Friday, November 30, 2012

ஆதி மனிதனின் வாழ்விடம்

இலங்கையின் தொன்மையான மனித வாழ்க்கைக்கான தடயங்களை வெளிப்படுத்தும் புளத்சிங்கள பா-ஹியான் கல்குகை


மணி ஸ்ரீகாந்தன்


ஹோமோ சேபியன் எனும் கற்கால மனிதனுக்கு முந்திய, மனித உயிருக்கு ஆதாரமாக விளங்கிய ஆதி மனிதனின் தோற்றம் இலட்சக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்கக் காடுகளிலேயே உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது மனித வரலாற்றில் ஆய்வாளர்களின் முடிவு. உலக நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த தேசங்களில் இலங்கையும் ஒன்று.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திலும் இங்கே மனிதர்கள் வாழ்ந்திருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பலாங்கொடையில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது இலங்கையின் மிகப் பழைய ஆதிமனிதனின் எச்சங்கள் கிடைக்கப்பெற்றதோடு சிவனடிபாத மலையடிவாரத்தில் மேலும் மனித எச்சங்கள் கிடைத்துள்ளன. இலங்கை கற்கால ஆதி மனிதன் தொடர்பான தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் ஒரு இடம்தான் புளத் சிங்கள பாஹியான் கல்குகை.

குகையின் தோற்றம்

இங்கே ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இலங்கை தொல்பொருள் ஆய்வாளர்கள் தமது ஆய்வுப் பணிகளை இங்கே நடத்தி வருகிறார்கள்.
களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள பிரதேச சபையில் உள்ள யட்டஹம்பிட்டிய கிராமத்தில்தான் இந்த பிரமாண்டமான குகை உள்ளது. இக் குகையைத் தேடி நாமும் எமது பயணத்தை தொடங்கினோம்.
புளத் சிங்கள நகரத்திலிருந்து நிக்கா, பரகொட பாதையில் ஆறு கிலோ மீற்றர் தூர பயணத்தின் பின்னர் யட்டஹம்பிட்டிய கிராமம் வருகிறது. இலங்கை - சீன நட்புறவு கிராமம் என்கிற பெரிய அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டுள்ளது. அந்தப் பலகைக்கு இடது பக்கம் ஆதி மனித குகை என்கிற ஒரு சிறிய போர்ட் மலை அடிவாரத்திற்கு செல்லும் பாதையில் மாட்டப்பட்டுள்ளது.

அதன் வழியே நடந்தோம். மூச்சிறைக்க வைக்கும் ஏற்றம். பாஹியன்கல மலையின் அடிவாரம் ரம்மியமாகக் கண்களுக்குத் தெரிகிறது.

பெரிய மண்டபத்தைத் தவிர அங்கு வழிபாட்டுத் தலமெதுவையும் காண முடியவில்லை. இலங்கையில் குறிப்பாக துறவிகள் தியானம் செய்யும் இடமாக இந்த பாஹியன்கல விளங்குகிறது.
அகழ்வாய்வு நடைபெற்ற இடம்

இந்த பாஹியன்கல தியான தலத்தில் முதன்மை பிக்குவாக இருப்பவர் பாஹியன்கல சந்திம தேரர். அவரிடம் அனுமதி பெற்று ஆதிமனித வாழ்விட குகையை நோக்கி பயணித்தோம். குகை அடிவாரத்திற்கு அரை மைல் தூரம் மேலும் ஏறிச் செல்ல வேண்டும். உயர்ந்து நிற்கும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கற்களால் ஆன படிக்கட்டுக்கள் சிவனொளிபாத மலையை ஞாபகப்படுத்துகிறது ரொம்பவும் நிதானமாக நடக்க வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலும் அதல பாதாளத்தில் தான் விழ வேண்டியிருக்கும்.

படிகளில் ஏறத் தொடங்கும் போதே அந்தப் பாறைக் குகையை பார்க்க முடிகிறது. தலைசுற்ற வைக்கும் பிரமாண்டமான பாறை அது. அரைமைல் தூர பயணத்திற்கு பிறகு குகையின் வாசலை அடைந்தோம்.

பிரமாண் டமான வாயிலோடு கூடிய குகை. அதன் அருகில் அமைதிச் சூழலில் உறங்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை. ஒரு சிறிய வழிப்பாட்டுத் தலம். தொல்லியல்துறையின் ஆராய்ச்சியில் இருப்பதால் அந்த குகையின் உள்ளே எந்த சிலையோ கட்டிடமோ எழுப்பப்படாமல் வெறுமையாக உள்ளது. எந்தக் காலத்திலும் தண்ணீரையே கண்டிராத புழுதி படிந்த மண்.
பா ஹியான்

இங்கேதான் சுமார் இருபதடி நீளம், பதினைந்து அடி அகலத்தில் பாரிய குழி ஒன்றைத் தோண்டி அகழ்வாராய்ச்சி நடைபெற்றிருக்கிறது. இங்குதான் ஆதிமனிதன் வாழ்ந்தானா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் 1968ம் ஆண்டி லிருந்து இன்று வரை ஆறு முறை நடத்தப்பட்டுள்ளது. 1986ல் தான் மனிதர்கள்
வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத் ததாம். இந்தக் குகை முப்பத்தெட் டாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் கடைசியாக 2009 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்த ஆதி மனித வாழ்விடம் ஐம்பதாயிரம் வருடங்கள் பழைமையானது என்பது தெரியவந்தது.
   
கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகையின் வாசல் 150 அடி உயரமும் 280 அடி அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது.

இலங்கையில் உள்ள குகையில் மிகவும் பெரிய குகையாக பாஹியான்கல குகை விளங்குகிறது. 1986ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் மனித மண்டையோட்டின் ஒரு பகுதி கிடைத்திருக்கிறது. அதில் வர்ணம் பூசப்பட்டதாக உள்ளது என்று எம்மிடம் தகவல் தெரிவித்த அத்துறவிஇ வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் ஏதேனும் ஒரு வகையான வழிபாட்டை அல்லது நம்பிக்கையைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
 சந்திம தேரர்

இதுதவிர ஆதி மனிதன் நெருப்பைப் பயன்படுத்தி இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. கற்களைப் பயன்படுத்தி தீ மூட்டி உணவுக்காகவும் குளிர்காயவும் அதைப் பயன்படுத்தும் அறிவை அவன் பெற்றிருக்கிறான் என்பதை இந்த ஆதாரங்களின் மூலம் அறிய முடிகின்றது. கல் ஆயுதம்இ கரித்துண்டுகள் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட மிருகங்களின் எலும்புகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இதில் யானையின் எஞ்சிய எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. எனவே இங்கு வாழ்ந்த மனிதன் யானைகளையும் கொன்று உணவாகக் கொண்டிருந்தானா? என்ற கேள்வியும் எழுகிறது?

இங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களின் மலம் மற்றும் எச்சங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அவன் உண்ட உணவுகளையும் பட்டியல் இட்டுள்ள தொல்லியல் துறைஇ மிருகங்களையும்இ மனித மாமிசத்தையும் கூட இவர்கள் உணவாகக் கொண்டிருந்ததற்கு தடயங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பா ஹியான் கிராமத்தை குறிக்கும்
பதாகை

பழங்கால மனிதர்கள் உஷ்ண வலய பகுதியில் வாழ்ந்ததாக ஆதாரங்களைக் கொண்டுள்ளனர் ஆனால், உலர் வலய பகுதியான புளத் சிங்கள பகுதியில் அவர்கள் வாழ்ந்ததை எப்படி உறுதிசெய்வது? என்ற குழப்பமும் தொல்லியல்துறை யினருக்கு உண்டாம். ஏனெனில் ஈரலிப்பான பிரதேசத்தில் அதாவது அதிக மழை வீழ்ச்சி இருக்கக்கூடிய பகுதியில் மனிதன் தோன்றி வளர்ந்திருப்பது பெரும்பாலும் சாத்தியம் இல்லை என்பது ஆய்வாளர்க ளின் முடிவு.

உஷ்ண பகுதியில்தான் உயர் வாழ்க்கை படிமுறை வளர்ச்சி பெற முடியும். ஆனால் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு புளத்சிங்கள உலர் வலயமாகத்தான் இருந்தது என்பதை எப்படி உறுதியாக சொல்லமுடியும்? உஷ்ண வலயமாகவும் இருந்திரு க்கலாம். ஏனெனில் இமயமலை ஒரு காலத்தில் கடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்போது நம் கண் முன்னாலேயே சீதோஷண நிலை மாறி வருகிறது. லெமுரியா கண்டமே காலமாற்றத்தில் காணாமல் போய்விட்டபோது உஷ்ண வலயம் ஈரவலயமாக மாறுவதில் வியப்பு எதுவும் இருக்க முடியாது.
பாஹியன்கல என்ற பெயர் இந்த யட்டஹம்பிட்டி கல்குகைக்கு எப்படி வந்தது என்ற விபரத்தை பாஹியன் கல பிக்கு சந்திமவிடம் விசாரித்தோம்.

‘பாஹியான் என்ற சீன யாத்திரிகர் சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் இந்த கல்குகைகளில் தங்கியதாக காலம் காலமாக இந்த பகுதியில் ஒரு கதை இருக்கின்றது.

இதன் காரணமாகவே இந்த குகைக்கு ‘பாஹியன்கல’ என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கி. பி. 5ம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை ஆட்சிசெய்த மகாநாம மன்னனின் காலத்தில் தான் பாஹியான் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் பாஹியான் இந்த குகையில் தங்கியதற்கான சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. களனி இராச்சியம்இ பொலன்னறுவை இராச்சியம்,கோட்டை இராச்சியங்களின் ஆட்சியின் கீழ் இந்தக் குகை இருந்து வந்திருக்கிறது.

