Saturday, November 17, 2012

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை 04

ராணியின் ரவிக்கை வைக்கப்பட்டிருந்த வீடு ஐந்து முறை தீப்பற்றி எரிந்ததாம்.

 

-மணி ஸ்ரீகாந்தன்-


கண்டி மக்களால் கடவுளாக கருதப்பட்ட கண்டி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் பிறகு கொடூரமான மனிதனாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். என்பது தான் கண்டி வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் மன்னரின் மன மாற்றத்துக்கு அவரோடு உடன் இருந்த அமைச்சர்களும், பிரதானிகளும் தான் காரணம் என்று அடித்தும் சொல்கிறார் கே.என்.டீ.சந்திரசேன.
மன்னர் கைது செய்யப்பட்ட
(அப்புரால ஆராச்சி வீடு இருந்த இடம்)
தும்பரமிட்டியாவ,கண்டி

சப்பிரகமுவ மாகாணத்தில் ஹொரனை இங்கிரியவிலிருந்து பயணித்தால் அரை மணித்தியாலயத்தில் கரந்தனையை அடைந்துவிடலாம். அங்கே தான் இந்த கே.என்.டீ சந்திரசேன இருக்கிறார். இவர் இராஜசிங்கனின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு நபர். இவரின் வீட்டில் தான் கண்டி மன்னன் கைது செய்யப்பட்டபோது ராணி வெங்கட ரங்கம்மாளிடமிருந்து பறிக்கப்பட்ட ரவிக்கை பல வருடங்களாக பாதுகாப்பாக இருந்து வந்தது. தற்போது கொழும்பு அரும்பொருட்காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த ரவிக்கையை சந்திரசேனையின் தகப்பனார் கே.என்.டி.குணதாச பல வருடங்களாக பாதுகாத்து வந்தார். பின்னர் அரும்பொருட்காட்சி சாலையிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கண்டி மன்னரை சிறைபிடிக்க நாட்டின் எட்டு திசைகளிலிருந்து படைகள் சென்றபோது இரத்தினபுரியிலிருந்து சென்ற எக்னெலிய கொடையின் தலைமையில் சென்ற படைப்பிரிவில் இருந்தவனே கிரிபோருவ ஹேரத். தனது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேரை மன்னர் சிறைபிடித்து சிரச்சேதம் செய்து விட்டதாக எண்ணி ஆத்திரத்தில் இருந்தான். உண்மையில் அந்த எட்டுப்பேரின் கொலைகளுக்கும் மன்னருக்கும் இடையில் சம்பந்தம் இருக்கவில்லை. மன்னரின் படைத்தளபதி மொல்லிகொடைதான் அந்தக்கொலைகளை செய்தான். இதை மன்னர் அறிந்திருக்கவில்லையாம். ஆனால் பழி மன்னரின் மீது விழுந்தது. மன்னரைச் சிறைப்பிடிக்க சென்ற அந்தக்குழுவில் எங்கள் வீட்டிற்கு பக்கத்திலிருந்த அமரசிங்க கங்காணியும் இடம்பெற்றிருந்தார் என்று அந்தக்காலத்தில் நடந்த சம்பவத்தை சுவைப்பட சொல்லத்தொடங்குகிறார் கே.என்.டீ.சந்திரசேனா. இவர் ஒரு ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர். கண்டி தும்பரமிட்டிய பகுதியில் மன்னரை கைது செய்த போது நடந்த நமக்கு தெரியாத சில சம்பவங்களையும் அவர் நம்மிடம் சொன்னார்.

“கண்டி மெத மஹநுவரயில் ஒரு ஆலமரத்தடியில் அமைந்திருந்த கிராமத்தலைவன் அப்புரால ஆராச்சி வீட்டில் மன்னர் மறைந்திருப்பதை அடையாளம் கண்ட எக்னெலியவின் ஆட்கள் வீட்டை சுற்றி வளைத்து கதவை உடைத்து உள்ளே நுளைந்து மன்னரை அடித்து உதைத்தனர்.

