Sunday, November 18, 2012

புத்தக விற்பனையாளருடன்..

படைப்பாளர் மறைந்ததும் அவரது புத்தகங்களை வீட்டார் கொழுத்தி விடுவதும் உண்டு..!


பழைய புத்தக விற்பனையாளர் கோவை தர்மலிங்கத்துடன் ஒரு சுவையான கதையாடல் - மணி ஸ்ரீகாந்தன்


                 

எழுத்தாளர் மறைந்த பின்னர் அவரிடமிருந்த நூல்களை வாங்கச்சென்றேன். விற்பனைக்கில்லை, நூலகத்துக்கு அன்பளிப்பு செய்வோம் என்றார்கள். சில ஆண்டுகளின் பின்னர் சந்தித்தபோது, ஐயோ! கரையான் அரித்துவிட்டதே என்றார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பு சென்றல் வீதியில் கோவை புத்தக நிலையம், என்ற பெயரில் புத்தகக்கடை நடத்தி வருபவர்தான் கணேஷ் தர்மலிங்கம். புத்தகக்கடைக்கு மேல் உள்ள சிறிய அறையில் தனது மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இதுவரை காலமும் இவரின் குடும்பத்திற்கு இந்தப்பழைய புத்தக தொழில் தான் சோறு போடுகிறது.
"எனக்கு, புத்தகம் பார்க்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்.. கையில் கிடைக்கும் புத்தகங்களை வாசித்துவிட்டு பத்திரப்படுத்தி வைத்தேன். அப்படி நான் பத்திரப்படுத்தி வைத்த புத்தகங்கள் வீட்டில் மலை போல் குவிந்து விட்டது. பிறகு அவற்றை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு ஐடியா கிடைத்தது. உடனே எனது வீட்டின் சுவற்றில் ஒரு பலகையை இறாக்கையாக அடித்து அதில் புத்தகங்களை அடுக்கி வைத்தேன். வீதி ஓரத்தில் செல்வோர் கண்களில் புத்தகங்கள் பட அவர்கள் வந்து புத்தகங்களை கேட்டு வாங்கினார்கள். சில புத்தகங்களின் பெயர்களை சொல்லி தேடித் தரச்சொன்னார்கள். நானும் எனது தேடலை தொடங்கினேன். பெரிய புத்தகக்கடைக்கு சென்று அங்கே எஞ்சி, பழுதடைந்திருக்கும் பழைய புத்தகங்களை வாங்கி வந்து கூடிய இலாபத்திற்கு விற்பனை செய்தேன்.


குறிப்பாக போத்தல் கடைகளுக்கு எடைக்கு வரும் பழைய புத்தகங்களிலிருந்து தூசி தட்டி சில அபூர்வமான புத்தகங்களை தேடி எடுத்துவந்து விற்பனைக்கு வைத்தேன். என்னிடம் வாசகர்களுக்கு தேவையான புத்தகங்கள் இருப்பதாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து வி.பி.பி முறையில் புத்தகங்களை அனுப்பி வைத்தேன். அந்தக்காலத்தில் டி.வி, செல்போன், கம்பியூட்டர் என்று எதுவுமே இல்லை. அதனால் வாசிப்பு பழக்கம் அதிகமாக இருந்தது. நிறையபேர் புத்தகங்கள் கேட்டு எனக்கு கடிதம் எழுதி புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டார்கள்.”

என்று தன் பழைய புத்தகக்கடை ஆரம்பித்த வரலாற்றை கூறினார் கணேஸ். புத்தகப்பிரியராக இருக்கும் கணேஷ், ஒரு இலக்கிய படைப்பாளராகவும், பட்டி மன்ற பேச்சாளராகவும் இருக்கிறார். கொழும்பை சுற்றி நடக்கும் பட்டி மன்றங்களில் இவரை அடிக்கடி பார்க்கலாம்.

