Tuesday, November 13, 2012

ஒரு நாள் ஒரு பொழுது....

நெடுந்தீவின் பூவரசம் பேய்


-மணிஸ்ரீகாந்தன்


நம் நாட்டைச் சேர்ந்த தமிழ்த்திரை பிரபலங்களில் ஒருவர் ஜெயபாலன். இவர் தற்போது தமிழக திரையுலகில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 'ஆடுகளம்' திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

"நான் சின்ன வயசுல ரொம்பவும் குறும்பு காரணாக இருந்திருக்கிறேன். எனது பள்ளி ஆசிரியர் என்னை 'எமனை பச்சடி போட்ட எமன்' என்றுதான் அழைப்பார். 'ஒரு அணு குண்டை பெத்து வச்சிருக்கேன் இது என்னைக்கு வெடிச்சு உலகத்தை அழிக்கப் போகுதோ' என்று எனது அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்வார்.நாங்கள் வசித்த உடுவில் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி நாம் இடம்பெயந்து நெடுந்தீவில் தங்கியிருந்த அந்த நாட்கள் ரொம்பவும் இனிமையான நாட்கள். எனது வீட்டிற்கு முன்னால் சில மீட்டர்கள் தூரத்தில் ஒரு பொதுக் கிணறு இருந்தது. காலையிலிருந்து மாலைவரைக்கும் அந்தக் கிணற்றில் பெண்கள் கூடி நின்று தண்ணீரை அள்ளி குடங்களில் சுமந்து செல்வார்கள். மாலை ஆறு மணியாகி விட்டால் அந்தக் கிணற்றுப் பக்கம் எவரையுமே காணமுடியாது கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு பூவரசம் மரம் அடர்ந்த கிளைப் பரப்பி உயாந்து நின்றது. அந்த மரத்தை' பேய் பூவரசன்' மரம் என்றுதான் அழைப்பார்கள். நெடுந்தீவைச் சேர்ந்த மந்திரக்காரர்கள் பேய்களை பிடித்து இந்த மரத்தில் தான் கட்டி வைப்பார்கள் என்ற கதை அந்த ஊரில் நிலவி வந்தது. அது உண்மையும் கூடத்தான். பேய் பிடித்த பெண்களை ஆட்டுவிக்கும் மாந்திரீகர்கள் அந்த பெண்களின் தலைமயிரை அறுத்து வந்து இந்த பூவரசன் மரக் கிளைகளில் சுற்றி வைப்பது வழக்கம். எனக்கு சின்ன வயசிலே பேய் பிசாசு நம்பிக்கை எல்லாம் கிடையாது. ரொம்பவும் தைரியசாலி.அப்போது எனக்கு ஒரு ஆசை வந்தது பூவரசம் மரத்தில் நானும் ஒரு நாள் பேயாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. எனது திட்டத்தின் படி ஒரு நாள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் சேலையை எடுத்து உடுத்திக் கொண்டேன். அம்மாவின் சவுரியையும் எனது தலையோடு வைத்து கட்டிக்கொண்டு வீட்டிற்கு முன்னால் உள்ள பற்றைகளில் பதுங்கி பதுங்கி பூவரசன் மரம் நோக்கி நடந்தேன். மாலை மங்கி கொண்டு வரும் அந்த நேரத்தில் அங்கே ஈ, காக்கை கிடையாது. பொதுக்கிணறும், பூவரசன் மரமும் கறுப்பு நிறத்தில் பூதங்கள் போல என் கண்களுக்கு தெரிந்தது. நான் அதைக் கண்டுக் கொள்ளாதவனாக பூவரசம் மரத்தில் ஏறி படர்ந்த கிளைகளின் மறைவில் மறைந்து காத்திருந்தேன். அப்போது தொலைவில் தேவராப் பாட்டு சத்தம் கேட்டது.

