Wednesday, November 14, 2012

தமிழகத்தின் மிகப் பெரும் மாட்டுச் சந்தை நடைபெறும் பொய்கை

நேரடி ரிப்போர்ட்: மணி ஸ்ரீகாந்தன்
 
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்றால் அது மாடுகள் தான். மாடுகள் இல்லாமல் பொங்கலே கிடையாது. மாடு என்றால் செல்வம் என்று பொருள். அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் கால்நடைகள் இருந்தால் அது செல்வச் செழிப்பான குடும்பம் என்று பொருள். வாக்கான குடும்பம் என்றும் சொல்லலாம். பசுவதை இந்து சமூகத்தில் தடைசெய்யப்பட்ட காரியம் என்றும் மாடு கடவுளின் வாகனம் என்றும் நம் முன்னோர்கள் சொன்னது ஒரு காரணத்திற்காகத்தான், ஏனென்றால் மாட்டில் இருந்து உபயம், பால், மோர், தயிர், நெய், வெண்ணெய், சாணம் எனப் பல வாழ்க்கைக்கு அவசியமான பல பொருட்களைப் பெற்றுக் கொள்கிறோம் இது தவிர மாட்டின் சானம் எரிபொருளாகவும் (வரட்டி) பயன்படுத்தப்படுகிறது. விபூதி தயாரிக்கப்படுவதும் சாணத்தில் இருந்துதான் இறந்தால் அதன் தோல் மேளமாகிறது. இத்தனை சிறப்புக்களை கொண்ட ஒரு மாடு அள்ள அள்ள செல்வம் குறையாத அட்சய பாத்திரமாகக் கருதப்படுவதால் தான் இந்துக்கள் அதை பூஜிக்கின்றனர்.

நம் அன்டை  நாடான தமிழகத்தில் மாட்டின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பொங்கல் விழாவின் நாயகனான மாட்டை அடக்குவதையே வீரவிளையாட்டாக தமிழர்கள் கருதுகிறார்கள். எனவே தமிழர் வாழ்வில் மாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

காய்கறி சந்தை, வீட்டுத்தளப்பாட சந்தை பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். மாட்டுசந்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறர்களா? உலகத்திலேயே மாடுகளுக்கான சந்தை இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழகத்தில் வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் இந்த மாட்டுச்சந்தைகள் நடைபெற்றாலும் பொய்கைதான் மிகப்பெரிய மாட்டுச் சந்தை நடைபெறும் இடம்.

சென்னையிலிருந்து 140 கிலோமீட்டர் பயனித்தால் இந்த பொய்கை சந்தையை அடையலாம். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மட்டுமே மாட்டு சந்தை நடைபெறுகிறது.

பெங்களுர் - சென்னை பிரதான நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த 'பொய்கை'சந்தை அமைந்திருக்கிறது. சந்தையின் நுழைவாயிலுக்கு அருகில் பழமையான முத்தயாலயம்மன் கோயில் ராஜகோபுரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சந்தை தொடங்கிவிடுகிறது. பொய்கையைச் சுற்றியுள்ள ஐநூறுக்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாடுகளுடன் வியாபாரிகள் வந்து விடுகிறார்கள். பெரிய வியாபாரிகள் மாடுகளை லொறிகளில் ஏற்றி வந்து இறங்குகிறார்கள். சிறிய வியாபாரிகள் கால்நடையாகவே மாடுகளை ஓட்டி வருகிறார்கள். தூர இடங்களில் இருந்து வரும் சிலர் நள்ளிரவே மாடுகளுடன் பொய்கைக்கு நடந்து வந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சந்தையை வந்தடைந்து விடுவார்கள்.

இந்த பொய்கை சந்தையை நேரில் பார்த்து தகவல்களைக் கறப்பதற்காக ஒரு அதிகாலை வேளையில் சந்தைக்குள் நுழைந்தோம். சந்தையின் இரண்டு பக்கங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் அணிவகுத்து நிற்க மாட்டுச் சாணமும், மூத்திரமும் வழியெல்லாம் கொட்டிக்கிடக்க கொஞ்சம் நிதானமாகவே காலை எடுத்து வைத்து நடந்தோம்.

