Saturday, June 3, 2017

துயர் துடைக்கும் பணியில்

இலங்கையில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணி அரச மட்டத்திலும், சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் முன்னெடுத்து வரப்படுகிறது.

இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு கொழும்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றிய இரண்டு லொறிகள் நேற்று (03-06-2017) தமது நெடும்பயணத்தை ஆரம்பித்தது.

இரத்தினபுரி பகுதிகளுக்கான நிவாரணப் பொருட்களை கொழும்பு வர்தக சங்கத்தின் ஆதரவுடன்  அமைச்சர் மனோ கணேசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.

புளத்சிங்கள சிறுதோட்ட பகுதிகளில் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து, நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாது தவித்த எமது உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்து நாம் உணவு பொருட்களை கையளித்தது பெருமகிழ்ச்சியை தருகிறது. புளத்சிங்கள தோட்ட பகுதிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை கையளிக்கும் பணியை கொழும்பு வர்த்தக சங்கத்தின் துணையோடு இங்கிரிய றைகம் மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் திரு. கிருஸ்ணன் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். புளத்சிங்கள பிரதேசத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களை இனங்கண்டு, அவற்றை நேர்த்தியான முறையில் தெரிவு செய்து புளத்சிங்கள பகுதிக்கான  துயர் துடைக்கும் பணிக்கான திட்டமிடலை வடிவமைத்து மொறட்டுவை தெ சொய்ஸ்சா மகாவித்தியாலய அதிபர் திரு ஆனந்தகுமார் எமக்கு வழங்கியிருந்தார்.
கரடு முரடான பாதைகளை ஊடறுத்து நாம் களப்பணியாற்றிய அந்த மகிழ்ச்சியான தருணங்களின் போது க்ளிக் செய்த காட்சிகள். 
Thursday, May 11, 2017

திரையரங்கில் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறதே!

வாசுதேவன் - கொழும்பு

 நீங்கள் சொல்வது பெரும்பாலும் உண்மைதான். சினிமா தியேட்டர்களில் புரொஜொக்டரும் ஒலியமைப்பும் டிஜிட்டல் மயமாகியுள்ள போதிலும் படங்கள் காட்டப்படும் திரை மட்டும் வெறும் திரைத்துணியாகவே இருக்கிறது
இப்போது திரையரங்கில் அதிக துல்லியத்துடன் கூடிய டிஜிட்டல் திரைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளன.

ஹோம் தியேட்டர்களில் டிஜிட்டல் திரையிலும் படம் துல்லியமான உள்ள போதிலும் திரையங்குகளில் உள்ள பிரமாண்டமான திரைகள் துல்லியமாக இல்லை. இதை மாற்றுவதற்காக 34 அடி அகலம் கொண்ட எல்.சி.டி டிஜிட்டல் திரையை சாம்சுங் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் முன்பகுதி எல்.சிடி யாகவும் பின்பகுதி பிரகாசமான ஒளியினைத்தரும் எல்.சி.டியாகவும் இருக்கும்.

ஹைடைனமிக் ரேஞ்ச் என்ற இந்த வகை சாம்சுங்கின் சினிமா திரை டி.வி. போல இயங்கும்.  வண்ணங்களும் பளிச்சென தெரியும். இதை பயன்படுத்தும் திரையரங்குகளில் தனியாக டிஜிட்டல் புரொஜெக்டர் தேவையில்லை என்றும் சாம்சுங் நிறுவனம் கூறுகின்றது.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நடிகர் ரஜனிகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்திந்திருக்கிறாரே? என்ன விசேஷம்?
ரஜனிதாசன் கொழும்பு

மலேஷிய பிரதமர் டத்தோ ஸ்ரீ முகம்மத் நஜீப் பின் அப்துல் ரசாக் கடந்த மாதம் அவரது மனைவி டதின் பதுகா செரி ரோஸ்மா மன்ரூருடன் இந்தியா வந்தார். 5 நாள் விஜயமாக இந்தியா வந்த அவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அதன்பின் டில்லி சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தனர்.

