Monday, December 31, 2012

ஒரு நாள் ஒரு பொழுது -02

விஸ்வரூபம் எடுத்த அப்பா...


மணி ஸ்ரீகாந்தன்

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை கலைத்துறையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்பவர் கே.சந்திரசேகரன். வானொலி, தொலைக்காட்சி, சினிமா என அனைத்து துறைகளிலும் இன்று வரை எந்த வித தடங்களும் இல்லாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்.


"சிறு வயதில் நான் ரொம்பவும் குறும்புக்கார பையன். வெளியே போனால் பிரச்சினையோடுதான் வீட்டுக்கு வருவேன். அதனால் என் பக்கம் நியாயம் இருந்தாலும் வீட்டில் எனக்குதான் அடி விழும். என்னை கே.சந்திரசேகரன் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் நான் சிறுவனாக இருந்த போது என்னை சந்திரபோஸ் என்றுதான் எல்லோரும் அழைத்தார்கள். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் பார்க்க கொழு கொழு வென்றிருப்பேன்.


பாடசாலை நண்பர்கள் 'தடியா' என்று அழைப்பார்கள். என்னை யாராவது தடியா என்று அழைத்தால் அவர்களை புரட்டிப் போட்டு அடித்து விட்டுதான் மறுவேலை பார்ப்பேன். ஒரு நாள் அப்படித்தான் என்னை ஒருவன் தடியா என்று சொல்ல நான் அவனை அடித்துப் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன். நான் வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே நான் அவனை அடித்த செய்தி என் வீட்டுக்கு வந்து விட்டது. வீட்டு வாசலில் அப்பா தடியுடன் காத்திருந்தார். என் அப்பா கையில் வைத்திருந்த அந்த தடியைப் பற்றியும் கூற வேண்டும். அது என் தாத்தா காலத்து தடி. அந்த தடியின் ஒரு பக்கத்தில் உள் பிடி பந்துபோல இருக்கும். அதைப் பிடித்துக் கொண்டு அடித்தால் தடி கையிலிருந்து நழுவாது... அந்த தடியைப் பார்த்ததும் என் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

Saturday, December 29, 2012

உபாலி செல்வசேகரனின் ஞாபக வீதியிலே…

"படுக்க இடம் கிடைக்காமல் ஜிந்துப்பிட்டி மைதான புல்தரையில் சுருண்டு கிடந்த அந்த நாட்கள்..."


 kzp =fhe;jd;


உபாலி செல்வசேகரன் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக கலைத்தறையில் ஜொலித்து கொண்டிருக்கும் நட்சத்திரம். மேடை நாடகம்,தொலைக்காட்சி, சினிமா என்று இரண்டு மொழிகளிலும் சுற்றிச் சுழன்று வருகிறவர். ‘புஞ்சி சுரங்கனாவி’ என்ற சிங்களப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரின் புகழுக்கு கூடுதல் பலம் சேர்த்தது ‘கோமாளிகள்’ என்ற மேடை மற்றும் வானொலி தொடர்தான். எஸ். செல்வசேகரான இவரை உபாலி என்கிற நாடறிந்த கலைஞனாக வலம் வரச் செய்தது. நகைச்சுவை நடிகரான இவரின் அந்தக் கால இனிக்கும் அனுபவங்கள் இங்கிருந்து தொடர்கிறது.

“அப்போ எனக்கு ஒரு ஆறு வயதிருக்கும். கொச்சிக்கடை சென் பெனடிக் ஸ்கூலுக்கு அப்பாதான் என்னை அழைச்சிட்டுப் போவார். அப்பாவை நான் ஐயான்னுதான் கூப்பிடுவேன். பாடசாலைக்கு போகும் முன் சென்லூசியஸ் ஆலயத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் ஐயா, அங்கே குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் தேவமாதாவை வணங்கிய பின் பாடசாலைக்கு செல்லும்படி கூறுவார். தினமும் நான் அப்படியே செய்வேன்.

என்னை சென் பெனடிக் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் தொப்பி அணிந்து ஒருவர் வருவார். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பார்க்கும் அவர் ‘தினமும் அய்யா உன்னை கூட்டிட்டு பாடசாலைக்கு வருகிறாரே நீ வளர்ந்த பிறகு ஐயாவுக்கு என்னடா செய்வே?” என்று கேட்பார். அதற்கு நான் ஐயாவை பார்த்துக்குவேன்’ என்று பதிலளிப்பேன்” என்று தனது சிறிது வயது அனுபவங்களை சொல்லத் தொடங்கிய உபாலி செல்வசேகரன் தனது பூர்வீகம் பற்றி இப்படி சொல்கிறார்.

‘எனது அப்பா பெயர் முத்தையா, அம்மா அந்தோனியம்மா. தூத்துக்குடி பெரிய கோயிலில்தான் அவர்களின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இலங்கையில் பாணந்துறையில்தான் நான் பிறந்திருக்கிறேன். எனது அப்பா பாணந்துறையில் இலக்கம் ஐந்து ஸ்டேசன் ரோட்டில் முத்தையா பிரதர்ஸ் என்ற பெயரில் ஒரு டெய்லர் கடையை நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்திருக்கிறார். அந்தக் கடையின் பின்புறத்தில்தான் எங்களின் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாண் பேக்கரியும் இருந்தது.

எங்கள் வீட்டை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சிங்களவர்கள்தான். அதனால் எனக்கு சிங்கள மொழியில் நல்ல பரிச்சியம் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் கொழும்பு கொட்டாஞ்சேனைக்கு வந்துவிட்டோம். அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். சென் பெனடிக்கிடில் தான் என் முதல் அரிவரி ஆரம்பமானது. மிஸிஸ் ஜோசப் தான் எனக்கு அகரம் கற்றுக் கொடுத்த ஆசான். அதன் பிறகு என் கல்விப் பயணம் தொடங்கியது. எல்லாப் போட்டிகளிலும் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஐந்தாம் வகுப்பிற்கு வந்த போது தான் ராசையா மாஸ்டர் எனக்கு பாடம் எடுக்க வந்தார். அவரை என்னால் மறக்கவே முடியாது. எனது வானொலி பிரவேசத்திற்கு காரணமாக இருந்தவர் அவர்தான்.

நான் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது சரவணமுத்து மாமாதான் இருந்தார். அப்போது எங்கள் பள்ளியில் படித்த பீ. சந்திரசேகரனும் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார். அன்று அவர் சுகயீனம் காரணமாக வரவில்லை. எனவே அவர் நடிப்பதாக இருந்த குட்டி நாடகத்தில் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது.
அடுத்தவாரம் சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு ஒரு பாராட்டு கடிதம் வந்தது. அதில் ‘சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என்று என்னை பாராட்டி எழுதியிருந்தார்கள். அப்போதுதான் நான் ரொம்பவும் திறமையாக நடித்திருக்கிறேன் என்பதை நானே உணர்ந்து கொண்டேன். நண்பனான பீ. சந்திரசேகரன் தற்போது தமிழ்நாட்டில் பிரபலமான டொக்டராக பணியாற்றி வருகிறார்.
இளம் வயதில்

சரவணமுத்து மாமாவிற்கு பிறகு சிறுவர் மலர் நிகழ்ச்சியை பேரம்பல மாமா நடத்தினார். அவர் எனது தீவிர ரசிகனாகவும் இருந்தார். நான் நடிக்கும் நாடகங்களை பார்த்து பாராட்டுவார்.

அதன் பிறகு எனது நாடகப் பிரவேசம், கே.எம்.வாசகர், லடிஸ் வீரமணி ஆகியோருடன் தொடர்ந்து. அதில் ஹிலேரியன் பெர்னாண்டோ,வி.கே.டி. பாலன் உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தேன். இதுவரை ஆறு தமிழ்படத்திலும் ஆறு சிங்களப் படத்திலும் நடித்திருக்கிறேன். வெறும் செல்வசேகரனாக இருந்த நான் உபாலி செல்வசேகரனாக மாறிய கதையையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

ஒரு முறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் வளர்ச்சிப் பணிக்காக ஒரு நகைச்சுவை நாடகம் செய்து தரும் படி கேட்டிருந்தார்கள். ராமதாஸ் எழுதி தயாரித்து இயக்கிய ஒரு நாடகத்தில் நான் உபாலி என்ற பாத்திரத்தில் நடித்தேன். அதில் நான் திறமையாக நடித்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்.

அதன் பிறகு என்னை உபாலி என்றே எல்லோரும் அழைத்தார்கள். எனது இந்த வெற்றிக்கு முதல்படியாக இருந்தவர் ராமதாஸ்தான். அவரை என்னால் மறக்க முடியாது. அவரின் கோமாளிகளில் நடித்த பிறகுதான் என் புகழ் நாடு முழுவதும் பரவியது. மரிக்கார், உபாலி, அப்புக்குட்டி என்ற பாத்திரங்களை உருவாக்கிய பெருமை ராமதாசையே சாரும். நல்ல ஒரு படைப்பாளர் அவர் எழுதும் நகைச்சுவை நாடகங்களின் ஒவ்வொரு எழுத்தும் சிரிப்பாகத்தான் இருக்கும் என்று ராமதாசை புகழ்கிறார் உபாலி.

சின்ன வயதிலே நீங்க எப்படி குறும்பா? என்று கேட்டேன்

“அய்யோ அதை எப்படிச் சொல்ல! ரொம்பவும் குறும்புக்கார பையன்தான் நான். என் அம்மாகிட்டே நிறைய அடிவாங்கியிருக்கிறேன். ஒரு தடவை என் அம்மா சங்கிலியால் என் கைகளை கட்டிப் போட்டு வெய்யிலில் உட்கார வச்சிட்டாங்க! எங்கவீட்டுக்கு பக்கத்தில ராணியக்கா வீடு இருந்தது. ஒருநாள் ராணியக்கா களிமண்ணில் அடுப்பு செய்து அதை வெயில்ல காயவைத்திருந்தாங்க. அந்த வழியால போன நான் ஒரு தடியை எடுத்து வெயிலில் காய்ந்து கொண்டிருந்த அந்த அடுப்பை உடைத்துவிட்டேன்.
நிற்பவர்களில்: உபாலி, கே. சந்திரசேகரன்,
ராமதாஸ், அப்புக்குட்டி

உடனே ராணியக்கா என் அம்மாவிடம் விசயத்தை சொல்ல, அம்மா என்னை அடிக்கத் துரத்த நான் ஜெம்பட்டா வீதி வழியாக ஓடித் தப்பினேன். அன்று முழுவதும் வீட்டிற்கு வராமல் அந்த தெருவழியே சுற்றிக் கொண்டிருந்தேன். மாலையான பின்னரும் வீட்டிற்கு போக வழி தெரியாமல் தெருவில் உட்கார்ந்திருந்தேன். நேரம் கடந்த பிறகு இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்குள் பூனைப் போல நுழைய அம்மா என்னை பிடித்து ஆத்திரம் தீரும் மட்டும் அடித்தார்.