தனது கடைக்கு கோவை புத்தக நிலையம் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை விவரித்தார் எம்மிடம்.
"கோவை என்றால் பலதும் சேர்ந்த ஒரு தொகுப்பு அல்லது ஃபைல் என்றும் சொல்லலாம். இதை புரிந்துகொள்ளாத சிலர் நீங்க என்ன கோவையை சேர்ந்தவரா என்று கேட்கிறார்கள். உண்மையில் எனக்கும் கோவைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை." என்றார் கோவை கணேஷ்.

அந்தக்காலத்தில் குமுதம், விகடனில் வெளியாகும் தொடர்களை வாசித்துவிட்டு பிறகு அந்தப்பக்கங்களை கிழித்தெடுத்து பைன்டிங் செய்து கட்டிவைக்கும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்பட்டது. அப்படி வைக்கப்பட்ட புத்தகங்கள் சிலவற்றை கணேஷ் எம்மிடம் காட்டினார்.

“பொண்ணியின் செல்வன், பாவை விளக்கு, மாயாவி உள்ளிட்ட பல கட்டி வைக்கப்பட்ட புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. இன்றும் அவற்றை தேடி வருபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

சில பெறுமதியான புத்தகங்களை வாடகைக்கு எடுத்துச்சென்று படிப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி எடுத்துச்செல்பவர்கள் திருப்பித்தருவதில்லை. அதனால் இப்போது புத்தகத்திற்கு ஒரு தொகையை அட்வான்ஸ்சாக வாங்கி கொண்டுதான்; வாடகைக்கு புத்தகங்களை கொடுக்கிறேன் என்று சொல்லும் இவர் புத்தகக்கடைகள் இப்போது கொழும்பில் மிகவும் குறைந்து விட்டன என்கிறார். அந்தக்காலத்தில் ஆமர் வீதியில் பழைய புத்தகங்களை வீடு வீடாக சென்று சேகரித்து வந்து பிளாட் பாரத்தில் போட்டு விற்பனை செய்தவர்தான் மம்முது நானா. அவரோடு பெரேரா என்பவரும் பழைய புத்தகங்களை விற்பனை செய்தார். அது தவிர வெள்ளவத்தை பொலிஸ் பக்கத்தில் ஒருவர் பழைய புத்தகங்கள் விற்பனை செய்தார். இன்று அவர்கள் யாரும் அந்தத்தொழில் செய்வதில்லை. நான் மட்டும் தான் தொடர்ந்து இந்தத் தொழிலில் இருந்து வருகிறேன”என்று மார் தட்டுகிறார் கணேஷ்.

கோவை புத்தக நிலையத்தின் விற்பனை ஆமை வேகத்தில் நடப்பது போலத்தான் தெரிகிறது. எப்போது பாhத்தாலும் அந்த புத்தக நிலையத்தில் யாராவது ஒரு இலக்கியவாதியோ, அல்லது பத்திரிகையாளரோ கணேஷ் உடன் கதை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

“என் கடைக்கு இப்படி கலை இலக்கியவாதிகள் வந்து கதை பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எனக்கும் இலக்கியவாதிகளுடன் பேசுவது பிடிக்கும். நான் சொந்த வீட்டில் இருப்பதால் வீட்டு வாடகை இல்லை. அதனால் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் பணம் வாழ்க்கை செலவை சமாளிக்க ஓரளவுக்கு போதுமானதாக உள்ளது. ஆரம்பத்தில் இருபது ரூபாய்க்கு விற்ற ஒரு பொக்கட் நாவலை இப்போ தொன்னூறு ரூபாய்க்குவிற்கிறோம். விலை உயர்வானாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டதால் யாருக்கும் ஆற அமர உட்கார்ந்து சாண்டியல்யனையோ, கல்கியையோ வாசிக்க நேரமில்லை. எஸ்.எம்.எஸ், ஜோக்கையும், ஒருபக்க கதைகளையும் தான் வாசிக்க விரும்புகிறார்கள். தொலைக்காட்சியின் வருகையும் வாசிப்புக்கு சாவு மணி அடித்து விட்டது.

