Saturday, November 10, 2012

காதல் பிரஷாந்துடன் ஒரு வெலன்டைன் உரையாடல்

"லவ் பண்ணனுமா, தண்ணி அடிக்கனுமா, செய்து பார் என்றார் அப்பா!"

சந்திப்பு: மணி  ஸ்ரீகாந்தன்

மம்பட்டியான் படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் பிரஷாந்தை நுங்கம் பாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வானவில்லுக்காக சந்தித்துப் பேசினோம். தன் அடுத்த படத்துக்கான கெட்டஅப்புக்காக தன் உடம்பை மெருகேற்றி வருகிறார் பிராஷாந்த். பத்திரிகைகளுக்கு புகைப்படமும் தருவதில்லை. புது அவதாரத்துடன் தான் அவரது அடுத்த ஸ்டில்கள் வெளிவரும்.

நீண்ட இடைவெளியின் பின்னர் பொன்னர்சங்கர் சரித்திரப் படத்தில் நடித்து மௌனம் கலைத்த அவருக்கு மம்பட்டியான் கை கொடுத்திருக்கிறது. திரையுலக ஆணழகனாகவும் காதல் பிரஷாந்த் என அழைக்கப்பட்ட வருமான அவரிடம் வெலன்டைன் தினத்தை நினைவுபடுத்தி, காதல் அனுபவங்கள் பற்றி ஆசை ஆசையாகக் கேட்டோம். எத்தனையோ படங்களில் நடித்தவர் எத்தனையோ நடிகைகளுடன் நடித்தவர், நீண்டகாலமாக திரைத்துறையில் இருப்பவர். அள்ளிக் கொட்டுவார் என எதிர்பார்த்தோம்.

"இப்போ என்னோட ரசிகர்கள் என்னை சந்திக்கும் போது மம்பட்டியான் நல்லா இருக்கு ஆனால் ஜீன்ஸ், வின்னர், தமிழ் மாதிரி ஒரு கலக்கலான ஒரு பிரசாந்தை பார்க்க விரும்புகிறோம் என்கிறார்கள். அதனால் ஒரு வித்தியாசமான புது கெட்டப்பில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி என்னைப் பார்க்கப் போகிறீர்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்க.." என்றவரிடம் சின்ன வயதுக் காதல் பற்றி சொல்கிறீர்களா? என்று அவரிடம் வெலன்டைன் கீதம் பாடினோம்.

உடனே அவர் பேச ஆரம்பித்தார் "சின்ன வயசுல எங்கெல்லாம் தடுக்கி விழுந்தேனோ அங்கெல்லாம் லவ் பண்ணியிருக்கேன். ஊட்டி, கொடைக்கானல், அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி என்று எங்கெல்லாம் படம் பிடிப்புக்கு சென்றேனோ அங்கெல்லாம் இயற்கை காட்சிகளை கண்டு மெய் மறந்து காதலித்து இருக்கிறேன்... பத்து வயதாக இருக்கும் போதே என்னை அப்பா இலங்கைக்கு அழைத்து வந்திருகிறார். கண்டியில் தொடங்கி யாழ்ப்பாணம் வரையும் என் கால்படாத இடமே இல்லீங்க. இலங்கையில் எனக்கு பிடித்த இடங்கள் எத்தனையோ... அத்தனை இடங்களையும் நான் லவ் பண்றேன்... வேறு எதை என்னிடம் எதிர்பார்க்கிறீங்க.."என்று கூறி எம்மை பார்த்து சிரித்தார் பிரசாந்த். எமக்கு வெறுத்துப் போய் விட்டது. மனுஷன் போரடிக்கிறாரே என்று யோசித்தபடியே, அட, அதைக் கேட்கலை.. பெண்களின் காதல் வேட்டைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் எப்படித் தப்பினீர்கள்? என்பதுதான் கேள்வி என்று விளக்கமாகச் சொன்னோம்.

