Saturday, November 17, 2012

கண்டி மன்னர் பரம்பரை-02

கண்டியை ஆட்சிசெய்த நாயக்க அரசர்கள்……        

 

வேலூரிலிருந்து மணி ஸ்ரீகாந்தன்

 

கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழ் பேசும் தெலுங்கு நாயக்கர் என்பது பலரும் அறிந்த ஒன்று.  இக் கண்டி இராச்சியம் 1739 ம் ஆண்டு தெலுங்கு நாயக்க வம்சத்தினரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் நான்கு நாயக்க மன்னர்கள் கண்டி இராச்சியத்தை அடுத்த 76 ஆண்டுகளாக 1815 ஆண்டு வரை ஆண்டனர். கண்ணுசாமி என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனே கடைசி மன்னன். ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டு, வேலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன்

கண்டியில் அமைக்கப்பட்ட 'கந்த உடரட்ட' ராச்சியம், 341 ஆண்டு வரலாற்றை கொண்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சேன சம்பத விக்கிரமாகு 1474 ல் கண்டி அரசை அமைத்தான். இவன் கம்பளையை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவன் தொடர்ச்சியாக 37 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தான். அதன் பிறகு, ஜயவீர விக்கிரமபாகு  (1511 -1521), கரலியத்த பண்டார (1521 - 1582), முதலாம் ராஜசிங்கன் (1582 - 1592), முதலாம் விமலதர்மசூரியன் 1592 - 1604), சேனரத்ன 1604 - 1635), இரண்டாம் இராஜசிங்கன் (1635 - 1687), இரண்டாம் விமலதர்மசூரியன் (1687 - 1707), வீர விக்ரம் நரேந்திரன் (1707 - 1739), உள்ளிட்ட சிங்கள மன்னர்கள் கண்டியை ஆட்சிசெய்து வந்தார்கள். இம்மன்னர்கள், மதுரை மன்னர் குடும்பங்களில் இருந்தே பெண் எடுத்து மணந்து கொள்வதை தமது குடும்ப வழக்கமாக்கிக் கொண்டனர்.  இதன் காரணமாகவே கண்டியில் நாயக்கர் செல்வாக்கு வேரூன்றி  வளரத் தொடங்கியது.

சிங்கள மன்னனான ஸ்ரீவிக்கிரம நரேந்திரனுக்கு நாயக்க வம்சத்து பட்டத்து ராணியாரின் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டாததால், பட்டத்த ராணியின் தம்பியான பாலவிஜயனை  25 வயதில் ஸ்ரீவிஜயராஜசிங்கன் என்ற பெயரில் அரசனாக்கினான். இந்த விஜயராஜசிங்கன்தான் கண்டியின் முதலாவது நாயக்கர் வம்சத்த மன்னன்.

நரேந்திர தனது 50 வயதில் 1739 ம் ஆண்டு மே மாதம் 27 ம் திகதி இறந்து விட, அவனோடு சேன சம்பந்த விக்கிரமபாகு  அமைத்த 265 ஆண்டு கால சிங்கள இராச்சியம் அஸ்தமித்து, நாயக்கர் ஆட்சி ஆரம்பமானது.
மன்னரால் அமைக்கப்பட்ட பேர வாவியுடன்
 காட்சியளிக்கும் கண்டி அரண்மனை வளாகம்