ஒரு தடவை அம்மா என்னை ஒரு பொலிஸ்காரரிடம் சொல்லி அடிக்க வைத்திருக்கிறார். அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

ஜெம்பட்டா வீதியில் ஒரு பொலிஸ்காரர் இருந்தார். அவர் மாலை நேரங்களில் அந்த வழியாக ஒரு தடியை கையால் எடுத்துக் கொண்டு ஒரு சுற்று வருவார். அவரைக் கண்டதும் பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து புத்தகத்தை எடுத்து படிப்பது போல பாசாங்கு காட்டுவேன். யாராவது வெளியில் விளையாடுவதை கண்டால் பிடித்து மிரட்டுவார். அதனால் தான் அப்படியொரு பயம். ஒரு நாள் மாலையில் ஒரு வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது என் தங்கை ஜோதி ஓடிவந்தாள். ‘அண்ணா அம்மா படம் பார்க்க போறாங்களாம் உன்னை கூப்பிடச் சொன்னாங்க” என்றாள். அவள் அப்படி சென்னதை நம்பி விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவள் பின்னே ஓடினேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அந்த பொலிஸ்காரர் தடியோடு அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் படிக்காமல் ஊர் சுற்றுகிறாயா என்று கையில் வைத்திருந்த தடியால் இரண்டு அடி போட்டார். ‘அம்மா சொல்லித்தான் அண்ணே உன்னை ஏமாற்றி கூட்டிட்டுப் போனேன்” என்று என் தங்கை ஜோதி சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது. அந்த ஜோதி சின்ன வயதிலேயே இறந்துட்டா!” என்று சொல்லும் போது உபாலியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.
எங்களில் ஒருவன் படத்தில் டொன் பொஸ்கோ, உபாலி.

என் அம்மாவை பார்க்கும் போதெல்லாம் அப்போது எனக்கு அப்படியொரு வெறுப்பாக இருக்கும்! இப்போது நினைத்துப் பார்த்தால் அம்மா போட்ட அடிகள் என்னை ஒரு நல்ல பிரஜையாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பது புரிகிறது. என் குறும்பில் இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு ஆட்கள் வருவார்கள். எங்கள் வீட்டிற்கும் தூத்துக்குடியிலிருந்து என் உறவினர்களும் வருவார்கள். எனக்கும் படகு பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த மச்சானிடம் எனக்கு படகு பார்க்க ஆசை கூட்டிட்டுப் போங்க என்று கேட்க அவரும் என்னை அழைத்துக் கொண்டு போனார்.

கொழும்பு துறைமுகமாக இருக்கலாம், என்று நினைக்கிறேன். அங்கே படகை கட்டி வைத்தி ருந்தார்கள். தண்ணீரில் படகு ஆடிக் கொண்டிருந்தது என்னை படகுக்குள் தூக்கி விடுவதாக  மச்சான் கூற அதற்கு நான் இந்த படகுல எங்களுக்கு ஏற முடியும். ஏறுவோமே... என்று சொல்லிக்கொண்டு படகில் ஒரு காலை வைக்கப் படகு தண்ணீரில் விலகிப் போக தண் ணீருக்குள் தொப்பென்று விழுந்தேன்.

அடுத்த நொடியே படகுகாரன் என்னை தூக்கி எடுத்தான். சிறிது தாமதித்திருந்தாலும் விலகிப் போன படகு திரும்பி வந்திருந்தால் என் மண்டை சிதறியிருக்கும். எந்த சாமி புண்ணியமோ  நான் காப்பாற்ற பட்டேன்” என்று தனது குறும்பான அனுபவங்களை சுவைப்பட அடுக்கிய உபாலியிடம், காதல் பற்றி கேட்டோம்.

“எனக்கு குறும்பு தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் காதல் விசயத்தில் நான் ஒரு அப்பாவிங்க. நான் நாடகங்களில நடித்துக் கொண்டிருக்கும் போது அம்மாவிற்கு ஒரு பயம் வந்து விட்டது. எங்கே நான் யாரையாவது ஒருத்தியை இழுத்துக்கொண்டு போய் விடுவேனோ என்ற பயம். உடனே அவர் என்னிடம் ‘ஒரு பொண்ணு பார்த்திருக்கேன் கட்டிக்கிறியா? என்றார். நானும் எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் சொல்லிவிட்டேன். இரண்டாவது வாரத்தில் சென்லூசியஸ் ஆலயத்தில் எனக்கு திருமணம் நடந்தது.
.ஹமீத், அப்புக்குட்டி, உபாலி, ராமதாஸ்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் மணப் பெண்ணுக்கு மாலை மாற்றும் போதுதான் அவளை நேரில் பார்த்தேன். அப்படியொரு சமத்துப் பிள்ளை என் கல்யாணத்தை சரஸ்வதி மண்டபத்தில் மெனேஜரா இருந்த பத்மநாதன் நடத்தி வைத்தார். கலையுலக நண்பர்கள் பலர் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். மருதானை ‘டொனால்ட்’ ஸ்டீயோவில் திருமணப் படம் பிடித்தோம்” என்றவரிடம் பாடசாலை நண்பர்கள் பற்றி விசாரித்தோம்.

“நடராஜா சிவம் என் இனிய நண்பர்களில் ஒருவர். இன்னும் எனக்கு அவர் அப்படித்தான். அப்புறம் சென் பெனடிக்ட் கல்லூரியில் எனக்கு படிப்பித்த பத்மநாதன் ஆசிரியரை என்னால் மறக்க முடியாது. எனது கஷ்டங்களில் ஒரு தோழனாக இருந்து உதவி செய்தார். இன்று அவர் ராமகிருஷ்ண மிஷனில் சாமியாராக இருக்கிறார். அவரை நான் குறிப்பிடாவிட்டால் நான் நன்றி மறந்த மனிதராகி விடுவேன். எனது சொல்லும் உபாலி

“வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டதாக நினைத்து வருந்துகிறீர்களா?”

என்று கேட்டோம்

“ஆம் நிறைய காலத்தை வீணாக்கி விட்டேன். அதனால்தான் இன்னமும் வாடகை வீட்டில் வாழ வேண்டியிருக்கிறது’

இப்போதும் பயப்படுகிற விசயம்?

“என் மனசாட்சிக்குதான்!”

மறக்க முடியாத நபர்கள்?

கொஞ்சம் யோசித்து விட்டு “என் பெற்றோர்கள் தான்” என்றார் உபாலி. ரொம்பவும் சந்தோசமாக இருந்தது.

“ஐரோப்பிய நாடுகளில் கோமாளிகள் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டதுதான் மறக்க முடியாத சந்தோசமான நிகழ்வு. ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை நண்பர் ஹமீத் ஏற்பாடு செய்து தந்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அது ஒரு காலம் என்று இன்று நினைத்து ஏங்குவது?

என் நண்பர்களான மார்ட்டின் பெர்னாண்டோ விக்டர் ஆகியோருடன் ஜிந்துப்பிட்டியில் இருக்கும் அந்த சிறிய மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து ஸ்போர்ட்ஸ்மேன் சிகரட்டை திருட்டுத்தனமாக இழுத்திருக்கிறோம். விக்டர்தான் அந்த சிகரட்டை வாங்கி வருவார். சிகரட்டின் புகையை உள்ளிருந்து வானத்தை நோக்கி வட்ட வட்டமாக புகை விட்டுக் கொண்டிருந்த ஜிந்துப்பிட்டி மைதானத்தை கடக்கும் போதெல்லாம் அந்த பழைய ஞாபகம் வந்து வந்து போகிறது.

திருமணத்தில்...

அனுபவம் பேசுகிறது-04

கார்த்தீபன் மாஸ்டரின் விஸ்வரூபம்


மணி ஸ்ரீகாந்தன்


றைகம் மேற்பிரிவு குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத் திருவிழா வந்தாலே எங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் கோயில் தான் எங்கள் வாசஸ்தலம். அவ்வளவு பக்தியா என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. ஆலய வளவில் கும்பல் கும்பலாகக் கூடி நின்று சினிமா, அரசியல் என்று எல்லா விசயங்களையும் மணிக்கணக்கில் அலசிக் கொண்டிருப்பதுதான் எங்களுக்கு வேலை. நடுலே கொஞ்சம் கடலை, முறுக்கு, நெக்டோ... இந்த அரட்டை ஆலய பூஜை நிறைவடையும் வரை தொடரும். பிறகு அர்ச்சகர் தரும் திரு நீரை நெற்றியில் பூசிக் கொண்டு பக்தி பழமாக வீட்டிற்கு நடையைக் கட்டுவோம்.

என்னை புரட்டிப்போட்ட புத்தகம்

உங்களுக்காக பக்கங்களைப் புரட்டுகிறார் தொழிலதிபர் ஈஸ்வரன்


மணி ஸ்ரீகாந்தன்


நான் ஒரு புத்தகப் ப்ரியன். நிறைய புத்தகங்களை தேடித் தேடி படிக்கும் ஆர்வம் என் சிறுவயது முதலே இருந்து வருகிறது. நான் வாழ்க்கையில் பல கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறேன். இன்று சமூகத்தில் குறிப்பாக கொழும்பில் நான் தனித்துவமாக தெரிவதற்கும் என்னைப் புரட்டி புடம் போடுவதற்கும் தூண்டுதலாக அமைந்தது ஒரு புத்தகம் தான். சுமார் ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் எனக்கு அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டொக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய 'வாழ்க்கை அமைக்கும் எண்ணங்கள்'
என்பதுதான் அந்த  நூலின் பெயர்.

இந் நூல் ஜேம்ஸ் ஆலன் ஆங்கிலத்தில் எழுதியது. கங்கை புத்தக நிலையம் (13 தீனதாயரு தெரு, தி.நகர்) இதனை வெளியிட்டிருந்தது. 1944ல் இதன் ஏழாம் பதிப்பு வெளியாகி இருந்தது. அந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு நாற்பது வயதிருக்கும்.

தமிழகத்திலிருந்து வெளிவந்த அந்த நூலை இன்றுவரை நான் பொக்கிஷமாக பாதுகாத்தும் வருகிறேன். அந்த நூலில் சொல்லப்பட்டுள்ள செய்தி இது தான்: ஒரு மனிதன் ஒரே தடவையில் பலதரப்பட்ட விசயங்களை சிந்திக்கிறான். அவனது சிந்தனையில் ஆராய்ச்சி, தேடுதல், எதிர்கால திட்டம் அல்லது தான் கடந்து வந்த அந்த காலப்பகுதி ஆகிய முன்னோக்கியதும், பின்னோக்கியதுமாகிய சிந்தனைகள் எல்லைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும். இதில் பாலியல் தொடர்பிலான கெட்ட விசயங்களும் வந்துப் போகும்.

 எதற்கும் தடைகள் இல்லை இப்போது உங்கள் வீட்டில் உள்ள டீவியில் நல்ல சேனல்களும் இருக்கும், கெட்டதும் இருக்கும். ஆனால் நீங்கள் விரும்பினால் மட்டும் அவைகளை பார்ப்பீர்கள். ஆனால், நமது மூளையில் ஏற்படும் சிந்தனைகளுக்கு தனிக்கை போடவோ ரீமோட் கொன்ரோலில் கட்டுப்படுத்தவோ முடியாது. மனிதன் அவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முயற்சி செய்வதும் இல்லை. ஆனால் நமது சிந்தனைகளை முறைப்படி ஒழுங்குப்படுத்தினால் வாழ்க்கையில் பல வெற்றிகளை சந்திக்கலாம். என்பதுதான் அந்த  நூலின் உள்ளடக்கம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து, எண்ணியார் திண்ணியர், ஆகப் பெறின். என்ற வள்ளுவரின் வாக்குப் படி எண்ணியார் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதுடையவராக இருக்கப் பெற்றார், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர் என்பதைப் போல ஒரு விடயத்தை திரும்ப, திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது நிறைவேறும். என்பதையும் அந்த நூல் குறிப்பிடுகிறது. ஆனாலும், எமது எண்ணங்களின் ஊடே காமம், குரோதம், பொறாமை உள்ளிட்ட சிந்தனைகளுக்கு நாம் இடம் கொடுத்தால் அது நமது வெற்றியின் சிந்தனைகளை சிதைத்து விடும் என்கிற உண்மையையும் அது தெளிவுபடுத்ததுகிறது.