"சரி, சொல்றேன்" என்று திரும்பவும் பேச ஆரம்பித்தார் பிரஷாந்த்

"நமக்கு சென்னைதான் பூர்வீகம். எங்கவீடு திநகரில் இப்போ பிரஷாந்த் கோல்ட் டவர் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில தான் எஙக வீடு இருந்தது. வீட்டை சுற்றி காடு மாதிரி மரங்கள் வளர்ந்திருக்கும். எங்க வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தால் கண்ணுக்கு வேற வீடு தெரியாது. ஜன்னல் வழியா எட்டிபார்த்து சைட் அடிக்க முடியாமல் ஏமாந்ததுதான் மிச்சம். நான் படித்ததும் போய்ஸ் ஸ்கூலில். அங்கேயும் ஆசைக்கு பார்க்கக் கூட ஒரு பொண்ணு கிடையாது. காலையில் ஒன்பது மணிக்கு ஸ்கூல். வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் ஏறி சரியா 8.55க்கு அப்பா என்னை ஸ்கூலில் விடுவார். பிறகு மூன்றரை மணிக்கு ஸ்கூல் முடியும். சரியா 3.25க்கு அம்மா காரில வந்து என்னை வீட்டுக்கு கூட்டிப் போவார். அப்போ எப்படி எனக்கு சைட்அடிக்க சான்ஸ் வரும்?, லவ் வரும், அத நினைச்சி ரொம்ப பீல் பண்ணியிருக்கேன்.

 பெற்றோர்கள் இதையெல்லாம் பிளான் பண்ணி செய்திருக்காங்க என்பது இப்போ தான் புரியுது, பதினேழு வயசுல நான் நடிக்க வந்தபோது ஒரு கொடுமை நடந்திச்சு, எங்கப்பா என்னிடம் வந்து 'நீ தம் அடிக்கணும்னு ஆசைப்பட்டா அடி... தண்ணி அடிக்க வேணும்னா அதைச் செய், லவ் பண்ணனுமா பண்ணு! ஆனா பத்து வருடங்கள் கழித்து நீ கடந்து வந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிபார். உன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது புரியும். அதனால் உன் வாழ்க்கைய சரியான பாதையில் அமைத்துக் கொள்' என்று அட்வைஸ் பண்ணிப் போனார். இதைக் கேட்டதும் எவனுக்காவது லவ் பண்ண நினைப்பு வருமா? என்ன கொடுமை சரவணன் இது!" என்று தலையில் கைவைத்துக் கொண்ட பிரஷாந்த் மேலும் தமது காதலுக்கு தடைப்போட விரிக்கப்பட்ட சதிவலைகளைப் பற்றி தொடர்ந்தார்.

வைகாசிப் பொறந்தாச்சுக்குப் பிறகு மலையாலத்தில..ஒரு
படம். அதைத் தொடர்ந்து இந்தியில் 'ஐலவ் யூ', தெலுங்கில் 'பிரேமசிகர' என்று தொடர்ச்சியாக காதல் படங்கள், இரண்டு வருடங்களில் நடித்து முடித்து விட்டு மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தேன், 'பிரஷாந்த வேலையை மட்டும்தான் கவனிக்கிறார், தியாகராஜன் நன்றாக மகனை வளர்த்திருக்கிறார், பிரஷாந்த் ரொம்ப நல்லவர்' என்று பரவலாக பேச்சு அடிப்பட நான் அதைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். நான் நல்லவன் என்று நாலுபேரு பேசுவதை அறிந்த என் பெற்றோர்கள் சந்தோசப்பட்டார்கள். அதைவிட ஒரு பையனுக்கு  வேறு என்னங்க வேணும். பெற்றோர்களின் சந்தோசத்திற்காக காதலை தவறவிடலாம் தப்பில்லை... ஆனால் அதற்காக சன்னியாசி ஆகுங்கள் என்று நான் சொல்லவில்லை, நானும் சராசரி மனிதன் தான். எனக்கும் ஆசா பாசம் எல்லாம் இருக்கு. காதல் நல்ல விசயம்தான். அதை அனுபவிக்க எனக்கு அமையவில்லை. சினிமா படப்பிடிப்பில் எத்தினையோ நடிகைகளோட நடிச்சிருக்கேன். ஆனால் அவங்களோட வேலை விசயமாக மட்டும்தான் பேசியிருப்பேன், ஆனால் எல்லோரும் எனக்கு நண்பர்கள் தான். ஆனால் கொஞ்சம் தூரமாகவே இருந்து விட்டேன். நெருப்பு சுடும்ணு தெரியும் இனி அதை ஏன் தொட்டுப் பாக்கணும்?" என்று தமக்கு எட்டாக் கனியாகி விட்ட காதலை நினைத்து பெருமூச்சு விடுகிறார் பிரஷாந்த்.

