Thursday, November 22, 2012

வேலூர் சி.எம்.சி-02

பெண்களைக் காப்பாற்றுவதற்காக  மருத்துவம்  பயின்ற ஐடா ஸ்கடர்


மணி  ஸ்ரீகாந்தன்

 


நான் தாகமாயிருந்தபோது நீஙகள் எனக்கு தண்ணீர் தரவில்லை. நான் பசியாக இருந்தபோது எனக்கு உணவு தரவில்லை. நான் நோயாளியாக இருந்தபோது என்னை வந்து பார்க்கவில்லை என்று இயேசுகிறிஸ்து சொன்னபோது அவரது சீடர்கள் விழித்தார்கள்.

எப்போது நீங்கள் தாகமாகவும், பசியாகவும், நோயாளியாகவும் இருந்தீர்கள்? நாங்கள் எப்போது உங்களை கவனிக்காமல் இருந்தோம்? என்று சீடர்கள் குழுப்பத்துடன் கேட்டார்கள்.

உங்களை விட கீழானவர்களுக்கு நீங்கள் செய்யும்; உதவிகள் எனக்குச்செய்வதற்கு ஒப்பானவை என்று இயேசு பதிலளித்தார்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை முதலாவதாக உணர்த்தியவர் இயேசு கிறிஸ்து.
ஐடா பிறந்த ராணிப்பேட்டை இல்லம்

சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய மகளை அவரின் தந்தையும் ஐடாவின் சகோதரன் ஹரியும் வரவேற்றார்கள். அந்த சமயத்தில் ஜோன் ஸ்கடர் திண்டிவனத்தில் உள்ள மிஷனரியில் பணியாற்றியதால் ஐடாவை அழைத்து கொண்டு அவர் திண்டிவனத்திற்கு ரயில் ஏறினார். அது புகைக்கும் நிலக்கரி என்ஜின் ரயில். அதனால் தான் இன்றைக்கும் புகைக்காத மின்சார ரயிலையும் நாம் புகையிரதம் என்று அழைக்கின்றோம். சடக் சடக் என்ற சத்தத்துடன் ஆமை வேகத்தில் ரயில் நகர்ந்து. இந்தியாவில் ஐடா பயணம் செய்த முதல் ரயில் பயணமே அவரை முகம் சுளிக்க வைத்தது. ‘சே! என்ன நாடு இது!’ என்றார்.

திண்டிவனத்தில் இறங்கிய பிறகு மாட்டு வண்டியில் பயணம் செய்து பல மணி நேரத்தின் பிறகு வீட்டை அடைத்தார். தனது தாயாரை சந்தித்து தனது அன்பை பகிர்ந்து கொண்டார். அன்றிரவு ஐடாவிற்கு தூக்கம் வர மறுத்தது. புதிய இடமும் உஷ்ணமான கால நிலையும் அவருக்கு புதிதாக இருந்தது. நள்ளிரவு கடந்திருந்த அந்த நேரத்தில் யாரோ கதவை தட்டுவதை கேட்டு ஐடா எழும்பி வந்தார். வெளியே ஒரு மனிதர் நின்;றுகொண்டிருந்தார்.
நாற்பது கட்டில்களோடு தொடங்கப்பட்ட ‘ஷெல்’
மருத்துவமனை

"அம்மா என் மனைவிக்கு பதினான்கு வயதிருக்கும். அவள் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறாள். மருத்துவம் பார்த்த மருத்துவச்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நீங்கள் வந்தால் என் மனைவியை காப்பாற்றிவிடலாம் வாருங்கள்” என்றார் அவர். அதற்கு ‘ஐடா நான் டாக்டரில்லயே! என் அப்பா தான் டாக்டர்.

அவரை அனுப்புகிறேன்.’ என்று சொல்ல அந்த மனிதருக்கு கோபம் வந்து விட்டது. “ஒரு பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க அனுமதிப்பதை விட அவள் செத்துப்போகலாம்" என்று ஆக்ரோஷமாக கூறிவிட்டு அழுதுகொண்டே திரும்பி சென்றார் அந்த மனிதர்.

அன்று நள்ளிரவில் தொடர்ச்சியாக அடுத்தடுத்ததாக ஒரு இஸ்லாமியரும் ஒரு முதலியாரும் வந்து பிரசவம் பார்க்கும்படி ஐடாவை அழைத்தார்கள்.

