Tuesday, November 20, 2012

மனதை உருக்கிய ஒரு உண்மைச்சம்பவம்


சிங்களத்  தாயாரை தேடி வந்த தமிழகத்து சந்திரவதி

மணி ஸ்ரீகாந்தன்


தமிழ், சிங்களம் என்ற இந்த இரண்டு இனங்களின் முன்னோடிகளும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறினார்கள் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

முகத்தோற்றம், கலாசாரம், மதம், பல பழக்கவழக்கங்கள், சொற்களில் காணப்படும் ஒற்றுமை என இந்தியர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இந்து-பௌத்த மதங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமை உள்ளது.

மொழியில் தான் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபடுகின்றனர். ஒற்றுமையாக வாழ்ந்திருக்க வேண்டிய இனங்களை அரசியலும், பரஸ்பர சந்தேகமும் பிரித்து விட்டன. முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த பிறகும் நம் நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பியதோடு இனங்களுக்கிடையே புரிந்துணர்வும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழக ஊடகங்கள் தான் இன்னும் இங்கு பிரச்சினை இருப்பது போன்று தோற்றத்தை காட்டிவருவதோடு இலங்கைக்கு செல்லும் கலைஞர்களையும் படப்பிடிப்பு குழுவினரையும் தடுத்தும் வருகிறது. இலங்கை பற்றிய சாதகமற்ற ஒரு தோற்றத்தை இது தமிழகத்தில் தோற்றுவித்துள்ளது. அதனையும் மீறி இந்தியர்கள் இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி அண்மையில் தமிழகத்திலிருந்து வந்தவர்களில் ஒருவர் தான் உனகலதேவயாலகே சந்திராவதி. இவர் கம்பஹா ஹேனகமையை பிறப்பிடமாக கொண்டவர். எலிஸ்நோனாவின் ஒரே மகள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழரான செல்லதுரையை திருமணம் முடித்து தமிழகத்திற்கு சென்றவர். தனது பாசத்திற்குரிய தாயை கடந்த நாற்பதாண்டுகளாக பிரிந்திருந்தவர், அண்மையில் இலங்கைக்கு வந்து தனது 98 வயது நிரம்பிய தாயை சந்தித்திருக்கிறார் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கடந்த மாதம் இங்கிரிய, றைகமையில் நடைபெற்றது.

தனது தாய் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதையே அறியாத அறுபது வயதான சந்திராவதி தன் கணவர் செல்லதுரையுடன் இங்கிரிய, றைகமைக்கு வந்து செல்லதுரையின் உறவினர்கள் வீட்டில் தங்கி, தனது தாயை தேடுவதில் ஈடுபட்டார். கம்பஹா, ஹேனகமையில் வசிக்கும் தெரிந்தவர்களிடம் சொல்லி விசாரித்ததில் சிலர் எலிஸ் நோனா, இறந்து விட்டதாகவும், இல்லை அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும்பலதரப்பட்ட செய்திகள் கிடைத்தன. பிறகு நீண்டதொரு தேடலுக்கு பிறகு எலிஸ் நோனா உயிரோடு இருப்பதும் அவர் நூறு வயதை நெருங்கி கொண்டிருப்பதையும் தெரிந்து கொண்டார் சந்திரவதி.
தனது தாயாருடன்,சந்திரா

கம்பஹா ஹேனகமை பெரும்பான்மை இன மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். தமிழர்களை அங்கு காண்பதே அரிது. அந்த இடத்திற்கு சந்திரவதியை எப்படி அழைத்துச்செல்வது? நாற்பதாண்டுகால இடைவெளியில் சந்திரா சிங்கள மொழியை மறந்துவிட்டார். பேசுவது புரிந்தாலும் அவரால் பதில் சொல்ல முடியாது. நமக்கும், அவர்களிடம் சென்று சந்திராவை அறிமுகம் செய்வதில் ஒரு தயக்கம் இருந்தது.

எப்படியோ பெரு முயற்சியின் பலனாக எலிஸ்நோனா வசித்து வந்த வீட்டாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லி எலிஸ்நோனாவை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

எலிஸ்நோனா இங்கிரிய றைகமைக்கு வரப்போகும் செய்தி காட்டுத் தீ போல அந்தப்பிரதேசத்தில் பற்றிக்கொண்டது. எலிஸ்நோனா கம்பஹாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் றைகமையில்தான் பல வருடங்கள் வாழ்ந்திருந்தார்கள்.