சென்னை வந்திருந்த போது ரஜனியை சந்திக்க மலேஷிய பிரதமர் நேரம் கேட்டிருந்தார். இதனையடுத்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரஜனிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைபெற்ற போது மலேஷிய பிரதமர் மலாக்கா ஆளுநர் ஆகியோர் ரஜனியை வரவேற்று விருந்தளிந்திருந்து குறிப்பிடத்தக்கது.
ஒருநாட்டின் பிரதமர் மற்றொரு நாட்டின் நடிகர் ஒருவரை அவரது வீட்டுக்கே சென்று பார்ப்பது என்பது ஒரு சாதாரண விடயமல்ல.
அதில் யார் யாருக்கு லாபம்? ரஜனியின் படங்கள் தனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை மலேஷியா பிரதமர் ரஜனியிடம் நேரிலேயே கூறிவைத்தார்.
“தலை சிறந்த நட்பார்ந்த மற்றும் மகிழ்ச்சியான நபரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ரஜனிகாந்தை பற்றி குறிப்பிட்டு நஜிப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கபாலி திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல் மலேஷியாவின் தேசிய மொழியான பாஹாசா பாசையிலும் வெளியானாதால் ரஜினி மலேஷியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த நடிகராகி விட்டார். அதனால் இந்த சந்திப்பு மலேஷிய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறும். ரசாக்கின் அரசின் மேல் தற்போது அதிருப்தி நிலையிலுள்ள மலேஷியத் தமிழர்களிடம் ரசாக்கின் அரசு பற்றிய நல்லெண்ணத்தை ரஜனியுடனான சந்திப்பு ஏற்படுத்தக்கூடும். அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் 145 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரமும் அப்படியே அமுங்கிப் போகவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மலேஷிய இந்திய சமுதாயத்துக்கு உதவும்  வகையிலான நல்லெண்ண நடவடிக்கைகள் அறிவிக்கப்படவும் இது காரணமாகலாம். இதன் முதல் கட்டமாக மலேஷியாவும் அதிக அளவில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் உருவாக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மலேஷியா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை பார்க்கும் போது ரஜினி மற்றும் ரஞ்சித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மலேஷியாவில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது. இவ்வளவு ஏன் ரஜினியின் அடுத்த படமொன்றின் படப்பிடிப்பு இலங்கையின் வவுனியாவில் நடந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.ரஜினி மற்றும் கமலின் நடிப்பு பசிக்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தான் தீனி போடுகிறது. அந்த நிறுவனம் நினைத்தால் அது சாத்தியம்.
ரஜினியிடம் என்ன இருக்கிறது? ஏதோ இருக்கிறது என்பது மலேஷிய அரசியல் வாதிகளுக்கு தெரிகிறது. ஆனால் இலங்கை இந்திய அரசியல்வாதிகளுக்கு அது தெரியவில்லையா? அல்லது செல்வாக்கோ பெருமையோ ரஜனிக்கு போகக்கூடாது அது தங்களுக்கே வரவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களா? 

பாகுபலி முதலாம் பாகம் சாதனை படைத்ததைப் போல் இரண்டாம் பாகமும் சாதனை படைக்குமா?
கவிதா,பாதுக்க

நிச்சயம் படைக்கும் அந்த எதிர்ப்பார்ப்போடு தான் 3 நாட்களுக்கு முன்திரைக்கு வந்திருக்கிறது பாகுபலி 2.
பாகுபலி 2 தொடர்பான சில ருசிக்கதைகள்.
பாகுபலி 2 இல் பிரமாண்டமான சண்டைக்காட்சி பிரதானம். அந்த ஒரு காட்சியின் கிரபிக்ஸ்களுக்கு மட்டும் சுமார் 6 மாதம் பணியாற்றியுள்ளனர்.
பாகுபலி 2 இல் போர்க்களக்காட்சிகள் போக மீதமுள்ள காட்சிகள் அனைத்தும் செட்டில் எடுக்கப்பட்டவைகள்தான். பாகுபலி 1,பாகுபலி 2 என மொத்தமாக 613 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
பாகுபலியின் இரண்டு பாகங்களையும் மொத்தமாகப் படமாக்கிவிட்டு முதல்பாகம் முடிந்தவுடன் 2 ஆம் பாகத்துக்கான இறுதிக்கட்ட பணிகளைச் செய்யலாம் என்ற முடிவுக்குப்பின்னரே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பணப்பற்றாக்குறையால் முதல்பாகத்தை வெளியிட்டு அதற்குப்பின் 2 ஆம் பாகத்துக்கான சண்டைக்காட்சிகளை படமாக்கியிருக்கின்றார்கள்.முதல் பாகத்துக்கான காட்சிகளை படம் பிடித்து விட்டார்களாம்.
இந்தியாவில் ‘தூம் 4’ ‘பேஸ் பேஸ்’ ஆகிய படங்களை தொடர்ந்து பாகுபலி 2 படத்தை ஐ மேக்ஸ் திரையரங்குளில் வெளியிட்டுள்ளனர்.

Thursday, April 27, 2017

இருள் உலகக் கதைகள்

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்:  மணி ஸ்ரீகாந்தன்.

