Thursday, December 27, 2012

ஒரு நாள் ஒரு பொழுது:


புலியோடு சண்டை போட்டார் என் அப்பா


       

(மணி ஸ்ரீகாந்தன்)


ஜெய் சங்கருடன் ரத்தத்தின் ரத்தம் படத்திலும் மற்றும் மஞ்சள் குங்குமம், இளைநிலா, மாமியார் வீடு, உயர்ந்த உறவுகள் ஆகிய ஈழத்தமிழ்ப் படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும், ஸ்டண்ட மாஸ்டராகவும், ஒப்பனை கலைஞராகவும், நடிகராகவும் பணியாற்றியவர் என்.முத்தையா. தற்போது தனது 82 வயதில் தனது கிருளப்பனை இல்லத்தில் வசித்து வருகிறார். ரொம்பவும் பலசாலி.

தமிழகத்தின் சிங்கப்பட்டிதான் இவர் பிறந்த ஊர். அந்தக் காலத்தில் சிங்கம் அதிகமாக அந்த ஊரில சுற்றித் திரியுமாம். இவருடைய அப்பா நீலகண்ட தேவர் வெள்ளைக்காரனிடம் காவல் வேலை செய்தவர். இவருடைய அப்பாவுக்கு சிலம்பாட்டம், மற்றும் வர்மக்கலை உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் எல்லாம் அத்துப்படியாம். சிங்கப்பட்டியைச் சுற்றியுள்ள எட்டுப்பட்டி கிராமமும் இவருடைய அப்பாவிடம் தான் சிலம்பம் கற்க வருவார்களாம். இவருடைய அப்பா சிங்கத்துடன் நேரிடையாக மோதி கோடலியால் வெட்டிச் சாய்த்ததாக ஊரெல்லாம் ஒரு கதை அக் காலத்தில் பரவியிருந்தது என்பதை சந்தோஷமாக கூறியதுடன் தன் சிறு பராயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"அப்போது எனக்கு 12 வயதிருக்கும் நானும் அப்பாவிடம் சிங்கச்சண்டை பற்றிக் கேட்டப்போது ஆமாம். என்றார். எனக்கு அப்பா சிங்கத்துடன் சண்டைப்போடுவதை நேரிடையாக பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். அதில் கடைசி தாயான ஈஸ்வரிக்கு பிறந்தவன் தான் நான். எனக்கு எட்டு வயதாக இருக்கும் போதே வேல் கம்பை சுழற்றி அடிக்கத் தெரியும். நானும் என் அப்பா மாதிரி தைரியசாலிதான். அப்பா வெள்ளைக்காரர்களுடன் வேட்டைக்குப் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார்.

ஒருநாள் பெங்களுர், பந்திப்பூர் வனப்பகுதியில் நானும் அப்பாவுடன் வேட்டைக்குப் போனேன். அப்பாவை மூன்று வெள்ளைக்காரர்கள் அழைத்துச் சென்றார்கள். அந்த மூவரில் ஒரு இளம் வெள்ளைக்காரியும் இருந்தாள். பார்ப்பதற்கு கும்முன்னு இருந்தாள். காட்டுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பரண்மேல் ஏறி நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தோம். அந்த வெள்ளைக்காரர்கள் பெரிய குழல் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். அந்த வெள்ளைக்காரிக்கு பக்கத்தில் தான் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது பெரிய த்ரில்லாக இருந்தது. அந்தக்காலத்தில் வெள்ளைக்காரர்களுடன் உறவு வைத்திருப்பது கௌரவமான விசயம்தானே!

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காட்டுக்குள் நிலவிய அமைதியை சிதைப்பது போல காய்ந்த சருகுகளின் சலசலப்பு ஓசைக் கேட்டது. வெள்ளைக்காரன் துப்பாக்கியை எடுத்து தயாராக வைத்துக் கொண்டான். நான் கண்மூடித் திறந்த அடுத்த நொடியே எங்களுக்கு கீழே ஒரு பெரிய புலி உறுமியபடி நின்றுக் கொண்டிருந்தது. வெள்ளைக்காரன் துப்பாக்கியை எடுத்து புலியை குறிப்பார்த்தான். அடுத்த சில நிமிடங்களில் டுமீல்... என்று ஒரு சத்தம்! புலி சூடுப்பட்டு சுருண்டு விழுந்தது. வெள்ளைக்காரர்கள் வெற்றி வெற்றி என்று கரகோஸம் செய்ததோடு புலியை தூக்கி வரும்படி அப்பாவிடம் சொன்னான். அப்பாவும் பரணிலிருந்து இறங்கி புலியை நெருங்கினார். அப்போது சூடுப்பட்டுக்கீழே கிடந்த புலி அப்பா மீது பாய்ந்தது. நான் நிலைகுலைந்து அலறிவிட்டேன். ஆனால் அப்பா அதற்கு அஞ்சாமல் புலியோடு கட்டிப்பிடித்து புரண்டார். காய்ந்த சருகுகளின் மீது அப்பாவும், புலியும் உருண்டு புரண்டது, பிற்காலத்தில் தமிழ்ப்படங்களில் வரும் புலிச்சண்டை மாதிரி இருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு அப்பாவின் வீரத்திற்கு முன்னால் புலியின் வீரம் அடங்கிப்போனது. புலிதன் மூச்சை விட அப்பாவின் உடலெங்கும் ரத்தம் வழிந்தோடியது. அப்பா ரத்த வெள்ளத்தோடு புலியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு பரணியை நோக்கி நடந்து வர வெள்ளைக்காரர்கள் பரணியின் மீதிருந்து கீழே குதித்து அப்பாவை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது. அப்பா புலியை வெள்ளைக்காரர்களின் கால்களுக்கு கீழே போட்டுவிட்டு மண்ணில் சாய்ந்தார். அப்பாவை புலி தாக்கியதில் அவரின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தது. அப்பாவை வெள்ளைக்காரர்கள் சிங்கம்பட்டி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே மூன்று மாதங்கள் இருந்த அப்பா, பிறகு இறந்து போனார். இந்தச் சம்பவம் என்றும் என் மனதை விட்டு அகலாது. அப்பாவின் வீரம் என் இரத்ததிலும் கலந்திருப்பதால்தான் நானும் சிலம்படி வீரனாகவும், சினிமா ஸ்டன்ட் மாஸ்டராகவும் பணியாற்ற முடிந்தது."

No comments:

Post a Comment