Sunday, November 18, 2012

வானவில்லுடன் பேசிய கவிஞர் பா.விஜய்

"இலங்கைக்கு வந்துப் போவதில் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் கிடையாது"


உரையாடியவர் : மணி ஸ்ரீகாந்தன்

 


போர் ஓய்ந்ததற்கு பின்னர் மீண்டும் தமிழக சினிமா காரார்கள் நம் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். மும்பை சினிமா, கோலிவுட் சினிமா, ஆந்திர சினிமா என்று நம் நாட்டில் படப்பிடிப்பு வேளைகளை தொடங்கியிருக்கும் இந்த பரபரப்பான வேளையில், ஞாபகம், இளைஞன் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இளம் நாயகன் பாடலாசிரியர் பா.விஜய் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். பிரபல தென்னிந்திய இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவின் இயக்கத்தில் தயாராகப்போகும் 'சமர்' படத்தின் படப்பிடிப்பு வேளைகளுக்காகவே சுப்பரமணியம் சிவாவும், பா.விஜய்யும் இலங்கை வந்திருந்தனர். இலங்கையிலும் இந்தியாவிலும் தயாராகப்போகும் இப்படத்தின் இலங்கைக்கான படப்பிடிப்பு பணிகளுக்கு மாஸ் திரைப்படக்கல்லூரி அனுசரணை வழங்கவுள்ளது. மாஸ் திரைப்பட கல்லூரியில் அமர்ந்து ~சமர்| படப்பணிகளில் ஈடுபட்டிருந்த பா.விஜய்யை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்து உரையாடினோம்.

கேள்வி : கலைஞரின் கை வண்ணத்தில் உருவாகப்போவதாக செய்திகளில் உலா வந்த 'தாய்க்காவியம்' தானா இளைஞன் திரைப்படம்?

பதில் : ஆமாம்.. அந்தக்கதையின் வேறொரு வடிவம் தான் இளைஞன். தாய்க்காவியத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து இளைஞனை உருவாக்கினோம்.

கேள்வி : அடுத்த பட வாய்ப்புகள் பற்றி..?

பதில் : எனது அடுத்தப்படம் 'சமர்' அதற்காகத்தான் நானும் இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவும் இலங்கை வந்தோம். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டதோடு படப்பிடிப்புக்கான இடங்களையும் பார்வையிட்டோம். ரொம்பவும் திருப்தியாக இருக்கிறது. விரைவில் 'சமர்' படத்திற்கான படப்பிடிப்பை இங்கே தொடங்குவோம்.

கேள்வி : கலைஞரின் எழுத்தில் இளைஞனில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்..?

பதில் : அது பெரிய பாக்கியம். தமிழின் மிகப்பெரிய அடையாளமாக அங்கீகாரமாக இருக்கக்கூடிய தி.மு.க தலைவர் கலைஞரின் வசனத்தில் நடித்தது எனக்குக்கிடைத்த பெரும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். அவரோடு தொடர்பு கிடைப்பது என்பதே தமிழ் உணர்வாளர்களுக்கு பெரிய பாக்கியம். ஆனால் எனக்கு அதையும் விட அவரோடு நெருங்கி பழகி, அவரின் கதை வசனத்தில் நடித்தது என் மூதாதையர்கள் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.

கேள்வி : இளைஞனைப்பார்த்த கலைஞர் என்ன சொன்னார்..?

பதில் : அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவரின் வசனத்தில் உருவான படங்களில் இளைஞன் தான் மிகப்பிரமாண்டமான படைப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது. அது தலைவருக்கு மிகவும் மகிழ்ச்சியான விடயம் தான்.

கேள்வி : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. நீங்களோ கலைஞரின் விழா மேடைகளில் அவரைப்புகழ்ந்து வாழ்த்துப்பாடியவர். கலைஞரின் வசனத்திலும் நடித்திருக்கிறீர்கள்.  இனி உங்களைப்போன்றவர்களின் கதி..?