ஹவத்தை,நிவித்திகலையை அண்மித்திருக்கும் ஒரு தோட்டப்பகுதி. தேயிலையும்,இறப்பரும் செழித்து வளர்ந்திருந்த பகுதியில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வரட்சியின் காரணமாக தேயிலைச் செடிகள் வாடிப்போய்  கிடந்தன.
செடிகளுக்கு நீர் ஊற்றினால்தான் மிச்சம் இருப்பதையாவது காப்பாற்றலாம் என்பதை உணர்ந்த தோட்ட நிர்வாகம், அன்று அரை நாள் விடுப்பு கொடுத்து செடிகளுக்கு நீர் ஊற்றும்படி பணித்திருந்தது.தோட்டத் தொழிலாளியான வனஜாவும் செடிகளுக்கு நீர் ஊற்றும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டிருந்தாள்.
நீர் பாய்ச்சும் வேலை முடிவடைந்ததும், தமது ஊர் காக்கும் மாரியம்மனுக்கு நீர் ஊற்றி மழை வேண்டி பிராத்தனை செய்யவும் சில பெண்கள் மாரியம்மன் கோயிலை நோக்கி நடந்தார்கள்.
மாரியம்மன் பக்தையான வனஜாவும் முதல் ஆளாக குடத்தோடு நடந்தாள்.கோயிலை அண்மித்திருக்கும் சிறு ஓடையில் பெண்கள் அனைவரும் குளிப்பதற்காக இறங்கினார்கள்.

குளித்து முடித்த வனஜா துவாயை எடுத்து தலையை துடைத்துவிட்டு, இருகரங்களாலும் துவாயின் இருமுனைகளிலும் பிடித்து தனது நீண்ட தலைமயிரை பலம்கொண்ட மட்டும் அடித்து துடைத்தாள்.அப்போது யாரோ பின்னாலிருந்து படார் என்று தனது கன்னத்தில் அடித்தது போலிருக்க நிலை தடுமாறிய வனஜா ஆ….ன்னு கத்திவிட்டு என்ன நடந்தது என்று பார்த்தபோது தனது காதிலிருந்து இரத்தம் வடிவதை பார்த்தவள், பதறிப்போனாள்.
தலைமயிரை துவாயால் பலமாக அடித்தப்போது காதில் இருந்த கம்மல் சிக்குப்பட்டு காது அறுந்து போயிருந்தது. இரத்தம் வடிவதையும் பொருட்படுத்தாத வனஜா கீழே விழுந்த கம்மலை தேடுவதில் பரபரப்பானாள்.
காது அறுந்து வனஜாவின் தங்கக் கம்மல் தொலைந்துபோன செய்தி பரவ அந்த ஓடையின் அருகே கூட்டம் கூடி அந்தப் பற்றைக்காட்டுப் பகுதியை சல்லடைப் போட்டு தேடியும் கம்மல் கிடைக்கவில்லை.
வனஜா அரைப்பவுண் மதிப்புள்ள கம்மல் தொலைந்ததில் பித்து பிடித்தவள் மாதிரி புலம்பத் தொடங்கினாள்.

தனது குலதெய்வத்திடம் நேர்த்திவைத்தவள் புலம்பியப்படி வீடு நோக்கி நடந்தாள்.அன்றிரவு படுத்தவள்தான் மறுநாள் விடிந்தபோது வனஜா மாறிப்போயிருந்தாள்.சகித்துக்கொள்ள முடியாத கெட்ட வார்த்தைகளால் தமது பிள்ளைகளையும், கணவனையும் திட்டத் தொடங்கினாள்.தனக்கு தானே பேசி சிரித்தும் கொண்டாள்.
முத்து பூசாரி
தங்கக் கம்மல் தொலைந்து போனதில் வனஜாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும்,காத்து கருப்பு அண்டிவிட்டது என்றும் தோட்டம் முழுவதும் செய்தி காட்டுத் தீயாக பரவிப்போனது.
வனஜாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், அவளின் குடும்பத்தினர் வனஜாவை குணப்படுத்த ஒரு மாந்திரீகரை தேடினார்கள்.
கஹவத்தை பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் முத்து பூசாரியே வனஜாவுக்கு வைத்தியம் பார்க்க களத்தில் இறங்கினார். பேய்களை விரட்டுவதில் ஜெகஜால கில்லாடியான முத்துவுக்கு இது சவாலான விடயமாகத்தான் இருந்தது.

வனஜாவின் வீட்டுக்குள் நுழையும்போது இது ஏதோ மனநோய் இலகுவாக முடித்துவிடலாம் என்று அசால்ட்டாக நினைத்தார்.
ஆனால்,முத்து மந்திரங்களை உச்சாடனம் செய்தபோது அவர் மனக்கண்ணில் கண்ட காட்சி அவரை குலை நடுங்கச் செய்தது.
வனஜாவுக்கு அம்மன் கோயில் ஓடையில் நடந்த சம்பவங்களை,பேய் விரட்டை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் மக்கள் முன்னிலையிலேயே பூசாரி விபரிக்கத் தொடங்கினார்.

