Thursday, November 22, 2012

வேலூர் சி.எம்.சி.-01

இலங்கையில் முதல் மருத்துவமனை அமைத்த ஜோன் ஸ்கடர்
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் முன்னோடி-மணி ஸ்ரீகாந்தன் (வேலூரில் நேரடியாகத் திரட்டிய தகவல்களுடன்.


இந்தியா பண்டைய நாகரீகத்தின் சுவடுகளை இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மையான நாடு. அரசர் கால கோயில்கள் தொடங்கி கோல்டன் டெம்பல் வரை மலைக்க வைக்கும் எவ்வளவோ விஷயங்களை தன்னகத்தே கொண்ட நாடு அது. அதன் சிறப்புகளில் தமிழகம் வேலூரில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவையாற்றிவரும் (cmc) மருத்துவமனையும் ஒன்றாகும்.
ஐடா ஸ்கடர்

தனியார் மருத்துவமனைகள் இந்தியாவிலும், இலங்கையிலும் தோன்றுவதற்கு முன்னர், அதி உயர் சிகிச்சைக்காக நோயாளர்கள் நாடிச் சென்ற ஒரே இடம் சி.எம்.சி. மருத்துவமனைதான்.
ஆசியாவில் புகழ்பெற்ற மருத்துவமனையாக விளங்கும் சி.எம்.சி. மருத்துவமனையின் முதல் தொடக்க பயணம் யாழ். மண்ணிலிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது. இது பலரும் அறியாத ஒரு தகவல்.

உலகிலேயே மிஷனரி பணிகளுக்காக பெருமளவில் பணியாற்றிய மிகப் பெரிய குடும்பம் ஸ்கடர் குடும்பம்தான். இது உலக மருத்துவ வரலாற்று சாதனையாகவும் கருதப்படுகிறது. 1818 ம் ஆண்டளவில் நிவ்யோர்க்கில் பிரபலமான மருத்துவராக பணியாற்றி வந்த ஜோன் ஸ்கடருக்கு 'முழு உலகையும் சுகப்படுத்தல்' என்ற தலைப்பிலான ஒரு துண்டு பிரசுரத்தை படிக்க நேர்ந்தது. அதில், உலகில் அறுநூறு கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்றும், அவர்களில் அநேகர் நோய்களால் பாதிக்கப்பட்டு மரணித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை அவர் வாசித்தார். இது அவருக்கு புதிய தகவலாக இருந்தது. இப்படியெல்லாம் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்கு மலைப்புக்குரிய விஷயம்.
யாழ்ப்பாணம் வந்த முதலாவது ஸ்கடர்

மக்கள் பட்டினியாலும், நோயாலும் ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் செய்தி. மருத்துவர் என்ற வகையில் அவரை மிகவும் பாதித்தது. அவர்களை சுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர், தன்னை மிஷனரியில் இணைத்துக்கொண்டார். கிறிஸ்தவ மிஷனரிகள்தான் அன்று கடல் கடந்த நாடுகளில் மருத்துவ சேவைகளை ஆற்றி வந்தன.
தனது மனைவி, பிள்ளைகளுடன் அவர் 1819 ம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் திகதி அமெரிக்காவின் பொஸ்டனிலிருந்து 'இந்துஸ்' என்ற கப்பலில் கல்கத்தாவை நோக்கி பயணமானார். சேவையே அவர் நோக்கமாக இருந்தது.

கப்பலில் ஆறு மாத பயணம்… கல்கத்தாவின் தரையை ஜோன் ஸ்கடரின் பாதம் தொட்ட போது, அவரின் பெண் குழந்தை மரியா வயிற்றுப் போக்கினால் இறந்துவிட்டது. ஜோன் ஸ்கடருக்கும் அவரின் மனைவிக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் சுட்டெரிக்கும் வெய்யில், புதிய கலாச்சாரம், மொழி, உணவு போன்றவை அக்குடும்பத்துக்கு ஒத்துக்கொள்வதாக இல்லை. கொஞ்ச காலம் அங்கே வாழ்ந்த அவர்கள், தாம் இந்த மக்களைப் பற்றி நிறைய கற்க வேண்டும்… இங்கு வாழ பழகிக்கொள்ள வேண்டும்.. என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
ஜோன் மற்றும் துணைவியார் ஹாரியட்
(ஐடாவின் தாத்தா, பாட்டி )

இலங்கைக்குச் செல்லுங்கள் என்று அங்கே அறிவுரை வழங்கப்பட்டது. அதை அக்குடும்பம் ஏற்றுக்கொண்டது. இந்திய சீதோஷ்ன நிலையை ஒத்த இலங்கைக்குச் சென்று கொஞ்ச காலம் தங்குவது என்று முடிவு செய்தார்கள். அதன்படி கல்கத்தாவிலிருந்து இலங்கை வந்தார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சென்றார்கள். 1819 டிசம்பர் 17 ம் திகதி, யாழ்ப்பாணம் தௌ;ளிப்பளையில் குடியேறினார்கள். சில மாதங்கள் அங்கே கழித்துவிட்டு, 1820 ல் பண்டத்தரிப்புக்கு வந்தார்கள். அங்கிருந்த கோவிலையும், பக்கத்திலிருந்த வீட்டையும் தமது மருத்துவ வேலைகளுக்காக பயன்படுத்தினார்கள்.

