந்தததை நாம் செய்யணும். பாலா அண்ணன்தான் என்னை நந்தா படத்தில லொடுக்கு பாண்டி என்ற பாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இன்று வரை நகைச்சுவைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். நகைச்சுவை கலந்த நாயகன் வேடம் தான் நமக்கு பொருந்தும். அதோடு கதையில் முக்கியமாக நம்பகத் தன்மை இருக்க வேண்டும், மக்கள் நம்பக் கூடிய மாதிரி இருப்பது தான் நம்ம படத்திற்கு அழகு" என்று சொல்லும் கருணாஸின் சொந்த ஊர் புதுக்கோட்டை அறந்தாங்கி. இது தமிழ்நாட்டின் கரையோர பகுதி என்பதால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெளிவாக கேட்கும். இன்று கூட கே.எஸ்.ராஜா பேசுவது போல,'நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.... இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை அம்மம்மா...அப்பப்பா....' என்று மறக்காமல் அப்படியோ கருணாஸ் பேசியும் காட்டுகிறார்.

இலங்கை வரவிரும்பும் கலைஞர்களுக்கு தடைபோடும் தென்னிந்திய குழுக்களைப் பற்றி கேட்டோம். உடனே உணர்ச்சி வசப்பட்டுப் போனார் கருணாஸ்.

"ஈழத்தமிழன் மீது எல்லோருக்கும் அக்கறை இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் தாங்கள் மட்டும் தான் ஈழத்தமிழ் அனுதாபிகள் என்று காட்டிக் கொள்வது தான் எனக்கு பிடிக்கவில்லை. தமிழனுடைய மானமும் தமிழனுடைய அவமானமும், தமிழனுடைய துயரங்களும் உனக்கு வியாபாரமா? கதிர்காம கந்தனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக நான் இலங்கை வரத் தயாரான போது என்னை போக விடாமல் தடுத்தார்கள். நான் இலங்கை ஜனாதிபதியிடம் பணம் வாங்கிக் கொண்டு கொழும்பு செல்வதாக பொய் பிரச்சாரம் செய்தார்கள். தனிப்பட்ட மனிதனுடைய உரிமையில் தலையிட எவனுக்கும் உரிமை கிடையாது. தமிழன் மீது உன்னை விட எனக்கு அதிகமான அக்கறை இருக்கிறது. நான் மனிதன். நீ வியாபாரி. என்னைப் பற்றி பொய்யான செய்திகளை இவர்கள் பரப்பும் போது அந்த செய்தி உண்மை தானா? என்று விசாரித்து செய்திகளை வெளியிடுவதுதான் ஊடக தர்மம். ஆனால் இங்கே நேர்மாறாக அல்லவா நடக்கிறது. ஒரு பிரபலமான மனிதனை விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்கிறார்கள். அவன் ஒரு சினிமா கலைஞனாகவோ, அல்லது மக்களுக்கு தெரிந்த முகமாகவோ இருக்கும் பட்சத்தில் அந்த நபரின் படத்தை அட்டையில் போட்டு முன்பக்க செய்தியாக்கி விடுகிறார்கள். அதே நேரத்தில் அவன் நிரபராதி என்று விடுதலையாகி வரும் போது அந்த நபர் பற்றிய செய்தியை கடைசிப் பக்கத்தில் சின்னதாகப் போடுகிறார்கள். இது என்னங்க தர்மம்?
இவர்களின் தடையை மீறி இலங்கை சென்றால் நமது திரைப்படங்களை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் ஒரு கதையை பரப்பி விடுகிறார்கள். உனக்கு உண்மையானவனை அடையாளம் காண தெரியா விட்டால் எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்று புரிந்து கொள்ள முடியாவிட்டால் நீ படத்தை பார்த்தால் என்ன பார்க்காட்டி என்ன! நான் இதுவரைக்கு எந்த நாட்டுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தியது கிடையாது. ஈழத் தமிழனுக்கு கஷ்டம் வந்து விட்டதே என்பதற்காக இங்குள்ளவன் சாப்பிடாமலும் தூங்காமலும் இருக்கானா? சட்டைப்போடாமலும், கல்யாணம் செய்யாமலும் இருக்கானா? குழந்தை பெத்துக்காமலும் சொத்து சேர்க்காமலும் இருக்காங்களா? அப்போ யாரடா ஏமாத்துறீங்க? எதுக்காகடா இந்தப் பிரச்சாரம்.

இங்கே உண்மையான தமிழ் ஆர்வளர்கள் இருக்கிறார்கள். உலகத்தமிழர்கள் அறிவாளிகள். உண்மையை புரிந்து கொள்வார்கள். தமிழனுக்கு பாரம்பரியமாக சில குணாதிசயங்கள் இருக்கின்றன. இது மற்ற இனங்களிடம் இல்லை. ஏனென்றால் இவன்தான் ஆதிமனிதன் இவனுக்கு நிறைய விசயம் தெரியும்." என்று கொந்தளித்து அடங்குகிறார் கருணாஸ்.

கருணாஸ் நம்நாட்டு கலைஞர்களுடன் நெருக்கமான நட்பு வைத்திருக்கும் ஒரு நடிகர். நடிகன் என்பதற்கு அப்பால் மனிதநேயம் கொண்ட மனிதனாகவும் வாழ்பவர். விளம்பரம் எதுவும் இல்லாமல் இலங்கை அகதி மாணவர்களை தமது சொந்த பணத்தில் கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 36 பிள்ளைகளுடன் ஆரம்பித்து பிள்ளைகளைப் படிப்பிக்கும் இவரது கருணை முயற்சி இன்று 46 எண்ணிக்கையும் தாண்டிவிட்டது.

"ஈழம்நேரு என்பவர் தான் ஒரு நாள் என்னைச் சந்தித்து இலங்கை அகதி பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்க உதவி கேட்டார். இலங்கை அகதி பிள்ளைகளின் படிப்பை பாடசாலையோடு மட்டும் நிறுத்தி விட வேண்டும் என்று மத்திய அரசில் ஒரு நிபந்தனை இருக்கிறது என்ற விடயமே அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர்களின் படிப்பை கல்லூரி வரை கொண்டு செல்ல வேண்டுமானால் முகாமிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர வேண்டும். பின்னர் அவர்களைக் கல்லூரிகளில் படிப்பைத் தொடரச் செய்ய வேண்டும். இதுதான் நாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை என்று அவர் சொன்னபோது நான் நொறுங்கி போனேன். என் மக்களை அகதி என்று அழைப்பது எனக்கு உடன்பாடான விஷயமல்ல. உங்களிடம் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது தான் என் முதல் கேள்வியாக இருந்தது அவர்கள் எல்லோரையும் அனுப்புங்கள் நான் படிக்க வைக்கிறேன் என்று கூறி ஆரம்பித்தது தான் இது வரை இந்த பிள்ளைகளைக் காட்டி நான் யாரிடமும் நன்கொடை வாங்கியதில்லை. நான் இப்படியொரு காரியம் செய்கிறேன் என்பது கூட எனக்குத் தெரியாது நான் வியாபாரியாக இருந்திருந்தால். இந்த இலங்கை பிள்ளைகளை பிச்சைக்காரர்கள் போல உட்கார வைத்து மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படியொரு ஈனத்தனமான ஆள் இந்த கருணாஸ் கிடையாது." என்று உணர்ச்சி பொங்க கருணாஸ் பேசி முடித்தார்.

அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.                                                                                                                  

No comments:

Post a Comment