பதில் : எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நான் திரைத்துறையைச்சார்ந்த ஒரு கலைஞன். நான் ஒரு அரசியல் வாதி அல்ல. எந்தவொரு அரசியல் மேடையிலும் நான் பேசியதில்லை. அரசியல்வாதியாக இருந்திருந்தால் எதிர்க்கட்சி ஆளாகப் பார்க்கப்பட்டிருப்பேன். பொதுவாக திரைத்துறை சார்ந்தவர்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதில்லை. ஆனால் நான் கலைஞரின் தீவிரமான அபிமானி. அது இன்றைக்கு மட்டுமன்றி இனி வரும். காலத்திலும் தொடரும். குறிப்பாக தமிழ் படைப்பாளர்கள், கலைஞர்கள் என்றால் கட்டாயம் திராவிடக்கழகத்தின் பாதிப்பு இருக்கும். அப்படி பாதிப்பில்லாமல் எந்த ஒரு கலைஞனும் உருவாகிவிட முடியாது. அந்த திராவிடக்கழகத்தின் முக்கியமானவர்களில் கடைசியாக இருப்பவரும் கலைஞர்தான். அவரை மறக்க முடியுமா.. அவர் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர்தான் எனக்கு தலைவர்.

கேள்வி : தமிழ் திரையுலகை கலைஞரின் குடும்பம் ஆக்கிரமித்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே..?

பதில் : எனக்குத்தெரிய, என் ஆழ் மனதின் அடித்தளத்தில் இருக்கிற உண்மை என்னவென்றால் அப்படியொரு ஆக்கிரமிப்பு அங்கு நடக்கவில்லை என்பது தான். நான் நடித்த இளைஞனை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து தமிழகம் முழுவதும் வெளியிட்டார். ஆனால் எந்த இடத்திலும் கலைஞரின் பெயரையோ, அரசியல் செல்வாக்கையோ அவர்கள் பயன்படுத்தவில்லை. இது என் கண்கூடாக பார்த்த உண்மை. நாங்கள் எதிர்ப்பார்த்த தியேட்டர்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் எந்த அழுத்தத்தையோ, அதிகாரத்தையோ செலுத்தி தியேட்டர்களை கேட்கவில்லையே. நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று நான் தான் புலம்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் நல்ல படங்களை வாங்கவும் வெளியிடவும் முன்வந்தார்கள். குறிப்பாக ~மைனா| என்கிற ஒரு அழகிய படத்தை பெரிய வெற்றிப்படமாகவும் மாற்றிக்காட்டினார்கள்.

இப்படியானவர்கள் எங்கிருந்து வந்தால் என்ன.. நாம் அவர்களை வரவேற்கத்தான் வேண்டும். அதுதான் ஒரு துறைக்கு வளர்ச்சியாகவும் அமையும்.

கேள்வி : சசிகலாவின் குடும்ப வாரிசும், விஜய்காந்தின் வாரிசும் திரையுலகிற்கு வரப்போகிறார்களாமே..?

பதில் : அது பற்றி எனக்கு தெரியாது.. அப்படி வந்தால் அவர்களை வரவேற்கத்தான் வேண்டும். திறமையானவர்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது. திறமை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஜெயிப்பார்கள். மக்கள் ஒரு நடிகனின் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டு படம் பார்க்க வருவதில்லை. வருபவர்கள் நல்ல படங்களில் நடித்தாலும் தயாரித்தாலும் அதைக் கை தட்டி ஆரவாரத்தோடு ஏற்றுக்கொள்ள தமிழ் நாட்டு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். எனக்கெல்லாம் என்ன குடும்ப பின்னணி இருக்கின்றது..? ஒன்றும் கிடையாது.

கேள்வி : சீமானிடம் அனுமதி வாங்கிக்கொண்டா இலங்கைக்கு வந்தீர்கள்..?

பதில் : யாரிடமும் அனுமதி வாங்கிக்கொண்டு வரும் அவசியம் யாருக்கும் இல்லை. ஒரு நேரத்தில் அப்படியொரு பிரச்சினை இருந்தது. இப்போது இங்கே நிலைமை சகஜமாகிவிட்டது.

நானும் இங்கே நடந்த ஒரு கவியரங்கிலும் பங்கு கொண்டேன். எப்போதும் வரலாம், போகலாம், மற்ற படி யாரும் இலங்கைக்கு தமிழர்களை சந்திக்க போகக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்க முடியாது.

கேள்வி : நடிகன், கவிஞன் இவ்விரண்டில் நீங்கள் விரும்புவது?

பதில் : கவிஞனாகவிருப்பதை தான் நான் விரும்புகிறேன். நடிகன் என்பது இன்னொரு பரிமானம். அதிலும் ஒரு முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். கலையை நான் அதிகம் நேசிப்பதால் நடிப்பு எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. ஹாரீஸ் ஜெயராஜ்ஜின் மெட்டில் ஏழாம் அறிவு படத்திற்கான பாட்டை இங்கு வைத்து தான் எழுதினேன்.

No comments:

Post a Comment