Saturday, October 27, 2012

(சிறப்பு நேர்காணல்)

தமிழ் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அக்கரைப்பற்று இளைஞர்

சந்திப்பு-மணி ஸ்ரீகாந்தன்.(வண்ண வானவில் ஒக்டோபர் இதழ்)

ரயிலில் டிக்கட் வாங்காமல் திருட்டுத் தனமாக சென்னைக்கு சென்று அங்கே வி.ஜ.பி.ஆனவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. கர்நாடகத்தின் தலைக்காவிரி தமிழகத்திற்கு கொண்டு வந்த கலைக்காவிரி ரஜினியும் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்து வி.ஐ.பி. ஆனவர்களில் ஒருவர்தான். இதேசமயம் கடல் கடந்த நாடுகளிலிருந்து முறையாக டிக்கட் பெற்று தமிழகம் சென்று சினிமாவில் ஜொலித்தவர்கள் பலர். 


அதில் நம் நாட்டிலிருந்து சென்றவர்களில் சந்திரபாபு, பாலுமகேந்திரா, வி.சி.குகநாதன், நடிகை சுஜாதா, ஏ.ஈ.மனோகரன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களுக்குப் பிறகும் நம் நாட்டிலிருந்து சென்று சிறு, சிறு பாத்திரங்களில், சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். படங்களை இயக்கவும் செய்கிறார்கள். எனினும் இவர்களில் பெரும்பாலானோர். தங்களை சிலோன்காரன் என்று அடையாளப்படுத்துவதில்லை. எங்கே தான் வேற்று நாட்டவர் என்று தெரிந்தால் தமிழகம் தன்னை ஓரம் கட்டி விடுமோ என்ற பயம் தான் காரணம். ஆனால் 'ஆடுகளம்' இணை இயக்குனராக பணியாற்றிய ஹசீன் இதற்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார்.


கிழக்கு மாகாணம் அக்கறைப்பற்றிலிருந்து தமிழகத்திற்கு சினிமா வாய்ப்புத் தேடி புறப்பட்டவர்களில் இவரும் ஒருவர். தங்கர் பச்சானின் 'தென்றல்', 'ஒன்பது ரூபா நோட்டு' வெற்றிமாறனின் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றி விட்டு அடுத்து தானே ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார் இந்த இளம் இயக்குனர்.
"தமிழ் சினிமாவில் ஏதாவது செய்யனும் என்பது என் நீண்ட நாளைய கனவு. பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே சினிமா பைத்தியம் எனக்கும் பிடித்திருந்தது. அக்கறைப்பற்றில் நான் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அதனால் பாடசாலை படிப்பு முடிந்தவுடன் என் இலக்கு சென்னையை நோக்கியே இருந்தது. எனினும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் என் சினிமா ஆர்வம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சென்னையில் கால் பதித்தேன். சினிமாவில் நான் பார்த்த என் கனவு சென்னையை நேரில் பார்க்க பிரமிப்பாக இருந்தது. நாயகன், தளபதி படங்களின் தாக்கம் காரணமாக என் மனதில் மணிரத்தினத்திற்கு என்று அழிக்க முடியாத ஒரு தனியிடம் இருந்தது. சென்னையில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய நான் மணிரத்தினத்தை பார்க்க அவரின் அலுவலகம் நோக்கிச் சென்றேன். என் மனம், வானத்தில் பட்டாம் பூச்சியாக பறந்துக் கொண்டிருந்தது. மணிரத்தினம் என்பவர் சாதரண ஒரு மனிதரா என்ன! தமிழகத்தின் மிகப் பெரிய இயக்குனர்களில் ஒருவர் அல்லவா! அவரை சந்திக்க செல்வதென்பது சும்மாவா! அவரின் அலுவலகத்தை நெருங்கிய போது அந்தக் கட்டடத்தின் பிரதான வாயில் என்னை உள்ளே செல்ல விடமால் தடுத்தது. அலுவலக்தில் இருந்த மணிரத்தினத்தின் உதவியாளர்கள் என்ன ஏது என்று விசாரித்தனர். நான் அவரை பார்க்க வந்திருப்பது பற்றிய விபரத்தை சொன்னேன். ஒரு நமுட்டு சிரிப்போடு அந்த உதவியாளர் உள்ளே சென்று திரும்பி வந்தார்.

