Thursday, November 22, 2012

வேலூர் சி.எம்.சி- 03


 மதர் தெரேஸாவுக்கு முன்னோடியாக அமைந்த ஐடா

 

மணி ஸ்ரீகாந்தன்


 அன்று நாற்பது கட்டில்களோடு பெண்களுக்காக மட்டுமே தொடக்கப்பட்ட மருத்துவமனை பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டு இன்று இருபாலாரும் சிகிச்சை பெறும் மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. நாற்பது கட்டில்களில் ஆரம்பித்த இந்த மருத்துமனை இன்று 2695 கட்டில்களோடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது, சமூக சுகாதார அபிவிருத்தி பிரிவு, கிராமங்களுக்கான பிரிவு, ஷெல் கண் மருத்துவமனை, குறைந்த கட்டணத்திற்கான மருத்துவம், மனநோயாளர் பிரிவு, நம்பிக்கை நிதியம், புனர்வாழ்வு பிரிவு, உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்த மருத்துவ மனைக்கு உலகம் முழுவதிலிருந்து நோயாளர்கள் வருகைத்தருவதோடு சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வேலூரை நோக்கி வருகிறார்கள். இம் மருத்துவ மனையைப் பற்றி எழுதுவதற்காக சி.எம்.சிக்கு சென்றிருந்த சமயத்தில் கூட இலங்கையிலிருந்து சிங்களவர்களும் தமிழர்களும் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினர் சி.எம்.சியை பர்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சி.எம்.சியின் இயக்குனராக டொக்டர் சுரன்ஜன் பட்டர்ஜி பதவி வகிக்கிறார்.
ஒரே எழும்புக் கூட்டுடன் ஆரம்பமான மருத்துவக் கல்லூரி

ஜடாஸ்கடர் அம்மையாரின் ஆவணப் படங்களின் தொகுப்புகளை சி.எம்.சியின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் கட்டடத்தில் மக்கள் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். அதன் பொறுப்பாளராக ஆனந்த நாதன் பணியாற்றுகிறார். அவர் கொழும்பு கொம்பனி வீதியை பிறப்பிடமாகக் கொண்டவர். பல வருடங்களாக சி.எம்.சியில் பணியாற்றுகிறாராம் ஐடாஸ்கடர் அம்மையார் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். ஐடாஸ்கடர் தன் முதல் நர்சை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதை விபரமாகச் சொன்னார்.

ஐடாவின் வீட்டு சமையற் கட்டில் வேலை செய்த பெண்தான் சலோமி. ஒரு நாள் ஐடா நோயாளர் ஒருவரை பார்த்துக் கொண்டிருந்த போது  உதவிக்கு ஆள் தேவைப்பட சலோமியை அழைத்தார். சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சலோமி கை கால்களை கழுவிவிட்டு இரண்டு கைகளுக்கும் கையுறை அணிந்து கொண்டு ஐடாவின் முன்னாள் கடமை உணர்வோடு வந்து நின்றார். சலோமியின் இந்த செய்கைகளை அவதானித்த ஐடா, என்ன இது கைகளுக்கு கையுறை மாட்டியிருக்கியே என்று கேட்டார்.
ஆரம்பக்கால தாதி ஞானம்மாளுடன் ஐடா அம்மையார்

ஆபரேஷன் செய்யும் போது நீங்களும் கையுறை போடுவீர்கள் தானே...? என்றிருக்கிறாள் சலோமி. படிப்பறிவில்லாத ஒரு சாதாரணப் பெண்ணுக்கும் தாதியாக பணி செய்யமுடியும் என்பதை புரிந்துக் கொண்ட ஐடா, சலோமியை தனது முதல் தாதியாக நியமித்தார். சி.எம்.சியின் முதல் செவிலி என்ற பெருமைக்கு உரியவரானார் சலோமி. சாதாரண பெண்ணான ஞானம்மாளும் தாதியாக இணைந்து கொண்டவர்தான். அதற்குப் பிறகு தான் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் தொடங்கும் எண்ணம் ஐடாவிற்கு வந்தது. அது மட்டுமல்ல, மருத்துவக் கல்விக்காக ஒரே ஒரு எலும்புக் கூட்டை மட்டும் வைத்துக் கொண்டு பெண்கள் மருத்துவ படிப்பை தொடங்கி வைத்த துணிச்சல்கார பெண்தான் ஐடா!