இன்றைய காதலர் தினத்தில் நமது இளம் காதலர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன என்று பிரஷாந்திடம் கேட்டோம்.

"லவ் என்பது நல்ல விசயம். எல்லோரும் லவ் பண்ணனும், லவ் பண்ணாம யாரும் இல்ல. லவ் பண்ணாம யாரும் இருக்கக் கூடாது. இன்னைக்கு இருக்கிற இளைய தலைமுறையினர் புத்திசாலிகள். ரொம்ப அட்வான்சா யோசிக்கிறாங்க. அதனால் லவ் பண்ண போறீங்கனா தயவு செய்து முதலில் முடிவு செய்யுங்க. இந்த பொண்ணோடதான் வாழ்நாள் பூரா இருக்க போறோம்மா இந்த பையனோடதான் இருக்க போறோமா, என்பதை தீர்மானிங்க பிறகு உங்க வீட்டில் இதுக்கு சம்மதிப்பார்களா இல்லையா என்கிறதை பாருங்க. அவங்க சம்மதிக்க மாட்டாங்க என்றால் எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறோம் என்பதையெல்லாம் முதலிலேயே பிளேன் பண்ணுங்க. முடியாதுன்னா லவ்ல இறங்காதீங்க பிரண்டாவே இருந்திருங்க. ஆனா லவ் பண்ணிட்டு வீட்டை விட்டு ஓடிப் போறதோ, இல்லை தற்கொலை செய்துக்கிறதோ, இல்ல பிரமை பிடிச்சி திரியிறதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். லவ் பண்ணினா அந்த ஒரு ஆளுடன் இருங்க, இல்ல லவ்வே பண்ணாதீங்க, லவ் என்பது ஒருத்தரோடதான் வரணும். பலரோட வருவது லவ் அல்ல. முடிஞ்சா லவ் பண்ணுங்க இல்ல கடைசி வரைக்கும் பிரண்டாகவே வாழ்ந்திருங்க. தப்பே இல்லை... என்று தன் காதல் அட்வைசை தரையிறக்கம் செய்து வைத்தார் பிரஷாந்த்.

பின்னர் திசை மாறி வேறு கேள்விகள் கேட்டோம்

"என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் ஏழு ஆண்டுகளாக எனக்கு தொடர்ச்சியாக படங்கள் செய்ய முடியாமல் போய் விட்டது. அதற்குப் பிறகு, வந்த பொன்னர் சங்கர் ஒரு பீரியட் பிலிம், அதோடு அது ஒரு சரித்திர படம். நிறையப் பேர் ட்ரை பண்ணினாங்க ஆனால், அதை யாராலும் முடிக்க முடியவில்லை. ஏனென்றால், சரித்திரப் படங்கள் எனும் போது கொஞ்சம் டைம் எடுத்து பண்ண வேண்டும், நான் ரொம்பவும் டைம் எடுத்துக் கொண்டு கத்திக்கு நன்றாக சானைப் பிடித்து படக் குழுவினருடன் இறங்கினேன். வெற்றியும் கண்டோம். அந்தப் படம் அப்பாவின் இயக்கத்திற்கும் புகழ் சேர்த்தது.