எலிஸ்நோனாவின் உயரம் 5.5. நரைத்தலையுடன் சிங்கள கலாசார உடையான சீத்தை ரவிக்கை சகிதமாக கையில் 'கெத்த' என அழைக்கப்படும் கோப்பிக்கத்தி சகிதமாக உலா வருவார். பலருக்கு இவரைக்கண்டாலே பயமாம். சிறுவர்கள் பயந்து நடுங்குவார்களாம்.

ஆச்சி பலாக்காயை கொண்டு வந்து அதை வெட்டும் அந்த லாவகம் யாருக்கும் வராது என்பார்கள். அவர் பலாக்காய் வெட்டி சுத்தப்படுத்துவதை வேடிக்கையாக அந்தக்காலத்தில் பார்த்திருக்கிறார்கள். அப்பம் சுடுவதிலும் எலிஸ் கெட்டிக்காரிதான். அடுப்பில் தாச்சியை வைத்து அதற்கு மேழும் ஒரு நெருப்புச்சட்டி வைத்து அவர் அப்பம் சுடுவது ஒரு தனி ஸ்டைல். எலிஸ் நோனாவிற்கு அந்தக்காலத்தில் சண்டியர்களோடுதான் சினேகமாம். பொலிஸாருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு சண்டியர்களுக்கு எலிஸ்தான் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து வந்தார் என்கிறார்கள்.

இப்படியான ஒரு'கெரக்டர்' நாற்பதாண்டுகளுக்கு பிறகு அந்த ஊருக்கு வருகிறார் என்பது பரபரப்பான விஷயமாகத்தானே இருக்க வேண்டும்!. சந்திராவிற்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. தன் தாயை காணும் சந்தோசத்தில் சந்திரா தூக்கத்தை தொலைத்திருந்தார். காலைப்பொழுதானதும் கம்பஹாவிலிருந்து புறப்பட்டு வந்த அந்த வேன் றைகமையில் வந்து நின்றது. எலிஸ் நோனாவின் உறவினர்கள் அவரை அழைத்து வந்திருந்தார்கள். ராஜகம்பீரத்தோடு மன்னைக்கத்தியுடன் உலா வந்த அந்த எலிஸ் நோனாவை காணவில்லை. நாலடி உயரத்தில் எழும்பில் சதை ஒட்டிக்கொண்டிருக்க கையில் தடியுடன் கூன் வளைந்த முதுகுடன் எலிஸ் நோனா வேனை விட்டு கீழே இறங்கினார். தாயை கண்ட மகள் சந்திரா எலிஸ் நோனாவின் காலை பிடித்துக்கொண்டு கதறினார். அவர் போட்ட சத்தம் அந்த ஊரையே கூட்டியது. எலிஸ் நோனாவை பார்க்கும் ஆவலில் பலர் முண்டியடித்துக்கெண்டிருந்தார்கள். தாய் சிங்களத்தில் பேசும்போதும் அதை விளங்கி பதில் சொல்ல முடியாமல் சந்திரா தவித்தது அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இருவரும் முகபாவங்களில் தமது அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நாற்பத்தைந்து ஆண்டு காலமாக பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும்..!

எலிஸ் நோனாவிற்கு வயது போயிருந்தாலும் அவரது அந்த மிரட்டும் குரல் தொனி இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ஆச்சி இப்பவும் சண்டி தான் என்று அவரை அழைத்து வந்தவர்கள் கூறினார்கள். பிறகு எலிஸ் நோனா தனது மகளை சில நாட்கள் வந்து தம்முடன் தங்கும்படி அழைக்க, சந்திராவும் தனது தாயுடன் கம்பஹாவுக்கு சென்றார். அங்கே தனது உறவினர்களுடனும் தாயுடனும் ஒரு வாரத்தை கழித்துவிட்டு திரும்பியிருக்கிறார். இப்போது சந்திரா ஓரளவுக்கு சிங்களம் பேசுகிறார்.