 சில நேரங்களில் ஒருவரைப் பற்றி நாம் சிந்தித்து கொண்டிந்தால். அடுத்த செக்கனில் அவர் உங்கள் முன்னால் நிற்பார். "இப்போதான் உங்களை நினைத்தேன் வந்திட்டீங்க உங்களுக்கு ஆயுசு நூறு," என்று சொல்வோம். இதை நம் எண்ணத்தில் அதிர்வலைகளின் சக்தியாக கருதலாம். நாம் சிந்திக்கும் போது எழும் எண்ண அதிர்வுகள் ஈதரில் கலந்து எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சென்று ஒரு சமிக்ஞை கொடுத்து வருகிறது. இதுவும் ஒரு ரேடியோ அதிர்வலைகள் போலத்தான் செயல்படுகிறது.

‘வாழ்க்கை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற இந்த அற்புதமான நூலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தமிழகத்தை சேர்ந்த பேச்சாளர் டீ.கே.சந்திரசேகரன். அவர் எனது நெருங்கிய நண்பர். தமிழகத்தில் நான் இருந்த போது ஒரு நாள் என்னிடம் அந்தப் புத்தகத்தை அவர் தந்தார். அதை வாசித்த பிறகு நானும், எனக்கு தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன். தமிழகத்திலிருந்து ஆயிரம் புத்தகங்களை வாங்கி வைத்து என்னை சந்திக்கும் எல்லோருக்கும் கொடுத்தேன். அப்படி செய்யும் போது எனக்குள் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.

இந்த விடயத்தை நான் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். என் வாழ்க்கையில் என்னைப் புரட்டி போட்ட அந்தப் புத்தகம் இன்றும் என் நினைவாக புத்தக அலுமாரியில்....


வண்ணத் திரையின் வறண்ட பக்கங்கள்

நீ வீணாப்போன கெட்டிக்காரன் என்றார் எஸ்.டி. சிவநாயகம்!

 

கதவு  திறக்கும் பேராதனை ஜூனைதீன்

 

சாவி: மணி ஸ்ரீகாந்தன்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிங்களத் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து தந்தவர் சர்மிளாவின் இதயராகம் புகழ் ஏ.ஜே. ஜூனைதீன். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த கதைகளை தெரிவு செய்து அதை வெற்றிப்படமாக்கும் வித்தை தெரிந்த அவர் நம் நாட்டு தமிழ் சினிமாவிலும் சில படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். தமது சினிமா வாழ்க்கையில் தாம் கற்றுக் கொண்ட அனுபவங்களை வண்ண வானவிலுக்காக பகிர்ந்து கொண்டபோது...

“நமக்கு முதல்படம் டெக்சி டிரைவர் அதில் கதை வசனம் எழுதினேன். சினிமா என்பது கத்திமேல் நடப்பது போல அவதானமாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் நாம் காலி. ஏமாற்று, பித்தலாட்டம் என்று நிறைய இருக்கு. இந்த விசயத்தில் மட்டும் எல்லா சினிமா உலகமும் ஒன்றுதான். அசந்தால் தலைபோய்விடும்.

Thursday, December 27, 2012

ஒரு நாள் ஒரு பொழுது:


புலியோடு சண்டை போட்டார் என் அப்பா


       

(மணி ஸ்ரீகாந்தன்)


ஜெய் சங்கருடன் ரத்தத்தின் ரத்தம் படத்திலும் மற்றும் மஞ்சள் குங்குமம், இளைநிலா, மாமியார் வீடு, உயர்ந்த உறவுகள் ஆகிய ஈழத்தமிழ்ப் படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும், ஸ்டண்ட மாஸ்டராகவும், ஒப்பனை கலைஞராகவும், நடிகராகவும் பணியாற்றியவர் என்.முத்தையா. தற்போது தனது 82 வயதில் தனது கிருளப்பனை இல்லத்தில் வசித்து வருகிறார். ரொம்பவும் பலசாலி.

தமிழகத்தின் சிங்கப்பட்டிதான் இவர் பிறந்த ஊர். அந்தக் காலத்தில் சிங்கம் அதிகமாக அந்த ஊரில சுற்றித் திரியுமாம். இவருடைய அப்பா நீலகண்ட தேவர் வெள்ளைக்காரனிடம் காவல் வேலை செய்தவர். இவருடைய அப்பாவுக்கு சிலம்பாட்டம், மற்றும் வர்மக்கலை உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் எல்லாம் அத்துப்படியாம். சிங்கப்பட்டியைச் சுற்றியுள்ள எட்டுப்பட்டி கிராமமும் இவருடைய அப்பாவிடம் தான் சிலம்பம் கற்க வருவார்களாம். இவருடைய அப்பா சிங்கத்துடன் நேரிடையாக மோதி கோடலியால் வெட்டிச் சாய்த்ததாக ஊரெல்லாம் ஒரு கதை அக் காலத்தில் பரவியிருந்தது என்பதை சந்தோஷமாக கூறியதுடன் தன் சிறு பராயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சிங்களத் திரைப்படங்களை தயாரித்து இயக்கும் பேராதனை ஜூனைதீன்

குறைந்த பட்ஜட் படங்கள் நல்ல இலாபத்தைத் தருகின்றன

   

நேரில்-மணி ஸ்ரீகாந்தன்

       
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'டெக்ஸி டிரைவர்' திரைப்படத்தின் மூலம் இலங்கை சினிமாவுக்கு அறிமுகமானவர் ஏ.ஜெ.ஜூனைதீன். சிங்கள திரையுலகில் ஷாமிலாவின் இதயராகம், சொமிபோய்ஸ், சந்துனி, நாககன்னியா-சுப்பர் ஸ்டார் ஆகிய படங்களையும் அன்மையில் வெளியாகிய 'குருமிட்டக் எவில்லா' என்ற படத்தையும் வெளியிட்டு வருபவர் இவர். அதாவது, வெற்றிகரமான சிங்களப் படத்தயாரிப்பாளர். பல வெற்றிப் படங்களை தந்த இவரை ஒரு மாலை வேளையில் வானவில்லிற்காக சந்தித்துப் பேசினோம்.

"டெக்ஸி டிரைவர் திரைப்படம்தான் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் படம். ஆனால் வெளிவருதில் காலதாமதம் ஏற்பட்டது அப்போது இரண்டாவதாக தயாரிக்கப்பட்ட 'தோட்டக்காரி' திரைப்படம் முதலாவதாக வெளியாகி முதல் தமிழ் படம் என்ற பெயரை தனதாக்கிக் கொண்டது. இந்தப் படத்தை சுண்டிக்குளி சோமசேகரம் தயாரித்தார். நான் திரைக்கதை வசனம் எழுதியிருந்தேன். அந்தக் காலத்தில் எங்களுக்கு சம்பளம் எதுவும் கிடையாது. குருவிசுவாசமும், நன்றியும் தான் இருந்தது. இன்றும் அது என்னிடம் இருக்கிறது". என்கிறார்.

Wednesday, December 26, 2012

இப்படியும் நடக்கிறது!

வேட்டி, செருப்பு அணிந்திருந்தால் சில இடங்களுக்குள் நுழைய முடியாது!


மணி ஸ்ரீகாந்தன்


‘வேட்டி தமிழர்களின் அடையாளம்’ என்று தமிழக தொலைக்காட்சி விளம்பரங் களில் ஒளிபரப்பாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி உண்மையாகவே தமிழர்களின் பாரம்பரிய உடை.

அதனால்தான் கலா சார நிகழ்வுகளில் தமிழர்கள் வேட்டியுடன் காட்சியளிக் கின்றனர். சாரம் என்பது வேட்டியின் இன்னொரு வடிவம். இந்த வேட்டியிலும் பல ரகம் உண்டு. அதாவது அணிவதில், தனிச் சுற்று, இரட்டைச் சுற்று, பஞ்சகச்சம் வட நாட்டுப் பாணி எனப் பல வகைகள். தமிழகத்தில் தனிச் சுற்று பிரபல்யம்.


ஒரு நாட்டு அல்லது ஒரு இனக் குழுவின் உடையை நாட்டின் அல்லது அவர்கள் வாழும் சூழலைப் பொருத்ததாக அமைகிறது. தமிழகத்தின் கொளுத்தும் வெயிலுக்கு சவுகரியமான உடை பருத்தி வேட்டிதான். இந்த வேட்டியை துவாயாக, விரிப்பாக, அரைக்கால் சட்டையாக, கோவணமாக, தலைப்பாகையாக என எப்படி வேண்டுமானாலும் நொடியில் மாற்றிக்கொள்லாம் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
வீ.கே.டி. பாலன்

எனவே பணக்காரனுக்கும் ஆண்டிக்கும் ஏற்ற உடையாக தமிழனின் சொத்தாக விளங்குகிறது இந்த வேட்டி. துவைத்துப் போட்டால் பத்து நிமிடங் களில் காய்ந்தும் விடும்! ஆங்கிலேயர் காலத்தில் வேட்டிக்கு கெளரவக் குறைச்சல் இருந்தாலும் தமிழகத்தில் வேட்டிக்கு இன்று நல்ல மரியாதை.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் விசேஷங்களுக்கு உரிய கெளரவ உடை. ஆனால் இந்த வேட்டிக்கு தமிழத்தில் மரியாதை கிடைக்காத ஒரு இடமும் உண்டு என்கிறார் சென்னை மதுரா டிரவல்ஸ் அதிபரும் கலைஞருமான வி. கே. டி. பாலன். இது அவர் சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய தகவல்.

இவர் எப்போதும் வெள்ளை வேட்டி, கதர் சட்டை, நெற்றி நிறைய விபூதி சந்தனத்துடன் பச்சைத் தமிழராகக் காட்சியளிப்பார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சங்கத்தில் முக்கிய பதவி விகிப்பவர் வீ.கே.டி. பாலன். அண்மை யில் அச் சங்கத்தின் கமிட்டிக் கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது. புதிய தமிழக சட்டசபைக்கு எதிரிலேயே இந்த ஜிம்கானா கிளப் இருக்கிறது.

கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வீ.கே.டி. பாலன் ஜிம்கானா கிளப்புக்குள் நுழைய முட்பட்ட போது அங்கே நின்றிருந்த காவல்காரன், நீங்கள் உள்ளே வரக் கூடாது! என்று தடுத்திருக் கிறான். நான் ஏன் உள்ளே வரக் கூடாது என்று வீ. கே. டி. அந்தக் காவல்காரனிடம் வினவ, அதற்கு அவன் நீங்கள் வேட்டி கட்டியிருக்கிறீர்கள்.

Tuesday, December 25, 2012

அனுபவம் பேசுகிறது- 03

ஒரு தொழிற்சங்கவாதியுடனான எனது  Encounterகழுத்துப்பக்கம் ஒரு பிடிப்பு.. வருசக்கணக்கில் தொடர்கிறது. எங்கெல்லாமோ மருந்து எடுத்து பார்த்தாச்சு. முழுசா குணமாகிய மாதிரி தெரியவில்லை.

கஷ்டத்தோட தான் காலையில் எழும்பணும். எழும்பி ஐந்து நிமிஷம் தைலமெல்லாம் தடவின பிறகு தான் கொஞ்சம் சுகம் வரும். ஆனா இப்ப கொஞ்ச நாளா எங்க ஊரு ஆயுர்வேத மருத்துவர் சொன்ன குளிசை நல்லா வேலை செய்யுது. ஆனா இந்த குளிசை வெளி நாட்டுல இருந்து வருது. ஒரு தடவைக்கு 1500 ரூபாவுக்கு குளிசை வாங்குவேன். எங்க ஊரு காவத்தை. அங்கே ஒரு கடையில்தான் இந்த குளிசை இருக்கு.

ஒரு நாள் குளிசை வாங்கப்போனப்ப முடிஞ்சு போச்சுன்னு கடைக்காரரு சொல்லிட்டாரு. இரத்தினபுரியில இருக்கும். அங்க போனா வாங்கலான்னு ஒரு தகவலையும் அவர் சொன்னார். சரிதான். இரத்தினபுரிக்கே போவம்னு கிளம்பிட்டேன்.
இரத்தினபுரியில தேடிப்பாத்தா ஒரு இடத்திலதான் அந்த குளிசை இருந்திச்சி. சரின்னு விலையை கேட்டேன். 1800 ன்னு சொன்னாங்க. காவத்தையில 1500 தான். கையில 1500 தான் இருக்குது.

மெல்ல மெல்ல கடைக்காரரு கிட்ட விசயத்தை சொன்னேன். மேலயும் கீழயும் என்னை நல்லா பார்த்தாரு.

ஆனா என்னைப்பார்த்த கடைக்காரர் மனசுல இரக்கம் வந்திருக்கணும்.

சரி 1500 தந்துட்டு மருந்தை வாங்கிட்டு போங்க. எப்பவாவது இரத்தினபுரிக்கு வந்தா மிகுதி 300 ரூபாவை கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னதை கேட்டதும் என் உச்சி குளிர்ந்து போச்சு.
மகராசன் என்னைக்கும் நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிக்கிட்டே பஸ் ஸ்டான்டுக்கு நடந்தேன்.

இரத்தினபுரியில இருந்து காவத்தைக்கு பஸ்ஸில போக 35 ரூபா.

என்னோட கெட்ட நேரம், பாருங்க பையில 30 ரூபா தான் இருந்தது.

இன்னும் அஞ்சு ரூபா வேணும்.

திரும்பவும் ஒரே யோசனை.

என்னாங்க பண்ணுறது..

எங்க அப்பா காலத்துல இருந்தே நான் ஒரு மானஸ்தன். ஒரு ரூபா கடன் வாங்கினாலும் அச்சொட்டா சொன்ன திகதியில திருப்பிக்கொடுக்கிறவன்.

இப்ப கட்டாயமா 5 ரூபா யார் கிட்டயாவது கடன் வாங்கினா தான் வீட்டுக்கு போக முடியுங்கிற சூழ்நிலை.

யாரு கிட்ட கடன் கேட்கலாம்? அதுவும் ஒரு அஞ்சு ரூபா..

தூரத்தில் ரெண்டு பேர். ஒருவர் டிப் டாப்பாக உடையணிந்து இருந்தார். மிகவும் தீவிரமாக தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த ஐயாமாரிடம் கேட்டால் உதவுவார்கள் என்ற எண்ணத்துடன் அவர்களை நெருங்கினேன்.

ஏழைங்க கஷ்டம் தெரிஞ்ச ரெண்டு ஐயாமாரு நிச்சயமா அஞ்சு ரூபா கொடுத்துதவுவாங்க. கடனாகத்தான் கேட்கிறம் என்று நினைத்துக்கொண்டே அவர்கள் அருகில் சென்று நின்றேன்.

என்ன என்று என்னை ஏறிட்டுப்பார்த்தார் பேசிக்கொண்டிருந்த டிப்டொப்.

“ஐயா, பஸ்சுக்கு அஞ்சு ரூபா கொறையுதுங்க”

“பைத்தியக்காரனா இருக்குற. எவ்வளவு முக்கியமான விசயம் பேசிக்கிட்டுருக்கம். இந்த நேரத்துல காசு கேட்டுக்கிட்டு.. எனக்கு கோவம் வாரதுக்கு முன்னால இடத்தை காலி பண்ணு.” என்று கோபத்துடன் சொன்னார் டிப்டொப் ஆசாமி.

எனக்கு ஒரே அதிர்ச்சி.

கே.ராஜேந்திரன்
தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என்று நினைத்த படியே பேசாமல் பின்வாங்கினேன். எனக்கு அவமானமாக போய்விட்டது. அப்போது அங்கே நின்ற மற்றவர் வாங்க என்ன விஷயம் என்று என்னிடம் கேட்டார். நான் எனக்கு நேர்ந்த சம்பவத்தை அவரிடம் விளக்கினேன். என் நிலைமையை புரிஞ்சு கொண்ட அவர். பொக்கட்டிலிருந்து ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து நீட்டினார். எனக்கு பத்து தேவையில்லீங்க ஐந்து ரூபா போதும்னு சொல்லி என்னிடமிருந்து ஐந்து ரூபா சில்லறையை அவரிடம் கொடுத்துவிட்டு பத்து ரூபாவை வாங்கிக்கொண்டேன். என்னை பிச்சைக்காரனா கருதிய அந்த டிப்டொப் ஆசாமி வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டிருந்தார்.

ஒரு பிச்சைக்காரனோடு தனது நண்பர் உரையாடிக்கொண்டிருப்பதை பார்க்க அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ.. வெள்ளை களிசன் சிவப்பு சட்டை உடுத்தி பார்ப்பதற்கு ஒரு அரசியல்வாதி போலவே தோற்றமளித்தார். ஐந்து ரூபாவை பெற்றுக்கொண்ட நான், எனது தொலைபேசி இலக்கத்தை உதவியரிடம் கொடுத்து விட்டு விடைபெற்றேன். எனது வீட்டுக்கு வந்தப்பிறகும் அந்த சம்பவம் தந்த அதிர்ச்சி என்னை விட்டு நீங்கவில்லை.

நான் அந்த பெரிய மனிதரிடம் பணம் கேட்டபோது பணம் இல்லை என்று அமைதியாக சொல்லி இருக்கலாம். ஏதோ ஒரு பிச்சைக்காரனை திட்டி விரட்டுவதைப்போல அவர் நடந்து கொண்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சே! என்ன மனிதர்கள்! பிறகு அந்த மனிதரைப்பற்றி விசாரித்துப்பார்த்தேன். அவரைத்தெரிந்த என் நண்பர் சொன்ன விஷயம் என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“அடடா அவரை உங்களுக்கு தெரியாதா? அவர்தான் புதிய தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போகிறவர். தொழிலாளர் கஷ்டம் தெரிந்தவர் என்று அடுக்கிக்கொண்டே போனார். நீங்க அவரை கட்டாயம் தெரிந்திருக்கணும். ஒரு நாளைக்கு இறக்குவானைக்கு வாங்க. அறிமுகம் செய்கிறேன” என்றார்.

வேண்டாம் என்று ஒரு வார்த்தையில் மறுத்துவிட்டேன். ஒரு ஐந்து ரூபா கேட்டதற்கு ஏன், எதற்கு என்று விவரம் கேளாமல் விரட்டி அடித்தவர்தான் தொழிற்சங்க வாதியா? இப்படி இருந்தால்தான் தொழிற்சங்கவாதியாக வரமுடியுமோ? பிணம் தின்னும் மனிதர்கள்!

அனுபவம்: கே.ராஜேந்திரன், கஹவத்தை
படைப்பு: மணி ஸ்ரீகாந்தன்.
Monday, December 24, 2012

அனுபவம் பேசுகிறது -02

மீண்டும் பேக்,திருடர்கள், ஜாக்கிரதை!


பண்டிகை முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. நானும் மனேஜர் தந்திருந்த ஒரு வார விடுமுறையையும் மீறி மேலதிகமாக ஒரு வாரம் எடுத்துவிட்டேன். வருடத்திற்கு ஒரு முறை தானே பெருநாள் வருகிறது... மனேஜரிடம் சொல்லி சமாளித்து விடலாம் என்ற தைரியம் தான். நான் வேலைப்பார்ப்பது திரிஸ்டார் ஹோட்டல் என்பதால் எப்போதும் டிப்டொப்பாக ஆடை அணிந்திருக்க வேண்டும்.

பெருநாளைக்கு வாங்கிய விலை உயர்ந்த சப்பாத்துகள் இரண்டு சோடிகளையும், புது ஆடைகளையும் எடுத்து ஹேன்ட் பேக்கில் வைத்துக்கொண்டு கஹவத்தையிலிருந்து கொழும்பு நோக்கிப்புறப்பட்டேன். மூன்று மணி நேர பயணத்திற்குப்பிறகு கொழும்பை வந்தடைந்தேன். நான் தொழில் பார்க்கும் இடம் ஜா-எல யில் தான் இருக்கிறது.எனவே அங்கிருந்து ஜா-எலைக்கு செல்ல சன நெருக்கடியான ஒரு பஸ்ஸில் ஏறினேன். என் முதுகில் தொங்கிக்கொண்டிருந்த அந்த பையோடு கூட்டத்திற்குள் நுழைய சிரமமாக இருந்தது. வாசலில் நின்றுக்கொண்டிருந்த கண்டக்டர் ‘கருநாக்கர எத்துலட்ட யண்ட' என்று கத்திக்கொண்டிருந்தார்.

 அவரின் காட்டுக்கத்தல் காதைக்கிழிக்க, கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்தேன். என் தோளில் தொங்கிய பை பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை இடித்துவிட அவள் என்னை சுட்டெரிப்பது போல முறைத்தாள். அப்போது பேக்கை மேல வையுங்க என்று கண்டக்டரிடமிருந்து உத்தரவு வர சீட்டுக்கு மேலயிருந்த லெக்கேஜ் ஹோல்டரில் பேக்கை வைத்துவிட்டு நின்றுகொண்டிருந்தேன். காலை நேரம் என்பதால் பஸ் டிராஃபிக்கில் மாட்டி நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப்பிறகு பஸ்ஸில் கூட்டம் கொஞ்சம் குறைய நான் நின்ற இடத்திலிருந்து நாலாவது சீட் காலியாக இருப்பதை கண்டு அந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். எனது பேக் லெக்கேஜ் ஹோல்டரில் இருப்பதையே அடிக்கடி கவனித்துக்கொண்டிருந்தேன். பஸ் ஆடி ஆடி சென்றதில் என்னையறியாமல் எனக்கு தூக்கம் வந்துவிட்டது. சிறிது நேரத்தில் ‘ஜா-எல பயின்ன' என்று கண்டக்டர் குரல் கொடுக்கவே திடுக்கிட்டு விழித்தேன்.