அதன் பிறகு 19ஆம் நூற்றாண்டில் கடைசியில் இங்கு இருந்த வெரோகம உன்னான்சே என்ற பிக்குதான் இந்த குகையை கண்டுபிடித்து தொல்லியல் துறையினரின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறார். முதற்கட்ட ஆராய்ச்சி பேராசிரியர் எஸ். யூ. தெரனியகலையின் தலைமையின் கீழ் 1968 ல் தொடங்கியது. அப்போது இரத்தினபுரி பட்டநும்பகுகைஇ கேகாலை கித்துல்கல குகைஇ அத்தனகல அலுகலன குகை போன்றவற்றிலும் ஐந்து கட்டமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதிகட்ட ஆராய்ச்சி இந்த ஆண்டில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் ஜெனரல் செனரத் திசாநாயக்காவின் ஆலோசனை வழிநடத்தலில் நடத்தப்பட்டது என்ற தேரர் சந்திமாவிடம் அந்த பழைய பொருட்கள் எல்லாம் எங்கே என்ற வினாவை தொடுத்தோம். “எனக்கு தெரிய அந்த ஆயுதங்களும் மண்டை ஓடும் அங்கு இருந்தன. அப்போது நான் பாடசாலை யில் படித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் ஒரு கெமராவும் இல்லை. அப்படி இருந்திருந் தால் ஒரு படமாவது எடுத்து வைத்திருப்பேன். அந்த பொருட்களின் தொன்மையை கண்டுபிடிக்கும் கார்பன்டேட்டில் செய்ய அவற்றை அமெரிக்காவுக்கு கொண்டு சென்று விட்டார்கள் என்கிறார் பாஹின்கல சந்திம.
யானை எலும்புகள்

அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் யாத்திரை செய்தவர்கள் தான் மாக்கோ போலோ மற்றும் பாஹியான் ஆகியோர். இவர்களில் மாக்கோபோலோவும், பாஹியானும் இலங்கைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். இதற்கு ஆதாரங்கள் உண்டு. மன்னர் அலெக்ஷாண்டரும் சிவனொளிபாத மலைக்கு சென்றதாகவும் மலையில் ஏறுவதற்காக தனது கப்பலில் இருந்த சங்கிலியை சிவனொளிபாத மலையில் பதித்து அதை பிடித்துக்கொண்டு மலை ஏறியதாகவும் வாய் வழி கதைகள் உண்டு. ஆதாரங்கள் இல்லை.
ஆபிரிக்க காடுகளில் தோன்றிய மனித வம்சம் இந்திய, மேற்கிந்திய கரையோரமாக வந்து இலங்கையிலிருந்து, மலேசியா, சீனா, அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு போயிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. பாஹியன்கல குகையில் கிடைத்த ஆதாரங்களில் சில இங்கு வாழ்ந்த மனிதன் நாகரிகமடைந்த மனிதனாக இருந்திருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

குறிப்பாக குகையினுள் தோண்டப்பட்டுள்ள மண் அடுக்குகளை வைத்துப் பார்க்கும் போதுஇ பல இடங்களில் நெருப்பு மூடப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. இவைகள் இங்குள்ள நிலத்தை பகுதி பகுதியாக பிரித்து மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது என்கிறார் சந்திம தேரர். இதுதவிர இவர்கள் ஆபரணம் அணிந்திருப்பதற்கான சில தடயங்களும் கிடைத்திருக்கின்றனவாம்.

சிப்பிகளால் செய்யப்பட்ட மாலை, போன்றவை கிடைத்திருக்கின்றது. இதுதவிர மீன் எலும்புகளும் கிடைத்திருக்கின்றன.

இவை அனைத்தும் இவர்களிடம் ஒரு கலாசாரம் நிலவி இருந்திருக்கிறது என்பதையும் கரையோர பகுதிக்குமான ஒரு பரிமாற்ற முறை நிலவி வந்திருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துவதாக உள்ளது. கடல் குறித்த அறிவு இவர்களுக்கு இருந்திருக்கலாம். ஐம்பதாயிரம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த ஐம்பது வகையான மிருகங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பட்டியல் இட்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலா னவை இன்று இல்லை.
பா ஹியான் மலை

இவர்கள் சிறிய மிருகங்களை வேட்டையாட ஒரு புதுமுறையை கையாண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். இன்று ஆதி மனிதன் என்றதுமே எழுப்பப்படும் முதல் கேள்வி, அவன் திராவிடனா ஆரியனா என்பதாகவே இருக்கிறது. எனினும் இம் மனிதன் இந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட வனாகவே இருந்திருப்பான். மனிதனை பாகுபடுத்தும் இந்த வரைவிலக்கணங்கள் எல்லாம் பின்னால் வந்தவை தானே!

No comments:

Post a Comment