Saturday, November 17, 2012

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை - 5

எஹலபொல காலடியில் அரச பொக்கிஷங்களை வைத்து மக்கள் வணங்கியது ஏன்?                                                                      

 

-மணி ஸ்ரீகாந்தன்-கண்டி மன்ன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு 1815 பெப்ரவரி 2 ம் திகதி கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எஹலபொல நிலமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். மன்னரின் ஆசை நாயகிகளின் அந்தப்புரமாக இருந்த இன்றைய அருங்காட்சியகத்தில் தான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின் ஆங்கில நகலை ஆளுனரின் சார்பில் கலந்துக் கொண்ட டொய்லி வாசித்தார். அதைத் தொடர்ந்து சிங்களத்தில் ஏப்ரகாம் டி. சேரம் வாசித்தார்.
மன்னரின் தங்க சிம்மாசனம்

ஒப்பந்தத்தில் 14 சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முப்பாட்டன் உட்பட ஏழு பேர் தமிழில் ஒப்பமிட்டனர். ஒப்பந்தத்தில் முக்கியமாக மன்ன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுரிமையும் கிடையாது; அதே போல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையையும் கோர முடியாது, மன்னரின் வம்சத்தை சேர்ந்த, உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தங்கக் கூடாது. கண்டி அரசுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இயங்கும். ஆளுனரின் எழுத்து மூல உத்தரவின்றி எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஒப்பந்தத்தில் சிங்களத் தலைவர்கள் கையெழுத்திட்டப் பிறகு சில நாட்கள் கழித்து பிரிட்டஷ் மன்னர் சார்பில் ஆளுனர் பிரவுண்ரிக், ஜெனரல் டொய்லி, ஆளுனரின் செயலாலர் சதர்லண்ட் முதலானோர் கையெழுத்திட்டனர். கண்டி பேரரசை ஆட்சிசெய்த ஸ்ரீ விக்கிராஜசிங்கனின் பொக்கிஷ அறையில் தங்கமும், பொன்னும் குவிந்து கிடப்பதாக கண்டி மக்கள் கருதினர். எனவே அதை சிலர் கொள்ளையடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஆங்கில பாதுகாப்பு வீரர்கள் வெளியாட்கள் யாரையும் அரண்மனையை நெருங்க விடாமல் பாதுகாப்பு வேலி அமைத்திருந்தார்கள்.

கிரீடம்

 கண்டி அரண்மனையின் பொக்கிஷ அறையை திறப்பதற்காக ஆளுனர் பிரவுன்ரிக் வந்திருந்தார். பொக்கிஷ அறையை உடைத்து உள்ளே நுழைந்து அங்கே இருந்த பெரிய பெட்டிகளை திறந்து பார்த்த போது ஆளுனருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பொக்கிஷ அறையில் ஒரு தங்கமணிக் கூட இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. பிறகு மன்னரோடு நெருக்கமாக இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் போரின் இறுதிக்கட்டத்தில் மன்னர் கண்டியை விட்டு வெளியேறும் போது தமது விசுவாசிகளை அழைத்து பொக்கிஷ அறையில் இருந்த தங்கத்தையும், பொன்னையும் வாரி கொடுத்ததாகவும் மன்னரும் சில வெகுமதியான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆங்கில படைகள் கண்டியை சல்லடைப் போட்டு தேடியதில் நிறைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. சிலர் தாம் எடுத்துச் சென்ற தங்க ஆபரணங்களை, அடுத்ததாக அரசு கட்டில் ஏறப்போகும் வாய்ப்பு எஹலபொல நிலமேக்குத்தான் கிடைக்கும் என நம்பியதால் அவரது காலடியில் தாம் எடுத்துச் சென்ற அரச பொக்கிஷங்களை வைத்து வணங்கிச் சென்றனராம்.
மன்னரின் தங்க ஆபரணம்
(அருங்காட்சியகம் கொழும்பு)