Sunday, December 23, 2012

அனுபவம் பேசுகிறது-01


அம்மா வாங்கிய கம்பளம்


ராதாவுக்கு இருபத்தெட்டு வயதிருக்கும் திருமணம் முடித்து ஒரு மகளும் இருக்கிறாள். தமது வீட்டுக்கு பக்கத்திலுள்ள தனியார் தோட்டங்களில் தினசரி சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருபவர். இவரின் குடும்பம் கூட்டுக்குடும்பம். அவரோடு சகோதர, சகோதரிகள், அப்பா, அம்மா, அம்மாவின் தங்கை ஆகியோர் பெரிய குடும்பமாக இருந்து வருகின்றனர். தன் தொழிலுக்கு அப்பால் அந்தப் பகுதியால் மாதாந்த சீட்டு பிடிக்கும் தொழிலையும் அவர் செய்து வருகிறார். சீட்டுத் தொழிலை முறையாக செய்து வருவதால் ராதாவுக்கு அந்தப் பகுதியில் நல்லபெயர். வாக்கு சுத்தமானவர் என்பார்கள்.

அன்றும் காலையில் எழுந்த ராதா தனது மகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அந்த மாதம் கொடுக்க வேண்டிய சீட்டுக்காசு இருபத்தைந்தாயிரம் ரூபா பத்திரமாக இருக்கிறதா என்று டிரங்கு பெட்டியை திறந்து பார்த்து விட்டு, பெட்டியை மூடி வழமை போல சாவியை தனது அம்மாவிடம் கொடுத்தார். பின்னர் புறப்பட்டு வேலைக்குச் சென்றார்.

மாலை நான்கு மணியிருக்கும் ராதாவின் வீட்டு வாசலில் ஒரு இளைஞன் பல் வர்ண தரை விரிப்புகளுடன் நின்று கொண்டிருந்தான். பொருட்களை விற்கும் பலர் இப்படி தோட்டங்களுக்கு வந்து போவது வழக்கம். ஒரு விரிப்பு ஆயித்து ஐநூறு ரூபாய் என்று கூவிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ராதாவின் அக்காவின் மகளுக்கு ஆசை வந்து விட வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது பாட்டியை (ராதாவின் தாயாரை) அழைத்து வந்து 'இந்த தரை விரிப்பை வாங்குங்க அம்மம்மா நல்லாயிருக்கு"என்று நச்சரிக்க தொடங்கினாள்.

Tuesday, December 18, 2012

குப்பையில் இருந்து கோபுரத்துக்கு..


"டேவிட் கிராம்" வெற்றி பெற்றது எப்படி..?

 

பிரசித்தி பெற்ற டேவிட் கிராம் நிறுவனத்தின் உரிமையாளர் டேவிட் ரொபர்ட் தமது நிறுவனம் வெற்றி பெற்ற கதையை  பகிர்ந்து கொள்கிறார். 

  உரையாடியவர் ;மணி ஸ்ரீகாந்தன்.

 

"கடலை வாங்கலியோ… கடலை… வேர்க்கடலை… கொண்டைக் கடலை… சூடா… சூடா…"
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், திருநெல்வேலியிலிருந்து பிழைப்புக்காக கொழும்பு வந்திருந்த அந்த பதினான்கு வயது பையன், கையில் கடலைக் கூடையுடன், அரைக்கால்சட்டை, பனியனுடன் கோல்பேஸ் புல்தரையில் வியர்க்க, விறு விறுக்க.. வியாபாரம் செய்துகொண்டிருந்தான்.

 ஆனால் அவனுக்குத் தெரியாது, தான் நடந்து கொண்டிருப்பது கோல்பேஸ் புல்தரையில் அல்ல,  வெற்றிப் பாதையில் என்று..
ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை வட்டம் எழுபது ஆண்டுகள்.. என்று வைத்துக்கொண்டால், அவனது முக்கியமான பருவம், ஒரு முப்பது ஆண்டுகளுக்குக் குறைவாகவே நீடிக்கும். இதுவே சாதிக்கும் சக்தி கொண்ட காலம். சில மனிதர்கள் இக் குறைவான காலப் பகுதியில் என்னென்னமோவெல்லாம் சாதித்து, ஒரு சாம்ராஜ்யத்தையும், மங்காப் புகழையும்  கட்டி எழுப்பி விடுகிறார்கள்.
ரொபர்ட்.

இவர்களால் எப்படி சாதிக்க முடிகிறது..? ஏன் மற்றவர்களால் சாதிக்க முடியவில்லை..? என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, வியப்பும், குழப்பமும்தான் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் சிறு வயது பருவம் பற்றித்தான் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.
மிகச் சாதாரணமான இந்தக் கடலை பையன்தான் எதிர்காலத்தில் "மிக்ஷர்" என  பொதுவாக அழைக்கப்படும் கடலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கப் போகிறான் என்பது, அப்போது அவனுக்கே தெரியாது.
உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற இந்த மூன்று தாரக மந்திரத்தையும் சரியாகச் செயல்படுத்தி, அதில் வெற்றியும் கண்ட அந்தப் பையன்தான் டேவிட். புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தியடியில் கேஸ் வேர்க் வீதியில் அமைந்திருக்கும் டேவிட் கிராம் ஸ்டோர்ஸின் நிறுவனர்.

"அப்பா திருநெல்வேலியில் இருந்து கொழும்புக்கு வேலைத் தேடி வந்திருக்கிறார். இங்க வந்த அவர், ஒரு கடலைக் கடையில் வேலை செய்திருக்கிறார். அதன் பிறகு ஒரு கூடையில் கடலையைப் போட்டுக்கொண்டு, கொழும்பு வீதிகளில் கூவிக்.. கூவி கடலை விற்பனை செய்திருக்கிறார். பிறகு அதில் கிடைத்த சிறிய இலாபத்தை சேமித்து வைத்து, வாழைத் தோட்டத்தில் வசித்த அவரின் நண்பரிடம் இருந்து ஒரு பெட்டிக் கடையை வாடகைக்கு எடுத்திருக்கிறார்; அக் கடையில் வறுத்த கடலை வியாபாரத்தை ஆரம்பித்தார் அவர். கடலையை பதமாக வறுத்தெடுப்பதில் மட்டுமன்றி, சரியான மசாலாவையும் தயாரித்து சேர்ப்பதிலும் அவர் இயல்பிலேயே  கைதேர்ந்தவராக இருந்ததினால், கடைக்கு கடலை வாங்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியிருந்தது. வியாபாரத்தில் எடுத்து வைத்த முதல் அடி வெற்றியளிக்கவே, அடுத்த கட்டமாக ஐந்து பையன்களிடம்  ஐந்து கூடைகளில் கடலையைக் கொடுத்து விற்பனைக்காக அனுப்பி வைத்தார். பிறகு படிப் படியாக நிறையப் பேர் அவருடன் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். படிப் படியாக அந்த இளைஞனின் கை பக்குவமும், வர்த்தக அணுகுமுறைகளும் பல சிறு கடலை விற்பனையாளர்களை அவர்பால் ஈர்த்தது.
டேவிட்
டேவிட்

Friday, December 7, 2012

உலக அழிவு-01

2012 இல் உலகம் அழியுமாமே?


மணி ஸ்ரீகாந்தன்

2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழிந்துவிடுமாம்! இப்படி ஒரு செய்தியையும் இது பெரும் நாகரிகமான மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மாயர்கள் பயன்படுத்திய கலண்டரை அடிப்படையாகக் கொண்டது என்ற ஆதாரத்துடனும் உலக ஊடகங்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. உலகம் 2000ஆம் ஆண்டு பிறக்கும் போதும் கூட உலகம் அழியப் போகிறது என்ற பீதி கிளம்பியது. சரி, இது பற்றி நம்மவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று நம் நாட்டிலும், தமிழகத்திலும் சில பிரபலங்களிடமும் சாமானியர்களிடமும் கேட்டோம்.


கார்டூனிஸ்டும், எழுத்தாளரும் அறிஞருமான மதனிடம் பேசினோம்.

சூரியன் அழியும் போதுதான்...

"மாயன் கலண்டர் என்பது ஒரு நாகரிகத்தை பிரதிபலிக்கிறது. அது ஒரு காலக்கட்டத்தின் அடையாளம். அந்தக் காலக்கட்டத்தில் வரையப்பட்டதுதான் மாயன் கலண்டர். அந்த காலக்கட்டத்தில் வானிலை அறிவு இல்லாவிட்டாலும் சில விசயங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட 2012 என்பது வேறு. அதையும் இதையும் இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மாயர்கள் ஒன்றை மட்டும் சரியாக கணித்திருக்கிறார்கள். அது உலகம் அழியும் என்ற அந்த ஒரு விசயம் மட்டும்தான். 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவான இந்த பூமியின் அழிவு இன்னும் பல கோடி வருடங்களுக்குப் பிறகுதான் நிகழும்.
மதன்

இப்போதைக்கு அழிவு கிடையாது அதனால் எதையும் நினைத்து பயப்படத் தேவையில்லை. சூரியனால் உயிர்வாழும் இந்த பூமிக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது. சூரியன் தனது ஹைட்ரஜன் எரிவாயுவை இது வரை பாதியைத்தான் செலவழித்து இருக்கிறது. இன்னும் பாதி அப்படியே இருக்கிறது. அது முடிவடைய இன்னும் பல கோடி வருடங்கள் ஆகும். பூமியின் ஹைட்ரஜன் வாயு எரிந்து குறையக் குறைய சூரியனின் அளவு இன்னும் பல மடங்காக பெரிதாகும். அப்போது உருவாகும் வெப்பம் பூமியை அழிக்கும். ஆனால் வெப்பம்    அதிகரிக்கும் போது மனிதன் நிலத்திற்கடியில் பாதாளத்தில் நகரங்களை அமைத்து வாழ வழி செய்துக் கொள்வான். ஆனால் இவற்றையெல்லாம் நீங்களும் நானும் பார்க்கப் போவதில்லை.... சீனா, பாபிலோன், ரோம, இந்து நாகரிங்கள் உச்சத்தில் இருந்தபோது பிரளயம் ஏற்பட்டதாக நிறைய கதைகள் உள்ளன. இந்து நாகரிகத்தில் கூட கலிகாலம் முடிவதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது", என்றார் மதன்.

உலகம் முற்றாக அழியாது


வேலூரில் அமைந்திருக்கும் உலகின் மிகப் பெரிய தங்கக் கோவிலை நிறுவியரான சக்தி அம்மாவுடன் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டோம்.
சக்திஅம்மா.

"மாயன் கலண்டரில் கூறப்பட்டது போல பேரழிவு ஏற்பட்டு பூமி அழியும் என்பதெல்லாம் வெறும் மாயை. ஆனால் நமது இந்து சாஸ்த்திரப்படி இந்தக் கலிகாலத்தில் ஆங்காங்கே சில அழிவுகள் ஏற்படும். ஆனால் அது பேரழிவாக இருக்காது, பூமிக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது. கிரக சஞ்சாரத்தின்படி பார்த்தாலும் அழிவு என்பது இப்போதைக்கு இல்லை, ஆனால் ஆண்டவன் என்ன நினைக்கிறானோ தெரியவில்லை" என்கிறார் சக்திஅம்மா.

