Sunday, November 11, 2012

குமாரிக்கு உதவுங்கள்.....

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள்

ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும்.        

 
மணி  ஸ்ரீகாந்தன்

முகாம் கொடுப்பனவுகள்


குடும்பத்தலைவனுக்கு 400 ரூபா
குடும்பத்தலைவிக்கு 200 ரூபா
குழந்தைக்கு 100 ரூபா
பத்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 150
முதியோர் பென்ஷன் 1000 ரூபா
அரிசி ஒரு கிலோ 55பைசா

இருந்தாலும் சொந்த மண்ணில் வாழும் சுகமே தனி.. இலங்கையில் சொந்த மண்ணில் காலத்தை கழிக்கவே நானும் என் கணவரும் விரும்புகிறோம்.           
தன் எட்டு வயதில் வவுனியா சாந்த சோலையை விட்டு பெரியம்மாவுடன் படகேறி தமிழகம் சென்ற குமாரிக்கு வவுனியாவுக்கு திரும்ப வேண்டுமாம். இவரது சொந்த ஊர் வவுனியா சம்மன்சோலை கருப்பிஞ்ஞான் குளம். அப்பா செல்லத்துரை, அம்மா லட்சுமி, அக்கா பரமேஸ்வரி, நந்தினி, தம்பி ஆனந்தராஜ் ஆகியோரின் நலன் விசாரிக்க ஆவலாக உள்ளார். திரும்பி வந்து அவர்களை காண விரும்புகிறார். இதை வாசிக்கும் குடும்பத்தவர் வானவில்லுடன் தொடர்பு கொள்ளலாம்.

வேலூர் முகாம் ஒரு தோற்றம்

முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள நம் தமிழ் உறவுகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் திரும்பி வந்திருக்கிறார்கள். மேலும் சிலர் திரும்பி வரவிரும்பினாலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். முன்னர் மலையகத்தில் இருந்து தமிழகம் (தாயகம்) சென்றவர்களுக்கு அங்குள்ள உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா என்ற ஐயம் இருந்தது. தமிழகத்தில் அகதிகளாக உள்ள ஆனால் திரும்பி வரவிரும்புகிறவர்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. சிலர் திரும்பிவர விரும்பினாலும் வளர்ந்து அங்கேயே வேர்விட்ட பிள்ளைகள் இலங்கை திரும்ப விரும்பாத நிலையும் உள்ளது.

தண்ணீர் குடத்தோடு முகாம் பெண்கள்
அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் முகாம்களில் எப்படி வாழ்கிறார்கள். என்பதை அறிய சென்னைக்கு அடுத்துள்ள வேலூர் மேல் மொனவூர் அகதிகள் முகாமிற்கு ஒரு விசிட் அடித்தோம்.

இலங்கை தமிழர் புனர்வாழ்வு முகாம் என்ற அறிவிப்பு பலகையை கடந்து உள்ளே சென்றபோது ஈழ மண்ணில் கால் பதித்த ஒரு உணர்வு தமிழகத்தில் ஏற்பட்டது. காற்றில் கலந்து எம் மூக்கை துளைத்த அந்த பாண் பேக்கரியின் வாசனையை நுகர்ந்து கொண்டே உள்ளே நடந்தோம்.

பெரிய சிறிய வீடுகள் என்று கட்டப்பட்டிருந்த சீமெந்து வீடுகள் நம்மை வரவேற்றன. ஆட்டோ பைக் என்று இளைஞர்கள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தார்கள். வாடகை வேன். சேவை என்று அனைத்து வசதிகளையும் ஈழத்தமிழர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். பார்க்க குட்டிக்கிராமம்  போல இருக்கிறது. இதனால் அது அகதி முகாமா என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமும் எழுந்தது. தமிழகத்தின் சில கிராமங்களோடு ஒப்பிடும்போது இந்த அகதிமுகாம் எவ்வளவோ மேல் என்று தான் கூற வேணடும்.
குமாரி
ஒரு வீட்டை எட்டிப்பார்த்தோம். அங்கே கலைஞர் கொடுத்த இலவச டி.வி யில் சன் டிவி ஜோராக ஓடிக்கொண்டிருந்தது. மெகா சீரியலில் மூழ்க்கியிருந்த அந்த குடும்பப்பெண், "இதுவெல்லாம் எங்களுக்கு அரசாங்கம் கொடுத்தது. மின்சாரமும் இலவசமாக தர்றாங்க. ஆரம்பத்தில் இந்த முகாமில் எல்லா வீடுகளும் குடிசைகளாகத்தான் இருந்தன. இப்போது தான் வெளிநாட்டு டிரஸ்டுகள் சீமெந்து வீடுக்கட்டி தருகிறாங்க. இது தவிர மாதம் தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்பத்தலைவனுக்கு 400 ரூபாவும் குடும்பத்தலைவிக்கு 200 ரூபாவும் குழந்தைகளுக்கு 100 ரூபாவும் தருகிறாங்க. பத்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 150 ரூபாவும் முதியோர் பென்ஷனாக 1000 ரூபாவும் கிடைக்கிறது. கூட்டுறவு கடையில் அரிசி ஒரு
பேபியம்மாள்
கிலோ 55 பைசாவிற்கு வழங்கி வருகிறார்கள். தற்போது அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டதால் இருபது கிலோ அரிசி இலவசமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்" என்ற பேபியம்மா என்ற அந்தப்பெண்மணி? "இங்குள்ள அரசு என்ன தான் எங்களுக்கு சலுகைகள் வழங்கினாலும்; எங்கள் மண்ணில் வாழ்கிற சுகம் இங்கு இல்லை. என் கடைசி காலத்தை என் சொந்த மண்ணிலேயே கழிக்க நானும் என் கணவரும் விரும்புகிறோம். ஆனாலும்; என் பிள்ளைகள் இங்கேயே வாழ்ந்து பழகிவிட்டதால் அவர்களுக்கு இலங்கைக்கு வர விருப்பமில்லை, ஆனாலும் நான் விட மாட்டேன் என் தாய் மண் பற்றிய புரிதலை என் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி சீக்கிறமே நாங்கள் எல்லாரும் தாயகம் வருவோம்" என்று உறுதியாகச் சொன்னார்.