ஐடா அவர்களிடம் தந்தையை கூட்டிச்செல்லும்படி சொன்ன ஒவ்வொரு முறையும் பதறிப்போனார்கள். அப்போது தான் பிரசவம் பார்க்க ஆண் மருத்துவருக்கு அனுமதி இல்லை என்பதும் அது ஒரு இந்திய சமூகக்கட்டுப்பாடு என்பதும் ஐடாவுக்கு புரிய ஆரம்பித்தது.

பிரசவத்தில் மனைவியை பறிகொடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை, ஆணுக்கு எவ்வகையிலும் பிரசவம் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். என்பதை அவர் அதிர்ச்சியுடன் புரிந்துகொண்டார். இது அந்த அமெரிக்க பெண்ணுக்கு ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது. யோசித்தபடியே தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலை வேளையில் ஐடாவின் வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் மூன்று சவ ஊர்வலங்கள் தொடர்ச்சியாக சென்றன. வீட்டுப்பணியாளரிடம் ஐடா, ‘அது என்ன ஊர்வலம்’ என்று விசாரித்தார்.
வேலூரின் முதல் ஆம்புலன்ஸ்

‘நேற்று நள்ளிரவில் நம்ம வீட்டுக்கு வந்த அந்த மூன்று பேரின் மனைவியரும் இறந்து விட்டார்களாம்.’ என்று பணியாள் சொன்னதைக்கேட்டதும் அது இடியாக அவருள் இறங்கியது.

உடனே அவர் அறைக்குள் ஓடிச்சென்று கதவை தாழிட்டுக்கொண்டு அழுதார். கடவுளிடம் அந்த அப்பாவி ஆன்மாக்களுக்காக பிரார்த்தித்துக்கொண்டார். பிரார்த்தனை முடிந்தபோது அவருள் ஒரு பெரும் போராட்டம் வெடித்தது. இந்த அப்பாவி மக்களின் துயர் துடைப்பதை விட்டு விட்டு ஆடம்பரமாக நான் வாழ நினைப்பது எவ்வளவு தூரம் ஆண்டவன் பார்வையில் சரியாக அமையும்? எனது குடும்பத்தவரைப்போல நானும் மருத்துவம் படித்து இங்குள்ள பெண்களை காப்பாற்ற வேண்டியது என் கடமை அல்லவா? என்ற கேள்விகள் எழுந்து அவருள் முட்டி மோதின. இறுதியில் அவர் தெளிவு பெற்றார். சட்டப்படிப்பை இடை நிறுத்திவிட்டு மருத்துவம் பயில்வது என்று தீர்மானித்தார். அந்தத்தீர்மானம் பிற்காலத்த்pல் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையாக தளைத்தோங்கும் என்பதை அவர் அப்போது கனவிலும் கருதியிருக்க மாட்டார். செயற்கரிய செயல்கள் எல்லாம் இப்படித்தானே ஆரம்பிக்கின்றன!

விடுமுறை முடிந்ததும் தன் தீர்மானத்தை தந்தையிடம் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்கு கப்பலேறினார் ஐடா. தன் மனமாற்றத்திற்கு நள்ளிரவில் அவரை நாடி வந்த

அந்த மூன்று அழைப்புகள் தான் காரணம் என்றும் அவை தேவ அழைப்பு என்றும் பின்னர் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உண்மைச்சம்பவம் தான் இன்று வேலூரில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் சி.எம்.சி மருத்துவமனைக்கு வித்திட்டது என்பதை உணரும் போது மனம் பரவசமடைந்து போகிறது.

ஐடா ஸ்கடர் அம்மையார் 1870 ஆம் ஆண்டு வேலூருக்கு அருகில் உள்ள ராணிப்பேட்டையில் உள்ள வீட்டில் பிறந்திருக்கிறார். இவரின் தாத்தா யாழ்ப்பாணத்தில் தமிழ் பண்டிதராக இருந்ததினால் ஐடாவின் தந்தையும் நன்றாக தமிழ் பேசக்கூடியவராக இருந்திருக்கிறார். அதனால் ஐடாவுக்கும் தமிழில் நல்ல புலமை இருந்திருக்கிறது.

1894ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்ற ஐடா 1895 ஆம் ஆண்டு ஃபிலடெல் ஃபியா பெண்கள் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில ஆரம்பித்தார்.