இதை இயேசுவின் வருகையோடு தொடர்புபடுத்த வேண்டாம்

அவரைத் தொடர்ந்து மன்னார் தமிழ் நேசன் அடிகளார் கருத்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"சிலர் உலக அழிவு என்பது ஏசுவின் இரண்டாம் வருகையோடு தொடங்கி விடும் என்கிறார்கள். அது முற்றிலும் தவறான செய்தி. ஏசுவின் வருகை எப்போது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது என்றோ நடக்கத்தான் போகிறது. எனினும் உலக அழிவு இப்போதைக்கு இல்லை. ஊடகங்கள் வியாபார நோக்கத்திற்காகவும் பரப்பரப்பு செய்திக்காகவும் 2012ல் உலகம் அழியும் என்று கூறி வருகின்றன. ஏற்கனவே 2000ஆம் ஆண்டில் உலகம் அழியப் போவதாக செய்தி பரவியதை அடுத்து சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே மக்கள் இந்தச் செய்தியை நம்பக் கூடாது. உங்களைப் படைத்த கடவுள் உங்களை காப்பார்" என்றார் தமிழ்நேசன் அடிகளார்.

உலகமா... இப்போதா... ஹா...ஹா...ஹா...

அவரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பட்டிமன்றங்களை நடத்திவிட்டு மதுரையில் தமது வீட்டில் கொஞ்சம் ஓய்வாக இருக்கலாமே என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பட்டிமன்றம் புகழ் சொலமன் பாப்பையாவிடம் எங்கள் கேள்வியைத் தொடுத்தோம். "ஹே... ஹே... ஹா... ஹா..." என்ற சொலமனுக்கு உரித்தான அந்தச் சிரிப்பு பதிலாக வந்து விழுந்தது.
பாப்பையா

"நம்ம ராஜா, பாரதிபாஸ்கர் இவங்களையெல்லாம் சமாளிச்சு பதில் சொல்லிட்டு கொஞ்சம் நிம்மதியாக உட்காரலாம் என்று பார்த்தா விடமாட்டீங்களேய்யா... எல்லோரும் சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கல்லியோ? இப்படி குண்டத் தூக்கி போடுறீங்களே... எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில நடக்கும்யா..." என்று கல கல கலவென்று பாப்பையா சிரிப்பதைக் கேட்டதுமே உலகத்திற்கு இன்னும் ஆயுள் கெட்டி என்பதை உணர்ந்து கொண்டோம்.

சொலமன் பாப்பையாவைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் பக்கமாக ஒரு நடை போட்டோம். அங்கே ரங்கராஜபுரத்தில் தமது அலுவலகத்தில் பிஸியாக இருந்த விஜய்டி.வி ‘நீயா நானா’ புகழ் கோபிநாத்தை சந்தித்து நாம் வந்த விடயத்தைச் சொன்னோம். அவரும் தமக்கே உரிய ஸ்டைலில் சிரித்து விட்டு பேசினார்.

உலகச் சூழலை பாதுகாக்காவிட்டால்.....

"அறுபதுகளில் கூட ஒரு வால் நட்சத்திரம் பூமியில் விழுந்து அழியப் போவதாக கூறப்பட்டது, அதேப் போல 90களில் ஒரு விண் கல் பூமியை நோக்கி வருவதாகச் சொல்லப்பட்டது. பிறகு இரண்டாயிரம், இப்போ 2012 இன்னும் பத்து வருடம் கழித்து இன்னொன்றைச் சொல்வார்கள். இதனால் மனிதனுக்கு தனது ஒட்டுமொத்த அழிவு குறித்த பயமும் சுவாரஸ்யமும் எப்;போதும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஊடகங்களின் அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம்தான். மாயன் கலண்டர் இரண்டு வகைப்படும். ஒன்று குறுகிய காலத்தையும், மற்றது நீண்ட காலத்தையும் குறிக்கிறது. அதாவது இரண்டு சுற்றுகள். இதன்படி 2012 டிசம்பர் 21 வரை மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபிநாத்

 அதன் மற்றது நம் கையில் இல்லை என்பதற்காக உலகம் அழிந்து விடப்போவதாக நாம் நினைத்துக் கொள்வது தவறு. விஞ்ஞானிகள் கூட இப்போது உலகம் பிரச்சினைகளை நோக்கி போய் கொண்டிருப்பதாக சில விசயங்களை சொன்னார்கள் அதில் ஒன்று சூரியப்புயல். அந்த சூரியப் புயலின் பிரச்சினைகள் சமீபகாலமாக மேற்கு உலகில் தொடங்கிவிட்டது. மேலும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. இவ்வாறான சூழல் பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் இப்போது 2012ல் உலகம் அழியுமா என்பதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. ஆனால் சூழலைப் பற்றிக் கவலை படாமல் நாம இப்படியே இயற்கையை பிடுங்கிப் பிடுங்கி தின்றுக் கொண்டிருந்தால் உலகம் ஒரு நாள் மனிதன் வாழத் தகுதியற்றதாக மாறிவிடத்தான் போகிறது. பெற்றோர் பிள்ளைகளுக்கு சேர்த்து வைப்பது பணம் மட்டும் கிடையாது. நாளைக்கு அவர்கள் சுவாசிக்க சுத்தமான காற்று, வாழ்வதற்கு சுத்தமான பூமி, விஷமாகாத உணவு என்பனவற்றையும் அவர்களுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். உலக நாடுகள் இதை சிந்திக்காமல் இயற்கையை பேராசையோடு தொடர்ந்தும் சுரண்டித் தின்றால் உயிரினங்கள் அழிந்து போவதைத் தடுக்க முடியாது.

இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இயற்கையானது எவற்றினால் அழிவுகள் ஏற்படும் என்று கருதுகிறதோ அவற்றைத் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறது. கடலோரத்தில் அமைந்திருக்கும் சதுப்புநிலக் காடுகளை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், அது கடலரிப்பைத் தடுக்கிறது, சுனாமி போன்ற பாதிப்புகள் வரும்போது இச்சதுப்பு நிலக்காடுகள் சேதத்தைக் குறைக்கின்றன. ஆனால் இந்த இயற்கை அரண்களை மனிதன் அழிக்கிறான். பூங்காக்களையும் நகரங்களையும் அமைத்து அழகு பார்க்கிறான். உலகம் அழிவது கூட இன்று மனிதனுக்கு சுவையான ஒரு விஷயமாகி விட்டது. சச்சின் செஞ்சரி அடிப்பாரா என்று வேடிக்கை பார்ப்பது போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் டிசம்பரில் உலகம் அழியும் என்றால் இன்னும் கொஞ்ச நாட்கள் தான் பாக்கி ஆனால் வெளியே சென்று பார்த்தால் யாருமே டென்ஷனாக இல்லை. எல்லோரும் ஜொலியாகத் தான் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை" என்று கோபிநாத் தைரியமூட்டி முடித்தார்.

அடுத்ததாக நாம் களுத்துறை மாவட்ட ஹல்வத்துரை மகாவித்தியாலய ஆசிரியரான பிரதாபனை சந்தித்தோம்.

சூழல் மாசடைவது பற்றி யோசிப்போம்

"உலகத்திற்கு ஒரு அழிவு வரும்னா அது சூரியனால்தான் வரும். நான் ரொம்ப சின்னவனாக இருந்த போது எங்க ஊர் ஆற்றில் கரணம் போட்டு குதித்து குளிப்போம். ஆனால் இன்றைக்கு அந்த ஆற்றில் முழங்கால் அளவுக்கூட தண்ணீரில்ல, படிப்படியாக தண்ணீர் குறைந்து கொண்டே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
பிரதாபன்
அது முற்றிலும் தீர்ந்து போனால், நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உலகம் 2012ல் அழியும் என்பதை மாயன் கலண்டரை வைத்துக் கொண்டு கூற முடியாது. மாயன் எழுதிய கலண்டரின் மற்ற பாகம் எங்காவது இருக்கலாம் அல்லது அழிந்து போயிருக்கலாம். முதலில் அதை கண்டுபிடிக்கணும்" என்கிறார் பிரதாபன் ஆசிரியர்.

இவரை சந்தித்து விட்டு வரும் போது வழியில் இங்கிரிய றைகம் குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலய தலைவர் கிருஸ்ணனை சந்தித்தோம்.

ருத்ர தாண்டவம் நடக்கும்.

"உலகத்தில் அதர்மம் அழிந்து விட்டது. பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் கேட்காத காலம் இது. கடவுளும் எவ்வளவு காலத்துக்கு தான் பொறுத்துக் கொள்வார்? அதனால் ஒரு ருத்ர தாண்டவம் சீக்கிரமே நடக்கத்தான் போகுது. அது எப்போன்னு சொல்ல முடியாது. அந்த அழிவின் போது லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள்.
கிருஸ்ணன்
இந்த அழிவு எங்காவது ஒரு பக்கத்தில் நடக்கும். இதெல்லாம் மனுஷன திருத்த கடவுள் ஆடும் திருவிளையாடல். என்னடா கடவுளின் ஆட்டத்திற்கு லட்சக்கணக்கிலா உயிர் பழியாகணும் என்று கேட்கிறீர்களா? பத்துப்பேர் செத்தா அது விபத்து, லட்சக்கணக்கில செத்தா அது அழிவு" என்றார் அவர்.

பாவங்கள் கற்களாக சுற்றுகிறதாம்

அப்போது அங்கோ குறுக்கிட்ட தோட்டத் தொழிலாளியான எஸ்.திரவியராஜா, இதெல்லாம் நம்ம படைச்ச சிவனோட வேலைதானுங்க என்றார். சிவபுராணத்தில சொல்லியிருப்பதைப் போல 'ஆக்குவார், காப்பார், அழிப்பார், அருள்தருவார்'. அதுதான் இப்போ நடக்கப்போகுது. ஆனால் எப்போன்னு சொல்ல முடியாது. நம்ம செய்த பாவங்கள் எல்லாம் வானத்தில் கற்களாக சுத்திக்கிட்டு இருக்காம். அது தலையில விழுந்து முன்னோர் காலத்திலும் உலகம் அழிந்ததாகவும் சொல்லப்படுது. அப்படியும் நடக்கலாம். என்றார் திரவியராஜா.

கொழும்பு செட்டியார் தெருவில் ஆருடம் பார்க்கும் மதுரையை சேர்ந்த எம். மாணிக்கத்திடமும் கேட்டுப் பார்த்தோம்.

உலகம் ஷேமமாக இருக்கும்.

"இது கர வருடம். இதுமுடிய நந்தன வருஷம் பிறக்கிறது. அது பூமியின் ஆரோக்கியமான வளர்ச்சியையே காட்டுகிறது. மற்றப்படி கிரகங்களில் எந்த ஆபத்தையும் காணமுடியவில்லை. நந்தன என்பதில் 'ந' என்பது அனுஷ நட்சத்திரத்தையே குறிக்கிறது. இரண்டாவதாக சனியின் ஆதிக்கமும் இருக்கிறது, சனி சுக்கிரன் வீட்டில் 2012லிருந்து இரண்டரை ஆண்டுகள் எந்த. ஆபத்தும் இல்லாமல் வாழ்வார். அப்போ எப்படி உலகம் அழியும்?" என்று ஒரு போடு போட்டார் அவர்!
மாணிக்கம்.

