Monday, November 12, 2012

மக்கள் டி.வி சுகந்தாவுடன் சில நிமிடங்கள்....


"செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்தபோது ஒரு கூட்டமே வெளியே காத்திருந்தது.."


நேரில்: மணி ஸ்ரீகாந்தன்


"தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்த பின்னர் தொழில் ஒன்று வாய்க்காதா? என்று எதிர்பார்த்திருந்தபோது தான் மக்கள் டி.வி. விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். செய்தி வாசிக்க ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்த என் கணவர், ஏன் நீ ஒரு விண்ணப்பம் போடக்கூடாது? டிரை பண்ணித்தான் பாரேன்! என்றார். அவரும் சொல்லிவிட்டாரே, போட்டுத்தான் பார்ப்போமே என்று விண்ணப்பித்தேன்.

ஒரு மாதம் கழிந்து நேர்முகத் தேர்வுக்கு மக்கள் டி.வி. யில் இருந்து அழைப்பு வந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. தேர்வில் நான் தேர்வானேன். இப்போது உலகமே என்னைப் பார்க்கிறது. இது மட்டுமா? வவுனியாவில் இருக்கும் என் அம்மாவும் என்னை மக்கள் வழியாக பார்த்து சந்தோஷப்படுகிறார். எங்கேயோ இருந்த என்னை இப்போது இவ்வளவுக்கு உயர்த்தி வைத்துள்ள மக்கள் டி.விக்கு என் நன்றிகள்" என்று தன்னைப் பற்றி ஒரு குட்டி அறிமுகம் செய்தார் சுகந்தா.

மக்கள் டி.வி. பார்ப்பவர்களுக்கு சுகந்தா அறிமுகமானமுகம். மக்கள் டி.வி. ஒரு வித்தியாசமான டி.வி. ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் சினிமாவைத் தொட்டும் பார்க்காத ஒரு டி.வி. இதில் தமிழகத் தமிழை விழுங்கிச் செல்லும் யாழ்ப்பாண அழகு உச்சரிப்போடு பேசும், செய்தியை வாசிக்கும் சுகந்தாவுக்கு தமிழகத்தில் ஏராளமான விசிறிகள். 'க்கலைஞர் க்கருணாநிதி' என்று யாழ். வாசனையுடன் உச்சரிப்பதை அவர்கள் ரசிக்கிறார்கள்.

சுகந்தா திருமணமானவர். கணவர் பெயர் துஷிதர். ஐந்து வயதில் அபிசாதன் என்ற சுட்டிப் பையனுக்குத் தாய். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகந்தா நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவர். 1996ம் ஆண்டுவரை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த அவர் வவுனியா கன்னியர் மடத்தில் படிப்பைத் தொடந்தார். உயர்தரக் கல்வியை வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் முடித்த அவர் 2006ம் ஆண்டு தன் கணவரோடு தமிழகம் சென்றார். இதுதான் இவர் பற்றிய செயதிச் சுருக்கம்.

தமிழக செய்திவாசிப்பாளர்களில் நிர்மலா பெரியசாமி முதன்மையானவர். அவர் செய்தி வாசிக்கும் பாணியை தமிழகமே உற்றுப் பார்த்தது. அவருக்குப் பின்னர் சுகந்தா உச்சரிக்கும் ஈழத்தமிப் பாணி தமிழக தமிழர்களுக்கு புதுமையாக இருப்பதால் சுகந்தா வாசிக்கும் செய்தியை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களில் செய்தி வாசித்து வருகிறார் சுகந்தா.