இதற்கிடையே இரண்டு குழந்தைகள் நோய் கண்டு இறந்து போனார்கள். எனினும் ஜோன் ஸ்கடர் மனம் தளரவில்லை. தன் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டார். இவரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலருக்கு மருத்துவப் பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் முதல் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, தாதியர் பயிற்சி நிலையம், மாட்டு வண்டி அம்புலன்ஸ் சேவை என்பன ஸ்கடராலேயே ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது மருத்துவமனை:
ஸ்கடர் பண்டத்தரிப்பில் அமைத்தது (1820)

1821 ல் யாழ். வெஸ்லியன் ஆலயத்தில் ஜோன் ஸ்கடர் மதகுருவாக திருநிலை படுத்தப்பட்டார். பிறகு 1833 ல் இவர் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டார். 1820 ல் ஜோன் ஸ்கடர் பண்டத்தரிப்பில் நிறுவிய வெஸ்டர்ன் மெடிக்கல் மிஷனரிதான், ஆசியாவின் முதல் மருத்துவ மிஷனரி. வேலூர் சி.எம்.சி.க்கு  முன்னோடியாக விளங்கியது இந்த மருத்துவமனைதான்.  யாழ்ப்பாணத்தில் ஜோன் ஸ்கடருக்கு  மொத்தம் 13 பிள்ளைகள். நால்வர் இறந்துவிட. மிகுதி ஒன்பது
பேரும் - ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் - இந்தியாவுக்கு வந்து மிஷனரி சேவையில் ஈடுபட்டார்கள். இவர்களில் (ஐவர்) மருத்துவர்களாக சேவை புரிந்தார்கள். இதனால்தான் மிகப் பெரிய மிஷனரி குடும்பம் என ஜோன் ஸ்கடரின் குடும்பம் அழைக்கப்படுகிறது.
ஜோன் ஸ்கடர் ஐடாவின் தந்தை

தனது கடைசி கடைக்குட்டி  பையனுக்கு 'ஜோன் ஸ்கடர்' என்ற தனது பெயரையே ஜோன் சூட்டியிருந்தார். மகன்கள் அனைவரும் இந்தியா முழுவதும் மருத்துவ, ஆன்மீக பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார்கள். அவர்களில் கடைக்குட்டி ஜோன் ஸ்கடர் தமிழகத்தில் தமது பணிகளை மேற்கொண்டிருந்தார். அவரின் கடைசி மகள் ஐடா ஸ்கடர்தான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை ஆரம்பித்தவர்.

ஐடா ஸ்கடர் அமெரிக்காவின் நோர்த்பீள்ட் கல்லூரியில் சட்டம் பயின்று கொண்டிருந்தவர். ஸ்கடர்களின் இறைச் சேவை, மருத்துவ சேவையில் அவருக்கு நாட்டம் இருக்க வில்லை. சட்டத்தரணியாக வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

புடிப்பு முடிந்ததும் ஒரு அழகிய ஆண் மகனை மணந்துகொண்டு, சந்தோசமாக வாழ வேண்டும்.. என்பதுதான் ஐடாவின் கனவு.  "உன் உடம்பில் ஓடுவதே மிஷனரி ரத்தம்தான். நீயும் மிஷனரியாகத்தான் ஒரு நாள் வரப் போகிறாய்." என்று ஐடாவின் கல்லூரித் தோழி ஃப்ளோ ஐடாவைப் பார்த்து ஒருநாள் கிண்டலடித்திருக்கிறார். ஐடா சிரித்துவிட்டு சும்மாயிருந்து விட்டார்.
சி.எம்.சி பழையத்தோற்றம்

1877 ம் காலப் பகுதியில் இந்தியாவில் பட்டினியும், பஞ்சமும் கோரத்தபண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்களை பஞ்சம் காவு கொண்டது.

இந்தியாவில் அதிகம் வெய்யில் சுட்டெரிக்கும் இடம் வேலூர். அங்கே தமது பணிகளை தளராது  செய்து கொண்டிருந்தார் ஜோன் ஸ்கடர். வேலூர் மிஷனரி பக்கத்தில் பசியால் துடிக்கும் குழந்தைகளுக்கு இவர் பிஸ்கட் கொடுப்பாராம். ஆனால் அதை வாங்கி வாயில் போட்டு சாப்பிடக்கூட அந்த குழந்தைகளுக்கு கைகளில் சக்தி இருக்காதாம். எனவே அந்த பிஸ்கட்டுகளை தூளாக்கி குழந்தைகளின் வாயில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டியிருக்கும். குழந்தைகள் இப்படியென்றால், வயதானவர்களின் நிலை இன்னும் மோசம். புழுதி படிந்துக் கிடக்கும் வேலூர் வீதிகளில் உடல் மெலிந்து, நடை தளர்ந்து போன மனிதர்கள் தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இன்றைய சி.எம்.சி


இது தவிர, கொள்ளை நோய் தன் பங்குக்கு கிராமங்களை கொத்து கொத்தாக அழித்துக் கொண்டிருந்தது. தொற்று நோய்கள் என்றாலே ஏதோ தெய்வ குற்றம் என்று கருதிய மக்கள், உடலுக்கு மருத்துவம் பார்ப்பதை விட்டு விட்டு சாமிக்கு மிருகங்களை பரிகாரமாக பலி கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். இவைகளை சமாளிக்க முடியாமல் ஜோன் ஸ்கடர் தவித்தார்.

அந்த சமயத்தில் ஜோன் ஸ்கடரின் மனைவிக்கு உடல் நிலை  சரியில்லாமல் போக, அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த ஐடா ஸ்கடருக்கு தந்தி அனுப்பினார்.

 மேலும் வாசிக்க…

வேலூர் சி.எம்.சி-02

1 comment:

  1. There are now more than 7,500,000,000 people on planet Earth. (UN)

    It took until the early 1800s for the world population to reach one billion. Now we add a billion every 12-15 years. (UN)

    ReplyDelete