அமெரிக்காவிலும் அந்த நாட்களில் பெண்களுக்கு உயர் கல்வி தேவையில்லை என்ற நிலையே இருந்தது. அங்கேயும் கூட ஐடாவின் மருத்துவ படிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. போர்டின் பெண்கள் கிளைச்சங்க உறுப்பினர் செல்வி கேட், தந்த பத்து டொலர்களை முற்பணமாக செலுத்தி மருத்துவக்கல்வி சீட்டில் ஐடா அமர்ந்தார். 1898இல் நியுயோர்க் கார்னலர் மருத்துவ மனையில் சேவையாற்றத்தொடங்கினார். ஐடா இந்தியாவுக்கு திரும்பும் நாள் வந்தபோது ஐடாவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் வேலூரில் பெண்களுக்கு ஒரு மருத்துமனை தொடங்கலாமென டொக்டர் லூயிஸ் ஹார்ட் எழுதியிருந்தார். லூயிஸ் ஹார்ட் அமெரிக்காவிலிருந்து மிஷனரி மருத்துவராக தமிழகம் சென்றவர்களில் ஒருவர். அந்தக்கடிதத்தில் மருத்துவ மனை செலவுக்காக எட்டாயிரம் டொலரை திரட்டிக்கொண்டு வரும்படியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே அடுத்த கட்டமாக ஐடா, எட்டாயிரம் டொலரை தேடும் பணியில் இறங்கினார்.
நடமாடும் மருத்துவ சேவைக்காக மாட்டுவண்டியுடன் ஐடா


 அமெரிக்காவில் இயங்கிவந்த ஒரு மிஷனரியின் சங்கத்தலைவியான மிஸ்டேபரை சந்தித்து தனக்கு உதவி செய்யும்படியும் கோரிய அவர், இந்தியாவில் மக்கள் தொற்று நோய்களால் இறந்துகொண்டிருக்கும் அவலத்தையும் விளக்கிச்சொன்னார். அதற்கு மிஸ்டேபர், ம்.. பார்க்கலாம்.. என்றார். வெறுங்கையுடன் திரும்பிய ஐடாவுக்கு இரண்டு நாட்களில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை மிஸ்டேபரின் மைத்துனர் ஷெல் எழுதியிருந்தார். உடனே தன்னை எந்து சந்திக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே ஐடா ஷெல்லை சந்திக்கச்சென்றார். ஐடாவை ஷெல் "அன்று நீங்களும் மிஸ்டேபரும் பேசிக்கொண்டிருந்ததை நான் பக்கத்து அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். என்னிடமும் அந்த விடயத்தை சொல்லுங்கள்" என்றார் அவர். ஐடாவும் இந்திய மக்கள் படும் கஷ்டங்களையும் சுகாதார பிரச்சினைகளையும் அவர்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளையும் விளக்கினார். ஐடாவின் தைரியத்தையும் மனித சமுதாயத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் உணர்;துகொண்ட ஷெல்லுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. உடனே மேசையிலிருந்த காசோலையில் பத்தாயிரம் டொலரை எழுதி என் மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக இதை தருகிறேன் என்று கூறியபடியே காசோலையை நீட்டினார். ஐடா இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது இதைத்தான் என்பது அவருக்கு புரிந்தது. இது தெய்வ சங்கல்பம் என்று நினைத்தபடியே காசோலையை நன்றியுடன் ஐடா பெற்றுக்கொண்டார். எட்டாயிரம் டொலரை எப்படித்தேடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு தனி நபரிடமிருந்து பத்தாயிரம் டொலர் கிடைப்பது என்பது சாதாரண விடயமா என்ன! சந்தோசத்தால் ஐடா திக்குமுக்காடி போனார். மேலும் மருத்துவமனைக்கு தேவையான பொருட்களையும் மிஸ்டர் ஷெல் தனது சொந்த செலவிலேயே வாங்கிக்கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்ட ஐடா அவருடைய தோழி ஆனி ஹாங்க்கையும் அழைத்துக்கொண்டு தமிழகம் வந்தார்.

வேலூரில் ஊரிசு கல்லூரிக்கு பக்கத்தில் ஒரு இடம் வாங்கி அங்கே மருத்துவ மனை கட்டும் பணியில் இறங்கிய ஐடா தனது தந்தையின் வெறிச்சோடிக்கிடந்த டிஸ்பென்சரியை திறந்து அங்கே ஒரே ஒரு கட்டிலோடு தமது மருத்துவ பணிகளை தொடங்கினார். சில நாட்களில் ஐடா கை ராசிக்கார டாக்டரானார். பிறகு நாற்பது கட்டில்களோடு மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவ மனை அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் கண்டது.


மேலும் வாசிக்க…

வேலூர் சி.எம்.சி- 03

No comments:

Post a Comment