“நான் சின்ன வயதில் கம்பஹாவில் தான் இருந்தேன். அங்கே உள்ள ஒரு சிங்கள ஆரம்ப பாடசாலையில் தான் படித்தேன். எனது பாட்டி சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். அவருடன் காலை மூன்று மணிக்கே காய்கறி கூடையை தூக்கிக்கொண்டு சந்தைக்கு புறப்பட்டுவிடுவேன். பாட்டி பெரிய தீப்பந்தத்துடன் முன்னால் செல்ல நான் பின்னால் கூடையை தலையில் வைத்து தூக்கிச்செல்வேன். ஒரு நாள் எனது சின்னம்மா வீட்டில் இருந்து ஒரு பத்து ரூபா நோட்டை திருட்டுத்தனமாக எடுத்து வந்து எனது நண்பிகளுக்கு வளையல், இனிப்பு போன்ற பொருட்களை வாங்கிக்கொடுத்து விட்டு மிச்சமிருந்த ஆறு ரூபாவை எனது பாடப்புத்தகத்தில் வைத்துவிட்டேன். இதை கண்டுவிட்ட எனது சின்னம்மா என்னை அடி பின்னியெடுத்துவிட்டார். வலி தாங்காமல் எனது பாட்டி வீட்டிற்கு ஓடினேன். நான் எவ்வளவு பணம் எடுத்தேன் என்பது எனக்கு தெரியாது. அதனால் எனது பாட்டி அவரிடம் இருந்த பணத்தையெல்லாம் தரையில் போட்டு இதில் எந்த பணத்தை எடுத்தாய் என்று கேட்டு அடித்தார்.
தாய்,மகள்,மருமகன்

பிறகு என் அம்மாவை வரச்சொல்லி கடிதம் போட்டார்கள். இங்கிரியாவிலிருந்து அம்மா வந்தவுடன் நானும் அம்மாவுடனேயே புறப்பட்டு சென்றுவிட்டேன” என்கிறார் சந்திரா. இத்துடன் அவரது கம்பஹா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. “அன்று என் அக்காவுக்கு அப்படி அடி கிடைத்ததினால் தான் அவர் செல்லத்துரைக்கு மனைவியாக கிடைத்தார்.” என்று சிரிக்கிறார் சந்திராவின் சின்னம்மாவின் மகனான சிரிவர்தன.

“அக்கா தான் அந்த நாட்களில் என்னை அவரின் மடியில் அமர வைத்துக்கொண்டு எனக்கு பாட்டு சொல்லித்தருவார்” என்ற சிரிவர்தன இன்னொரு உண்மையையும் எமக்குச்சொன்னார்.

“உங்கள் ஊருக்கு வருவதற்கு எங்களுக்கு அச்சமாகத்தான் இருந்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப்பகுதிக்கு நாங்கள் வந்து ஏதும் ஆபத்தில் மாட்டிக்கொள்வோமா என்று பயந்தது உண்மை தான்.

பிறகு எனது பெரியம்மா (எலிஸ் நோனா) இருக்கும் தைரியத்தில் தான் வந்தோம். வந்த பின்னரேயே தமிழர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது தெரிந்தது. என் பெரியம்மா மீது அவர்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது. நம்மை அரசியல்வாதிகள் தான் பிரித்துவிட்டார்கள”; என்று பெருமூச்சு விட்டார் சிறிவர்தன. நாமும் கம்பஹா ஒரு சிங்கள ஏரியா என்பதால் அங்கு வருவதற்கு ரொம்பவும் யோசித்தது பற்றி அவரிடம் மனம் திறக்கவும் சிரிவர்தன சிரித்தார். ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்களும் சிங்களவர்களும் எவ்வளவு தவறான புரிதலையும் சந்தேகத்தையும் கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா!

தாய்மொழி மற்றும் தாய் நாட்டைப்பிரிந்த சோகம் பற்றி சந்திராவதியிடம் வினவினோம்.

“தமிழ் நாட்டில் நான் வசித்தாலும் எனது மொழி, எனது உறவினர்கள் பற்றிய ஏக்கம் எனக்கு அடிக்கடி வந்து போகும். கடவுளின் கிருபையால் என் தாயையும், தாய் நாட்டையும் பார்க்கவும் என் தாய்மொழியை கேட்கவும் கிடைத்ததை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.” என்றார் சந்திராவதி. தமிழகத்தில் வசித்துவரும் சந்திராவதிக்கு மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள். அவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களாகவே மாறிவிட்டார்களாம். சிங்களம் தெரியாது.
மீண்டும் தமது உறவுகள் இலங்கையில் கிடைத்த சந்தோசத்தில் சந்திராவதியும், இந்தியாவில் தமக்கு புது உறவு கிடைத்து விட்ட சந்தோசத்தில் எலிஸ் நோனாவின் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்கள்.No comments:

Post a Comment