தமிழகத்தில் இந்தப் 'பொய்கை'சந்தை மிகவும் தொன்மையானதாக கருதப்படுகிறது. மன்னர் காலத்திலிருந்தே இது பரம்பரை பரம்பரையாக இயங்கி வருகிறதாம். 'பொய்கை'சந்தையின் விஷேட அம்சம்தான். 'தரு செய்தல்'அதாவது மாட்டின் விலையை வாயில் சொல்வதற்கு பதிலாக வியாபாரியும் வாடிக்கையாளரும் கையில் ஒரு துணித்துண்டைப் போட்டு மற்றவர்களுக்கு தெரியாமல் கைவிரலைப் பிடித்துப் பார்த்து விலையை இங்கே நிர்ணயிக்கிறார்கள். வாயால் விலையைச் சொல்வதில்லை.

இதைத்தான் 'தரு'
 பண்ணுவது என்று சொல்கிறார்கள். இதற்கு ஒரு பரிபாஷையையும் கையாள்கிறார்கள். அர்ப்பா, நர்சு, வாயிதா, என்றச் சொற்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இந்த பரிபாஷையை சேலத்துக்காரர்கள் தான் பிரயோகிக்கிறார்கள். நாம் கடைசி வரை முயற்ச்சி செய்தும் அந்த பரிபாஷைக்கு அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை.

நாம் அந்த சந்தையில் ஒரு மாட்டை வாங்க வேண்டும் என்றால் இடைத் தரகர்கள் ஊடாகவே வியாபரிகளிடம் பேச வேண்டும்.ஏனென்றால் இடைத்தரகர்களுக்குத்தான் அந்த கைமொழி தெரியும். வியாபாரம் வெற்றிகரமாக முடிந்தால் இடைத்தரகர்களுக்கு ஒரு தொகையை நாம் கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் அவர் எவ்வளவு கமிஷன் வைத்துக் கொள்கிறார் என்பது எவருக்கும் தெரியாது. மாடு பிடிக்க வருபவர்கள் மாட்டின் பல்லைப் பார்க்கிறார்கள், மாட்டின் நெற்றியை பார்ப்பதோடு எத்தனை சுழி, பால் எவ்வளவு கறக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள். நமக்கு ஒன்றும் புரியவில்லை அந்தத் தொழில் இரகஷியத்தை கண்டுபிடிக்க நாம் மேற்கொண்ட ஒரு முயற்சியாக சந்தையின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த முதியவர் ஒருவரை அனுகினோம். அவர் பெயர் சின்னக்குழந்தை.

"நான் ரொம்ப காலமாக இந்த மாடு விற்கும் புரோக்கர் தொழிலை செய்து வருகிறேன். விரலுக்கு ஆயிரம் ரூபா என்பதுதான் கணக்கு. அதுக்குமேல சொல்ல முடியாது, இதெல்லாம் தொழில் இரகசியம். விற்கிற மாடு விற்கும் விற்காதது ஊருக்கு போகும்" என்ற சின்னக் குழந்தையிடமிருந்து வேறு எந்த பதிலும் உருப்படியாக வரவில்லை. மாட்டுச்சந்தையில் மாட்டுக்குத் தேவையான கயிறுகள், மணி, மாலை உள்ளிட்ட மாட்டிற்கான அலங்கார பொருட்களும் விற்பனைக்கு கிடைக்கிறது. சீனு என்பவர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அங்கே அலங்கார பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். முப்பது ரூபாயிலிருந்து முந்நூறு ரூபா வரைக்கும் மாட்டிற்கான மணிகள், கயிறுகள் இவரிடம் கிடைக்கிறது. அவருக்கு கைமொழி இரகசியம் பெரிதாகத் தெரியவில்லை.

"கணு கணக்கு பார்க்கிறதுங்க விரலின் ஒரு முடிச்சி வரை ஒரு விலைங்க" என்றவர் பக்கத்தில் நின்றவனை சுட்டிக்காட்டி அவரிடம் கேளுங்க சொல்லுவார் என்றார். அவர் சுட்டிக்காட்டிய நபர் ஒரு மாட்டோடு நின்றுக் கொண்டிருந்தார். அவர் பெயர் முத்தியார். ஆம்பூரைச் சேர்ந்தவராம். அவரிடம் மாடு பற்றிய சில விசயங்களை வினவினோம்.
நன்றி: வண்ண வானவில்
ஜனவரி-2012
"இந்த மாடு காலையில் 4 லீட்டர் மாலையில் 3 லீட்டரும் கறக்கும். அதைத்தான் பால் ஏழு என்று சொல்கிறோம். நீங்க வெளியூரில் இருந்து வருவதால் சொல்றேன். இந்த மாட்டோட விலை பதினேழாயிரம் சொல்றேன். முடியலனா கடைசியா பதினைந்தாயிரத்திற்கு கொடுத்திடுவேன்" என்றார் அவர் சொன்னது இந்திய நாணயத்தில் நம் நாட்டு பெறுமதிக்கு கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாய். முத்தியார் எம்முடன் பேசிக்கொண்டிருப்பதை அவதானித்த பக்கத்தில் நின்ற சார்லிபாய் என்பவர் சில விசயங்களை சொன்னார். "மாடு வாங்கவரும் தரகர்கள் டபுள் இருக்கா, சுழி இருக்கா என்று கேட்பார்கள். மாட்டிற்கு எத்தனை சுழி என்பதுதான் அதன் பொருள். மாடு வாங்கும் போது சுழியைப் பார்த்துதான் வாங்குவார்கள். மாட்டின் நடு முதுகில் இருக்கும் சுழிதான் கொடமலை கொடை சுழி. இது ரொம்பவும் ராசியானது கொடைமலை கொடை சுழி இருக்கும் மாட்டை வீட்டில் வளர்த்தால் செல்வம் கொட்டுமாம். மாட்டின் நெற்றியில் இருந்தால் அதற்கு லச்சுமி சுழி என்றும் பெயர். இப்படிப்பட்ட லட்சணங்கள் மாட்டுக்கு இருக்கும் பட்சத்தில் அந்த மாடு அதிக விலைக்கு போகும்.

 இதுதவிர தாவணி சுழி, வளங்க சுழி முன்காலில் இருக்கும், கூட்டுஞ்சுழி, வாலில் இருக்கும். தொடப்பஞ்சுழி சிறப்பம்சமாகும். மாட்டின் வயதை பல்லைப்பார்த்து தான் கண்டுப்பிடிப்போம். இரண்டு பல் இருந்தால் இரண்டு வயது, நாலு பல் இருந்தால் நாலு வயது என்ற கணக்கில் தான் மாட்டின் வயதை பார்ப்போம்" என்று கூறியவர் கைமொழி இரகசியத்தைப் பற்றியும் பேசினார். கை மொழியில் கைவிரல் ஒன்று இரண்டாயிரம் என்று பொருள். ஒரு விரலைப் பிடித்தால் இரண்டாயிரம். புரோக்கர் வியாபாரியின் ஐந்து விரல்களையும் ஒரு சேரப் பிடித்தால், பத்தாயிரம் என்று பொருள்.

வாடிக்கையாளர் மாட்டை பத்தாயிரத்துக்கு விலை பேசுகிறார் என்பதை உரிமையாளர் புரிந்து கொள்வார். அவர் அதற்கு உடன்படவில்லை என்றால் புரோக்கர் மணிக்கட்டையும் சேர்த்துப் பிடிப்பார். 15 ஆயிரம் என்பது அதன் பொருப்பு. சிலர் கை விரலில் ஒவ்வொரு முடிச்சுக்கும் ஆயிரம் என்று விலை நிர்ணயித்து இருப்பார்கள். அதை கணு கணக்கு என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு உண்மையைச் சொன்ன சார்லிபாய், இந்தக் கணக்கு சொன்னா சொன்னது தான், பொய்கிடையாது என்றார். அதற்கு நாம் "அப்போ ஏங்க  'பொய் கை' என்று இந்த ஊரைச் சொல்றாங்க" என்றோம். சார்லிபாய் சிரிக்க நாம் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.

1 comment:

  1. Interesting Article.. நல்லாயிருக்கு

    ஆட்டிக்கல் லேபல் பண்ணுவதில் கொஞ்சம் மாற்றம் தேவை..

    ReplyDelete