Tuesday, November 27, 2012

ஆடுகளம் ஜெயபாலனின் மலரும் நினைவுகள்

“மத்துகமையிலேயே என் வசந்தகால காதலிகளைச் சந்தித்தேன்"


நேர்கண்டவர்:- மணி ஸ்ரீகாந்தன்


“ஆடுகளத்தில் என்னோடு ‘பேட்டைக்காரன்’ பாத்திரத்தில் நடித்த ஜெயபாலன் தமிழகத்திற்கு கிடைத்த ஆச்சரியம். அவரது தோற்றத்திற்கு படத்தில் நடிக்கவே தேவையில்லை. சும்மா கெமராவுக்கு முன்னாடி வந்தாலே போதும்." என்று ஜெயபாலனுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் தனுஷ்.
நம் நாட்டு நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரே ஜெயபாலன். தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
‘வனயுத்தம’ சூட்டிங் முடிந்து வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வாக இருந்தபோது அவரை சந்தித்தோம். “என்னுடைய மூச்சு எழுத்துதான். சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து என்றுதான் சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எனது நெருங்கிய நண்பர். எனது படைப்புகளை பார்த்து ரசித்து பாராட்டுவார். ஒரு முறை பாலுமகேந்திராவை சந்தித்தபோது அங்கே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றிமாறன் இருந்தார்.

என்னை கண்ட அவர், நான் அடுத்து செய்யபோகும் படத்தில் ஒரு பாத்திரம் இருக்கிறது. அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் என்றார்.
நான் பள்ளிக்கூட நாடகத்தில் கூட நடித்தது கிடையாது. நான் நடித்தது எல்லாம் என் மனைவியின் முன்னாடிதான் என்றேன். அதோடு நான் ஒரு வனங்காமுடி. என்னை மனேஜ் பன்றது உங்களுக்கு கஷ்டம் என்றும் வெற்றியிடம் சொன்னேன். ஆனால் வெற்றிமாறன் விடவில்லை. என்னை நடிக்க வைத்தார். சினிமா சம்பந்தமான சில நுணுக்கங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார்.
படத்தில் எனக்காக ராதாரவி டப்பிங் கொடுத்தார். இந்திய தேசிய விருது பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சொந்தக் குரலில் பேச வேண்டும் என்பது.
அதனால் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் என் நேரம். எனது சிறப்பான நடிப்பை பார்த்த தேர்வுக்குழு நிபந்தனைகளை தளர்த்தி எனக்கு விருதை அறிவித்தது. என்னால் தமிழ் திரையுலகத்திற்கு விருது விசயத்தில் ஒரு நல்லது நடந்ததாக பலர் பாராட்டினார்கள்.

தற்போது அர்ஜுனுடன் ‘வனயுத்தம்’ படத்தில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து வாய்ப்புகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் சின்னப் பாத்திரங்களை தவிர்த்து, பெரிய பாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன”  என்று சொல்லும் ஜெயபாலன் நெடுந்தீவில் பிறந்து ஆரம்பகல்வியை உடுவில் ஆரம்ப பாடசாலையில் கற்றவர். இவரது அம்மா ராசம்மா உடுவில் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். அப்பா சண்முகம்பிள்ளை ஒரு வர்த்தகர். களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகமை நகரில் கடை நடத்திவந்திருக்கிறார்.

“எனது ஆரம்பக்கல்வியை தொடர்ந்து நான் மத்துகமை சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். மத்துகமை வாழ்க்கை எனக்கு ஒரு சுகமான அனுபவம். ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது’ என்ற உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடான எனது குறுநாவல் தொகுதியின் முதல் கதை மத்துகமை கதைத்தான். நான் சென்மேரிஸ்சில் படித்தபோது அங்கே இருந்த நண்பர்களை மறக்க முடியாது. அதைபோல் என் வசந்தகால காதலிகள் அங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் இப்போ எங்கே இருக்கிறார்களோ தெரியாது. ஒரு காதலி தோட்ட கணக்குபிள்ளையின் மகள். மற்றவர் ஒரு சிங்களப் பெண். அந்த இனிமையான நாட்களை நினைத்தாலே சிந்ததையெல்லாம் இனிக்கிறது.

மத்துகமை நகரில் ‘பாய் சண்முகம்பிள்ளை அன் சன்ஸ’ என்பதுதான் எங்கள் கடையின் பெயர். எங்கள் கடையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை புத்தகக் கடை செய்யும் வினாசித்தம்பிக்கு கொடுத்திருந்தோம். அந்த கடைக்கு வரும் வினாசித்தம்பியின் மகன் கிருபாகரன் எனக்கு புத்தகங்களை வாசிக்க கொடுத்து எனக்குள் எழுதும் ஆர்வத்தை விதைத்தார். அத்தோடு அவரே சில கவிதைகளை எனது பெயரில் எழுதி சுதந்திரன் சஞ்சிகைக்கு அனுப்பி வைப்பார். அவற்றில் சில எனது பெயரில் சுதந்திரனில் வெளியாகி இருக்கிறது. அப்போது எனக்கு பத்து, பதினைந்து வயதிருக்கும். கிருபாகரன் புங்குடுத்தீவைச் சேர்ந்தவர்.
மத்துகமையில் நான் படித்தபோது மயில்வாகனம் வீட்டில் தங்கியிருந்துதான் ஸ்கூலுக்கு போவேன். அவரது வீடு கலேவத்தையில் இருந்தது. அது ஒரு இறப்பர் தோட்டம். ரொம்பவும் இருள் நிறைந்து பசுமையாக இருக்கும். மயில்வாகனம் மாஸ்டரும் நன்றாக கவிதை எழுதுவார்." என தனது மத்துகமை வாழ்க்கையின் சில பக்கங்களை புரட்டும் ஜெயபாலனின் படைப்புகள் நம் நாட்டின் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகி இருக்கின்றன.

