Sunday, November 11, 2012

ருக்ஜியின் நல்ல மனம் நம்மில் எத்தினை பேரிடம் இருக்கிறது..?

மாடுகளுக்கான உலகின் முதலாவது சரணாலயம்


வேலூரில் அமைந்திருக்கும் இந்த அனாதை ஆசிரமத்தில் 400க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.

 

 

பால் கறக்காத, ஒன்றுக்கும் உதவாத மாடுகளை இங்கே கொண்டு வந்து விட்டு விடலாம். சாகும் வரை பராமரிக்கிறார்கள்.

 

சமண மதத்தைச் சேர்ந்த ருக்ஜிராஜேஸ், இதற்காக பல இலட்சங்களை செலவு செய்கிறார். சமண மதம் கொல்லாமையை வலியுறுத்துகிறது.

 

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் சரணாலயத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பணி புரிகிறார்கள்.

 

வேலூரிலிருந்து:மணி ஸ்ரீகாந்தன்.

 

பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்துக்காக தம் வாழ்வையே அர்பணித்த பல மகாத்மாக்களைப் பற்றி பல ஏடுகளில் நாம் படித்தும், கேட்டும் இருக்கிறோம். இன்றும் வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாத படி தொண்டு செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறான மிகப் பெரிய மனிதர்களைப் பற்றிய நமது தேடலில் சிக்கியவர்தான், ருக்ஜி ராஜேஸ் இவர் ஒரு ராஜஸ்தான் காரர். இவர் பிறந்தது ராஜஸ்தான் என்றாலும் வளர்ந்தது தமிழகத்தில்தான். அதனால் தமிழில் சரளமாக பேசவும், வாசிக்கவும் ருக்ஜி ராஜேஸ்சால் முடிகிறது. தமிழகத்தில் வேலூரில் ஒரு தொழிலதிபராக இருக்கும் இவர் செய்து வரும் பணி இதுவரை நாம் கேள்விப்படாத ஒன்று. வீதியில் திரியும் கட்டாக்காலி மாடுகளுக்கும், வயது முதிர்ந்து ஒன்றுக்கும் உதவாது என்று ஒதுக்கப்படும் மாடுகளுக்கும், இறைச்சிக்காக அறுக்க கொண்டு செல்லப்படும் கால்நடைகளுக்கும் நேசக்கரம் நீட்டி வருகிறார் இவர். மாடுகளின் ஆயுட்காலம் முழுவதும் அவை நிம்மதியாக வாழ வேலூரில் பெரிய காப்பகம் ஒன்றை அமைத்து அதை வெற்றிகரமாக நடாத்தி வருகிறார் இவர்.


இந்த மாடுகளுக்கான அநாதை விடுதியை கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக 'ருக்ஜி கன்யலால்' நடத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பிறகு தந்தையின் வழியில் எந்த தடங்களும் இன்றி தொடர்கிறார் கன்யலாயின் மகன். ருக்ஜிராஜேஸ். உலகத்தில் வேறு எங்கும் இப்படி மாடுகளுக்கு என்று ஆசிரமங்கள் கிடையாதாம். சமண சமயத்தைச் சேர்ந்த இவர், "நாங்கள் பகவான் மாகா வீரரின் பக்தர்கள். எனவே தான் அவரின் பெயரிலேயே இந்த கோமாதவிற்கான அநாதை ஆசிரமத்தை நடத்தி வருகின்றோம். வாய் பேசும் மனிதர்களுக்கு கஷ்டம் என்றால் அவர்களுக்கு சோறு போடவும், அவர்களை அரவணைக்கவும் உலகம் முழுவதும் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த வாய்பேசா ஜீவன்களுக்கு யார் உணவு கொடுத்து அரவணைப்பது. என்பதை சிந்தித்த எனது தந்தையாரின் சிந்தையில் உதித்தது தான் இந்த ஆசிர்மம்"என்று பெருமைப்படுகிறார் ருக்ஜி ராஜேஸ்.
வேலூரின் வராலாற்று சிறப்பு மிக்க கோட்டைக்கு பின் பக்கத்தில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான அமைப்போடு மிகவும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அமைந்திருக்கிறது இந்த ஆசிர்மம். இந்த ஆசிரம கட்டடங்களைப் பார்த்தால் ஏதோ நம்மூர் கோயில்களைப் போலத் தோற்றம் அளிக்கின்றன. ஒவ்வொரு மாட்டுத் தொட்டில்களுக்கும் லவ்குஷ் இல்லம், கிருஸ்ணா இல்லம், காமதேனு இல்லம், மஹா லக்ஷ்மி இல்லம், கௌரி இல்லம், கங்கா இல்லம், காவேரி இல்லம் என்று அழகுப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். மாட்டுத் தொட்டில்களுக்கு அழகு வண்ணங்கள் பூசப்பட்டு மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க, இருபதுக்கும் மேற்பட்ட வேலையாட்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.