பின்னர் இன்னொருவரைச்சந்தித்தோம். இவர் இந்த முகாமிற்கு எட்டு வயதில் தமது பெரியம்மாவுடன் வந்தவர் குமாரி என்ற பெயர் கொண்ட இவர் தற்போது திருமணம் முடித்து. இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கிறார்.

வேலூர் முகாம்
90ஆம் ஆண்டில் ஒரு நாள் வவுனியாவில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்த போது நான் சாந்தசோலையில் உள்ள எனது பெரியம்மாவின் வீட்டில் இருந்தேன். சண்டையின்போது இடம்பெயர்ந்த மக்களோடு பெரியம்மாவுடன் நானும் புறப்பட்டு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்து விட்டேன்.

என் வீடு வவுனியாவில் சம்மன் சோலை கருப்பிஞ்சான் குளத்தில் இருந்தது. அங்கே எனது அப்பா  செல்லத்துரை, அம்மா லட்சுமி, அக்கா, பரமேஸ்வரி, நந்தினி, தம்பி ஆனந்தராஜ் ஆகியோருடன் குதூகலமாக வாழ்ந்த நான் அவர்களை பிரிந்து வந்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. நான் எங்கே சென்றேன் என்று என் குடும்பத்தாருக்கும் தெரியாது.

முகாமில் ஒரு பெட்டிக்கடை
என்னை அழைத்துவந்த என் பெரியம்மா இங்கே இறந்து விட நான் மட்டும் தனியாளாக நின்று எப்படியோ வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து இன்று கடவுளின் துணையோடு எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது. என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார் குமாரி.

இன்று எனக்குள்ள ஒரே ஆசை எனது தாய் மணணுக்கு திரும்பி சென்று எனது உறவுகளை சந்திக்க வேண்டும் என்பதுதான். என்று குமாரி தன் ஆசையை வெளியிட்டபோது உணர்வுகளை கட்டுப்படுத் முடியாமல் அவர் கண்ணீர் சிந்தத்தொடங்கினார். அவரது வேதனை எமக்குப்புரிந்தது. மண்ணும் உறவும் உயிரோடு கலந்தவை அல்லவா?

முகாமை விட்டு வெளியே வரும்போது வழியில் ஊர்காவற்றுறையை சேர்ந்த வசந்தகுமாரை சந்தித்தோம்.
வசந்தகுமார் தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக 'வட ஆற்காடு மாவட்ட பன்னாட்டு தமிழறிவு மன்ற' அமைப்பாளராகவும் 'சமூக நலத்தொடர்பு மைய' இயக்குனராகவும் பணியாற்றி வருபவர். முப்பதாண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வந்த நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் தமிழரின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வையும் நிம்மதியான வாழ்க்கையையும் அமைத்து கொடுக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.
வேலூர் முகாம்
எனவே இங்குள்ள முகாம்களில் உள்ள அகதிகளையும் தமது தாய் மண்ணுக்கு அழைத்து அவர்களின் சுபீட்சமான வாழ்க்கைக்கு வழியமைத்துக்கொடுப்பார் என்று நம்புகின்றேன் என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார் வசந்தகுமார். முகாமில் நாம் சந்தித்த இலங்கை தமிழரில் பெரும்பாலானோரின் முகாம்களிலும் நமது தாய் நாட்டை எப்போது காண்போம் என்ற ஏக்கம் படிந்திருப்பதை எம்மால் உணர முடிந்தது.

எனினும் அவர்கள் அடுத்ததாக என்ன செய்வது என்பதை தெரியாதவர்களாக உள்ளனர். எமது தூதரகத்துடன் தொடர்புகொள்ளவும் அல்லது தூதரக அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒரு மாய அரசியல் தமிழகத்தில் நிலவுவதை நீங்களும் அறிவீர்கள். இலங்கை பற்றி அவர்கள் அறிந்து வைத்திருக்கும் பல தகவல்கள் பயமுறுத்துவதாகவும் உண்மைக்கு புறம்பானவையாகவும் உள்ளன. எனவே உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டு இலங்கைக்கு திரும்பிவர விரும்பும் நமது சொந்தங்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்க அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.


தொடர்புகளுக்கு- 077 9614611,   0094779614611

No comments:

Post a Comment