அந்த நேரத்தில் எக்னெலிய கொட தனது துப்பாக்கியை எடுத்து மன்னனை குறி பார்த்து சுடவும் செய்தான். ஆனால் அதைப்பார்த்த மன்னரின் விசுவாசியான மடப்புள்ளிராலாமி மின்னலென முன்னால் பாய்ந்து மன்னரை நோக்கி வந்த தோட்டாக்களை தன் நெஞ்சில் வாங்கி தமது நேசத்துக்குரிய மன்னனுக்கு தன்னுயிர் நீத்தான். மன்னரை வெளியே இழுத்து வந்து ஆடைகளை உரித்து அடித்து உதைத்தார்கள். எக்னெலியகொடையின் துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்து போனதால் காலால் மன்னரை எட்டி உதைத்தான். மன்னரை இம்சித்து கொண்டிருந்த போது சிலர் வீட்டிற்குள் நுளைந்து ராணிகளையும் அடித்தார்கள். அப்போது மகாராணி வெங்கடரங்கம்மாளின் வைரக்கம்மல்கள் பலவந்தமாக பறிக்கப்பட்டதில் காது அறுந்து இரத்தம் கொட்டியது.
ராணியின் இரத்தக்கறைப் படிந்த ரவிக்கை

கொலை வெறியோடு திரிந்த கிரிபோருவ ஹேரத் ராணியின் ரவிக்கையை பற்றிப்பிடித்திழுத்தான். ரவிக்கை கிழிந்து கையோடு வர ராணி கதறி அழுதாள். ரவிக்கையின் பொத்தான்கள் தங்கம் எள்பதால் கிரிபோருவ அந்த ரவிக்கையை சுருட்டி தன்னுடன் வைத்துக்கொண்டான். பின்னர் வெள்ளையர் படை அங்கே வர, அவர்கள் மன்னரையும் ஏனையோரையும் காப்பர்றி தமது பாதுகாப்பின் கீழ் வைத்துக்கொண்டார்கள். பிறகு வெள்ளையர்களால் மன்னர் குடும்பம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.” என்று சொல்லும் சந்திரசேன மன்னரை இம்சித்தவர்களுக்கு பிறகு என்ன நடந்தது என்பதையும் விவரித்தார். “மன்னரை காலால் எட்டி உதைத்த எக்னெலியகொடையின் குடும்பத்தினருக்கு இதனாலோ என்னவோ அவர்களின் பரம்பரையினர் அனைவருக்கும் காலில் குஷ்டம் வந்து இறந்தார்கள்.ராணியின் ரவிக்கையை எஹலியகொட கிரிபோருவையில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற ஹேரத் அதில் உள்ள தங்க சரிகைகளையும் தங்க பொத்தானையும் பிரித்து எடுத்து விட்டு ரவிக்கையை ஒரு மூலையில் எறிந்துவிட்டான். பிறகு அந்த ரவிக்கையை பத்திரப்படுத்தி வைத்திருந்த கிரிபோருவ ஹேரத்தின் குடும்பத்தார்களுக்கு சிறிது தொகை பணத்தை கொடுத்து எனது அப்பா அந்த ரவிக்கையை வாங்கி வந்து எமது வீட்டில் பாதுகாப்பாக வைத்தார். மன்னரின் கைது சம்பவத்திற்கு பிறகு தொடர்ச்சியாக கிரிபோருவ ஹேரத்தின் வீடு ஐந்து முறை தீப்பிடித்;தது. இது அரச குடும்பத்தின் சாபமாகவும் இருக்கலாம் என்கிறார் சந்திரசேன.
கே.என்.டி. குணதாச தன்னிடமிருந்த ரவிக்கையுடன்

கொழும்பு அருங்காட்சியகத்தில் ராணியின் ரவிக்கை இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு கடிகாரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் விக்கிரம ராஜசிங்கனால் டி.எஸ்.ஜயவர்தனாவுக்கு கொடுக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான ஒரு தகவல் என்பதையும் சொல்ல விரும்புகின்றேன். இக்கடிகாரம் எகலபொல நிலமேவுக்கு பிரிட்டிஷ் காரர்கள் கொடுத்தது. அது பழுதானதால் அதை திருத்தித்தரும்படி தனது விசுவாசியான முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் முப்பாட்டனான தம்பி முதலியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் தம்பி முதலி அதை திருத்திக்கொடுக்கவில்லை. பிறகு பிரிட்டிஷ் படைகளால் எகலபொல கைது செய்யப்பட்டு மொரிசியஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டு அங்கே சிறை வைக்கப்பட்டார்.

எகலபொல சிறையில் இருந்தபோதும் தனக்கு அந்தக்கடிகாரத்தை பெற்று தரும்படி ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார். ஆனால் பாவம் எகலபொலயின் கைகளுக்கு அந்தக்கடிகாரம் போய் சேரவில்லை. சிறையில் பல வருடங்களை கழித்த எகலபொல மொரிசியஸ் தீவிலேயே அநாதரவாக இறந்து போனார். என்று தமக்கு தெரிந்த தகவல்களை சந்திரசேன எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மேலும் வாசிக்க....

வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை - 5

No comments:

Post a Comment