நெடுந்தீவிலுள்ள பிரபல மாந்திரீகர்களில் ஒருவர் சின்னப்ப பரியாரி இவர் எனது அம்மாவின் சித்தப்பா. அவரின் உதவியாளர்தான் அங்கே வந்துக் கொண்டிருந்தார். அவர் பயத்தில்தான் தேவாரப்பாட்டோடு வருகிறார் என்பது எனக்கு புரிந்து நானும் எனது வேலையைக் காட்ட தயாரானேன். அவர் மரத்தின் அருகில் வந்ததும் மரத்தின் கிளையை ஆட்டினேன். அப்போது அந்த மனிதரின் தேவாரப்பாட்டு சத்தம் இன்னும பலமாக கேட்டது. அவரின் நடையின் வேகம் அதிகரித்தது சிறிது தூரம் சென்றவர் பூவரசம் மரத்தை திறும்பி பார்த்தார். அப்போது நான் எனது உருவத்தை அவருக்கு காட்டி பலமாக சிரித்தேன். அதை பார்த்த அவர் எடுத்தார் ஓட்டம்! தாறுமாறாக ஓடி பல இடங்களில் விழுந்து, எழும்பி ஓடினார். அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகவும், பயமாகவும் ஆகிவிட்டது. எங்கே அவருக்கு ஏதாவது ஆகி நான் மாட்டிக் கொள்வேனோ என்று பயந்தேன். உடனே மரத்திலிருந்து இறங்கி சேலை, தலை மயிரை அவிழ்த்து சுருட்டி கையில் எடுத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

அன்று நள்ளிரவு அந்த மனிதரின் வீட்டில் உடுக்கு சத்தம் கேட்டது. 'சின்னப்ப பரியாரியின் உதவியாளருக்கே பேய் பிடித்து விட்டதாகவும் இனி என்ன நடக்குமோ' என்றும் ஊர் மக்கள் பேசிக் கொண்டதோடு இந்தப் பேய்களிடமிருந்து நாம எப்படித்தான் தப்பிப் பிழைக்கப் போகிறோமோ என்று அங்கலாய்த்தார்கள்.

இதைக் கேட்டு எனக்கு ஒரே ஆனந்தம்! இரண்டு நாள் கழித்து எனது உறவுக்காரரும் மந்திரவாதியுமான சின்னப்ப பரியாரி எனது வீட்டிற்கு வந்தார். அவருக்கு எனது அம்மா தேநீர் போட்டுக் கொடுத்தார். தேநீரை பருகிக் கொண்டே எங்கே ஜெயபாலன் என்று கேட்க வீட்டிற்குள் இருந்த நான் வெளியே வந்து என்ன என்று கேட்டேன்.
"வாடா இங்கே! நீதானே அந்த பூவரசம் பேய்?"என்று அதட்டலாகக் கேட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது
"அது நான் இல்ல..." என்று நான் பயத்தில் உலற, " ஒன்றும் பிரச்சினையில்ல... அந்தப் பேயை நான் ஓட்டி விடுகிறேன்," என்று கூறினார். பின்னர் அந்தக் காலத்தில் நெடுந்தீவில் போர்த்துக்கேயரோடு முரண்டு பிடித்து சண்டையிட்ட எனது மூதாதையரான குசுவன் கந்தன் பற்றி கூறியதோடு தமது வம்சத்தில் இப்போது பிறந்திருக்கும் கந்தன் நீதான் என்றார். அந்தக் கதையை கேட்ட பிறகுதான் என் வாழ்க்கை திசை திறும்பியது.

நெடுந்தீவிலுள்ள எனது வீட்டிற்கு பின்னால் 'கந்தன் தரை'என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் தான் 'கந்தன்' வாழ்ந்ததாக கூறுகிறார்கள் என்று தன் இளமைப் பொழுது சுட்டி அனுபவத்தை கூறி முடித்தார் ஜெயபாலன்.


1 comment:

  1. http://jeano0david.blogspot.com/2014/03/normal-0-false-false-false-en-us-x-none_19.html

    ReplyDelete