உலக அழிவு-02

பேரழிவுகளுடன் கண்ணாமூச்சி ஆடும் உலகம்


மணி ஸ்ரீகாந்தன்


உலகம் என்ற இந்தக் கிரகம் சூரிய குடும்பத்தில் உருவாகி ஐநூறு கோடி வருடங்கள் கடந்துவிட்டன. தன் இயக்கத்தை நிறுத்தாமல் சுற்றிச் சுழலும் உலகம் இன்னும் 500 வருடங்கள் இப்படியே சுழன்று கொண்டிருக்கும். அதன் பின்னர் தன் சக்தியை இழக்க ஆரம்பிக்கும் சூரியன், அணையப் போகும் சுடரைப்போல தன் பிரகாசத்தையும் வெப்பத்தையும் பல நூறு மடங்காக அதிகரிக்கும். அவ்வாறு சூரியன் பிரமாண்ட உருவெடுக்கும் போது அதைச் சுற்றிச் சுழலும் பெரும்பாலான கோள்கள் கருகிச் சாம்பலாகிவிடும். நமது உலகமும் பஸ்பமாகி விடும். இது விஞ்ஞானிகளின் கணிப்பு. ஆனால் மாயன் சமூகத்தினரால் வடிவமைக்கப்பட்ட கலண்டரின் படி. இவ் வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி காலை 11 மணி 11 நிமிடத்தோடு உலகம் முடிவுக்கு வந்து விடுமாம். மாயன் நாட்காட்டியில் இந்தத் திகதிக்குப் பின்னர் எந்தத் தகவலும் இல்லை@ நாட்காட்டி முடிவுக்கு வந்து விடுகிறது என்பதால்தான், உலகம் அன்றைய திகதியின் பின்னர் அழிந்து விடும் என்று பரவலான நம்பிக்கை நிலவுகிறது. தூபம் போடுவது போல ஊடகங்கள் கிளப்பி வரும் பரபரப்பான செய்திகளும் இந்த பரபரப்புக்கு ஒரு காரணம் தான்.

உலகம் தோன்றிய ஐநூறு கோடி ஆண்டு காலத்தில் இந்த உலகம் அழிந்து விடும் என்ற ஊகங்கள் பல தடவைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகத்தான் இந்த மாயன் கலண்டர் விவகாரத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. விண்ணில் இருந்து வந்த பேராபத்துகளில் இருந்து உலகம் பல தடவைகள் தப்பிப் பிழைத்துள்ளது. அப்படியான ஒரு பேராபத்து ஒன்றின் போது உலகை ஆட்சி செய்து வந்த டைனோசர்கள் முற்றாக அழிந்து ஒழிந்தன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விஞ்ஞான உலகமும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னொரு புறம், கடற்கோள்கள், பூகம்பங்கள், எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களும் உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த அழிவுகள் இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. லெமூரியா கண்டம் கடற்கோளினால் அழிந்ததாக சொல்லப்படுகிறது. பூம்புகாரை கடல் கொண்டிருக்கிறது. கண்டங்கள் நகர்ந்திருக்கின்றன. உலக மேற்பரப்பு அமைப்பில் இவ்வாறு உள்ளக மற்றும் வெளிப்புற காரணங்களினால் பெரும் மாறுதல்கள், அழிவுகள், மூலம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் அந்தக் காலத்தில் தொலைத் தொடர்பு சாதனங்களும், ஊடகங்களும் இல்லாததால் உலகின் ஒரு பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது மறுபுறத்தில் இருப்போருக்கு தெரியாதிருந்தது. எனவே பரபரப்பும் மிகைப்படுத்தலும் அக்கால மக்கள் மத்தியில் காணப்படவில்லை. 1912ம் ஆண்டு டைட்டானிக் மூழ்கியபோது அதை உலக மக்கள் அறிந்து கொள்ள பல நாட்கள் பிடித்தன. பல வருடங்களுக்கு முன்னால் இமய மலை சிகரமொன்றில் இருந்து ஒரு சுறா மீனின் பாறைப்பதிவை கண்டுபிடித்தார்கள். பனிமலைச் சிகரத்தில் கடல்வாழ் உயிரினம் வந்தது எப்படி என ஆராய்ந்த போதுதான் இமயமலை பிரதேசம் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கடலுக்கடியில் இருந்ததாகவும் தொடர்ச்சியான பாரிய பூகம்பங்களின் காரணமாக உலகின் ஒரு பகுதி பிதுங்க, தாழ்வான பகுதி உயர்ந்து இமய மலையானது என்ற உண்மை வெளியானது.

உலக அழிவு-03

பூமியைத் தொடர்ந்து வரும் பேரழிவுப் பீதி!


kzp =fhe;jd;


உலக அழிவை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். என்ற பயம் ஒரு சிலருக்கு இருந்தாலும், எப்போ அழியும். எப்படி அழியும் என்பதை வேடிக்கை பார்க்கவும் சிலர் தயாராகத் தான் இருக்கிறார்கள். இந்த உலகம் இதுவரை காலமும் பல அழிவுகளை சந்தித்திருக்கிறது. உலகப் பந்து எதிர் கொண்ட சவால்களை பார்த்தால் உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

1994ம் ஆண்டு ஜீலை 16ம் திகதி சூமேக்கர் லெவி என்ற வால்வெள்ளி வியாழ கிரகத்தின் மீது துண்டு துண்டாக உடைந்து வீழ்ந்ததை நாம் மறக்க முடியாது. சூரியக் குடும்பத்திலேயே பெரிய கிரகம், ஜூபிட்டர் என அழைக்கப்படும் வியாழன். சூமேக்கர் லெவி நட்சத்திரத்தின் துண்டுகள் வியாழனை ஒன்றும் செய்யாது என்பது தெரிந்திருந்தாலும், அது அதிரும், குலுங்கும், சில ரசாயனங்களை விண்ணில் பீய்ச்சியடிக்கும் என சிலர் எதிர்வு கூறியதோடு அது பூமியை வந்தடைந்து சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் தெரிவித்தனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு முழு சொக்கலட்டையும் முழுங்கிவிட்டு வாயைத்துடைக்கும் குண்டுப் பையனைப் போல அத்தனை தாக்குதல்களையும் உள்வாங்கிக் கொண்டு கம்மென்றிருந்து விட்டது வியாழன்!

உலகம் முடிவுக்கு வந்துவிடப் போகிறது என்ற அச்சம் இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. உலகம் அழியப் போகிறது என்ற இந்த நம்பிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் ஒன்றாகும். இந்த நம்பிக்கை கிறிஸ்தவ நாடுகளில் தான் அதிகம். ஏனெனில் உலக முடிவு கோட்பாடுகள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளதே இதற்கு காரணம். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உலக அழிவு பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உலக அழிவுக்கான காரணங்கள், யேசுவின் இரண்டாம் வருகை. உலக முடிவின் ஆரம்பம், மாண்;டவர்கள் மீண்டும் உயிர்த்தெழுதல் நியாய தீர்ப்பு என்று இறுதிநாள் பற்றி பைபிள் விரிவாகச் சொல்கிறது. இந்த உலக அழிவு கோட்பாடு, ஐரோப்பியர்களின் வருகையின் பின்னரேயே ஆசிய நாடுகளில் வேர்பிடிக்க ஆரம்பித்தது. உலக முடிவு குறித்து தமிழ் இலக்கியங்களில் விரிவான குறிப்புகள் கிடையாது. ஊழித்தாண்டவம், ஊழிக் காலம் பற்றி கூறப்படுகின்றபோதும் உலக அழிவுடன் அவை தொடர்புபட்டதாக இல்லை.

1910ம் ஆண்டில் ஹெலீஸ் வால் வெள்ளி நமது பூமிக் அருகில் பயணம் செய்தது. இது, கடந்த நூற்றாண்டின் மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்று. இந்த வால் வெள்ளி 75 ஆண்டுகளுக்கு ஒரு தடவையே சூரியனை நோக்கி வரும் அப்படி 1910இல் வந்தபோது ஹெலீஸ் சின் நீண்ட வால் பகலிலும் கண்ணுக்கு தெரிந்ததாம்! அதே ஆண்டில் மே 10ம் திகதி நமது பூமி ஹெலீஸ் வாலின் நுனிப்பகுதியின் ஊடாக எந்த வித பிரச்சினையும் இன்றி கடந்து சென்றது. அன்றைய தினம் உலகம் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் பூமி இரண்டாகப் பிளந்து விடும் என்றும் உலகெங்கும் எதிர்வுகள் கூறப்பட்டன. பலர் பயந்து தற்கொலை செய்து கொண்டனர். முழு நாளையும் பிரார்த்தனை செய்யும்படி மதகுருமார் மக்களை வேண்டிக் கொண்டனர். உலக மக்கள் நடு நடுங்கியிருக்க பூமி பத்திரமாக வாயைக் கடந்து சென்றது. உலகமே பெருமூச்சு விட்டது. தான் ஒன்றும் பப்படம் அல்ல என்பதை மற்றொரு முறை நிரூபித்தது.

பின்னர் நாற்பதுகளின் இறுதியிலும் நம் நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் பூரண சூரிய கிரகணம் ஏற்பட்டபோதும் உலகம் முடிந்து விடப் போகின்றதோ என்ற ஒரு தேவையில்லா பீதி நாடு முழுவதும் பரவியதாம்.

பூமியின் மீது இதுவரையில் 120 பாரிய விண்பாறைத் தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மனித இனம் மண்ணில் தோன்றிராத காலத்துக்கு முன்னதாக பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் தான் நடந்திருக்கிறது. அரிசோனா மாநிலத்தில் பெரிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இது சுமார் ஐம்பாதாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதாக அறியப்பட்டுள்ளது. இது பெரிஞ்சர் விண்கல் பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இதன் இன்றைய ஆழம் 550 அடி. குறுக்களவு மூவாயிரத்து 900 அடி.  இரும்பு தாதுக்கள் நிறைந்த ஒரு விண்பாறையின் தாக்குதலே இப் பள்ளாத்தாக்குக்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதே போல் ஜெர்மனியின் நூர்லிஜின் நகருக்கு அன்மையில் 625 சுற்றளவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விண்பாறைத் தாக்குதலில் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இதே போல் 1968ம் ஆண்டு இக்ராஸ் என்ற பெயர் கொண்ட ஒரு பாறை 40 லட்சம் மைல் தொலைவில் பூமியை கடந்து சென்றது. இந்த விண் பாறையின் குறுக்களவு ஒரு கிலோ மீட்டர். இது பூமியின் மீது மோதியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

1989ம் ஆண்டு அரைமைல் அகல விண்பாறை ஒன்று பூமி பயணம் செய்த பாதையைக் கடந்து சென்றது. அந்த விண்பாறை பயணம் செய்த பாதையில்தான் பூமியும் ஆறு மணித்தியாலத்துக்கு முன்பாக பயணம் செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்திருந்தால் அழிவு பயங்கரமாக இருந்திருக்கும். அப்போதும் நாம் தப்பி விட்டோம். இப்போது சூரிய புயல், மாயன் கலண்டர் இவையும் கிலியை ஏற்படுத்துபவை தான். 2012இல் உலகம் அழிந்து விடும் என்று பிரச்சாரம் செய்து வரும் ஊடகங்களும், உலக அழிவை நம்பும் சில மத வாதிகளும் இந்த பீதியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அன்றைய நாட்களில் இப்படியான கதைகளை கேட்டு நம்பி வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொண்டவர்களை போல் இன்று யாரும் தற்கொலை செய்துக் கொள்ள தயாரில்லை. உலகம் அழியுதா....? சரி அது பாட்டுக்கு அழியட்டும் என்று தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விசயம் தானே.........