பொலன்னறுவை, அநுராதபுர அரசுகளை, தென்னிந்திய சோழ மன்னர்கள் படையெடுப்பின் மூலமாகவே கைப்பற்றினார்கள். ஆனால் கண்டி இராச்சியம் தானாகவே இந்திய நாயக்கர் மடியில் வந்து விழுந்திருந்தது. கண்டியில் நாயக்கர் ஆட்சி தொடங்கியிருந்தாலும், அதை ஆட்சி செய்த மன்னர்கள் பௌத்தர்களாகவே விளங்கினார்கள். சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு, தங்களின் பெயரையும் சிங்களப் பெயராக  மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தார்கள். கடைசிவரை சிங்கள மன்னர்களாகவே விளங்கினார்கள்.
நாயக்கர்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கர்கள். இவர்கள் மதரைக்கு வந்து, தமிழ் மன்னர்களாகவே அவர்கள் நல்லாட்சி நடத்தி வந்திருக்கிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில்  வட இந்தியாவில் வலிமை பெற்றிருந்த முஸ்லிம் பேரரசுகள் தென்னாட்டையும் தம் வசப்படுத்துவதில் முனைப்பாக இருந்தன.  அவர்களை எதிர்க்க (1509 - 1530) வரையும் கிருஷ்ண தேவராயனால் அமைக்கப்பட்ட விஜயநகர பேரரசு முஸ்லிம் படையெடுப்பை தடுத்து நிறுத்தியது. 1336 அளவில் ஆந்திராவில் உருவாகிய விஜயநகர பேரரசு, பிறகு படிப் படியாக தென்னிந்தியா முழுவதும் பரவியது. அப்போது வட திசையில் இருந்து மதுரையில் குடியேறியவர்களே வடுகர்கள். வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒரு வடுகன்தான். இவர்களின் தாய்மொழி தெலுங்காக இருந்தது. பேச்சு மொழி தமிழாகவே இருந்தது.
கண்டியின் முதல் நாயக்க மன்னன் விஜயராஜசிங்கன், மதுரையை ஆண்ட பங்கார நாயக்கனின் தம்பி நரேனப்பனின் மகளை திருமணம் செய்துகொண்டான். இத் திருமணத்தின் பின், பட்டத்து ராணியின் தந்தை நரேனப்பன், சித்தப்பா ராமகிருஷ்ணப்பன் மற்றும் பரிவாரங்கள் கண்டியிலேயே குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய தெருதான் குமரப்பா தெரு. அந்தத் தெருவில் நாயக்கர் குடும்பங்களே வசித்து வந்தன. இன்று அந்தத் தெரு மலபார் தெரு என்று அழைக்கப்படுகிறது.
அரண்மனை தோற்றம்

விஜயராஜசிங்கன் (1739 - 1747) மறைந்ததும், கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் ஆட்சிக்கு வந்தான். கண்டியை நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமையும் இவனுக்கு இருக்கிறது. (1747 - 1782) வரை தொடர்ச்சியாக 35 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறான். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் 35 ஆண்டு கால ஆட்சி, கீர்த்தி மிக்க நல்லாட்சியாகவே அமைந்திருக்கிறது. மன்னர் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்ட கண்டி மக்கள், கண்ணீர்விட்டு அழுததாக, வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மன்னரின் மறைவின்பின், நரேனப்பனின் மகன்மார்களில் ஒருவரான ராஜாதி ராஜசிங்கன்  (1782 - 1798) வரை  ஆட்சிசெய்தான்.

1796 ம் ஆண்டுகளில் இலங்கையில் கண்டியைத் தவிர அனைத்து பகுதிகளையும் பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியிருந்தது. ராஜாதி ராஜனோடு, நாயக்கர் ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டு, தானே கணடி மன்னனாக முடிசூட்டிக்கொள்ளலாம் என்பதே கண்டி இராச்சியத்தின் முதல் அமைச்சராகவிருந்த பிலிமத்தலாவையின் திட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் மன்னரும் மரணப்படுக்கையில் கிடந்ததால், ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் முதலமைச்சர் பிலிமத்தலாவையிடம் இருந்தது. பிலிமத்தலாவை மன்னராக ஆசைப்பட்டாலும், எனைய சிங்கள பிரதானிகள் அதற்கு இடம் கொடுக்கப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால் மன்னரின் மச்சானான 16 வயதான கண்ணுச்சாமிக்கு முடிசூட்டி மன்னராக்குவதென்றும், பின்னர் அவனை விரட்டிவிட்டு, சிம்மாசனம் ஏறலாம் என்றும் திட்டமிட்டார் பிலிமத்தலாவை. சின்னப் பையன் என்பதால், அவனைக் கவிழ்ப்பதில் பிரச்சினை ஏற்படாது  என பிலிமத்தலாவை நம்பினார்.