அமாவாசை இரவை வரவேற்கத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த மாலை வேளையில்தான் வனஜா ஓடையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போது தூரத்தில் ஒரு காட்டு முருங்கை மரத்தில் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த ஒரு கரிய உருவம் வனஜாவை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.
நேரம் பார்த்து காத்திருந்த அந்த உருவம் வனஜா தலைமயிரை  துவாயால் அடித்து துவட்டும் அந்த நேரத்தில் திடீரென்று பாய்ந்து
அவளின் தலையை பிய்த்துப்போட எத்தனித்த அந்த திகில் நிமிடங்களில்தான் வனஜாவின் கம்மல் அறுத்தெறியப்பட்டிருக்கிறது.பக்கத்தில் அம்மன் கோயில் இருந்ததால் அந்த தீய சக்த்தியின் கொலை முயற்சி பலிக்காமல் போய்விட்டது. ஆனாலும் வெறி அடங்காத அந்த தீய சக்தி வனஜாவின் உடம்பில் இறங்கி இருக்கிறது. இப்போது ரெஸ்ட் எடுக்கிறது.
ஆனாலும் அதன் கொலை வெறி அடங்கவில்லை. நேரம் பார்த்து காத்திருக்கிறது. என்று முத்து பூசாரி சொன்ன விடயங்களை கேட்டு அந்த ஊர் மக்கள் திகைத்துப் போனார்கள்.

“ஆனாலும் நான் அந்த தீய சக்திக்கு நேரத்தை கொடுக்கப்போவதில்லை. அதன் கதையை முடித்து இப்போதே சங்கறுக்கிறேன்.” என்று முத்து பூசாரி ஆவேசமாகக் கத்தினார். சாட்டையை சுழற்றி வனஜாவின் மீது சுளீர் என்று ஒரு போடு போட்டார்.
அடித்தாங்க முடியாமல் ஆடிப்போன அந்த தீய சக்தி ‘அய்யோ……என்னைக் கொல்லாதே!!’ என்று அவலக்குரல் எழுப்பியது.

“யார் நீ இங்கே எதுக்கு வந்தே”என்று பூசாரி மிரட்டும் தொனியில் கேட்டப்போது, நடுக்கத்துடன் பதில் சொன்ன அந்த தீய சக்தி
“நான் செத்துப்போய் இப்போ நூறு வருசமாகுது என் பொண்டாட்டி எனக்கு சோற்றில் விஷம் வச்சு என்னைக் கொன்னுட்டா. அதனால நான் இத்தனை வருசமா அவளை என் கையால கொல்லனும்னு வெறியோட திரிஞ்சிக்கிட்டிருந்தேன். ஆனா என் துரதிஷ்டம் அந்த சண்டாளி நெஞ்சடைப்புல செத்து தொலைஞ்சுட்டா. ஆனாலும் என் வெறி அடங்கல அதனால காட்டு முருங்கை மரத்துலயே இத்தனை வருசத்தையும் வன்மத்தோடயே கழிச்சிட்டேன்.அப்போதான் ஒரு நாள் என் பொண்டாட்டி மாதிரி இருக்கிற வனஜா  குளிக்க வந்ததை பார்த்தேன். அந்த நிமிசமே கொலை வெறியோட பாய்ந்து அவளோட தலையை பிய்ச்சு வீச முயற்சி செய்தேன். ஆனா ஊர்காக்கும் அம்மன் என்னோட திட்டத்தை தடுத்திருச்சி.அதுக்கு பிறகுதான் வனஜாவோட உடம்புக்குள்ள இறங்கிட்டேன்” என்று தீய சக்தி சொன்னதைக் கேட்ட முத்து எகத்தாளமாக “சரி உன்னோட இரத்த பசிக்கு தீனீயாக ஒரு கோழியைத் தருகிறேன்.அதை தின்று உன்னோட கொலை வெறியை அடக்கிக்கொண்டு ஓடிவிடு” என்று எச்சரித்த பூசாரி ஒரு கோழியை நீட்டியப்போது அதை லபக்கென்று வாங்கிய தீய சக்தி கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த கோழியின் கழுத்தை கடித்து இரத்தத்தை குடித்துவிட்டு தரையில் விழுந்தது’ இச்சந்தரர்ப்பத்தைப் பயன்படுத்தி தீய சக்தியை லாவகமாக பிடித்து போத்தலுக்குள் போட்ட பூசாரி, “உடனே அந்த ஓடைக்கு பக்கத்தில இருக்கிற காட்டு முருங்கை மரத்தை வெட்டி சாயுங்கள்” என்று உத்தரவிட்டார். பின்னர் நான் இந்த போத்தலை முச்சந்தியில் போட்டு எரித்து விட்டு வருகிறேன்”என்று சொன்னவர், வெற்றிப்புன்னகையோடு முச்சந்தி நோக்கி நடந்தார்.