இந்தியாவில் முதல் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்தவர் ஐடா ஸ்கடர் தான். மாட்டு வண்டியில் மருந்து பொட்டலங்களுடன் புறப்பட்டு மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுக்கு இலவச சிகிச்சையளித்து வந்திருக்கிறார்.
தனது சகோதரர்களுடன் ஐடா


ஐடாவின் நடமாடும் மருத்தவ சேவை பற்றி வேலூரில் பல சமூக பணிகளை செய்து வரும் உதவும் உள்ளங்கள் சந்திரசேகன் இப்படி சொன்னார்:

"ஐடாவின் நடமாடும் மருத்துவ சேவையில் வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்திருக்கிறது. ஒரு முறை வேலூரிலிருந்து ஆற்காட்டுக்கு செல்லும் வழியில் இருக்கும் கேவி குப்பத்;தில் மருத்துவம் பார்த்திருக்கிறார். அப்போது கடைசியாக நின்றவருக்கு கொடுக்க மருந்து இல்லாமல் போய்விட்டதாம். உடனே ஐடா

“நான் திரும்பி வரும் போது இந்த வழியாகத் தான் வருவேன், ஆனால் மாட்டு வண்டியை ஆற்காட்டில் நிறுத்திவிட்டு மாலையில் ரயிலில் தான் வருவேன். ஆனால் இங்கே ரயிலை நிறுத்த மாட்டார்கள். நீ இந்த இடத்தில் நின்றால் நான் ரயிலிருந்து மருந்து பொட்டலத்தை வீசுகிறேன். நீ அதை எடுத்துக்கொள்!|| என்றிருக்கிறார். அதன் படியே ஐடா ரயிலில் வந்த போது அந்த நபருக்கு மருந்து பொட்டலத்தை வீசினாராம். இப்படியொரு மனிதநேயம் இன்று எத்தனை பேரிடம் என்றார்” இவர்.

வேலூர் சாலையில் ஓடிய முதல் மோட்டார் வண்டி ஐடா பயணம் செய்த கார் தான். இது தான் சி.எம்.சியின் முதல் அம்புலன்ஸ். 1909 செப்டம்பர் 23ம் திகதி தான் வேலூரில் இது பயணத்தை தொடங்கியது. இந்தக் காரை ஸ்டார்ட் செய்யும் போது கழுத்து நெறிக்கப்படும் ஒரு மிருகத்தைப் போல சத்தம் எழுப்புமாம். கிராமங்களில் ஐடா வரும் காரைக் கண்டு மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள். பேய் வண்டி என்று அதற்கு பட்டப் பெயரும் சூட்டியிருக்கிறார்கள். காலப் போக்கில் பயம் தெளிந்துப் போக காரை தொட்டுப் பார்க்கவும், காரின் சீட்டில் உட்காரவும் வேலூர் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. பிறகு ஒரு நாள் ஐடாவின் காரில் கொடூரமாக ஓசை எழுப்பும் கார் ஹோனை சிலர் திருடிச் சென்றுவிட்டார்களாம்.

மக்கள் சேவைக்கா குடும்பத்தையே அர்ப்பணித்திருந்த அந்த ஸ்கடர் குடும்பத்தின் கடைசி நபரான ஐடாஸ்கடர் 24-05-1960ம் ஆண்டு மறைந்தார். மருத்துவ சேவைக்காக யாழ்ப்பாணத்திலிருந்து தொடங்கிய அந்த நெடும் பயணம் இன்னும் வெற்றிகரமான பாதையில் பயணித்தக் கொண்டிருக்கிறது. சி.எம்.சி. பற்றிய அறிய புகைப்படங்களை தந்துதவிய மக்கள் தொடர்பாளர் துரை ஜெஸ்பருக்கும் நன்றியை கூறிக்கொண்டு விடைபெறுகிறோம்.
(முற்றும்)1 comment:

  1. Thanks of the info about CMC, i born in the same hospital and living in the same place but dont no this many information about IDA, Thanks for posting this valuable info.

    ReplyDelete