“பாடசாலை நாட்களில் என்னோடு படித்த முத்து சிவலிங்கம் என்பவரும் நானும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கவிதை எழுதிக்கொள்வோம். அப்போ ஒருநாள் ஆங்கில, தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்ற வன்னி தமிழ் மகா வித்தியாலத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன் ஆசிரியரை சந்தித்தேன். அவர் என்னிடம் பாடசாலை ஆண்டு மலருக்கு ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்டார். அப்போது நான் எழுதிய 'பாரியாறு நகர்கிறது” என்ற கவிதை முதல் முறையாக அச்சேரியது. அதற்கு பிறகு எனது படைப்புகளுக்கு மல்லிகை ஜீவா களம் தந்தார். தனது மல்லிகையில் எனது கவிதைகளை அச்சிட்டு வெளியிட்டார். தனி ஒரு மனிதராக மல்லிகையை சைக்கிளில் வைத்து கட்டி வீடு வீடாக, தெருத்தெருவாக சென்று விற்பனை செய்வார். அப்படி ஒரு உழைப்பு, முயற்சி! அந்த பெரிய மனிதருக்கு நான் எந்த கைமாறும் செய்யவில்லை.
இலக்கியம், கவிதை, பற்றி நான் சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு அது ஒரு குற்ற உணர்வாக தெரிகிறது. மல்லிகைக்கு அடுத்ததாக எனது படைப்புக்களுக்கு முன்னுரிமை தந்த 'அலை” ஜேசுராஜாவை என்னால் மறக்க முடியாது. ஜேசுராஜா இன்றைக்கு என்னைப் பற்றி எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அவர் எனக்கு எப்போதுமே நல்ல நண்பர்தான்.
அவ்வப்போது எனது படைப்புகளைப் பார்த்து பாராட்டி தட்டிக்கொடுத்தவர்களில் கவிஞர் சோலைக்கிளி, உள்ளிட்ட பலர் என் வெற்றிக்கு பின்னால் இருக்கிறார்கள்," என்று நெஞ்சு நிறைய பேசுகிறார் ஜெயபாலன்.

“நான் பிறந்த நெடுந்தீவு வரலாற்று சிறப்பு மிக்க இடம். இங்கேதான் எனது சந்ததியினரான குசுவன் கந்தன் உள்ளிட்டோர் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடினார்கள். இந்திய கடலோடியின் முதல் பிதா மகனாக கருதப்படும் குஞ்சிலி மரைக்கார் என்ற மலையாளி, டச்சுக்காரர்களுக்கும், போர்த்துக்கேயருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். அவரை போர்த்துக்கேயர் கடற்கொள்ளையன் என்றே பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். அவன் சங்கிலியனின் கடற்படைக்கு பாதுகாப்பாளனாக இருந்திருக்கிறான்.

அதனால் அவனுக்கு நெடுந்தீவிலும் தளம் இருந்திருக்கிறது. அந்த தளத்தை பிடிக்க நெடுந்தீவிற்கு போர்த்துக்கேயர் வந்ததாகவும், வந்த இடத்தில்  குதிரைப் பண்ணை அமைக்க நெடுந்தீவில் உள்ள பருத்தித் தோட்டத்தை அழித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அக்கிரமத்தை எதிர்த்து  மக்கள் போராடி இருக்கிறார்கள். பிறகு மக்கள் பருத்தியை பூஞ்செடிபோல வீடுகளில் வளர்க்கவும் செய்திருக்கிறார்கள். அதை டச்சு அரசு தடை செய்ததாகவும் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. மக்கள் புரட்சிக்கு பெரிய பலமாக இருந்த குசுவன் கந்தனைப் பற்றிதான் எனது அடுத்த படைப்பு இருக்கபோகிறது. எனவே நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் குசுவன் கந்தனைப் பற்றி தெரிந்திருந்தால் என்னுடன் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நெடுந்தீவில் எங்கள் வீட்டுக்கு பின்னால் கந்தன் தரை என்று ஒரு இடமும் இருக்கிறது.
டச்சு, போர்த்துக்கேயரின் தடையை மீறி நெடுந்தீவு மக்கள் பருத்தியை ரகசியமாக பயிர் செய்தமைக்கு அவர்களது நெஞ்சுரம் தான் காரணம். பனியாமையின் சின்னமாக அவர்கள் பருத்தியைக் கருதினார்கள்" என்று நெடுந்தீவு வரலாறு பற்றிப் பேசிய ஜெயபாலன்,  ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

“இன்றைய நமது நெடுந்தீவு சந்ததியும் வீட்டுக்கொரு பருத்திச் செடியை தமது வரலாற்றுப் பெருமையை நினைவுபடுத்தும் வகையில் வளர்க்கவேண்டும். மேலும் நெடுந்தீவின் இயற்கை வளமான செங்கத்தாழையும் படிப்படியாக அழிந்து வருகிறது. அதையும் விட்டு விடாதீர்கள்." என்கிறார் ஜெயபாலன்.

நன்றி: வண்ண வானவில்

No comments:

Post a Comment