Thursday, December 27, 2012

சிங்களத் திரைப்படங்களை தயாரித்து இயக்கும் பேராதனை ஜூனைதீன்

குறைந்த பட்ஜட் படங்கள் நல்ல இலாபத்தைத் தருகின்றன

   

நேரில்-மணி ஸ்ரீகாந்தன்

       
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'டெக்ஸி டிரைவர்' திரைப்படத்தின் மூலம் இலங்கை சினிமாவுக்கு அறிமுகமானவர் ஏ.ஜெ.ஜூனைதீன். சிங்கள திரையுலகில் ஷாமிலாவின் இதயராகம், சொமிபோய்ஸ், சந்துனி, நாககன்னியா-சுப்பர் ஸ்டார் ஆகிய படங்களையும் அன்மையில் வெளியாகிய 'குருமிட்டக் எவில்லா' என்ற படத்தையும் வெளியிட்டு வருபவர் இவர். அதாவது, வெற்றிகரமான சிங்களப் படத்தயாரிப்பாளர். பல வெற்றிப் படங்களை தந்த இவரை ஒரு மாலை வேளையில் வானவில்லிற்காக சந்தித்துப் பேசினோம்.

"டெக்ஸி டிரைவர் திரைப்படம்தான் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் படம். ஆனால் வெளிவருதில் காலதாமதம் ஏற்பட்டது அப்போது இரண்டாவதாக தயாரிக்கப்பட்ட 'தோட்டக்காரி' திரைப்படம் முதலாவதாக வெளியாகி முதல் தமிழ் படம் என்ற பெயரை தனதாக்கிக் கொண்டது. இந்தப் படத்தை சுண்டிக்குளி சோமசேகரம் தயாரித்தார். நான் திரைக்கதை வசனம் எழுதியிருந்தேன். அந்தக் காலத்தில் எங்களுக்கு சம்பளம் எதுவும் கிடையாது. குருவிசுவாசமும், நன்றியும் தான் இருந்தது. இன்றும் அது என்னிடம் இருக்கிறது". என்கிறார்.

தமது திரை வாழ்க்கையில் சிங்களத்தில் நான்கு படங்களை தயாரித்ததோடு, இனைத் தயாரிப்பாக ஏழு படங்களையும் தயாரித்திருக்கிறார். குறைந்த பட்ஜட் படங்களைத் தயாரித்து பெரிய இலாபம் பார்க்கக் கூடிய வித்தை தெரிந்த ஒரே தயாரிப்பாளர் என்று இவரை அடையாளப்படுத்தலாம். "நான் நடிகனாக வேண்டும் என்றுதான் விரும்பினேன். பிறகு தயாரிப்பாளராக மாறிவிட்டேன். எனது ரோல் மாடல் பி.எஸ்.வீரப்பாதான். மஞ்சள் குங்குமம், பிஸ்சுபூசா, சதுனி உள்ளிட்ட சில படங்களில் நடித்துமிருக்கிறேன்".

டெக்ஸிடிரைவர் படத்திற்கு அந்தக்காலத்தில் ஒன்றேகால் லட்சம் செலவாகியதாம். இன்று குறைந்த பட்ஜட் படத்திற்கு எழுபது லட்சம் வரை செலவாகிறது. என்று சொல்லும் இவர் தனது அனைத்து படங்களும் வெற்றி பெற்றதற்கு பின்னால் எந்த மந்திர மாயமும் கிடையாது என்கிறார்.

"ஒரே ஒரு ரகசியம் தான் உள்ளது. நான் எனது நண்பர்களுக்காகவோ எனது குடும்பத்தார்களுக்காகவோ, சினிமாகாரர்களுக்காகவோ படம் செய்யவில்லை. முகம் தெரியாத ஒரு ரசிகர் வரிசையில் நின்று டிக்கட் வாங்குகிறானே அவனுக்காகத்தான் எனது படங்கள் வெளியாகிறது. அவை வெற்றியும் பெற்றிருக்கின்றன. இது தான் என் தொழில் இரகசியம்|| என்று கூறும் இவர், ~சதுனி| படத்திற்காக இந்தியாவிற்கு சென்று படப்பிடிப்பை செய்தோம் என்றும் ஒன்பது நாட்கள் படப்பிடிப்பை சென்னை வளசரவாக்கத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளைப் பயன்படுத்தி படமாக்கினோம்" என்றும் கூறுகிறார்.

இதில் தென்னிந்திய நடிகர்களான ஓமக்குச்சி, தவக்களை உள்ளிட்ட சிலர் நடித்திருந்தார்கள்.