வருங்கால அரசரை தாஜா செய்து வைக்கும் அன்றைய முறை இது. இந்தத் தகவலும் ஆங்கில அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. தேடுதலை ஆங்கில அதிகாரிகள் தீவிரப்படுத்துவதை அறிந்த எகலபொல தன்னிடமிருந்த கண்டி மன்னரின் மணிமுடி தங்கப்பிடி வாள் உள்ளிட்ட நகைகள் பலவற்றையும் 1816 ம் ஆண்டின் ஆரம்ப பகுதியல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தான். மன்னர் கொடுத்த தகவலின் படியும் சில குறிப்பிட்ட இடங்களை தோண்டி மன்னர் பயன்படுத்திய அரிய வகை பொருட்களை மீட்டனர். மீட்கப்பட்ட பொக்கிஷங்களில் சிலவற்றை ஆளுனரிடம் சேர்த்த படை வீரர்கள் தங்களால் முடிந்த நகைகளை சுருட்டிக் கொண்டார்கள். மன்னர் கைது செய்யப்பட்ட அன்றே மன்னன் வைபவ ரீதியாக அணியும் கீரீடம், சிம்மாசனம் என்பன கைப்பற்றப்பட்டன.
வேலூர் அருங்காட்சியத்தில்
வைக்கப்பட்டிருக்கும் யானை தந்தத்திலான சதுரப் பலகை

கொழும்பிலுள்ள ஆளுனர் மாளிகையில் கண்டி அரண்மனை பொக்கிஷங்களான தங்கம், வெள்ளி, வைரம், வைடுரியம், பொற்காசுகள் ஆகியவை மலையாக குவிந்துக்கிடந்ததாம். பிறகு ஆளுனரின் நம்பிக்கைக்குறிய அதிகாரிகளால் அவை இரும்பு பெட்டிகளில் வைத்து பூட்டப்பட்டன. கப்பலில் ஏற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 1820 ஜீன் 13 ம் திகதி லண்டன் ராஜ வீதியில் தோமா கிங் என்பவரால் இப் பொக்கிஷங்கள் ஏலம் விடப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார் மேகம் எழுதிய கண்டி மன்னர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலத்தின் போது தூய தங்கத்தில் செய்யப்பட்ட 42 அடி நீல தங்கச் சங்கிலியையும் ஏலம் விடப்பட்டதாம். இந்த தங்கச் சங்கிலி சில மாதங்களுக்கு முன்பு கேரளா, திருவானந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷ அறையில் எடுக்கப்பட்ட 18 அடி நீளமான தங்கச் சங்கிலியை விட பெரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த 18 அடி சங்கிலி பற்றி கேள்விப்பட்டு நாம் வாயை பிளந்தோம் கண்டி அரண்மனையில் வைக்கப்பட்டு இருந்த தங்கச் சங்கிலியின் நீளம் 42 அடி எனும் போது மலைப்பாகத்தான் இருக்கும்! மன்னரின் மகுடத்தை தனிப்பட்ட யாரும் ஏலம் எடுத்து விடக் கூடாது என்பதற்கான அதை உடைத்து அதில் பதிக்கப்பட்டிருந்த முத்து, பவளம், இரத்தினம், வைர மணிகள், தங்கம் உள்ளிட்டவை தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்ட பிறகே ஏலம் விடப்பட்டது.
பூமராங் போர்க் கருவி  (வேலூர்)


இந்த ஏலம் தொடர்பான விவரப்பட்டியல் கொழும்பு அருங்காட்சியத்தில் இப்போதும் உள்ளது. இது தவிர மன்னரின் வாள்கள், தங்க சிம்மாசனம். மன்னர் வைபவ ரீதியாக அணியும் கிரீடம் மன்னரின் தங்க மோதிரம் வைக்கப்பட்டதாக கருதப்படும் பெட்டகம், தங்கத்திலான ராணிகளின் சுண்ணாம்பு சிமிழ், யானைத்தந்தத்திலான பெட்டிகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

கண்டி மன்னர் காலத்தைச் சேர்ந்த ஒரு பெட்டி இப்போதும் கிரிபோருவ ஹேரத் முதலி பரம்பரையினர் வசித்து வரும் வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர வேலூர் அருங்காட்சியகத்திலும் மன்னர் பயன்படுத்திய யானைத்தந்ததிலான சில பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பொருட்களை இன்று மன்னரின்
மன்னரின் மோதிரப் பேழை
(அருங்காட்சியகம் கொழும்பு)

வாரிசுகளிடமிருந்து பெற்றுக் கொண்டதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எழுத்து மூலமாக தெரிவித்திருக்கிறார். மன்னரின் வாரிசு சினேக வள்ளியிடமிருந்து அவை பெற்றுக் கொள்ளப்பட்டு அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கபட்டிருக்கும் தங்க சிம்மாசனமும், கீரிடமும் இலங்கை சுதந்திரத்திற்கு பிறகே லண்டனிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க....

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06

No comments:

Post a Comment