"அவரை இப்போது பார்க்க முடியாது. அவர் இல்லை. அவரை சந்திப்பது என்றால் முன் அனுமதியோடுதான். வரணும் இப்படியெல்லாம் வந்து சந்திக்க முடியாது" என்று முகத்தில் அறைந்த மாதிரி சொன்னார். நான் வாடிப்போய் விட்டேன். ஏமாற்றத்தோடு என் அறையை நோக்கி நடந்தேன். அவர்கள் அப்படி சொன்னதிலும் தவறில்லை தான். எட்டுக்கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் குறைந்த பட்சம் ஐம்பது லட்சம் ரசிகர்களாவது மணிரத்தினத்தை பார்க்க விரும்புவார்கள். அவர்கள் அனைவரையும் அவர் சந்தித்துக் கொண்டிருந்தால் வேறு வேலைகளைப் பார்ப்பது எப்படி? எனவே எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு அறையில் வந்து படுத்தேன். அதன் பிறகு எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மூலமாக தங்கர்பச்சானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் இலங்கையில் எழுதி வெளியிட்ட ஒரு நாவலையும் அவரிடம் கொடுத்து பேசினேன். அதைப் பார்த்தவர். நன்றாக இருப்பதாக பாராட்டி விட்டு, எனக்கு அவரின் படத்தில் வாய்ப்பு தருவதாக சொல்லி அனுப்பினார்.

பிறகு ஒரு நாள் எனக்கு தங்கரிடம் இருந்து 'தென்றல்' படத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. அன்றுதான் என் நீண்ட கால கனவின் ஒரு பகுதி நனவானது தமிழ் சினிமா உலகு என்ற விசாலமான வெளியில் கால் பதித்தேன். அதன் பின்னர் எனக்கு வேலு பிரபாகரனின் நட்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் வேலு பிரபாகரனும் ஒருவர். எனக்கு அவர் வீட்டிலேயே இடமும் தந்து எனக்கு சாப்பாடு போட்டவர் அவர்.

பிறகு மீண்டும் தங்கர்பச்சானின் இயக்கத்தில் 'ஒன்பது ரூபா நோட்டு' படத்திலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நான் சென்னையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது என்னோடு சில இளைஞர்களும் தங்கி இருந்தார்கள். அவர்களில் இயக்குனர் ராதா மோகனின் உதவிஇயக்குனர்கள். மற்றும் 'பசங்க' இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோரும் இருந்தார்கள். பிறகு வெற்றி மாறனும் ரூம் மேட்டாக இருந்தார். அவருடனாக நட்பு என்னை 'பொல்லாதவன்' படத்தின் உதவி இயக்குனராக்கியது. இதைத் தொடர்ந்து அவரின் 'ஆடுகளம்'  திரைப்படமும் எனக்கு நல்ல களமாக அமைந்தது" என்று தன் சினிமா பிரவேசம் பற்றி பேசினார் ஹசீன்.

இந்த இளைஞன் தமிழ் சினிமாவின் சிகரத்தை தொட்டு விட இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். இப்போது நல்ல கதையுடன் காத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தந்தால் ஹசீன் ஒரு நல்ல படைப்பு ஒன்றை தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் தருவார். படைப்புகள் இன்று புதியவர்களிடம் தான் பேசப்படும் படங்களாக இருக்கின்றன. இந்த இஞைனும் ஒரு நாள் சாதிப்பார்.  தொடுவான் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது!


No comments:

Post a Comment