இன்று ஓரளவுக்கு விற்கப்படும் புத்தகங்கள் பாலியல் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. காதல் ரசம், சொட்டும் கதை, பாலியல் அறிவு நூல்கள், ஆண்மை வீரியப்புத்தகம், ஆண்மை சக்தி புத்தகம் போன்றவை விற்பனையாகின்றன.” என்கிறார் கணேஷ்.

கணேஷின் மனைவி ஒரு இல்லத்தரசி. மகன்மார்கள் மூன்று பேர், யாருக்குமே இலக்கிய வாசனையோ, வாசிக்கும் ஆர்வமோ இல்லை. கணேசுக்கு நேர்மாறாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

கணேஷின் கடையில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை பார்த்தால் அதன் பெறுமதி லட்சத்தை தாண்டும் போலிருக்கிறது.

“இந்த புத்தகங்கள் எல்லாம் பொக்கிஷங்கள். சிலருக்கு இதன் பெறுமதி தெரிவதில்லை. சில இலக்கிய படைப்பாளர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் புத்தகங்கள் அவர் மறைவின் பின் அவை வீட்டாருக்கு சுமையாக மாறி விடுவது வேதனையான உண்மை. அவர்கள் அந்நூல்களை வீண் சுமையாக கருதி, சொன்னால் நம்ப மாட்டீர்கள். புத்தகங்களை தீயிட்டு கொளுத்தியுமிருக்கிறார்கள். வேறு சிலர் பழைய பேப்பர் காரரை அழைத்து எடை போட்டு விற்று காசு பார்த்து விடுகிறார்கள்.

எனக்குத்தெரிந்த ஒரு படைப்பாளர் இருந்தார். அவர் பெயர் வித்தகன். அவர் மறைவின் பின், அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை வாங்கி வரலாம் என்று அவர் வீட்டுக்கு சென்று கேட்டேன். அதற்கு அவர்கள் வித்தகனின் புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்கப்போவதாக சொன்னார்கள். அட.. நல்ல விசயம் தான். அப்படியாவது இவை நாலு பேருக்கு பயன் படட்டுமே என்று எண்ணியவாறு வந்து விட்டேன். சில வருடங்களின் பின்னர் வித்தகனின் வீட்டாரை சந்திக்க நேர்ந்தது. புத்தகத்தை நூலகத்திற்கு கொடுத்துவிட்டீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது அப்படியே கிடந்து கரையான் அரித்துவிட்டது என்றார்கள் கூலாக.

ஈழத்தமிழர்கள் வீட்டை காலி செய்துவிட்டு புலம்பெயர்ந்து செல்லும்போது புத்தகங்களை சுமையாக நினைத்து அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். பிறகு வீட்டு சொந்தக்காரார்கள் எனக்கு சொல்லி நான் அவைகளை எடுத்து வந்திருக்கிறேன். ஒருமுறை அப்படி நான் எடுத்து வந்த புத்தகங்கள் சிலவற்றில் திருமுருக கிருபானந்தவாரியாரின் கையெழுத்து இடப்பட்டிருந்தது.

வாரியார் அந்த அன்பருக்கு அந்த நூல்களை அன்பளிப்பாக தந்திருக்க வேண்டும்.” என்றார் புத்தகப்பிரியனான கணேஷ்.

நாங்கள் கணேஷிடம் உரையாடிக்கொண்டிருந்த போது ஒரு நடுத்தர வயது மனிதர் வந்து கணேஷை பார்த்து சிரித்துவிட்டு புதுசா ஏதும் வந்திருக்கா? என்றார். கணேஷ் எம்மைப்பார்த்து சார் நம்ம வாடிக்கையாளர் வந்திட்டாரு என்றபடி புத்தகக்கட்டுக்களை புரட்டத்தொடங்கினார். அவர் கேட்டது என்ன புத்தகமாக இருக்கும்..? உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறோம்.!

1 comment:

  1. சூப்பர் பாஸ், அழகிய எழுத்துப்பாணி, அத்தோடு நல்லதோர் தகவலைப் பகிர்ந்த விதம் அருமை...

    ReplyDelete