ஜூனைதீன் நாக கன்னியா படப்பிடிப்பிற்காக பாம்பு பிடித்த சுவையான கதையை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"நாக கன்னியாவின் முக்கிய கதாபாத்திரம் பாம்புதான். அதற்காக ஒரு பாம்பை தேடும் முயற்சியில் நான் இறங்கியிருந்தேன். தமிழகத்திலிருந்து பழக்கப்பட்ட ஒரு பாம்பை கொண்டு வந்தால் செலவு அதிகமாகும் என்பதால் உள்நாட்டிலேயே தேடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு நாள் எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் சென்ற ஆட்டோ ஹெந்தல சந்தியை கடந்த போது எதிரே ஒரு பாம்பாட்டி மூட்டை முடிச்சுடன் பாதையை கடந்தான். அவனைக் கண்டதும்’ எனக்கு நாககன்னியா கதாநாயகன் ஞாபகத்திற்கு வந்தான். உடனே ஆட்டோவை நிறுத்தி ஓடினேன். அவனிடம் நான் சினிமாப் படம்
 தயாரிப்பதையும். எனக்கு ஒரு பத்து நாளைக்கு பாம்பு தேவைப்படுவதையும் கூறி எனது விசிட்டிங்கார்டை கொடுத்து விட்டு பிறகு என்னிடம் தொலைபேசியில் பேசுமாறு கூறிவிட்டு வந்தேன். எனது மனைவி அந்த பாம்பாட்டிக்கு அப்போதே பணம் கொடுக்கும் படி கூறினாள். உடனே மனைவிக்கு மருந்து வாங்க வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாவை அவனிடம் கொடுத்தேன். அவன் என்னை ஆச்சர்யமாக பார்த்தான். அன்று முழுவதும் அவன் பாம்பை வைத்து வித்தை காட்டினாலும் அவனால் அந்தப் பணத்தைக் காணமுடியாது. மனைவியின் தந்திரம் வேலை செய்தது.

 பிறகு கலேவெலயைச் சேர்ந்த அவன் அடிக்கடி போனில் பேசினான். படப்பிடிப்பில் அவன் நான் சொல்லும் டைம்க்கு ஆஜராகி விடுவான். ரொம்ப நல்லவன் அவனுக்கும் பாம்புக்கும் ஹோட்டலில் ஏசி ரூம் போட்டுக் கொடுத்தேன். ஒரு நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியில் கதாநாயகனும், கதாநாயகியும் காரில் புறப்படும் போது காருக்கு அடியில் நுழையும் பாம்பு காரின் பெட்றோல் தாங்கியை கொத்தித் துளை போடுவது போன்று ஒரு காட்சியை படமாக்க ஆயத்தமானோம்.  அப்போது பாம்பை காருக்கு அடியில் பாம்பாட்டிவிட்டான். காருக்கு அடியில் நுழைந்த பாம்பு மறுபக்கத்தில் வெளியே வர வேண்டும். ஆனால் வரவில்லை. பாம்பு மாயமாக மறைந்து விட்டது. அதனால் படப்பிடிப்பு குழுவிற்கு ஒரே அதிர்ச்சி! எல்லோரும் பாம்பை தேடினோம். நாயகனும், நாயகியும், காருக்குள் வெல வெலத்து உட்கார்ந்திருந்தார்கள். பிறகு ஒரு மணித்தியால தேடலுக்கு பிறகு பாம்பு காருக்கு அடியில் இருந்த ஒரு ஓட்டைக்குள் நுழைந்து சுருண்டு படுத்திருந்ததை கண்டு அதை வெளியே எடுத்தோம்" என்று தமது திரை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஜூனைதீன், தமிழ் சிங்களம் என இரண்டு மொழியிலும் கதை வசனம் எழுதுவதில் நல்ல புலமை பெற்றவர்.

அண்மையில் இவரின் தயாரிப்பு, திரைக்கதையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் குருமிட்டியக் எவில்லா படத்தில் செவ்வாய் கிரகத்து மனிதன் சிறுவர்களிடம் பேசும் போது. "இந்த உலகத்தில்  பெரியவர்களால் சமாதானத்தை உருவாக்க முடியாது. சிவா, அமல் போன்ற சிறுவர்களால் தான் சமாதானத்தை உருவாக்க முடியும். எனவே பிள்ளைகள் நீங்கள் அந்த சமாதானத்திற்காக பாடுபடுங்கள். அந்த சமாதானம் மலரும் போதும் நான் மீண்டும் உங்களைப் பார்க்க வருவேன்" என்று கூறுவதாக வசனம் அமைத்திருக்கிறார். இவரின் கைவண்ணத்தில் உருவான வசனத்திற்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குருமிட்டியக் எவில்லா| படத்தை தொடர்ந்து இவரின் தயாரிப்பான 'மமய் ப்ரிய ஆதரே' என்ற இளமை சொட்டும் படமும் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

No comments:

Post a Comment