(தொடரும்)


சிறப்புற்று விளங்கிய மாயன் நாகரிகம்


மீசோ-அமெரிக்க நாகரிகம் என்று மாயன் நாகரிகம் அழைக்கப்படுகிறது. சீன, எகிப்திய, சிந்துவெளி நாகரிகங்களைப் போல சிறப்புப் பெற்ற நாகரீகமே மாயன் நாகரிகம். மத்திய அமெரிக்காவின், ஹொன்டூராஸ், மெக்ஸிகோ, கௌதமாலா, வட எல்சல்வடோர் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பில் சுமார் 625 மைல் விஸ்தீரனத்தில் இம்மாயர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று சுமார் ஆறு லட்சம் மாயர்கள் மெக்ஸிகோ, கௌதமாலா பகுதிகளில் பெரும்பாலும் வறியநிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது இவர்களில் பலருக்குத் தெரியாது என்பது வேதனையான உண்மை.

கி.மு 2600 களில் மாயன் நாகரீகம் தோன்றியிருக்க வேண்டும். இவர்கள் எழுத்துமொழியைப் பயன்படுத்தினார்கள். கணிதம், வானியல், கட்டடக்கலை, நகர நிர்மாணம், நீர்முகாமைத்துவம், வடிகால் முறை என்பனவற்றில் சிறந்து விளங்கினார்கள். சூரியனை ஆதி தெய்வமாகக் கருதி வழிபட்டார்கள், எகிப்தியர்களைப் போலவே. இவர்கள் சூரிய குடும்பம் சஞ்சரிக்கும் பால்வெளியை அறிந்திருந்தார்கள் என்றும் ஓரியன் நெபுலா என்றழைக்கப்படும் ~தூசு மேகம் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்றும் மாயன் நாகரிகத்தை ஆய்வு செய்த டாக்டர் ரிச்சர்ட்சன் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

மாயர்களின் நாகரிகம் கி.பி. 250-900 காலப்பகுதியில் உச்சத்தில் இருந்தது. மாயன் பொருளாதாரம் வணிகம் மற்றும் விவசாய பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தாமிர மணிகள், கொக்கோ விதைகள், கடல் சங்குகள், சோளம், அவரை அல்லது பட்டாணி, வெனிலா போன்றவை பயிரிடப்பட்டன.

மாயன் மக்கள் உச்சத்தில் இருந்த போது அவர்களை பிற்காலத்தில் வெற்றி கொண்டு அந்த இனத்தையே துவம்சம் செய்த ஐரோப்பியர் இருண்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டடங்களுக்கு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. இவை ஒரே அளவைக் கொண்டிருந்தன. அடுக்கு முறையில் சுவர்கள் எழுப்பப்பட்டன. மெக்ஸிகோ நகரின் சியாபாஸ் என்ற இடத்தில் வீடுகள், மாளிகைகள், கோவில்கள் என ஆறாயிரம் சிதிலங்கள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இர்க் பிரெஞ்ச் என்ற ஆய்வாளர் இவற்றைக் கண்டறிந்ததோடு இவை கி.பி. 100-800 காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய துளை பின்னர் சிறிய துளை என்று ஏற்படுத்துவதன் மூலம் வடிகாலில் கொண்டு செல்லும் நீருக்கு பீய்ச்சியடிக்கும் அல்லது உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்பதை மாயர்கள் அறிந்து வைத்திருந்தனர். 216 அடி நீள வாய்க்கால், 20 அடி உயர நீர்வீழ்ச்சி, 150 மீட்டர் நீளத்துக்கு நீரைக் கடத்தியது போன்ற சாதனைப் பட்டியல் மாயர்களுடையது.

உலக அழிவு-04


உலகம் அழியும் ஆனால் அழியாது…

மணி ஸ்ரீகாந்தன்


பூமியில் அநியாயம் அதிகரித்து விட்டது> அதனால்தான் கடவுளின் அக்னிப் பார்வை பூமியின் மீது விழுந்து விட்டது. என்றும் விரைவிலேயே கடவுள் நியாந்தீர்க்க வருவார் என்றும் ஏராளமானோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் உச்சமாகத்தான் நம்மவர்கள் 2012இல் உலகம் அழியலாம் என்று கருதுகிறார்கள். சில மதங்களின் சில மத கோட்பாடுகளின் காரணமாகத்தான் இந்த உலக அழிவு அச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. உலக அழிவை காரணம் காட்டியே சிலர் மத மாற்றத்தையும் வளர்த்திருக்கிறார்கள். மத மாற்றத்திற்கான பெரிய ஆயுதமாக இந்த உலக அழிவு அல்லது மனிதகுல அழிவு இருந்து வருகிறது. உலக அழிவுகள் பற்றி பல தடவைகள் ஆருடம் கூறப்பட்ட போதும் இதுவரை இவ்வுலகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பூமி நலமாகத்தான் இருந்து வருகிறது.


விஞ்ஞானத்தின் அடிப்படையில் பார்ப்போமானால் உலகம் அழிவதாக இருந்தால் அது சூரியனால் தான் நிகழும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கும் சூரியனில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்தக் கொடிய திகதி வந்தடைவதற்கு நாம் இன்னும் 500 கோடி ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டும், நீங்கள் தயாரா?

சூரியனின் ஆயுளின்படி இப்போதுதான் 500 கோடி ஆண்டுகளை அது முடித்திருக்கிறது. இன்னும் 500 கோடி ஆண்டுகள் வரை அது உயிர் வாழும். ஆனால் இன்னும் இருபது கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் மாற்றம் ஏற்படத் தொடங்கி விடும் அதன்படி சூரியனின் சக்தி குறைய அது தடுமாற்றத்தை சந்திக்கும். இதன் காரணமாக சூரியனின் உற்பகுதி சுருங்க ஆரம்பிக்கும். அப்போது வெளிப்புறம் உப்பிப் பெரிதாக, வெப்பம் பன்மடங்காக அதிகரித்து தீக் குழம்புகள் சீறி எழும். சூரியனின் வெளிப்புறம் உப்பிப் பெரிதாகும் போது சூரியனின் அருகே அதைச் சுற்றிவரும் மேற்குறி மற்றும் வீனஸ் கிரகங்கள் பஸ்பமாகிவிடும். இக்காலப்பகுதியில் பூமியில் வெப்பம் பன்மடங்கு அதிகமாகி, அதன் தட்ப வெப்ப காலநிலை மாறிவிடும். இது நடைபெறுவதற்கு பல லட்சம் வருடங்களுக்கு முன்னரேயே ஜீவராசிகளும் தாவரங்களும் மடிந்து போயிருக்கும், மனிதர் உட்பட வெப்ப அதிகரிப்பு காரணமாக கடல் நீராவியாகிவிடும். அதன் மேற்பரப்பு சாம்பல் தரையாகிவிடும். இப்படி நடக்கப் போகும் சம்பத்தை நினைத்து நீங்கள் அச்சப்படத் தேவையில்லை ஏனென்றால் மனிதகுலம் மறைந்து பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டிருக்கும். அல்லது அண்டவெளியில் மிகவும் தொலைவிலுள்ள வேற்று கிரகத்தில் அமர்ந்து வேதனையுடன் பூமி அழிவதை மனிதர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். எப்படியோ, சூரியனில் ஏற்படக் கூடிய பெரும் மாற்றங்களே பூமிக்கு உலைவைக்கும் என்பது உறுதி.

நமது பூமியின் வயது 460 கோடி ஆண்டுகள். ஆனால் இந்த பூமியும், கிரகங்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்த உலக அழிவுப் பற்றிப் பேசப்படுகிறது. உலகமும், அதில் வாழும் உயிரினங்களும் ஒரு சில தினங்களில் படைக்கப்பட்டவை அல்ல. கோடான கோடி வருடங்களுக்கு முன்னால் இயற்கையின் சுய பரிசோதனை முறைகளின் ஊடாகவே பூமியின் உயிரினங்கள் தோன்றின. ஆனால் இந்த விடயத்தை அனேகர் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

உலகமும், உயிரும் படைக்கப்பட்டது. படைத்தவருக்கு எதிராக பாவங்களை நாம் செய்வதால் அது அவரை எரிச்சலடையச் செய்யும் என்றும் பிறகு அவரின் ஆத்திரம் நம்மை முற்றாக அழித்து விடும் என்றும் பரவலான ஒரு நம்பிக்கை காணப்படுகிறது. ஏற்கனவே பிரளயத்தின் மூலம் உலகம் அழிக்கப்பட்டதாகவும் எஞ்சிய உயிரினங்கள் மூலம் மீண்டும் உயிரினப் பெருக்கம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இக் கோட்பாட்டை முற்றிலும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் உலகம் பெரும் அழிவுகளை சந்தித்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனினும் உலக அழிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற மத அடிப்படையிலான நம்பிக்கையே, 2012இல் அழிவு வரலாம் என்ற பீதியை மாயன் கலண்டர் வாயிலாக மீண்டும் புகுத்தப்படுகிறது.

பரிணாம வளர்ச்சியினால் தான் மனிதன் உலகில் தோன்றினான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. மிருகங்களின் பல குணங்கள் நம்மிடையே அப்படியே காணப்படுகின்றன. ஆத்திரம், மூர்க்கம், இரத்தவெறி என்பன, சில சமயங்களில், மிருகங்களை விட மோசமாகவே நம்மிடம் உறைந்துள்ளன. உலகில் நிகழும் அல்லது அதிகரித்துச் செல்லும் வன்முறைகள், கொடூரங்கள், யுத்தங்களை எடுத்துக் கொண்டால் நாம் மிருக சாயல் கொண்டவர்களே தவிர தேவ சாயல் கொண்டவர்களாக இல்லை என்பது புலனாகும்.


நம்முடையதும் ஏனைய மிருகங்களினதும் அடிப்படையாக இருப்பது அடித்து பிடித்து வாழ வேண்டும் என்ற உந்துதல்தான். ஓட்டத்தில் எது திறமைசாலியோ, ஈடுகொடுக்கக் கூடியதோ அதுவே முந்தும், நீடித்து நிலைக்கும் என்பது டார்வின் தத்துவம். எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றன. ஈடுகொடுக்க முடியாதவை மடிந்துவிட ஏனையவை களத்தில் நிற்கின்றன. மனிதனால் ஈடுகொடுக்க முடிவதால்தான், ஒரு காலத்தில் டைனோசர்களால் ஆளப்பட்ட இந்த உலகை இன்று மனிதனால் ஆள முடிகிறது. ஈடுகொடுக்க முடியாத எண்ணற்ற தாவரங்கள் மடிந்துவிட்டன. உயிரினங்களும் அப்படியே.

உலகில் ஒரு பேரழிவு நிகழ்ந்த போது டைனோசர்கள் மடிந்தன. அப்படி மடிந்திருக்காவிட்டால் பாலூட்டிகள் தோன்றியிருக்க முடியாது. என்பது உயிரியல் அறிஞர்களின் முடிவு. பாலூட்டிகளின் வளர்ச்சியை மனிதனை தோற்றம் பெறச் செய்தது. எனினும் இதே மனிதன் தனது நலன்களுக்காக இயற்கையின் மீது தற்போது தாக்குதல் தொடர்ந்திருக்கிறான். இது எல்லையில்லாமற் போனால் இயற்கை திருப்பித்தாக்கத் தொடங்கும். இது மனிதனை பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

460 கோடி வயதை பூர்த்தி செய்துள்ள இந்த பூமியின் கடைசிக் காலத்தில் பாரிய பூகம்பங்களும் எரிமலைக் குமுறல்களும் நடக்கும் என்று சில மதங்கள் சொல்கின்றன.