ராஜாதி ராஜசிங்கனுக்கு நான்கு மனைவிமார்கள். அவர்கள் யாருக்குமே  குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் மன்னரின் பட்டத்த ராணிக்கு கவலை ஏற்பட்டது. கண்டி குமரப்பா வீதியில் வசிக்கும் நாயக்க குமாரர்கள் யாரையும் ராணிக்குப் பிடிக்க வில்லை. எனவே, மதுரையில் வசித்து வந்த தனது தங்கை சுப்பம்மாளையும், மகன் கண்ணுச்சாமியையும் கண்டிக்கு வரும்படி அவள் அழைப்பு விடுத்தாள். இராமநாதபுரம், தூத்துக்குடி  வழியாக இலங்கை வந்து, கண்டியை அவர்கள் சென்றடைந்தார்கள்.

அவ்விருவரும் குமரப்பா வீதியில் தங்குவதை அரசி விரும்பவில்லை. எனவே, பேராதனையில் ஒரு தனி வீட்டில் அவர்களைத் தங்கவைத்தாள். ஏழு வயது சிறுவனாக கண்டிக்கு வந்த கண்ணுசாமியை மன்னருக்குப் பிடித்துவிட்டது. அதற்குப் பிறகு பட்டத்து ராணியின் ஏற்பாட்டில், மல்வத்தை பீட பிக்குமார்களிடம் கண்ணுசாமியை அனுப்பி சிங்கள மொழியையும், பௌத்த தர்மத்தையும் போதிக்கச் செய்தாள். பிறகு மன்னரின் மரணத்தோடு, பிலிமத்தலாவையின் ஆசீர்வாதத்தோடு கண்ணுசாமி ஆட்சிபீடத்தில் அமர்ந்தான்.

அவன் ஆட்சிபீடத்தில் அமர்ந்ததும், அவனைச் சுற்றி சிங்கள பிரதானிகள் அவனுக்கு ஆலோசனைகள் வழங்க அரம்பித்தார்கள். கண்ணுசாமியும் ராஜதந்திரங்களைக் கற்றுக்கொண்டதோடு, பிடி கொடுக்காமல் ஆட்சி செய்யப் பழகிக்கொண்டான். எனவே, பிலிமத்தலாவயின் திட்டம், ராஜசிங்கனிடம் செல்லுபடியாகவில்லை.

1798 ல் ஆரம்பித்த கண்டி கடைசி மன்னனின் பதினேழு வருட கால ஆட்சி, 1815 ல்தான் முடிவுக்கு வந்தது. முடிவுக்கு வந்தது ஆட்சி மட்டுமல்ல.. அரசர்களின் ஆட்சியும்தான்…

மேலும் வாசிக்க....      வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை - 3                   

3 comments:

 1. கண்டிச் சிங்களவர் மத்தியில் இன்னும் பாவனையில் இருக்கும் 'அந்தர தெமழ' பற்றியும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

  பேச்சுவழக்கில் ஏதேனும் புரியாவிடில் அந்தர தெமழ என்பார்கள். அன்றைய காலத்தில் நாயக்கர்களை ஆந்திராவில் இருந்து வந்த தமிழர்கள் என கண்டியின் சுதேசிகள் எண்ணினார்கள். நாயக்கர்கள் பேசிய மொழி அவர்களுக்கு புரியவில்லை. அதை அந்தர தெமழ என்றார்கள். இன்று புரியாத சிங்களத்தை அந்தர தெமழ என உவமிக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள கட்டுரை.. வாழ்த்துகள்!

   Delete
 2. மிகவும் அருமை . நாள் சிங்கள் ஊடகங்கள் மானை குடிகாரனாக சித்தரித்து. பிரித்நியர் பிரித்து ஆட்சியை கைபற்றுவதில் வீர்கள். அந்த தந்திரத்தை பாவித்து கண்டி இராச்சியத்தை கைப்பற்றினறாக்கள்

  ReplyDelete