இப்போது இந்த ஆசிரமத்தில் 400க்கு மேற்பட்ட மாடுகள் உள்ளன. வயது முதிர்ந்து போன மாடுகளை என்ன செய்வது என்று தெரியாது திண்டாடுபவர்கள் இந்த ஆசிரமத்திற்கு தமது மாடுகளை கொடுத்து விட்டு செல்கிறார்களாம். அப்படியான மாடுகளை பராமரித்து அவை இறந்துப் போனால் புதைத்து விடுகிறார்கள். இப்படி வரும் மாடுகளில் பால் கரக்கும் பசுக்களில் இருந்து பெறப்படும் பசும்பாலை அநாதை ஆசிரமங்களுக்கும் , கோயில்களுக்கும் தானமாக வழங்குகிறார்கள். மாட்டு சானத்தை வரட்டி தட்டி வைத்து விறகுக்கு பயன்படுத்துகிறார்கள். மாடுகளுக்கு கோரைப்புற் கட்டுகளை வெளியிலிருந்து லொரிகளில் கொண்டு வந்து இறக்கிறார்கள், இது தவிர அகத்திக்கீரையும் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

"இந்த மகாவீர் ஜெயின் கோசல இல்லம் ஆரம்பத்தில் எனது தந்தையாரால் இரண்டு மாடுகளுடன்தான் தொடங்கப்பட்டிருக்கிறது" என்று சொல்லும் ருக்ஜிராஜேஸ், ஒரு சம்பவத்தையும் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ருக்ஜிராஜேஸ்.


"இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் நான் ஆம்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது விருஞ்சிப்புரத்திற்கு அருகில் மாடுகள் நிறைந்த ஒரு லொறி சென்று கொண்டிருந்தது. லொறி நிறைய மாடுகள் நின்ற நிலையில்'ம்மா...' என்று கதறிக் கொண்டு சென்ற மாடுகளின் கதறல் என் காதுகளில் விழுந்த போது அது என் நெஞ்சை பிறாண்டுவது போல உணர்ந்தேன். நிச்சயம் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்குத்தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை என் உள்ளுணர்வுகள் எனக்குக் கூற, எனது கார் அந்த லொரியை பின் தொடர்ந்து சென்று மறித்தது. காரில் இருந்தவர்களிடம் பேசியதில் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்தேன். அந்த லொறியில் மொத்தம் பத்தொன்பது மாடுகள் இருந்தன. அவர்களிடம் அந்த மாடுகளை விலைக்குக் கேட்டேன். நீண்ட இழுப்பறிக்குப் பிறகு 90 ஆயிரத்திற்கு பேரம் முடிந்தது. பிறகு என்னிடம் இருந்த 90 ஆயிரத்தை கொடுத்து அந்த லொறியை விருஞ்சிப் புரத்திலிருந்து வேலூருக்கு திருப்பினேன். இன்று அந்த மாடுகள் இந்த ஆசிரமத்தில்
ஆரோக்கியமாக உயிர் வாழ்கின்றன" என்று கூறி அந்த அப்பாவி உயிர்களை காப்பற்றிய சம்பவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார். மாடுகளுக்கான அநாதை ஆசிரமங்களோடு மகளிர் பாடசாலை, பகவான் மகாவீரர் அறக்கட்டளை, வேலூர் பழைய பஸ்தரிப்பு நிலையத்தில் இயங்கிவரும் குடிநீர்த் திட்டம் உள்ளிட்டவைகளையும் ராஜேஸ் திறம்பட நடத்தி வருகிறார். மனிதர்களையே மதிக்காத இந்த உலகத்தில் மாடுகளை உயர்வாக மதித்து அவற்றுக்கு வசதியான வாழ்வைத் தந்திருக்கும் இந்த மனிதரின் நல்ல மனம் நம்மில் எத்தினை பேரிடம் இருக்கிறது? மாடுகளைக் காப்பாற்ற வேண்டாம்; அப்பாவி மனிதர்களைக் காப்பாற்றி கரை சேருங்களேன்!

No comments:

Post a Comment