Saturday, November 17, 2012

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை - 3

கைதியானாலும் ராஜசிங்கனுக்கு கௌரவமளித்த ஆங்கிலேயர்

 

-வேலூரில் இருந்து மணி ஸ்ரீகாந்தன்-


கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் நாயக்கராக இருந்தபோதும் கண்டியை ஒரு பௌத்த அரசனாகவே அவன் ஆட்சி செய்து வந்தான். அவனது பதினேழு ஆண்டு கால ஆட்சியில் பௌத்த விகாரைகளுக்கு ஆன்மீக பணிகள் பலவற்றை செய்த மன்னன் கண்டி வாவியை அமைத்ததோடு பத்திரிப்பு எண்கோண மண்டபத்தையும் கட்டி கண்டியை அழகுபடுத்தினான். கண்டி மக்களால் (தெய்யோ) கடவுள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட ஒரே மன்னன் இந்த கண்ணுசாமி நாயக்கர் தான். பிற்காலத்தில் பிலிமத்தலாவையின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்த மன்னன் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகிக் கிடந்தான். ஒரு முறை கண்டி அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த மன்னனின் ஆசைக்காதலி அளுத்கமை பிசோ மெனிக்கேயிடம் எகலபொல நிலமே காதல் லீலை செய்யப்போய் மன்னனிடம் மாட்டிக்கொண்டான்.
கொழும்பில் சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில்
அமைக்கப்பட்டுள்ள மன்னரின் நினைவுச்சின்னம்.
இங்குதான் மகா முதலியார் வணிகரத்ன ராஜபக்சவின் வீடு
அமைந்திருந்ததாம்.

எப்படியோ மன்னனிடமிருந்து தப்பியோடிய எகலபொல நிலமே ஆங்கிலேய அதிகாரிகளிடம்  சரணடைந்தான்.

இதனை கேள்வி பட்ட ராஜசிங்கனின் ஆத்திரம் தலைக்கேறியது. இதுதான் தக்க சமயம் என்று நேரம்பாத்து காத்திருந்த அமைச்சர் பிலிமத்தலாவை மற்றும் படைத்தளபதி மொல்லிகொட உள்ளிட்டோர் மன்னருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவரின் கோபத்தை மேலும் பன்மடங்காக்கினர். பிறகு எகலபொலயை பழிவாங்க ஒரு யோசனையையும் சொன்னார்கள். அந்த யோசனை தான் மன்னனின் அழிவுக்கு முக்கிய காரணமானது. பிலிமத்தலாவையின் யோசனையை ஏற்ற மன்னன் எகலபொலயின் பிள்ளைகள் நால்வரையும் பிடித்து வந்து அவர்களின் தலைகளை சிரச்சேதம் செய்து அந்தத் தலைகளை ஒரு இரும்பு உரலில் போட்டு அந்தப் பிள்ளைகளின் தாயான குமாரி ஹாமினியை கொண்டே அந்த தலைகளை இரும்பு உலக்கையால் இடிக்க வைத்தான்.

இந்த சம்பவம் கண்டி பிரதேசத்தை மட்டுமின்றி முழுநாட்டையுமே அதிர்ச்சியில் உறைய வைத்தது. தண்டணை நிறைவேற்றப்பட்ட பின் குமாரி ஹாமினேயை ஒரு கருங்கல்லில் கட்டி கண்டி வாவியினுள் வீசவும் செய்தான். மன்னரின் இந்த கொடூர செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள் மன்னருக்கு மதம் பிடித்துவிட்டதாக பேசிக்கொண்டார்களாம். நாட்கள் கடந்ததும் கண்டியில் ஏற்பட்ட பதட்ட நிலமைக்கு பிலிமத்தலாவையே காரணம் என்பதை புரிந்துகொண்ட மன்னன், பிலிமத்தலாவையும் சிரச்சேதம் செய்து தனது கோபத்தை தணித்துக்கொண்டான்.

