Saturday, November 17, 2012

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-06

கட்ட பொம்மன் வாரிசுகளுக்கு மானியம் தருகிறார்கள்: எங்களுக்கு ஏன் மறுக்கிறார்கள்?


கோபப்படும் ராஜசிங்கன் வாரிசுகள்

 

மணி ஸ்ரீகாந்தன்

 

கண்டி ராஜ்ஜியத்தை இழந்த ராஜசிங்கன் கைதியாகி தமிழ்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட போது அவரின் உறவினர்கள் உள்ளிட்ட அறுபது பேர் அந்தக் கப்பலில் பயணித்தார்கள். ஏழு வயது சிறுவனாகவிருந்த தனது மகன் கண்ணுசாமியை கண்டிக்கு அழைத்து வந்த சுப்பம்மாளும் வயது முதிர்ந்த நிலையில் மன்னரோடு கப்பலில் பயணித்தார். அவரோடு சாவித்திரிதேவி என்கிற வெங்கடரங்க ராஜம்மாள், வேங்கடம்மாள், முத்துக்கண்ணம்மா, உபேந்திரம்மாள் உள்ளிட்ட மன்னரின் நான்கு மனைவியரும் உடன் சென்றனர். மன்னர் குடும்பத்தோடு அவர்களுக்கு பாதுகாப்பாக ஆங்கில சிவில் அதிகாரியான வில்லியம் கிரன்ட்வில் அக்கப்பலில் பயணித்தார். கப்பல் சென்னை துறைமுகத்தை நெருங்கிய போது பட்டத்து ராணி சாவித்திரிதேவி இறந்து வி;ட்டார். அவளின் பிரேதத்தை சென்னை கடற்கரையிலேயே தகனம் செய்த அரச குடும்பம், பிறகு சாவித்திரி தேவியின் அஸ்தியுடன் வேலூருக்கு சென்றது. வேலூர் பாலாற்றங்கரையின் ஓரத்தில் ராணியின் அஸ்தியை வைத்து கண்டி அரச குடும்பத்தின் முதல் கல்லறை இந்திய மண்ணில் கட்டப்பட்டது. மன்னரும் அரசியரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். மன்னரின் இரத்த உறவினர்களுக்கு ஆங்கிலேய அரசு வேலூர் தோட்டப்பாளையத்தில் காணி ஒதுக்கி வீடுகள் அமைத்துத் தந்தது மேலும் மாதம் தோறும் அரச மானியமும் கிடைத்திருக்கிறது.
ராஜாவின் பேரன் செல்வராஜன்,பேத்தி சுந்தராம்பாள்

அந்த காலத்தில் வேலூரில் அரசுக்கு வரி கட்டிய குடும்பம் இந்த மன்னர் குடும்பம்தானாம். மன்னர் சிறையில் இருந்தாலும் அங்கேயும் ராஜபோகத்துடன் தான் அவர் வாழ்ந்திருக்கிறார். மன்னர் குடும்பத்தின் செலவுப்பட்டியலின் படி மன்னரின் சயன அறை வாசனைத் திரவியங்களுக்காக 1847ல் மூன்றாவது ராணி பட்ட கடன்களை கட்ட இலங்கை அரசு எட்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது.

பதினெட்டு ஆண்டுகால சிறைவாசத்தின் பின் மன்னர் ராஜ சிங்கன் தனது 52வது வயதில் 1833ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி மரணமடைந்தார். அவரின் அஸ்தியை பாலாற்றில் கரைத்த மன்னர் குடும்பம், மன்னருக்கும் அங்கேயே கல்லறை எழுப்பியது. பின்னர் உயிருடன் இருந்த மூன்று அரசியரையும் பிரிட்டிஷ் அரசு விடுதலை செய்தது. இப்போது கண்டி மன்னர் கல்லறைக்கு அருகிலேயே அவரின் நான்கு மனைவிமாரின் கல்லறைகளும் காணப்படுகின்றன. தாய் சுப்பம்மாள், மகன் ரங்கராஜன் ஆகியோரின் கல்லறைகளும் காட்சியளிக்கின்றன. மன்னரின் மகன் ரங்கராஜன் மன்னர் சிறையில் இருக்கும் போதே இறந்து போனார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆங்கிலேயர்களால் ரங்கராஜனுக்கு விஷம் கொடுக்கப்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். என்று கூறப்படுகிறது.

மன்னரின் வாரிசுகளுக்கு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் சில வருடங்களாக மானியத்தொகை முறையாக அனுப்பி வைக்கப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசு பதவியில் இருந்த காலத்தில் மானியம் நிறுத்தப்பட்டது. பணக் கஷ்டமின்றி வாழ்ந்து வந்த அரச குடும்பத்தவர்கள், மாணியம் நிறுத்தப்பட்ட பின்னர் வருமானமின்றி வறுமையில் வாடத் தொடங்கினர்.
"எங்களுக்கு தஞ்சாவூரில் ஒரு பெரிய அரண்மனை இருந்தது. 'கண்டி ராஜா அரண்மனை' என்பது தான் அதன் பெயர். இன்றும் அதே பெயரில் தான் இருக்கிறது. ஆனால் அது இன்று எங்களுக்கு சொந்தமானதாக இல்லை. அந்தக் காலத்தில் எங்கள் உறவினர்கள் அரண்மனையை 500 ரூபாய்க்கு அடகு வைத்திருக்கிறார்கள். பிறகு அதை மீட்க முடியாமல் போக இன்று அதை யாரோ வாடகைக்கு விட்டு பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்." என்று சொல்கிறார். மன்னரின் பரம்பரையில் வந்த கொள்ளுப் பேரன் செல்வராஜன். இவர் வேலூரில் வசித்து வருகிறார்.

கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு வேலூர் மாவட்ட
கலக்டரினால் விருதுகள் வழங்கப்பட்டபோது….
"ஆங்கிலேயர்கள் எங்களை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தியிருந்தாலும். அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார்கள். வேலூரில் தோட்டப்பாளையத்தில் ஒன்பது ஏக்கர் காணியும், கொணவட்டத்தில் 11 ஏக்கர் காணியையும் கொடுத்திருந்தார்கள். ஆனால் எங்கள் உறவினர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இன்னும் அரச வாழ்க்கை வாழ்வதாக நினைத்துக் கொண்டு ஆடம்பரத்தில் மூழ்கினர். மது, மாது ஆட்டம் போட்டனர். இவை எல்லாம் சேர்ந்து எங்கள் அடித்தளத்தையே அரித்துவிட்டதது; இன்று எங்களுக்கென்று எதுவுமே இல்லை"என்று பெருமூச்சு விடுகிறார் செல்வராஜன்.

கண்டி மன்னர் கைதுக்குப் பிறகு மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரத்த உறவுகள் எவரும் கண்டிக்கு வரக்கூடாது என்று ஆங்கிலேய அரசு தடைவிதித்திருந்தது. ஆனால் மன்னரின் மரணத்தின் பின்னர் அந்தத் தடையை அரசு விலக்கி கொண்டது. ஆனால் மன்னரின் வாரிசுகள் எவரும் சும்மா ஒரு சுற்றுலா என்ற பெயரிலும் கூட கண்டிக்கு வரவில்லை.

1953ம் ஆண்டில் இலங்கை பிரதமராகவிருந்த சேர் ஜோன் கொத்தலாவலை இந்தியா சென்றிருந்த போது கண்டி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த துரைசாமி ராஜா, சுக்குராஜா, ஆகிய இருவரையும் கொழும்புக்கு அழைத்து வந்தார். இதில் துரைசாமிக்கு இலங்கை மத்திய வங்கியில் உயர் பதவி கிடைத்தது. சுக்குராஜர் லேக்ஹவுஸ் தினகரன் நாளிதழில் பத்திரிகையாளராக சில காலம் கடமையாற்றினார். மதுவுக்கு அடிமையான துரைசாமிராஜா ஒரு முறை கல்கிசை கடலில் குளிக்கப்போய் கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். இதை அவதானித்த அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்றினர். பின்னர் சென்னைக்குச் சென்ற அவர் அங்கே மெரீனா கடற்கரையில் நீராடச் சென்று கடலில் மூழ்கி இறந்து போனார். அவர் மனதில் தற்கொலைக்கான விருப்பு இருந்திருக்கலாம்.

தினகரனில் பணியாற்றி வந்த சுக்குராஜாவும் கொஞ்ச காலத்தின் பின்னர் தமிழகம் திரும்பினார். 1990களின் முற்பகுதியில் இறந்து போனார்.

மன்னரின் வாரிசுகள் இன்று வேலூர், சென்னை, தஞ்சாவூர், மைசூர், ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஜெயக்குமார் சன்குழுமம் நிறுவனத்திலிருந்து வெளியாகும் 'தினகரன்' நாளேட்டில் செய்தியாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
பிரிதிவிராஜன்


அண்மையில் கூட கண்டி மன்னரின் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த ஓவியர் நிர்மல்குமாரின் கைவண்ணத்தில் உருவான மன்னரின் திருஉருவப்படம் மாவட்ட கலக்டரினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. சென்னை தினகரன் செய்தியாளரும் மன்னரின் வாரிசுமான ஜெயக்குமார் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியரினால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மன்னரின் வாரிசுகளில் முக்கியமாணவர்களில் பிரிதிவிராஜனும் ஒருவர். இவர் கண்டி மன்னரின் பேரனான ராஜாதிராஜ சிங்கனின் மகன். இவர் தற்போது வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கட் கிழித்துக் கொண்டிருக்கிறார்.

"கட்டபொம்மனின் வாரிசுகளுக்கும், ஆற்காட்டு நவாப்பின் வாரிசுகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் தான். எங்களுக்கு மட்டும் எதுவுமே கிடையாது! நானும் கலைஞருக்கும், அம்மாவுக்கும் எங்களின் நிலைமையை சொல்லி எத்தனையோ கடிதங்கள் எழுதிவிட்டேன். சாதகமாக ஒரு பதிலும் வரவில்லை, தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆள், அம்பு, அந்தப்புரம் என்று ராஜபோகமாக வாழ்ந்திருக்க வேண்டிய ராஜகுடும்பத்தவர் நாங்கள். இன்று யார் யாருக்கோ கை கட்டி சேவகம் செய்துக் கொண்டிருக்கிறோம்" என்று விரக்தியுடன் பேசுகிறார், பிரிதிவுராஜன். "மன்னரின் பரம்பறை பற்றிய தகவல்கள் எல்லாம் எனக்குத்தான் தெரியும். தமிழகத்தின் ஆனந்தவிகடன், குமுதம், இந்து உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளும் என்னைத்தான் பேட்டி கண்டு பிரசுரித்திருக்கிறார்கள் நீங்களும் முதலில் என்னைதான் சந்தித்திருக்க வேண்டும்" என்றார். பிரிதிவி, நாங்கள் மன்னரின் மற்ற வாரிசுகளை முதலில் சந்தித்தது பிரிதிவிராஜனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. இராஜ குடும்பங்களுக்கே உரிய ஆதிக்க போட்டி இன்னும் இவர்களின் குடும்பங்களில் தொடர்வதை யூகிக்க முடிந்தது.

(முற்றும்)

1 comment: