Thursday, November 22, 2012

சாவி வெட்டுபவருடன் சில நிமிடங்கள்

"திருடர்களுக்கும் சாவி வெட்டித்தருவோம் ஆனால்..."


  

உரையாடல் - மணி ஸ்ரீகாந்தன்


தமிழ்நாட்டில் தெருவோரங்களில் நிற்கும் (கையேந்திபவன்) மினி சாப்பாட்டுக்கடைகளை நம் நாட்டு நகரங்களில் காணமுடியாது. ஆனால் கொழும்பு நகரத்தின் தெருவோரங்களில் நாம் காண்பதெல்லாம் 'சாவி வெட்டும்' மினி கடைகளைத்தான்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் இந்த சாவி வெட்டும் தொழில் நடைபெற்று வருவதாக ஐந்துலாம்புச்சந்தியின் தெருவோரத்தில் சாவிவெட்டி வரும் சாகுல் ஹமீத் சொல்கிறார்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சாவி வெட்டி வரும்  சாகுல் ஹமீத்திற்கு இது பரம்பரைத்தொழிலாம்.

"எனது தந்தை செய்த தொழிலையே நானும் செய்கிறேன். ஆனால் என் பாட்டனார் என்ன தொழில் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. எனது தந்தை ஒரு ஆளை வேலைக்கு வைத்து சாவி வெட்டும் தொழிலை தொடங்கினார். நான் அவரிடம் தான் இந்த தொழிலை கற்றேன்" என்கிறார் சாகுல் ஹமீத்.

காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு பலகை பெட்டியை தூக்கிக்கொண்டு ஐந்து லாம்பு சந்தியின் தெருவோரத்தில் ஆஜராகிவிடுகிறார் ஹமீத்.

கீ கட்டிங் என்ற சிறிய விளம்பரப்பலகை. அதில் சில ஆணிகளை அடித்து பலவிதமான சாவிகளை மாட்டி சுவற்றில் அடிக்கப்பட்டிருக்கும் ஒற்றை ஆணியால் மாட்டிவிட்டு அதன் அருகில் பலகை பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு வாடிக்கையாளர்களை எதிர்ப்பார்க்கிறார். சாகுல் ஹமீதின் சாவிக்கடையின் அளவு அவ்வளவுதான்.

"நான் இதே இடத்த்pல் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இருப்பதால் கடைக்காரர்கள் எல்லாம் எனக்கு பழக்கமானவர்கள். அதனால் இந்த இடத்திற்கு வாடகை எதுவும் கொடுக்கத்தேவையில்லை" என்கிறார் இவர்.

சாவி வெட்டும் தொழில் செய்வதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. திருடர்களுக்கு சாவி வெட்டிக்கொடுத்தால் போலீஸ் கெடு பிடிக்கு ஆளாக வேண்டிவரும் என்பதை நாம் கேள்விபட்டிருக்கின்றோம்.

"திருடர்களுக்கு நாங்கள் சாவி வெட்டிக்கொடுப்பதில்லை. வெட்டிக்கொடுக்கவும் கூடாது என்று பொலிஸ் எச்சரிக்கையும் செய்கிறார்கள். சவர்க்காரத்தில் சாவியை அமிழ்த்தி அதன் அச்சை பிரதி எடுத்துக்கொண்டு வந்தால் அவர்கள் திருடர்களாகத்தான் இருப்பார்கள் என்று எங்களுக்கு தெரிந்துவிடும்.

சவர்க்காரத்தில் இருக்கும் சாவியின் அச்சுக்கு சாவி வெட்டுவது ரொம்பவும் சிரமமான காரியம். பத்து சாவி வெட்டினால் ஒரு சாவி தான் சரியாக பொருந்தும். வேலையில்லாத நாட்களில் அப்படி யாராவது வந்தால், சாதாரணமாக நாங்கள் ஒரு சாவி வெட்டுவதற்கு நூறு ரூபா வாங்கினால், சட்டவிரோத ஆட்களிடம் ஐநூறு ரூபா கேட்போம். அவர்களும் தயங்காது தநது விடுவார்கள். அதை வாங்கிக்கொண்டு கொஞ்சம் ஏறுமாறாக ஒரு சாவியை வெட்டிக்கொடுத்துவிடுவோம். பிறகு மீண்டும் இரு முறை எங்களிடம் அதே சாவியை வெட்டித்தரும்படி கேட்பார்கள். நாங்களும் வெட்டிக்கொடுப்போம். பிறகு இது சரிப்பட்டு வராது என்று அவர்கள் இடத்தை காலி செய்து விடுவார்கள். எங்களுக்கு மூன்று சாவி வெட்டிக்கொடுத்ததிற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் கிடைத்து விடுகிறது" என்று கள்ளனுக்குள் குள்ளனாக ஒரு கதையை அவிழ்த்துவிட்டார் ஹமீது.

இவர் வசிப்பது மாளிகாவத்தையில். சாகுல் ஹமீதின் மூன்று பிள்ளைகளில் இருவர் திருமணம் முடித்து விட ஒருவர் மட்டும் பாடசாலை செல்கிறாராம்.

தமது குடும்ப செலவுகள் அனைத்தையும் சாவி வெட்டும் தொழிலில் கிடைத்த  வருமானத்தில்தான் வெற்றிகரமாக முடித்திருக்கிறார் ஹமீத்.

"எந்த நாளும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில நாட்களில் சாப்பாட்டு செலவுக்கே கஷ்டமாகிவிடும். வீட்டு சாவி வெட்டுவதற்கு குறைந்த கட்டனத்தையும் வாகன சாவி வெட்டுவதற்கு கூடிய கட்டணத்தை வாங்குகிறேன்" என்றவரிடம்'மாஸ்டர் கீ' பற்றிய எமது சந்தேகத்தை கேட்டோம்.

"மாஸ்டர் கீயை வைத்து எல்லா பூட்டுகளையும் திறக்க முடியும் என்பது வெறும் கட்டுக்கதை. பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இந்த 'மாஸ்டர் கீ' வைத்திருப்பார்கள். அறைகளின் சாவிகள் தொலைந்து விட்டால் உடனடியாக அந்த அறையை திறக்க ஒரு மாஸ்டர் கீ வைத்திருப்பார்கள். அது அந்த ஹோட்டலின் அறைகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற ஹோட்டல்களின் அறைகளுக்கு பொருந்தாது" என்று கூறிய ஹமீத், வாடிக்கையாளர் ஒருவர் சாவியுடன் வந்தவுடன், அவருடன் பேசத்தொடங்கிவிட்டார். இனி அவரிடம் நமது கேள்விகளுக்கு இடமில்லைதானே! எனவே நாமும் இடத்தை காலி செய்தோம்.


No comments:

Post a Comment