இவ்வாறெல்லாம் கண்டி இராச்சியத்தில் அரசியல் காட்சிகள் மாறிக்கொண்டிருக்க, கண்டி மீது படையெடுக்க இது தான் சரியான தருணம் என்பதை புரிந்துகொண்ட ஆங்கில ஆளுனர் ரொபர்ட்  பிரவுண்ரிக், எகலபொலயின் ஆதரவோடு ஒரு பெரும் படையை தயார் செய்தான். கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி. மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, புத்தளம், சிலாபம் என எண்திசைகளிலிருந்தும் படைகள் முன்னேறத்தொடங்கின.

இரத்தினபுரியிலிருந்து சென்ற படைகளுக்கு எக்னெலியகொட திசா தலைமை தாங்கினான். அவனோடு மன்னனை பழி தீர்க்கும் வெறியுடன் சென்றவர்தான் கிரிபோருவ ஹேரத் முதலி. இவனுக்கு மன்னன் எந்த கெடுதலும் செய்யவில்லை. ஆனால் இவனது உறவினர்கள் எண்மர். மன்னனின் உத்தரவினால் தான் கொல்லப்பட்டார்கள் என்று அவன் நம்பியதால் கிரிபோருவ கடுங்கோபத்தில் இருந்தான்.

கொழும்பிலிருந்து சென்ற படைப்பிரிவுக்கு வழி காட்டிச்சென்றவர் தம்பி முதலி.
இவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் முப்பாட்டன் என்று ஓரு தகவல் உள்ளது.
இவர் மன்னர் கைது செய்யப்பட்டபோது அருகில் இருந்தவர்.

ஆங்கிலேய படைக்கு கண்டியில் பெரிய எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. ஆங்கில படைகளை வழி மறித்து தாக்க மன்னரால் தயார் செய்யப்பட்ட தளபதி மொல்லிகொடை தலைமையிலான படை கடுகன்னாவையில் வைத்து ஆங்கிலேய படைகளுடன் இணைந்து கொண்டது. விசயம் கேள்விபட்ட மன்னன், தமக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று கருதி தன் மனைவிமார், பரிவாரங்களுடன் கண்டி நகரை விட்டு தப்பி ஓடினான். பிறகு மன்னர் பதுங்கியிருந்த மெத மஹநுவர தும்பரமிட்டியாவை கிராமத்தலைவன் வீட்டை எகலபொலவின் வலது கரமான எக்னெலியகொடையின் ஆட்கள் சுற்றி வளைத்து மன்னரை பிடித்தார்கள். பிடிப்பட்ட மன்னரையும் ராணிமார்களையும் மூர்க்கத்தனமாக எகனெலியவின் ஆட்கள் தாக்கியிருக்கிறார்கள்.
ராணி வெங்கடம்மாள்அந்த சந்தர்ப்பத்தில் ராணி வெங்கடரங்கம்மாளின் ரவிக்கை கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மன்னருக்கு கோவணம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அப்போது அங்கே வந்த ஆங்கில அதிகாரிகளான கேணல் ஹார்டி, கேணல் ஹக் ஆகியோர் மன்னருக்கு நடக்கும் சித்திரவதைகளைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். எதிரியாக இருந்தாலும் மன்னருக்கான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கருதினார்கள். தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி மன்னருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்ததோடு வெள்ளை வீரர்களின் பாதுகாப்பின் கீழ் அவர்களை வைத்தனர். பின்னர் அவரை பல்லக்கில் ஏற்றி கொழும்புக்கு அழைத்து வந்தார்கள்.

கொழும்பில் தற்போது சிலிங்கோ கட்டிடம் அமைந்திருக்கும் இடத்தில் அமைந்திருந்த மகா முதலியார் வணிகரத்ன ராஜபக்ஷ என்பவரின் பண்ணை வீட்டில் மன்னர் தங்க வைக்கப்பட்டிருந்தாராம். 349 தினங்கள் அங்கே தங்கியிருந்த மன்னனை கோல்பேஸ் வழியாக இந்தியாவுக்கு அழைத்து சென்றார்கள்.
மன்னரை கண்டியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரும்போது வத்தலையில் ஒரு நாள் மன்னர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அதனால் அந்த இடம் இப்போது விக்கிரமசிங்க புர என்று அழைக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க....

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை 04


No comments:

Post a Comment