"2007ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி நான் மக்கள் தொலைக்காட்சி நிலையத்தில் முதன் முதலாக காலை எட்டு மணிக்கு கேமராவிற்கு முன்பாக அமர்ந்து செய்தி வாசித்தேன். அன்று முதல் நாள் என்பதால் ஒரே படபடப்பாகவும் இருந்தது. செய்தி வாசித்து விட்டு ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்த போது தான் மக்கள் தொலைக்காட்சி நிலையத்தில் கடமையில் இருந்த அனைவரும் நான் செய்தி வாசிப்பதை வேடிக்கைப் பார்க்க ஸ்டூடியோவிற்கு முன்பாகக் கூடியிருப்பதைக் கண்டேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வகையான இன்ப அதிர்ச்சி. நான் செய்தி வாசிப்பதை பார்த்த டாக்டர் ராமதாஸ் அய்யா. ஈழத்தமிழ் தாலாட்டுகிறது என்று கூறியதை அறிந்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்." என்கிறார் சுகந்தா. இலங்கைத் தமிழர்களையும் இலங்கைத் தமிழையும் உதாசீனம் செய்யும் போக்கை மட்டுமே இவ்வளவு காலமாக தமிகத்தின் இயல்பாக நாம் பார்த்து வந்திருக்கிறோம். முதல் தடவையாக மக்கள் டி.வி. யே இலங்கைத் தமிழர்களை அவர்களின் தமிழ் உச்சரிப்புப்’ பாணியைப் பற்றிக் கவலைப்படாமல் வேலைக்குச் சேர்த்துக் கொண்டது. இதற்காக மருத்துவர் ராமதாஸ் ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும், புதுவழி திறந்து விட்டவர் அவர்."மக்கள் டிவியில் நான் தோன்றியதற்குப் பிறகு லண்டன், கனடா உள்ளிட்ட சில டிவி சேனல்களிலிருந்து எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு தறுவதாக அழைப்பு வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். என்னை ஏற்றிவிட்ட மக்கள் டிவியை மறக்க முடியுங்களா?" என்றவர் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்"சாலி கிராமத்திலிருந்து வடபழனி செல்லும் பஸ்சில் ஒரு நாள் மக்கள் டிவி அலுவலகம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது அந்த பஸ் கண்டக்டர் என் அருகே வந்து 'நீ தானேம்மா மக்கள் டிவியில செய்தி வாசிக்கிற? என் பையனுக்கு எட்டு வயதிருக்கும்
நீ வாசிக்கும் தமிழ் அவனுக்கு புரியுதோ என்னவோ ஆனால் நல்லாயிருக்குன்னு சொல்லி டி.வி முன்னாடி உட்கார்ந்து நீ நியுஸ் வாசிக்கும் ஸ்டைலை பார்த்திட்டு இருக்கிறான்' என்றார். இப்படி தமிழகத்தில் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது மக்கள் டி.வி தானே" என்று பெருமிதம் கொள்கிறார் சுகந்தா.

எம்முடன் உரையாடிக்கொண்டிருந்த சுகந்தாவிற்கு திடீரென வவுனியா ஞாபகத்துக்கு வந்து விட்டது. தன் அடாவடித் தோழியுடன் சைக்கில் பயணம் செய்த ஞாபகம். "தோழி சுகிர்தாவுடன் சைக்கிளில் போவதென்றால் எனக்கு ரொம்பப் பயம். என்னை கீழே தள்ளிவிடுகிற மாதிரி சைக்கிளை ஓட்டுவா அன்று ஒரு நாள் வவுனியாவில் சுகிர்தா சைக்கிளில் என்னை ஏறச் சொன்னப்போது நான் மறுத்தேன். ஆனால் அவள் விடவில்லை. ஏதோ சொல்லி சமாதானப்படுத்த நானும் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டேன். கொஞ்ச தூரம் நேராக சைக்கிளை ஓட்டிய சுகிர்தா மீண்டும் தனது சேட்டையை ஆரம்பித்தாள். சைக்கிளை பாதையில் வளைத்து வளைத்து ஓட்டினாள். எனக்கு உடம்பு நடுங்கத் தொடங்கி விட்டது. பிறகு ஒரு வளைவில் இருந்த முற்புதர் பக்கமாக சைக்கிள் போக நம் கதை அவ்வளவுதான் என்று நானும் கத்தி கொண்டு சைக்கிளிலிருந்து கீழே குதித்தேன். விழுந்தது முற்புதரின் மேல். நான் புதரில் இருந்து எழும்பிப் பார்த்த போது சுகிர்தா சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாள். முற்கள் குத்தியதில் என் கை, கால்களில் கீறல் காயங்கள். சுகிர்தாவை வாய்க்கு வந்தபடி திட்டினேன். அதற்குப் பிறகு நான் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொண்டேன். பின்னர் என் அம்மாவை சைக்கிளின் பின்னால் அமரச் சொல்லி நான் சைக்கிள் ஓட்டும் போது, தோழி சுகிர்தாவின் ஞாபகம் வர நானும் சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டினேன். அப்போது அம்மா "உனக்கென்ன விசரே! பாதையைப் பார்த்து ஓட்டு. இல்ல என்ன கீழே இறக்கி விடு... நான் நடந்து வர்ரேன்"என்று என்னைத் திட்டத் தொடங்கினார். எனக்கு உலகம் உருண்டையானது என்பது அப்போதுதான் புரிந்தது." என்று தன் பள்ளி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சுகந்தா,

தன் வளர்ச்சிக்கு நித்தமும் ஊக்கமளிப்பவர்களாக மக்கள் டி.வி.யின் இயக்குநர்களையும் தன்னுடன் பணியாற்றுபவர்களையும்; நன்றியுடன் குறிப்பிடுகிறார். வாழ்க, வளர்க என வாழ்த்தி விடை பெற்றோம். 

No comments:

Post a Comment