Saturday, November 10, 2012

ஒரு நட்சத்திர நத்தார் சந்திப்பு

ஏழைச் சிரிப்பில் இறைவனைக் காணும்

சந்திரசேகரன்


- சந்திப்பு : மணி ஸ்ரீகாந்தன்

யாராவது திருமணத்துக்கு அழைத்தால், பத்து அனாதை சிறுவர்களுடன் வருவேன், சாப்பாடு போடுவீர்களா? என்று கேட்கிறார்.


பழைய காகிதங்களை வாங்கி மறுசுழற்சி மூலம் அப்பியாச கொப்பிகளாக்கி ஏழை மாணவர்களுக்கு விநியோகிக்கிறார்.


திருமணத்தன்று இரத்ததானம் செய்யுங்கள் என்கிறார்.


ஹோட்டல்களில் இரவில் மீதமாகும் உணவுகளை சேரிப்புற ஏழைகளுக்கு கொடுக்கிறார்.


அன்னை திரேசா ஒருமுறை ஒரு தனவந்தரின் வீட்டிற்குச் சென்று ஏழை மக்களுக்காக உதவி கேட்டு வலது கையை நீட்டியிருக்கிறார். அந்த தனவந்தரோ ஆத்திரத்தில் எச்சிலை காறி திரேசாவின் வலது கையில் துப்பியிருக்கிறார். அதற்கு அன்னை பொறுமையாக தனது இடதுகையை நீட்டி எனக்கு தரவேண்டியதை நீ தந்துவிட்டாய் அந்த ஏழைகளுக்கு தரவேண்டியதை இந்தக் கையால் தா! என்று கேட்டாராம். இப்படி உலகம் முழுவதும் அவமானங்களையும், துன்பங்களைளயும் சகித்துக்கொண்டு மக்கள் பணிக்காக சேவையாற்றும் பல நல்ல உள்ளங்களைப் பற்றி நாம் தினமும் கேள்விப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். அவர்களால் தான் இந்த உலகம் வாழ்கிறது. இந்த வகையில் உதவும் கரங்கள் இரா. சந்திரசேகரனையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவர் ஒரு பெரியாரிஸ்ட். இறைவன் வேண்டாம் ஏழை சிரித்தால் போதும் என கருதுபவர். தன்நலம் கருதாது பிறருக்கு உதவிக்கொண்டே இருக்கிறார் இவர். 'உன்னிடம் இரண்டு ஆடை இருந்தால் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு' என்ற இயேசு அவதரித்த மாதம் என்ற வகையில் இந்த மார்கழியில் அதே பார்வை கொண்ட ஒரு நாத்திகவாதியை இங்கே சந்திப்பது பொருத்தமாகத்தான் அமைகிறது.

தமிழகத்தில் உதவும் உள்ளங்கள் சந்திரசேகரனைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது, அந்தளவுக்கு பிரபலமான மனிதர். வேலூர் வெள்ளமண்டித்தெருவில் தான் இவரின் அலுவலகம் அமைந்திருக்கிறது. அதை அலுவலகம் என்று சொல்வதைவிட பழைய பொருட்களை சேகரிக்கும் போத்தல்கடை என்று சொன்னால்தான் பொருந்தும். ஏனெனில் வாசலை அடைத்துக்கிடக்கின்றன பழைய இரும்பு, பேப்பர், புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் என்று பல பொருட்கள் மலையாகக் குவிந்துகிடக்கின்றன. இவற்றைத் தாண்டிச் சென்றால்தான் உதவும் உள்ளங்கள் சந்திரசேகரனை சந்திக்கலாம்.

உதவும் உள்ளங்கள் அலுவலகத்தில் உள்ள மற்றொரு சிறப்பு அங்குள்ள பணியாளர்கள் ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழில் பேசுவதுதான். பணியாளர்கள் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கினோம், நரைத்தலை ம.பொ.சி. மீசையுடன் அந்த உதவும் மனிதர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றியும் தட்டுமுட்டு சாமான்கள் அவரை நெருங்க விடாமல் எம்மைத் தடுத்தது. பணியாளர்களின் உதவியோடு அவற்றை அகற்றியபடி அவரின் அருகில் சென்று அமர்ந்தோம். சந்திரசேகரனை சுற்றியும் பகுத்தறிவாளர்களின் போட்டோக்கள் சுவரை அலங்கரித்துக்கொண்டிருந்தன.