முன்னர் நானும் அப்பாவும் இணைந்து செய்த முதல் படம் தான் 'ஆணழகன்' பெண்வேடமிட்டு நான் நடித்தப் படம் அந்தப் படத்திற்குப் பிறகுதான் மற்றவர்கள் பெண்வேடம் போட்டு நடிக்க ஆரம்பித்தார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு வெளியாகிய திகில் படம் தான் 'ஷாக்'. ஆனால், மம்பட்டியானை நான் செய்வேன் என்று என்றைக்குமே நான் நினைத்தும் பார்த்தது கிடையாது. எப்படி சிவாஜிக்கு ஒரு கட்டபொம்மனோ அதுப்போல அப்பாவுக்கு ஒரு மம்பட்டியான் அதை மற்றவர்கள் நினைத்தும் பார்க்க முடியாது என்றுதான் நினைத்திருந்தேன்.

அப்பா, மம்பட்டியானை ரீமேக் செய்யலாம் என்று சொன்னபோது என்னால் அதை தட்டமுடியவில்லை. பத்து வயதில் நான் மிரண்டுப் பார்த்த அந்தப் படத்தை கொஞ்சம் தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டேன். பழைய மம்பட்டியானில் எவையெல்லாம் ப்ளஸ்சாக இருந்ததோ அதை அப்பா ஹைலைட் ஆக்கினார் மைனஸ்சை  நீக்கினார். இப்படி உருவானது தான் மம்பட்டியான். ஒரு ஹீரோ நடித்து மெகா ஹிட்டான அந்தப் படத்தை மீண்டும் அவரே இயக்கி அதில் அவரின் மகனை நடிக்க வைத்தது ஒரு வரலாற்றுப் பதிவு. எனது வெற்றியின் ஒவ்வொரு படியிலும் அப்பா இருக்கிறார். எனக்கு கிடைத்த எல்லா வெற்றிகளுக்கும் அப்பாதான் சொந்தக்காரர்.

என்று அப்பா தியாகராஜவைப் புகழுகிறார் பிரசாந்த்.

பிரசாந்த் அறிமுகமான அந்தக்காலத்தில் அவருக்கு போட்டியாக இருந்த பல நடிகர்கள் இன்று திரையுலகில் இல்லை, இன்று அவருடன் போட்டிக்கு நிற்பவர்கள் அனைவரும் புதியவர்கள். எப்படி சமாளிக்கிறார்? என்று எமது சந்தேகத்தைக் கேட்டோம்.

"ஒரு தசாப்தம் என்கிற இந்த பத்து வருடம் என்பது ஒரு கால சுழற்சி. இக்காலத்தில் பழையவர்கள் மாறி புதியவர்கள் களத்திற்கு வருவது சகஜம். அதுப்போல் பலர் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் நான் இன்றும் நிற்கிறேன். புதியவர்களுடன் மல்லுக் கட்டுகிறேன் என்றால் அது தானே முக்கியம்! இத்தனை வருடங்கள் கழித்தும் சினிமாவில் நான் வாழ்வதற்கு ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் காரணம். நான் படகு மாதிரிங்க... சீறி வரும் அலைகள் மீது நான் ஏறிச் செல்வேன் என்றவரிடம் அடுத்தப் படம் பற்றிக கேட்டோம்.

இப்போ மூன்று படங்களுக்காக பெரிய இயக்குனர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். விரைவில் இது பற்றி தெரிய வரும் என்றவரிடம் அது கொம்பேரிமூக்கனாக இருக்குமா? என்று கேட்டதும் பிரஷாந்த் கலகலவென்று சிரித்தார். "நான் யோசிக்காததை சொல்லிட்டீங்க" என்று சொல்லி நிறுத்தினார்.

   

No comments:

Post a Comment