"இந்த தட்டுமுட்டு சாமான்கள் நம்ம ஆளுங்க பாவித்து வீசியதுதானுங்க! அவற்றை நாங்கள் சேகரித்து வந்து இங்கே வைத்திருக்கிறோம். உங்கள் வீட்டுக்கு தேவையில்லை என்று எதையாவது குப்பையில் போட நினைக்கிறீர்களோ அவற்றை 'உதவும் உள்ளங்களுக்கு' தரும்படி கேட்கிறோம். அவற்றை நிறைய அன்பர்கள் இங்கே கொண்டு வந்து தருகிறார்கள். இங்கே பாருங்கள் இதில் சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் உள்ளன. இவற்றை  வாங்கி  வசதியில்லாத ஏழைச் சிறுவர்களுக்கு கொடுக்கிறோம். அதேபோல் பழைய புத்தகங்களை எடுத்து தரம் பிரித்து அந்த நூல்களைக்கூட வாங்க முடியாமல் கஷ்டப்படும் ஏழைச் சிறார்களுக்கு கொடுக்கிறோம். வீட்டில் வீசும் பழைய பேப்பர் குப்பைகளை வாங்கி வந்து மீள்சுழற்சி மூலமாக திரும்பவும் அவற்றை வெள்ளை பேப்ராக மாற்றி நோடடுப் புத்தகம் செய்து கொடுக்கிறோம். அண்மையில்கூட வேலூர் வி.ஐ.டி. கல்லூரியின் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனிடம் கேட்டு அந்தக் கல்லூரியில் தேவையில்லை என்று ஒதுக்கப்படும் பேப்பர்களை வாங்கி வந்து அவைகளை திரும்பவும் மீள் சுழற்சி மூலமாக நோட்டு புத்தகமாக மாற்றி விஸ்வநாதனிடம் கொடுத்து ஏழை மாணவர்களுக்கு அவற்றை விநியோகிக்கிறோம்."  என்று பேச ஆரம்பித்தபோது பிரமித்துப் போனோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இங்கே இவர் குப்பைகளை பயன்படும் பொருட்களாக்கிக் காட்டுகிறார்.

அவருடன் ஆச்சரியம் குறையாமல் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சுவையான தகவலை எமக்குச் சொன்னார்.
"தேவையில்லாததை எங்களிடம் கொடுங்கள் என்று நாம் சொன்ன பிறகு பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு கரு நாகத்தை பிடித்துக்கொண்டு வந்த சிலர் அதை எங்களிடம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். நாங்கள் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பிறகு அதை வண்டலூர் மிருக காட்சிசாலையில் விட்டுவந்தேன்" என்று சொல்லி புன்னகைத்தார் சந்திரசேகரன்.

வேலூர் காவல்துறையும், அரச, தனியார் மருத்துவமனைகளும் உதவி தேவை என்றால் அழைப்பது சந்திரசேகரனைத்தான்! வழி தவறிவந்தவர்களை காவல்துறை இவரிடம் தான் ஒப்படைக்கிறது. இவர் அவர்களுக்கு தங்குமிடவசதி செய்துகொடுத்து அவர்களை சொந்த இடத்தில் சேர்த்தும் விடுகிறார். மேலும் அனாதை பிள்ளைகளை அடக்கம் செய்யும் பணியையும் செய்து வருகிறார்.

சரி, இவருக்கு இந்த எண்ணம் எப்படித் தோன்றியிருக்க வேண்டும்?
சந்திரசேகரனின் சமூகசேவை முதலில் ரத்த தானத்தில்தான் தொடங்கியிருக்கிறது, பிறகு கண் தானம் என்று வளர்ந்து இன்று உடல் தானமும் வெற்றிகரமாக நடக்கிறதாம்."மீன்  செத்தா கருவாடாக்கி சாப்பிடுறோம். ஆனால் மனுஷன் செய்தா அவனை மண்தான் சாப்பிடுது. மனித உடல் எதற்குமே உபயோகப்படுத்தப்படுவதில்லை, இதைகூட ஏன் சும்மா வீணாக்கணும்? என்று யோசித்தேன். அதனால் மரணப்படுக்கையில் இருக்கிறவர்களை சந்தித்து அவங்க சம்மதத்தோடு அவங்க இறந்த பிறகு அந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமா கொடுக்கிறோம். அந்த உடல் மருத்துவம் படிக்கிற மாணவர்களுக்கு உதவட்டுமே!
நடிகர் கமலஹாசன் கூட தனது உடலை தானமாக எழுதி வச்சிட்டாராம். அப்படி எல்லோரும் செய்தா இந்த உடம்பு சும்மா வீணாகாது" என்றார் சந்திரசேகரன்.

சந்திரசேகரன் அறுபது வயதை கடந்துவிட்டார். ஆனாலும் இன்றும் சமூகத்திற்காக ஓடி ஓடி உழைத்துக்கொண்டு இருக்கிறார். வேலூரில் இயங்கிவரும் பெரிய ஹோட்டல்காரர்களிடம் கேட்டு இரவில் மீதமாகும் உணவுகளை பெற்றுக்கொள்கிறார். ஒரு பெரிய அண்டாவில் அவற்றைப் போட்டு சைக்கிளில் வைத்து தனியாளாக மிதித்துச் சென்று சேரிப்புற ஏழைகளுக்கு கொடுக்கிறார். இரவில் அந்தப் பகுதியில் சைக்கிள் சத்தம் கேட்டவுடனேயே சந்திரசேகரன்தான் வருகிறார் என்று மக்கள் எழுந்து தட்டுகளுடன் தயாராகி விடுகிறார்களாம்.

சாமிக்கு நேர்ந்து உடைக்கப்படும் தேங்காய்களையும், சாமி சிலைகளுக்கு ஊற்றப்படும் பாலையும் கூட சந்திரசேகரன் வீணாக்க விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தினரிடம் பேசி கோயில்களில் ஒரு அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு தேங்காய்கள் உடைக்கப்படாமல் உதவும் உள்ளங்களுக்கு வந்து சேர்ந்ததாம். ராணிப்பேட்டை கோயில் சாமிக்கு ஊற்றும் பாலை ஏழைப் பிள்ளைகளின் பசி தீர்க்க இந்த அண்டாவில் ஊற்றுங்கள் என்கிறார்கள். அதன்படி அண்டா நிறைய பசும்பால் கிடைத்து வருகிறதாம். இதோடு வீட்டுக்கொரு மரம் நடும் திட்டத்தையும் செய்து வருகிறார்.
சந்திரசேகரனின் திருமணமும் சுயமரியாதைத் திருமணம் தான். அவரின் மகள் திருமணத்தையும் சுயமரியாதைத் திருமணமாகவே நடத்தியிருக்கிறார். அந்த திருமணத்தின் விஷேட நிகழ்வாக மணமகன், மணமகள் இரத்ததானம் செய்தார்கள். அவர்களை தொடர்ந்து அங்கே வந்திருந்தவர்களும் ரத்ததானம் செய்தார்கள் என்பதை பெருமையுடன் சொல்லிப் பூரிக்கிறார் சந்திரசேகரன்.
"இன்று திருமணம் என்றாலேயே பல லட்சங்களை வாரி இறைத்து ஆடம்பரமாக நடத்தவே பலரும் விரும்புகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்?
அதைவிட ஒரு ரூபாவும் செலவில்லாமல் இரத்ததானம் செய்யலாமே. சமூகத்திற்கு நாம் ஒரு நல்ல காரியம் செய்த மாதிரியும் இருக்குமே!" என்று ஒரு நல்ல யோசனையையும் தந்தார் சந்திரசேகரன்.
யாராவது திருமண நிகழ்வுக்கு வரும்படி இவருக்கு அழைப்பிதழ்கள் வைத்தால் இவர் அவர்களிடம் ஒருநிபந்தனை விதிக்கிறார். அது என்ன நிபந்தனை தெரியுமா,

என்னோடு ஒரு பத்து பேர் வருவார்கள். அவர்களுக்கும் உங்கள் வீட்டில் கல்யாண சாப்பாடு போட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அழைக்க வந்தவர்கள் பெரும்பாலும் சரி என்றே சொல்வார்கள். உடனே எங்காவது ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து பத்து சிறுவர்களை அழைத்துக்கொண்டு கல்யாண வீட்டிற்கு சென்றுவிடுகிறார் சந்திரசேகரன். படிக்கையிலேயே உங்களுக்கு மயிர்க்கூச்செறிகிறது அல்லவா! ஏழைச் சிறுவர்கள் கல்யாண சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவதை பார்ப்பதில் இவருக்கு பசியாறிவிடுகிறது.
உதவும் உள்ளங்கள் சந்திரசேகருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் ஏழைகளின் சிரிப்பில் எப்படி இறைவனைக் காணலாம் என்பதை மட்டும் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்.

உன்னைப்போல பிறரையும் நேசி என்ற இயேசுவும், ஒரு நாயும் பட்டினி கிடக்கச் சகியேன் என்ற விவேகானந்தரும், பெரும்பாலான இந்தியர்களின் உடை கோவணம் என்றால் நானும் கோவணாண்டியே என்ற காந்தியும் மதர் திரேசாவும் இந்த நாத்திகரிடத்தில் சங்கமிக்கும் அற்புதத்தை அங்கே நாம் தரிசித்தோம்.
சந்திரசேகரன் சொன்ன கருத்துகளில் ஓரிரண்டையாவது நாமும் எடுத்துக்கொண்டு பின்பற்றுவோம்?

No comments:

Post a Comment